top of page

ஸ்தேவான்: தேவனுக்காக வாழ்ந்த ஒருவர்

  • Kirupakaran
  • Feb 23
  • 8 min read

ஒரு போரில், பல வீரர்கள் தேசத்திற்காக தங்கள் உயிரை அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் தியாகிகளாகக் கருதப்படுகிறார்கள், மேலும் நாட்டையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அவர்கள் செய்த வீர செயல்கள் பல  தலைமுறைகளாக மதிக்கப்படுகின்றன. மரியாதை செய்யும் வகையில், தேசம் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதுகளையும் வீரப் பதக்கங்களையும் வழங்குகிறது. சிலரின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டிடங்கள் அல்லது சாலைகளில் அவர்களின் பெயர்களை பொறிப்பதன் மூலம் அவர்கள் மேலும் நினைவுகூரப்படுகிறார்கள்.


இதேபோல், புதிய ஏற்பாட்டில் முதல் இரத்தசாட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்தேவான் என்ற மனிதர் இருந்தார். புதிய ஏற்பாட்டின் 13 புத்தகங்களை எழுதிய தர்சு பட்டணத்து சவுலை பவுலாக மாற்றியதில் அவரது தியாகம் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. பவுலின் எழுத்துக்கள் மூலம், ஸ்தேவானைப் பற்றியும், அவரது வாழ்க்கைப் பாடங்களைப் பற்றியும், அவற்றை நம் சொந்த வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.


ஆதி திருச்சபையின் சூழல்


இயேசு சிலுவையில் அறையப்பட்டு, சிலுவையின் மீது ஜெயம் கொண்ட பிறகு, உயிர்த்தெழுந்து, மகதலேனா மரியாளுக்கும் அவருடைய சீடர்களில் பலருக்கும் தோன்றி, அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்தினார். அவர் அவர்களுக்கு பெரிய கட்டளையைக் கொடுத்து, அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவும் அவர்களைப் புதுப்பிக்கவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக வாக்குப்பண்ணி பரத்திற்கு ஏறினார். (லூக்கா 24:50-52, மத்தேயு 28:19-20).


ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:19-20


இயேசு பரத்திற்கு ஏறிச் சென்ற பிறகு, சீஷர்கள் தவறாமல் சந்தித்து, தேவனுடைய வார்த்தைகள் நிறைவேற வேண்டி தொடர்ந்து ஜெபித்தனர். அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று: சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. அப்போஸ்தலர் 1:14-16

பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள் (அப்போஸ்தலர் 2:1-12), அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, வெவ்வேறு அந்நியபாஷைகளில் பேசினர். அந்தக் கணத்திலிருந்து, "வழி" என்று அழைக்கப்படும் இயேசுவின் சீடர்கள் எண்ணிக்கையில் வளரத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் அவர்கள் உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.


அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, அப்போஸ்தலர் 2:42-46

அவர்கள் ஆழ்ந்த ஆவிக்குரியவர்களாகவும், கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், கர்த்தர் தங்களுக்கு ஒப்படைத்த பெரிய கட்டளையை நிறைவேற்றும்படி உண்மையுடன் இருந்தார்கள்.

 

ஆதி திருச்சபையின் சவால்

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அப்போஸ்தலர் 6: 1

 

ஆதித் திருச்சபை வளர்ந்தபோது, திருச்சபையில் இரண்டு தனித்துவமான யூத குழுக்கள் இருந்தன.

  • கிரேக்க யூதர்கள்: இவர்கள் கிரேக்க பின்னணியைக் கொண்ட யூதர்கள்.

  • எபிரேய யூதர்கள்: இவர்கள் அராமிக் பின்னணியைக் கொண்ட யூதர்கள். பாலஸ்தீன யூதர்கள் என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் எபிரேய யூதர்கள், தங்கள் பாரம்பரியத்தில் பெருமை கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் எப்போதும் முற்பிதாக்களின் தேசத்தில் வாழ்ந்து வந்து, அவர்களின் அதே மொழியைப் பேசினர். அவர்கள் சபைக்கு அருகில் இருந்து, தவறாமல் தொழுது கொண்டு வந்தனர்.

