top of page
Kirupakaran

வெளிச்சம்


தேவன் முதலில் வானத்தையும், பின்னர் பூமியையும் படைத்தார் என்று ஆதியாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். பூமி உருவானபோது, அதற்கு எந்த வடிவமும் இல்லை. அது வெறுமையாகவும், இருட்டாகவும் இருந்தது. பூமிக்கு ஜீவனைக் கொண்டுவர, “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று கட்டளையிட்டதன் மூலம் தேவன் முதலில் வெளிச்சத்தைப் படைத்தார்.


'தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 'ஆதியாகமம் 1:3


தேவன் வெளிச்சத்தை உருவாக்கிய நாள் முதல், இந்த உலகில் பல விஷயங்களுக்கு இதுவே மூலமாக விளங்குகிறது. வெளிச்சத்தின் தீவிரத்தைப் பொறுத்து தாவர உணவு உற்பத்தி, தண்டின் நீளம், இலை நிறம் மற்றும் பூக்கும் திறன் ஆகியவற்றில் பாதிப்பு உருவாகிறது. அதே போல் வெளிச்சம் மனிதர்களுக்குத் தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்தை நம்மில் உருவாக்குகிறது. இந்த வெளிச்சத்தில் பல நல்ல விஷயங்கள் இருப்பதால், பைபிள் பல விஷயங்களை வெளிச்சத்தின் வாயிலாக நமக்குக் கற்பிக்கிறது.


நான் 1 யோவான் 1 ஐ தியானித்துக் கொண்டிருந்தபோது, இந்த வெளிச்சத்தைப் பற்றியும், இயேசுவோடு நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியின் விளைவைப் பற்றியும் தேவன் எனக்குக் கற்பித்ததை இங்கு வரையறுத்து உள்ளேன்.


தேவனுடைய வரையறை


'தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிறவிசேஷமாயிருக்கிறது. ' 1 யோவான் 1:5


தேவனை வரையறுப்பதற்கான ஒரு வழி என்னவென்றால் – “தேவன் மட்டுமே எல்லையற்ற, நித்தியமான, மாறாத ஆவி. எல்லாக் காரியங்களும் அவரில் தொடங்கி, அவரில் தொடர்ந்து, அவரிலேயே முடிவடையும் படிக்கு அவர் வல்லமையானவர்” என்பதாகும்.


தேவனை வரையறுப்பதற்கான மற்றொரு வழி - “தேவன் ஒளியாயிருக்கிறார்” என்பது.


பைபிளில் உள்ள வார்த்தைகள் மிகவும் அற்புதமானவை; தேவனின் அற்புதமான வார்த்தைகளை வெளிக்கொணரவும், இந்த ஒரு வரி வரையறையிலிருந்து ஞானத்தை அனுபவிக்கவும் வேதத்தை நீங்கள் மெதுவாகப் படிக்க வேண்டும். இது போன்று பல உள்ளன. தேவனைப் பற்றிய ஒரு வரி வரையறை என்னவென்றால் - “தேவன் ஒளியாயிருக்கிறார்” என்பதே. அதே போல பரிசேயர்கள் அவரிடம் மிகப் பெரிய கட்டளை எது என்று கேட்டபோது, இயேசு அவர்களுக்கு கீழ்கண்டவாறு அற்புதமாகப் பதிலளித்தார்.


“இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுமனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. “ மத்தேயு 22:37-39


“தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை”

என்ற வசனத்தில் "அவரில் எவ்வளவேனும் இருளில்லை" என்பதற்கு அவரிடத்தில் எந்த பாவமும் இல்லை என்று பொருள்.


இயேசுவோடு நடப்பது


'அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகியஇயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். ' 1 யோவான் 1:7


இந்த வசனம் நாம் ஏன் இயேசுவோடு நடக்க வேண்டும் என்பதையும், அவருடன் நடப்பதால் நமக்கு உண்டாகும் விளைவுகளையும் விளக்குகிறது.


