top of page
Kirupakaran

வெளிப்படுத்தப்பட்ட தேவ ஞானம்


பெரியவர்களிடமிருந்து ஞானத்தைத் தேட வேண்டும், ஞானத்திற்காக தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்.


ஞானம் என்றால் என்ன?

இதை நீங்கள் இணையத்தில் தேடினால் - ஞானம் என்பது அறிவு மற்றும் புரிதல் மட்டுமல்ல என்று அறிந்து கொள்ளலாம். இது உயர் நிலை நடைமுறை, பொது அறிவு, அத்துடன் மற்றவர்களிடம் காட்டும் இரக்கம், பச்சாதாபம் ஆகியவற்றை உள்ளடக்கியது. புத்திசாலி நபர்களால் பெரும்பாலும் பல கண்ணோட்டங்களிலிருந்து விஷயங்களைப் பார்க்க முடியும் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க முடியும்.


எனவே சுருக்கமாக,

ஞானம் = அறிவு + நடைமுறை புரிதல் + பொது அறிவு + ஒரு பிரச்சனையின் பல பரிமாணங்கள் + அனுபவம் + இது போன்று இன்னும் பல.


ஞானம் என்பது மனித புத்திசாலித்தனத்தின் விளைவு என்று உலகில் சிலர் நம்புகிறார்கள். சிலரோ, ஜாதி, பரம்பரை மற்றும் தனிப்பட்ட அனுபவம் போன்ற காரணிகள் தான் தங்கள் ஞானத்திற்கு காரணம் என்று நம்புகிறார்கள். இருப்பினும், இந்த நபர்கள் பெரும்பாலும் ஞானம் தேவனிடம் இருந்து வருகிறது என்ற கருத்தை முட்டள்தனமாகப் பார்த்து, அதை நிராகரிக்கிறார்கள்.


ஆனால் வேதம் நமது உலக நம்பிக்கைக்கு எதிராகக் கூறுகிறது.

இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:25


ஒருவன் தன்னை ஞானி, புத்திசாலி என்று நினைத்தால், தேவனுடைய ஞானத்துடன் தங்கள் ஞானத்தை ஒப்பிட்டுப் பார்த்து விரக்தியடைவார்கள்.

அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:19


மனிதர்களுக்கு தேவ ஞானத்தைக் கொடுப்பதன் நோக்கம்

  • தேவன் தமக்குப் பயப்படுகிறவர்களுக்குத் தம்முடைய ஞானத்தைக் கொடுக்கிறார். பாவங்களை விலக்கி, அவரைப் போல பரிசுத்தமாக ஆவதற்கு இது நமக்குக் கொடுக்கப்படுகிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. நீதிமொழிகள் 9:10

  • தேவனின் ஞானம் ஒரு மறைபொருள் - இது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும்படி அவர் தேர்ந்தெடுத்தவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 1 கொரிந்தியர் 2:7

  • தேவன் உங்கள் ஆயுசு நாட்களை அதிகப்படுத்துவார். என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். நீதிமொழிகள் 9:11

  • தேவ ஞானம் தந்திரக்காரர்களை பிடிக்கிறது - நாம் பாவம் செய்யும்போது, தேவனை விஞ்சுவதற்கு சாத்தானிடமிருந்து தந்திரத்தைப் பெறுகிறோம், மேலும் அவருக்கு விரோதமாக பாவம் செய்ய புதிய / புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால் அவருடைய ஞானம் தந்திரத்தைப் பிடித்து, மனிதன் மூலமாக விடுவிக்கப்பட்ட சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறது. அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும். யோபு 5:13

தேவ ஞானத்தைத் தேடுதல்

"யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்" என்று தேவ ஞானத்தைத் தேடுவதற்கு யாக்கோபு நமக்கு அறிவுரை கூறுகிறார்.


உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5.


யாக்கோபின் அறிவுரை எளிமையாகத் தோன்றலாம், ஆனால் இதை எப்படிப் பின்பற்றுவது?


வேதத்தில் கொடுக்கப்பட்டு உள்ள சாலொமோனின் வாழ்க்கையில் இருந்து அவர் எப்படி தேவனுடைய ஞானத்தை நாடினார் என்பதை பார்க்கலாம்.


சாலொமோன் தேவனின் ஞானத்தைத் தேடினார்

சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக நியமிக்கப்பட்ட பிறகு, கர்த்தர் அவருக்கு கனவில் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவருடைய பதில் இப்படியாக இருந்தது. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 1 இராஜாக்கள் 3:9


மேற்கண்ட வசனத்தின் முழுமையான சூழல்


கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 1 இராஜாக்கள் 3:5,8-9


தேவன் சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்ததில் இருந்து, தேவனின் ஞானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது குறித்து சாலொமோனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல ஆவிக்குரிய பாடங்கள் உள்ளன.