  • எபிரெய யூதர்கள் தங்களுடைய விதவைகளை அன்றாடம் உணவு விநியோகிப்பதில் கவனியாது விடுவதாக கிரேக்க யூதர்கள் சீஷர்களிடம் முறையிட்டபோது ஒரு சவால் எழுந்தது.

 

அதை எப்படி மேற்கொண்டார்கள்? ஆகவே சீஷர்கள் ஒன்றுகூடி, இந்தக் குழுவிலிருந்து ஆவியும் ஞானமும் நிறைந்த ஏழு பேரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள்.

ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். அப்போஸ்தலர் 6:3-4

  • சுயபரிசோதனை : உட்புறம் பார்த்தல் எதிர் வெளிப்புறம் பார்த்தல்  அப்போஸ்தலர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டவோ அல்லது யார் பக்கமோ நிற்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் பணியையும் கர்த்தருக்கான அர்ப்பணிப்பையும் சுயபரிசோதனை செய்தனர். இது ஒரு மதிப்புவாய்ந்த பாடம் : பிரச்சினைகள் எழும்புகையில், வெளிப்புறமாகப் பார்ப்பதற்கு முன்பு முதலில் உங்கள் சொந்த வீட்டை சோதித்துப் பாருங்கள்.

    • அவர்கள் உணவைப் பரிமாறுவதில் மிகவும் கவனம் செலுத்தி,  ஜெபத்தையும் வேத ஊழியத்தையும் புறக்கணித்தனர்.

    • ஜெபத்திலும் தேவனுடைய வார்த்தையைப் பரப்புவதிலும் புதுப்பிக்கப்பட்ட கவனத்தைத் தூண்டுவதற்காக சபைக்குள்  "பெருந்தீனி ஆவியை" அறிமுகப்படுத்த தேவன் சாத்தானை அனுமதித்தார்.

    • சபையானது ஜெபம் மற்றும் தியானத்தின் அடிப்படையில்   கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை அளிப்பதை இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொண்டால், சபை சவால்களை சந்திக்க நேரிடும்.

  • வளர்ச்சியை எளிதாக்க, மாற்றங்களைச் செய்வதற்கு திருச்சபை தயாராக இருந்தது, அப்போஸ்தலர்கள் தங்கள் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருந்தனர். ஊழியத்தின் விரிவாக்கத்திற்கு மற்றவர்கள் பங்களிக்க அனுமதித்தனர். இந்த மாற்றம் ஏழு பேரை நியமித்ததன் மூலம் ஊழியர் தலைமைத்துவத்திற்கான இடத்தை உருவாக்கியது.

  • தீர்வு: ஏழு தலைவர்களை நியமித்தல் - இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அப்போஸ்தலர் 6:5

    • தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆறு பேர் கிரேக்க யூதர்கள், ஒருவர் - யூத மார்க்கத்திற்கு மாறிய அந்தியோகியாவைச் சேர்ந்த நிக்கோலஸ்.

    • அவர்களில், பிலிப்பு ஒரு சுவிசேஷகராக முக்கிய பங்கு வகித்தார், சமாரியாவில் பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 8:5-8) மற்றும் எத்தியோப்பிய மந்திரியை கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் (அப்போஸ்தலர் 8:26-40).

 

ஸ்தேவான் யார்?

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்போஸ்தலர் 6:8

  • ஸ்தேவான், ஆதி திருச்சபைக்கு ஊழியம் செய்ய சீடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு கிரேக்க (கிரேக்க மொழி பேசும்) யூதர்.

  • அவர் இவ்வாறு விவரிக்கப்பட்டார்:

    • விசுவாசத்திலும் பரிசுத்த ஆவியிலும் நிறைந்த மனிதர் (அப்போஸ்தலர் 6:5).