நாம்


“நாம்” என்ற சொல் இங்கே “நாமும் ஒளியிலே நடந்தால்” & “நம்மைச் சுத்திகரிக்கும்” என்று இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் என்பது கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் அல்லது கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கிறது. ஆகவே, நாம் அவருடன் நடக்கும்போது அவர் நம்முடன் இருக்கிறார் என்பது நம்பிக்கையின் செய்தி.


ஒன்று சேர்ந்த – ஐக்கியம்


ஐக்கியம் என்ற சொல் தொடர்ச்சியான உறவைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இயேசுவோடு ஐக்கியம் கொள்ளும்போது, நாம் அவரைப் போலவே ஆகிவிடுவோம். வசனம் மேலும் கூறுகிறது, “ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” என்று. இதன் அர்த்தம் என்ன?


உலகில் நமக்குப் பல உறவுகள் உள்ளன. நீங்கள் ஒரு பொதுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்ளும்போது அது நட்பிற்கு வழிவகுக்கும். நண்பர்கள் தவறாமல் சந்தித்துப் பேசி இந்த ஐக்கியத்தை வளர்த்துக் கொள்வார்கள். அதைப் போன்று தான் காதலர்கள் தங்கள் "அன்பை" பகிர்ந்து கொள்ள பல விதமாக தங்கள் ஐக்கியத்தை வெளிக்காட்டுவார்கள்.


இதைப் போன்று தான் நாம் இயேசுவோடு ஐக்கியத்தை வளர்க்கவேண்டும் என்றால், நம்மிடம் உள்ள பாவங்களை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நான் ஒரு பாவி என்பதை உணர்ந்திருக்க வேண்டும், தேவனால் மட்டும் தான் என்னைக் கழுவமுடியும் என்ற சிந்தனை இருக்கவேண்டும். அப்போது தான் அவருடன் இருக்கும் ஐக்கியம் "ஒருவரோடொருவர் " கொண்ட ஐக்கியமாக இருக்கும்.


நாம் தேவனோடு ஐக்கியமாக இருப்பதற்கு நம்முடைய பாவம் தான் பெரிய தடையாக இருக்கிறது.


இதற்கு ஒரு உதாரணத்தை லூக்கா 19-ல் சகேயுவைக் குறித்துப் படிக்கிறோம்,


'இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான்உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான். அதைக்கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய்வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்குஇரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. 'லூக்கா 19:5-9


  1. இயேசு "இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்" என்று சொன்னவுடனேயே சகேயு அவரை வரவேற்றான். இந்த விதமான ஐக்கியத்தை தான் யோவான் குறிப்பிடுகிறார்.

  2. சகேயு தன்னுடையப் பாவங்களை உணர்ந்து அவரிடத்தில் அறிக்கையிட்டான் – “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்

  3. பாவத்தை ஒப்புக்கொண்ட தருணத்திலேயே நம்முடைய பாவம் அழிக்கப்பட்டு, தேவனின் நித்திய ஆசீர்வாதங்கள் வருகின்றன, "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே".


இயேசுவின் இரத்தம் - “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.”


இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. நாம் வெளிச்சத்தில் நடக்கும்போது, இயேசுவினுடைய தொடர்ச்சியான சுத்திகரிப்பை அனுபவிக்க முடியும். இயேசுவின் ரத்தம் இந்த தொடர்ச்சியான சுத்திகரிப்பை செய்கின்றது. “ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” என்ற வார்த்தைக்கு இணங்க நீங்கள் அவருடன் ஐக்கியம் வைத்திருந்தால் மட்டுமே இந்த தொடர்ச்சியான சுத்திகரிப்பைப் பெறமுடியும்.


நாம் பாவத்தால் நிறைந்திருக்கிறோம். நம் மாம்சம், கண்கள், பெருமை ஆகியவற்றின் மூலம் தினமும் பாவம் நமக்கு வருவதால், நமக்குத் தொடர்ந்து சுத்திகரிப்பு தேவை.


'ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம்பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். '1 யோவான் 2:16


இயேசுவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்கும் - இயேசுவின் இரத்தத்தால் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் சுத்திகரிக்கப்படலாம். ஆதாமிடமிருந்து நாம் பெற்ற பாவம், குழந்தைகளாக நாம் செய்த பாவம், வளர்ந்த பின் வரும் பாவங்கள்; நம் தந்தைக்கு எதிரான, நம் தாய்க்கு எதிரான, நம் சகோதர சகோதரிகளுக்கு எதிரான பாவங்கள்; உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு எதிரான, உங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாவங்கள்; உங்கள் முதலாளிகள் அல்லது உங்கள் ஊழியர்களுக்கு எதிரான பாவங்கள், உங்கள் நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் எதிரான பாவங்கள்; பொய், திருடுதல், மோசடி, விபச்சாரம், சத்தியம் செய்தல், போதைப்பொருள், சாராயம், கொலை; ஒவ்வொரு நாளும் நம்மை வேட்டையாடும் பாவங்கள், நாம் செய்ததைக் கூட நாம் அறியாத பாவங்கள் - என எல்லாப் பாவங்களும் இயேசுவின் இரத்தத்தால் சுத்தப்படுத்தப்படலாம்.


அதனால்தான் சாத்தான் இயேசுவுக்குப் பயப்படுகிறான். நாம் செய்யும் பாவங்களால் நம்மைத் துன்புறுத்தும் சக்தி சாத்தானுக்கு இருப்பது போல் இயேசுவினுடைய இரத்தத்திற்கு நம்மைத் தூய்மைப்படுத்தும் சக்தி இருக்கிறது.


வெளிச்சத்தின் ஆவிக்குரிய சுருக்கம்


  1. நிலை 1 - நீங்கள் வெளிச்சத்தில் நடப்பதாக கூறினால், எனக்கு இயேசுவில் விசுவாசம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் - இது 1 வது நிலை.

  2. நிலை 2 - இயேசுவுடனான ஐக்கியத்தில் இருப்பது - இது 2 வது நிலை. நீங்கள் ஒவ்வொரு வாரமும் தேவாலயத்தில் கலந்துகொள்கிறேன் என்று சொன்னால் இது 2 வது நிலை.

  3. நிலை 3 - ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இருப்பது - இது 3 வது நிலை. நீங்கள் தினமும் தேவனோடு உறவு வைத்திருந்தால், அவருடன் பேசினால், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் வழிகாட்டலையும் புரிந்து கொண்டால் மட்டுமே இந்த நிலைக்கு வர முடியும்.

  4. நிலை 4 - தொடர்ச்சியான சுத்திகரிப்புக்கு வழிவகுக்கும் ஐக்கியம் - இது 4 வது நிலை. இந்த ஐக்கியத்தில் நாம் தொடர்ச்சியான சுத்திகரிப்புக்கு முயல்கிறோம். நாம் உலகில் வாழும்போது, நம்முடைய ஆசைகள் பாவமாக மாறாமல் இருக்க, நம்முடைய வாழ்க்கையில் அந்த பாவத்திலிருந்து விடுபட இந்த தொடர் சுத்திகரிப்பு நம்மை 4 வது நிலைக்கு கொண்டு செல்லும்.

  5. நிலை 5 - எல்லாப் பாவங்களும் சுத்தப்படுத்தப்படுகின்றன என்ற உத்தரவாதம் - இது 5 வது நிலை, எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதில் உறுதியாக இருப்போம். கடவுளின் அன்பு நம்மை முழுமையாக்குகிறது. உலக வாழ்க்கைக்குள் நாம் செல்லும்போது கடவுளின் சமாதானம் நம்மை நிரப்புகிறது.



22 views1 comment

Recent Posts

See All

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Renuga David
Renuga David
Jul 05, 2021

Very nice God bless you will you explain the 3rd stage to

Like
bottom of page