பல கிறிஸ்தவர்கள் வார நாட்களில் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்தவர்களாக வாழ முயற்சி செய்கிறார்கள். வார நாட்களில் கிறிஸ்தவராக வாழ பைபிள் நமக்கு என்ன அறிவுறுத்துகிறது?
நம்மைச் சுற்றியுள்ள உலகம்
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4:4
யாக்கோபு “விபசாரரே, விபசாரிகளே” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறார், ஏனென்றால் நமது அணுகுமுறை ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் வேறுபடுகிறது, ஒவ்வொரு நாளுக்குள்ளும் நாம் செல்லும்போது அது மாறுகிறது.
அவர் ஒரு வலுவான வார்த்தையை சுட்டிக்காட்டுகிறார் – “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?”, ஆனால் நாம் இந்த உலகில் வாழ்கிறோம், உலகத்திற்கு சிநேகம் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது?
“உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” என்று தேவன் ஏன் சொன்னார்? ஏனென்றால் உலகத்தை சிநேகிக்கும் போது தேவனோடு உள்ள நமது பரிசுத்தம் இல்லாமல் போய்விடும், நாம் பரிசுத்தமற்றவர்களாக இருந்தால் தேவனிடம் நெருங்க முடியாது.
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2:15-17
எச்சரிக்கை - உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்.
பிரச்சனைகள்
... மாம்சத்தின் இச்சை (நம் சுய ஆசைகள், சாத்தான் - பொய்யின் ஆவி)
... கண்களின் இச்சை (உலகின் அழகின் மீதான ஈர்ப்பு, சாத்தான் - வஞ்சனையின் ஆவி)
... ஜீவனத்தின் பெருமை (எதையாவது சாதித்தவுடன், அந்தப் புகழை தானே எடுத்துக் கொண்டு அதைக் குறித்து பெருமைப்படுவது, சாத்தான் - பெருமையின் ஆவி)
இந்த 3 சோதனைகளை எதிர்த்துப் போராடுவது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்? அதற்கான பதில் ரோமர் 6 இல் உள்ளது.
அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:11-14
சிந்தியுங்கள் – “உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்” என்ற தீர்மானத்திற்கு வாருங்கள். சரீரம் கிறிஸ்து வாழும் இடமாக இருக்கிறது, பாவம் அதில் நுழைய முடியாது.
எதிர்த்து நில்லுங்கள் - இருந்தும் 3 சோதனைகள் வரும் - தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவற்றை எதிர்த்து நில்லுங்கள். யாக்கோபு 4:7இவ்வாறு கூறுகிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ஒப்புக் கொடுங்கள் - தேவனிடம் ஒப்புக்கொடுத்தல். நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். .....பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:13-14
வார நாள் கிறிஸ்தவராக நடப்பது
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2:10
அவர் நம்மைப் படைத்ததால், இந்த உலகில் கிறிஸ்துவிற்கேற்ற படி நாம் ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ்கிறோம் - அவருடைய சித்தத்தின்படி நடக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மனிதனின் பொறுப்பு - காரியங்களைச் செய்வது அவனது மனசாட்சிக்குட்பட்ட பொறுப்பு.
கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் நிறைந்திருக்கும் இந்த உலகில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? 1 பேதுரு 2:11முதல் 24 வரை உள்ள வசனங்கள் நாம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
1) அந்நியர்களும் பரதேசிகளும் போல உலகில் வாழுங்கள்
"பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,". 1 பேதுரு 2:11
நம் வீடல்லாத வேறொரு இடத்திற்கு சென்றால், சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வகையில் நாம் எதையும் செய்ய மாட்டோம். அதே போல் தான் உலகத்தில் வாழ வேண்டும் என்று பவுல் கேட்கிறார்.
உலகில் நமது வாழ்க்கை தற்காலிகமானது. நமது வேலை, எண்ணங்கள், செயல்கள் யாவும் மேலே உள்ள நித்திய ஜீவனுடன் இணைக்கப்பட வேண்டும்.
சாத்தான் உலகத்தின் ஆசைகளைப் பயன்படுத்தி நம்மைக் கவர்ந்து உலகத்தின்பால் ஈர்க்கப்படும் படி செய்கிறான். அங்கே தான், சிந்தித்து / எதிர்த்து நின்று / ஒப்புக் கொடுத்து அந்த ஆசைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
உலகில் வாழ்வதற்கு நமக்கு தொடர்ந்து போராட்டங்கள் உண்டு. நற்செய்தி என்னவென்றால், ஒரு கிறிஸ்தவர் சாத்தியமான வெற்றியை நோக்கி போராடுவதில்லை, ஏற்கனவே பெற்ற வெற்றியிலிருந்து முன்னேறுகிறார்! அல்லேலூயா!
இந்த வார்த்தையை பின்பற்றுவதால் நமக்கு வரும் ஆசீர்வாதம்
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 பேதுரு 2:12
"அக்கிரமக்காரர்" என்று நாம் குற்றம் சாட்டப்படலாம், சில சமயங்களில் சிலர் உங்களை எந்த காரணமும் இல்லாமல் ஏன் வெறுக்கிறார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
“தேவனுக்கு முன்பாக நாம் நிற்கும் நாளில்” நமக்கான ஆசீர்வாதம் இருக்கும் - நம்மீது குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் சாட்சியளித்து தேவனை மகிமைப்படுத்துவார்கள். இதுவே தேவனிடமிருந்து நாம் பெறக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம்.
பெரும்பாலும் நாம் நமக்காக மட்டுமே ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம், ஆனால் நாம் இந்த வாழ்க்கையை வாழும்போது நமது செயல்கள் தேவனை மேன்மைப்படுத்துகின்றன.
2) மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிதல்
நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். 1 பேதுரு 2:13-14
எல்லா அதிகாரங்களுக்கும், பணியிடத்தில் உள்ளவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள் .
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் பல சமயங்களில் நாம் முரண்படலாம், அவர்களின் யோசனைகளை நாம் எதிர்க்கலாம், இருந்த போதிலும், நாம் அவர்களுக்கு கீழ்ப்படியவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த வார்த்தையை பின்பற்றுவதால் நமக்கு வரும் ஆசீர்வாதம்
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 பேதுரு 2:15
அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதன் மூலம், நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றுகிறோம்.
நாம் எதைச் செய்தாலும் துன்பப்படுவதையோ அல்லது தவறான பாதையில் செல்வதையோ தேவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அப்படியே ஒருவேளை நாம் ஏதேனும் துன்பத்திற்கு ஆளானால், நீதியின் பொருட்டே துன்பப்படுகிறோம். அதினால் வரும் ஆசீர்வாதங்கள் கணக்கில் அடங்காதவை.
நாம் "கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு…" (எபேசியர் 2:10) இருப்பதால், “நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது…” என்ற வார்த்தையை நிறைவேற்றுகிறவர்களாக இருக்கிறோம்.
3) சுயாதீனராக வாழுங்கள்
சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். 1பேதுரு 2:16
"சுயாதீனமுள்ளவர்களாக வாழுங்கள்" என்று பவுல் கூறுவது, ஒவ்வொரு நாளும் தேவனால் சுத்திகரிக்கப்படும் வாழ்க்கையைப் பெறுங்கள், பாவங்களிலிருந்து விடுபட்டு வாழுங்கள் என்று பொருள்படும்.
அந்த வாழ்க்கையை நாம் வாழும் போது, நமக்குள் ஆவிக்குரிய பெருமை வருகிறது. "சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல்…”, என்பது நமக்கான எச்சரிப்பாக இருக்கிறது.
இந்த வார்த்தையை பின்பற்றுவதால் நமக்கு வரும் ஆசீர்வாதம்
"தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்", நாம் தேவனுக்கு அடிமைகளாக இருக்கிறோம்.
நாம் எஜமானரின் கட்டளைகளைப் பின்பற்றுகிறோம், தேவனின் பார்வையில் தகுதியுடைய, தேவனுடைய அடிமைகளாக நாம் மதிக்கப்படுகிறோம். அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17:10
4) எல்லாரையும் கனம் பண்ணுங்கள்
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். 1 பேதுரு 2:17
ஒவ்வொருவரையும் கனம் பண்ணும்படி தேவன் நம்மைக் கேட்கிறார், அவர் எல்லாரையும் என்று சொல்லும்போது அது நம் வயதிற்கு மூத்தவர்களையும் நம் வயதிற்குக் குறைவானவர்களையம் குறிக்கிறது.
நாம் பேசும் வார்த்தைகள் நன்மையானதாக இருக்க வேண்டும், தீமையானது எதுவும் நம் வாயிலிருந்து வரக்கூடாது.
இந்த வார்த்தையை பின்பற்றுவதால் நமக்கு வரும் ஆசீர்வாதம்
“சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்” என்பதைக் காட்ட தேவ அன்பு நமக்கு வருகிறது. அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் தேவனுக்குப் பயப்படுகிறோம்.
5) எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்
வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 1 பேதுரு 2:18
நாம் வேலை பார்க்கும் இடத்தில் நம் முதலாளிகளுக்கும், மேலாளர்களுக்கும் நாம் "தேவ பயபக்தியுடன்" கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று வார்த்தை கூறுகிறது.
பல சமயங்களில் அந்த மாதிரியான மரியாதையை நமக்கு நியாயமானவர்களுக்கு மட்டுமே காட்டுகிறோம், ஆனால் முரட்டுக்குணம் உள்ளவர்களிடத்திலும் அந்த மாதிரியான பயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று வார்த்தை சொல்லுகிறது. கரிசனமுள்ள முதலாளிகளையும் கடுமையான முதலாளிகளையும் நாம் சமமாக நடத்த வேண்டும்.
இந்த வார்த்தையை பின்பற்றுவதால் நமக்கு வரும் ஆசீர்வாதம்
ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். 1 பேதுரு 2:19
· கடுமையான எஜமானரிடம் தேவனுக்கான பயபக்தியோடு மரியாதை `காட்டும்போது, துன்பப்படுகிறோம். நியாயமற்ற காரணங்களுக்காக நாம் துன்பப்படுகிறோம்.
· இந்த துன்பங்கள் தேவனின் பார்வையில் பிரீதியாயிருக்கிறது. தேவனின் நீதியான காரணத்திற்காக நாம் துன்பப்படுகிறோம். தேவன் நம் வாழ்க்கையைக் குறித்து மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கும் ஒரு வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். அதுவே நாம் தேவனிடமிருந்து பெறக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம். யோபு தேவனுக்கு முன்பாக இப்படி ஒரு உதாரணமாக இருந்தார். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். 1 பேதுரு 2:20
சுருக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழாதீர்கள். வார நாட்களிலும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ முயற்சிப்போம். இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்த 5 கொள்கைகளில் சிலவற்றைப் பின்பற்றுவது கடினம், ஆனால் நாம் சிந்தித்து, எதிர்த்து நின்று, கீழ்ப்படிதலோடு நடக்கும் போது தேவனின் உதவியுடன் இதைச் செய்யலாம்.
Comments