    • கிருபையும் வல்லமையும் நிறைந்தவர், அவரது ஞானத்திற்காகவும் தேவன் மீதுள்ள உறுதியான விசுவாசத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (அப்போஸ்தலர் 6:8).

 

ஸ்தேவானும் பிலிப்பும்: இரண்டு வல்லமையான ஊழியர்கள் 

  • ஸ்தேவான் தனது விசுவாசத்திற்காக மரித்த முதல் கிறிஸ்தவ இரத்தசாட்சியானார் (அப்போஸ்தலர் 7:54-60).

  • பிலிப்பு சமாரியாவில் பிரசங்கித்த, எத்தியோப்பிய மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்த முதல் ஊழியராக ஆனார் (அப்போஸ்தலர் 8:5-13, 26-40; அப்போஸ்தலர் 21:8).

  • தங்கள் அழைப்பில் உண்மையுள்ளவர்களாக இருந்தால், தேவன் யாரையும் வல்லமையாக பயன்படுத்த முடியும் என்பதை அவர்களின் வாழ்க்கை காட்டுகிறது.

 

ஸ்தேவான் தேவனின் வார்த்தையின்படி வாழ்ந்தார்

  • அவர் ரோமர் 12:10 ஐ பின்பற்றி, மற்றவர்கள் மீதுள்ள அன்பினால் ஊழியம் செய்தார், சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ரோமர் 12:10

  • அவருக்கு உதவிக்காரர் என்ற அதிகாரப்பூர்வ பட்டம் வழங்கப்படவில்லை என்றாலும், 1 தீமோத்தேயு 3:8-13 மற்றும் பிலிப்பியர் 1:1 ஆகியவற்றில் கோடிட்டுக் காட்டப்பட்ட தகுதிகளைக் கொண்டிருந்தார்.

 

ஸ்தேவான் நியாயப்பிரமாணத்திற்காக நிற்காமல் கிருபைக்காக நின்றார்

  • அவர் மத சட்டங்கள் மற்றும் பாரம்பரியங்களை நம்புவதற்குப் பதிலாக, தேவனின் கிருபையை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

  • இயேசு சத்தியத்தைப் பேசியதற்காக எதிர்ப்பைச் சந்தித்தது போல, இவரது துணிச்சலான பிரசங்கம் மதத் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பை உண்டாக்கியது.   

 

ஸ்தேவானின் அற்புதங்களும் எதிர்ப்பும்

  • அவர் தேவனுடைய வல்லமையை தனக்குள் வைத்துக்கொள்ளவில்லை, ஜனங்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்து தேவனை மகிமைப்படுத்தினார்.

  • எனினும், இயேசுவுக்கு ஏற்பட்டதைப் போலவே இவருக்கும் எதிர்ப்பு எழுந்தது.

 

எதிர்ப்பு எங்கிருந்து வந்தது?

  • லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் (அப்போஸ்தலர் 6:9) - முன்பு சபையில் பிரச்சனைகளை ஏற்படுத்திய கிரேக்க மொழி பேசும் யூதர்களின் குழு.

 

அவரை எப்படி எதிர்த்தார்கள்?

1.   வாதங்கள் & விவாதங்கள் - அவர்கள் ஸ்தேவானின் ஞானத்தை சவால் செய்ய முயன்றனர், ஆனால் அவர் தேவ ஞானத்துடன் பேசியதால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. அப்போஸ்தலர் 6:10

2.   பொய்யான குற்றச்சாட்டுகள் - அவர்கள் இயேசுவிற்கு செய்ததைப் போலவே, இவரைப் பற்றியும் பொய் சொல்வதற்கு ஜனங்களை இரகசியமாக தயார்படுத்தினர் (அப்போஸ்தலர் 6:11; மத்தேயு 26:3-4).

அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி; அப்போஸ்தலர் 6:11

அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். மத்தேயு 26:3-4

3.   கூட்டத்தைத் தூண்டிவிடுதல் - ஜனங்களையும் மதத் தலைவர்களையும் அவருக்கு எதிராகத் திருப்ப அவர்கள் பொய்களைப் பரப்பினர். ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; அப்போஸ்தலர் 6:12

4.   பொய் சாட்சிகள் – ஸ்தேவான் ஆலயத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகப் பேசினார் என்று பொய் சாட்சி சொல்ல அவர்கள் ஜனங்களைக் கொண்டுவந்தார்கள். பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்; அப்போஸ்தலர் 6:13

 

சிந்திக்க : இவை இப்போதும் நடக்கின்றதா?

  • கிறிஸ்து மீதான உங்கள் விசுவாசத்திற்காக நின்றதற்காக எப்போதாவது எதிர்ப்பை சந்தித்திருக்கிறீர்களா?

  • நீங்கள் தேவனுடைய சத்தியத்தைப் பேசும் போது மக்கள் உங்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டுகிறார்களா? உங்களுக்கு எதிராக வாதிடுகிறார்களா? அல்லது உங்களை மௌனமாக்க முயற்சிக்கிறார்களா?

  • இவை யாவும், தேவனுடைய கிருபையினாலும் நீதியாலும் நிரம்பியவர்களைத் தாக்குவதற்கான சத்துருவின் தந்திரங்கள்.

 

தேவனுடைய சத்தியத்திற்காக நிற்கும்போது, எதிர்ப்பு வரும் என்பதை ஸ்தேவானின் கதை நமக்குக் கற்பிக்கிறது. ஸ்தேவானைப் போலவே, நாமும் உண்மையுள்ளவர்களாகவும், தைரியமுள்ளவர்களாகவும், கிருபை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் - இயேசு நம்மோடு இருக்கிறார், அவர் தம்முடைய அழைப்புக்கு உண்மையுள்ளவர் என்று விசுவாசிக்க வேண்டும்.

 

ஸ்தேவானின் பணிகள்

  • அப்போஸ்தலர் 7:1-50 இல், ஸ்தேவான் பழைய ஏற்பாட்டின் மேலோட்டத்தை வழங்கி, வரலாற்றின் மூலம் தேவனின் கிரியைகளை எடுத்துக்காட்டினார்.

  • ஜனங்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் நடந்தார்கள் என்பதைக் காட்டி, நியாயப்பிரமாணத்தின் செயல்களை விளக்கினார்.

  • அவர்கள் ஆவியையும் ஞானத்தையும் எதிர்த்த போது ஸ்தேவான் நியாயப்பிரமாணத்தை கிருபைக்கும் கிருபையின் கிரியைகளுக்கும் ஒப்பிட்டார். அவர் கூர்மையான கத்தி போன்ற தேவனுடைய வார்த்தையை எடுத்து, ஜனங்களின் பாவங்களைக் கிழித்து, அவர்களுடைய இருதயத்தின் உள் பகுதிகளையும், ஆத்துமாவின் இரகசியங்களையும் திறந்தார். வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான். அப்போஸ்தலர் 7:51-53

  • ஸ்தேவான் ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனாக இருந்ததால், அவருக்குள் இருந்த, சாந்தமும் உண்மையைப் பேசுவதற்கு கூரிய கத்தியைப் போல வெட்டிச் சரிசெய்யும் குணமும் உள்ள பரிசுத்த ஆவியானவர், அவரது வார்த்தைகளில் தெளிவாக வெளிப்பட்டார். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:7-8

  • நீதிமன்றத்தில் வாதிடும் ஒரு வழக்கறிஞரைப் போல, நியாயப்பிரமாணம் அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை அவர் விளக்கினார். (அப்போஸ்தலர் 7:1-50).

  • பரிசுத்த ஆவியானவர் சத்திய வார்த்தையாவார் - ஸ்தேவான் சரியானதையும் சத்தியத்தையும் பேசினார். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:13

  • ஸ்தேவானின் பேச்சில் இதை நாம் தெளிவாகக் காண்கிறோம் - அவர் அவர்களின் பாவங்களைத் திருத்தினார் - இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள் - தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள்.

  • நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இயேசுவைக் கொலை செய்ய சதி செய்த யூதர்களை அவர் குற்றம் சாட்டினார். அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். மத்தேயு 26:3-4

 

உண்மை வெளிப்பட்டதன் தாக்கம்

எதிரியின் செயல்கள்

இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். அப்போஸ்தலர் 7:54, 57-58

  • உண்மை அம்பலமானதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

  • அவர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்?

    • அவர்கள் பற்களைக் கடித்தார்கள் - இது கடுமையான கோபம், விரக்தி மற்றும் வெறுப்பைக் குறிக்கிறது.

    • உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டார்கள்.

    • அவரை கற்களால் அடிக்கத் தொடங்கினர்.

  • தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள் - இது சவுல் மரணதண்டனையை மேற்பார்வையிடுவதை அல்லது அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்தச் சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனென்றால், பிற்பாடு சவுல் இயேசுவின் பெரிய அப்போஸ்தலராக மாறியதால், துன்புறுத்துகிறவர்களைக் கூட அர்ப்பணிப்புள்ள சீடராக மாற்றும் தேவனின் வல்லமையைக் காட்டியது.

 

வணக்கம் ஸ்தேவான்

ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள். அப்போஸ்தலர் 6:15

  • அவர் ஒரு தேவதூதரைப் போல இருந்தார் - இந்தக் கோபம் அவர் மீது உண்டாயிருந்த போது, அவருடைய முகம் ஒரு தேவதூதரைப் போல மாறியது என்று அப்போஸ்தலர் 6:15 இல் வாசிக்கிறோம்.

  • வானத்தை நோக்கிப் பார்த்தார்

    • அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையைக் கண்டார் - அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: அப்போஸ்தலர் 7:55

  • கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

    • செயலில் விசுவாசம் - விசுவாசத்திற்கு என்ன ஒரு நம்பமுடியாத உதாரணம்!

    • பரத்தை நோக்கிய கண்கள் - துன்புறுத்தலுக்கும் வெறுப்புக்கும் மத்தியில் கூட, ஸ்தேவான் கோபமான கூட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை - அவர் தனது கண்களை பரலோகத்தின் மீது பதித்தார்.

    • தீமையை கிருபையால் மேற்கொள்ளுதல் - பயம் அல்லது கோபத்துடன் எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, மனித உணர்ச்சிகளை வெல்ல அவர் தேவனின் கிருபையை நம்பினார்.

    • தேவன் மீது விசுவாசம் - கடினமான சூழ்நிலைகளில் கூட தேவனை விசுவாசிக்கவும், அவர் மீது கவனம் செலுத்தவும் கற்றுக்கொடுக்கிறது.

  • சாட்சியம் அளித்தல் - மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் என்று அவர் சாட்சியமளித்தார். அவர் பரலோகத்தைக் கண்டு, கோபத்திலும் வெறியிலும் நிறைந்திருந்த ஜனங்களுக்கு அது எப்படி இருக்கிறது என்று சாட்சியமளித்தார், அவர்கள் கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை - அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்போஸ்தலர் 7:56

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

  • சாத்தானின் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் - சத்துரு கோபத்தையும் குற்றச்சாட்டுகளையும் தூண்ட முயற்சிக்கும்போது, ஸ்தேவான் உறுதியாக நின்று இயேசுவைக் குறித்து சாட்சியமளித்ததன் மூலம் தனது விசுவாசத்தை நிரூபித்தார், வானங்களும் அவரது செயலைக் குறித்து மகிழ்ச்சியடைந்தன. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12:11

  • இறுதிவரை தேவனை மகிமைப்படுத்துதல் – தனது இறுதி மூச்சு வரையிலும், ஸ்தேவான் தேவனைத் துதித்தார். ஸ்தேவானை வரவேற்றது போல தேவன் ஒரு நாள், நம்மையும் அவருடைய பிரசன்னத்தில் ஏற்றுக்கொள்வார் என்பதை அவரது சாட்சி நமக்கு நினைவூட்டுகிறது.