1. தேவனுக்குக் கீழ்ப்படிதல் - சாலொமோன் தேவனுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடந்தார். சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான். 1 இராஜாக்கள் 3:3

  • நாம் ஒருவரிடம் அன்பு கூர்ந்தால் மட்டுமே கீழ்ப்படிதல் வரும். இங்கே சாலொமோன் தேவன் மீது அன்பு கொண்டிருந்தார்.

  • அவரது தகப்பன் தாவீது கொடுத்த கட்டளைகளின்படி நடந்து வந்தார்.

நமக்கான பாடம் - அதே மாதிரி, தேவ ஞானத்தைத் தேட வேண்டும் என்றால், நாம் தேவனை நம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் நேசிக்க வேண்டும். அவருடைய ஞானத்தைப் பெற அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.


2. தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடு இருத்தல் - சாலொமோன் தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினார். இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். 1 இராஜாக்கள் 3:7

  • இராஜாவாக ஆக்கப்பட்டாலும் "சிறுபிள்ளையாயிருக்கிறேன்", என்று ஒரு சிறு குழந்தை நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டதால், தேவன் அவருக்கு ஞானத்தைக் கொடுக்கத் தேர்ந்தெடுத்தார்.

  • அவர் தனது கடமைகளைச் செய்ய தேவனின் உதவியை நாடினார். எனவே அவரது சார்பு தேவனிடம் இருந்தது - "... நானோவென்றால் போக்கு வரவு அறியாத..".

நமக்கான பாடம் - தேவனிடம் உங்களைத் தாழ்த்தி, உங்கள் சுய ஆசைகள் அல்லது சுய வழிகளை விட அவருடைய வழிகளில் சார்ந்திருங்கள்.


3. கேட்டது உலகப்பிரகாரமானதல்ல - சாலொமோன் தேவனிடம் “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” என்று கேட்ட பிறகு, தேவன் சாலொமோனைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார் என்று வாசிக்கிறோம்.

"சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,". 1 இராஜாக்கள் 3:10-11

  • இந்தக் கேள்வியில் தேவன் ஏன் மகிழ்ச்சியடைந்தார்? ஏனெனில், சாலொமோன் நீண்ட ஆயுளையோ, உலகின் ஐசுவரியத்தையோ, அவரது சத்துருக்களின் மரணத்தையோ அல்லது உலகின் பிற பொருட்களையோ கேட்கவில்லை - "நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,".

நமக்கான பாடம் - பல நேரங்களில் தேவனின் ஞானத்தைக் கேட்பதற்கான நமது நோக்கங்கள், உலக விஷயங்களை விரிவுபடுத்தி உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகும். ஆனால், தேவன் தமது ஞானத்தை ஜெபம் / நீதி / பரிசுத்தம் / ஆத்தும இரட்சிப்பு போன்ற நித்திய ஆசீர்வாதங்களுக்குப் பயன்படுத்த விரும்புகிறார். பவுல் இதை சிறப்பாக விளக்குகிறார். "அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்". 1 கொரிந்தியர் 1:30-31


4. தேவனின் ஆசீர்வாதம்

· “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” என்று சாலொமோன் ஞானத்தைக் கேட்ட பிறகு,

  • தேவன் அவருக்கு ஞானத்தைக் கொடுத்தார். உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 1 இராஜாக்கள் 3:12

  • தேவனின் ஆசீர்வாதம் ஞானமான, பகுத்தறியும் இருதயம் - ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்;

  • தனித்துவமான ஞானம் - இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

  • அவர் கேட்காததையும் தேவன் அவருக்குக் கொடுத்தார் - இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. 1 இராஜாக்கள் 3:13

  • தேவன் அவருக்கு ஐசுவரியத்தையும் மகிமையையும் கொடுத்தார் - உலகில் அவருக்குத் தேவையான ஐசுவரியம், மேலும் ஒரு இராஜாவாக அவர் கனம் பண்ணப்பட்டார். இது மிக முக்கியமானது.

  • தேவன் அவரை உயரத்தில் வைத்தார் - அவர் காலத்தில் இருந்த அனைத்து மன்னர்களையும் விட அவரை உயர்த்தினார்.

நமக்கான பாடம் - தேவன் சாலொமோனுக்கு ஞானத்தையும் அவர் கேட்காததையும் தாராளமாகக் கொடுத்தது, யாக்கோபு 1:5 இல் தேவனிடம் கேட்க சொல்வதற்கு ஏற்ப உள்ளது. மனிதர்களைப் போல் கஞ்சத்தனம் காட்டாத தேவன், நாம் கேட்பதை விட அதிகமாகக் கொடுப்பார். “...யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய...”.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5


5. ஆசீர்வாதங்களுக்கு தேவனின் முன் நிபந்தனைகள்

தேவன் சாலொமோனுக்கு ஞானம் மற்றும் அவர் கேட்காத உலக ஆசீர்வாதங்கள் / கனம் என்ற இரண்டு விஷயங்களைக் கொடுத்தார் என்று முன்பு பார்த்தோம்.

உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார். 1 இராஜாக்கள் 3:14

  • 14 ஆவது வசனத்தில், அவருக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் மற்றும் அவரைப் பின்பற்றுதல் ஆகியவற்றை அவருடைய ஆசீர்வாதத்திற்கு முன் நிபந்தனையாக மீண்டும் வலியுறுத்துகிறார். அதைக் கடைபிடித்தால் அவர் நீண்ட ஆயுளைக் கொடுப்பார்.

  • சாலொமோன் நீதிமொழிகளை எழுதினார் - என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். நீதிமொழிகள் 9:11

நமக்கான பாடம்

  • பல சமயங்களில் நாம் தேவனிடம் இருந்து ஞானத்தின் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, ​​நம்மிடம் ஞானத்தின் பெருமை அதிகமாக இருக்கிறது. மேலும் தேவனை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக நமக்கே பெருமை தேடிக் கொள்கிறோம்.

  • தேவன் மீதான நம் அன்பு குறைந்து, மெதுவாக விலகிச் சென்று, தேவனின் வழிகள் மற்றும் அவரது வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமைக்கு வழிவகுக்கிறது. ஏனெனில், நமது உலக முன்னுரிமைகளால் நம் காதுகள் அடைக்கப்படுகின்றன.

  • இந்த ஞானத்தை நாம் தேவனைக் கனப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் பயன்படுத்தினால், பூமியில் நம் நாட்கள் தாராளமாகவும் நீடித்தும் இருக்கும்.

  • தேவனின் ஆசீர்வாதத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கீழ்ப்படிதல் முக்கியமானது.


தேவ ஞானம்

தேவன் தம்முடைய ஞானத்தால் நம்மை ஆசீர்வதிக்கும்போது, நாம் கற்பனை செய்வதைவிட முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது.

1 இராஜாக்கள் 4:29-34 - சாலொமோனை அவர் எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.


தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான். சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள். 1 இராஜாக்கள் 4:29-34


  • தேவனின் ஞானம் கடற்கரை மணலைப் போல அளவிட முடியாதது - தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.1 இராஜாக்கள் 4:29

  • தேவனின் ஞானம் உங்களை ஒரு துருவ நட்சத்திரமாக ஆக்குகிறது - நீங்கள் வேலை செய்யும், சேவை செய்யும், உங்களோடு வாழும் மக்களில் இருந்து நீங்கள் வேறுபடுத்தப்படுவீர்கள். இது தான் சாலொமோன் காரியத்தில் நடந்தது.

சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. 1 இராஜாக்கள் 4: 30-31

  • தேவ ஞானம் பல திறமைகளை வழங்குகிறது - தேவன் சாலொமோனுக்கு 3000 நீதிமொழிகள் / 1005 பாடல்களைக் கொடுத்தார். அவர் தாவரங்களைக் குறித்தும், விலங்குகள் / பறவைகள் / ஊர்வன / மீன்கள் குறித்தும் பேசியுள்ளார்.

அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக் குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான். 1 இராஜாக்கள் 4:32-33

  • தேவ ஞானம் அவரின் மகிமைக்கானது - தேவன் அவருடைய மகிமைக்காக அவருடைய ஞானத்தைத் தருகிறார். சாலொமோன் விஷயத்தில், அவருடைய ஆலோசனையைக் கேட்க ராஜாக்களை அனுப்பினார். நமது விஷயத்தில் அவர் தமது அழைப்பிற்கு ஏற்ப நம்மை வித்தியாசமாகப் பயன்படுத்தலாம்.

சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள். 1 இராஜாக்கள் 4:34

  • 1 இராஜாக்கள் படிக்கும் போது சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனைப் பார்க்க வருவதையும், சாலொமோனின் ஞானத்திற்காக தேவனை துதிப்பதையும் மகிமைப்படுத்துவதையும் காண்கிறோம்.

ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது. உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். 1 இராஜாக்கள் 10:6-9

  • 1 இராஜாக்கள் புத்தகத்தில், தேவனுக்குப் பிரியமான ஆலயத்தை சாலொமோன் அவருடைய ஞானத்தினால் எவ்வாறு கட்டினார் என்று விளக்கப்பட்டுள்ளது.


ஆகவே, "தேவனிடத்தில் கேட்கக்கடவன்", என்று யாக்கோபு கூறுவது போல நாம் தேவ ஞானத்தைத் தேட வேண்டும். நாம் அவரிடம் கேட்கும் போது சாலொமோனைப் போல தேவனுக்கு கீழ்ப்படிந்து, அவரைக் கனப்படுத்தி, அவருடைய சித்தத்தின்படி செய்யும் இருதயத்தோடு கேட்கக் கடவோம்.


தேவனுக்கும் அவருடைய அழைப்பிற்கும் நாம் உண்மையாக இருந்தால் அவர் சாலொமோனை ஆசீர்வதித்ததை விட அதிகமாக நம்மை ஆசீர்வதிப்பார்.


33 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page