  • செயலில் விசுவாசம் - ஸ்தேவானின் தைரியம் நம் விசுவாசத்தை பலப்படுத்துகிறது, எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், நாம் உறுதியாக நின்று தேவனின் வல்லமை மற்றும் இரட்சிப்பைக் குறித்து சாட்சியமளிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

  • மன்றாடும் ஜெபம் - கல்லெறியப்பட்டபோது, இயேசு சிலுவையில் செய்தது போல, ஸ்தேவான் தன்னுடைய ஆவியை ஏற்றுக்கொள்ளும்படி ஊக்கமாக ஜெபித்தார். அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அப்போஸ்தலர் 7:59

  • பரிந்து பேசும் ஜெபம் - ஸ்தேவான் முழங்காற்படியிட்டு, இயேசு சிலுவையில் செய்ததைப் போலவே, தனது எதிரிகளை மன்னிக்கும்படி ஜெபித்தார். தர்சு பட்டணத்து சவுலை பெரிய அப்போஸ்தலர் பவுலாக மாற்றியதன் மூலம் தேவன் அவருடைய ஜெபத்தைக் கனப்படுத்தினார். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். அப்போஸ்தலர் 7:60

  • ஸ்தேவானின் மரணத்துக்கும் சவுலுக்கும் என்ன தொடர்பு?

    • அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். அப்போஸ்தலர் 7:58   

    • அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். அப்போஸ்தலர் 8:1

  • ஸ்தேவானின் மரணத்தில் தான் பங்கு வகித்ததை பவுல் எவ்வாறு நினைவுகூருகிறார்?

    • உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். அப்போஸ்தலர் 22:20

 

முதல் இரத்தசாட்சியிடமிருந்து முக்கிய பாடங்கள்

  • எதிர்த்துப் போராட வேண்டாம் - பரலோகத்தைப் பாருங்கள் - பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அல்லது கோபம் மற்றும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, ஸ்தேவான் தேவனின் மகிமையை நோக்கிப் பார்த்தார். எப்பேர்ப்பட்ட வலிமையான பாடம் நமக்கு!

  • நாம் தேவனைப் பற்றி சாட்சி கொடுக்கிறோமா? - ஆபத்து அல்லது எதிர்ப்பை எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலைகளில் கூட, ஸ்தேவான் தைரியமாக தேவனின் மகிமையைப் பற்றி பேசினார். நம்முடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள நமக்கு அதே தைரியம் இருக்கிறதா?

  • ஸ்தேவானைப் போல நாமும் நம்முடைய எதிரிகளுக்காக ஜெபம் செய்கிறோமா? – அவர் முழங்காற்படியிட்டு, தன் மீது குற்றம் சுமத்தியவர்களை மன்னிக்கும்படி அவர்களுக்காக ஜெபித்தார். அவருடைய இருதயப்பூர்வமான ஜெபம் சவுலை மிகப் பெரிய அப்போஸ்தலர்களில் ஒருவரான பவுலாக மாற்ற வழிநடத்தியது.

  • நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது, சத்துருவின் பிடியிலிருந்து ஜனங்களை மீட்க அவர் அசைகிறார்.

  • ஸ்தேவானின் ஒரு ஜெபம் பவுலின் இரட்சிப்புக்கு வழிவகுத்தது என்றால், நாமும் அதே வழியில் ஜெபித்தால் இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கை மாறக்கூடும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

  • பெரும்பாலும், ஸ்தேவான் செய்ததற்கு நேர்மாறாக நாம் செய்கிறோம், அதனால்தான் நம்முடைய சில ஜெபங்கள் பதிலளிக்கப்படாமல் போகின்றன. தேவனை விசுவாசிக்கவும், தைரியமாக சாட்சியமளிக்கவும்,   அன்பும் மன்னிப்பும் நிறைந்த இருதயத்தோடு ஜெபிக்கவும் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது.

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Mar 10

Powerful message.one should follow.praise god

Like

Philip C
Feb 23
Rated 5 out of 5 stars.

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page