top of page
Kirupakaran

விசுவாசத்தினால் வாழ்தல் - சோதித்து புரிந்துகொள்ள 4 சோதனைகள்



உலகில் உள்ள யாவரும் விசுவாசத்தை சார்ந்திருக்கிறார்கள். ஆனால் விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், இரட்சிக்கப்படாதவர்கள் தங்களையும் மற்றவர்களையும்  நம்புகிறார்கள், அதே சமயம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசிக்கிறார்கள். எபிரேயர் 11 ஆம் அதிகாரம், நமது விசுவாசத்தைப் பலப்படுத்தும்படிக்கு, பழைய ஏற்பாட்டில் (நோவா முதல் தாவீது வரை) நடந்த அனைத்தையும் சுருக்கமாக விளக்குகிறது.


விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1

 

விசுவாசம் கிறிஸ்தவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது. இது இல்லாமல் நாம் தேவனிடம் நெருங்கி வரவோ அல்லது அவரைப்  பிரியப்படுத்தவோ அல்லது அவரிடமிருந்து எதையும் பெறவோ முடியாது. சாத்தான் இதை அறிந்திருப்பதால், விசுவாசிகளின் நம்பிக்கையைத் தகர்க்க விரும்புகிறான். அதன் மூலம், தேவன் தம் ஜனங்களுக்காகத் திட்டமிட்டிருப்பதை எடுத்துப் போட முடியும்.

 

பவுல் தெசலோனிக்கேயில் இருந்தபோது, தங்கள் சோதனைகளை அவர்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பதை அவர் காட்டிக் கொடுத்தார். (முழு பத்தியையும், அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதையும் படித்துப் பார்த்து, பவுல் எப்படி சோதனைகளை மேற்கொண்டார் என்பதை அறியவும்).


ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து, இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்த போது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள். ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும்குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறது போல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக் குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம். உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும் பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. 1 தெசலோனிக்கேயர் 3:1-7,10

 

ரோமர் புத்தகத்தில் பவுல், விசுவாசத்தினால் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. ரோமர்1:17

 

இயேசு, குருடராய் இருந்த அந்த இருவரின் விசுவாசத்தின் நிமித்தம் அவர்களைக் குணமாக்கினார். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.மத்தேயு 9:29

 

மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கே இருந்தவர்களுக்கு விசுவாசம் இல்லாததால் அவர் அற்புதம் செய்யவில்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பல அற்புதங்கள் நடக்காமல் இருப்பது தேவனுக்கு வல்லமை இல்லாததால் அல்ல, அவர் மீது நமக்கு இருக்கும் அவிசுவாசத்தினால் தான். அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. மத்தேயு 13:58

 

நாம் விசுவாசத்தால் வாழ்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

 

நாம் விசுவாசத்தால் வாழ்கிறோம் என்று நம்மை முட்டாளாக்கும் விஷயங்கள்

  • நமது சொந்த உணர்வுகள் (இது சாத்தியம் என்ற நமது உணர்வுகள், சில சமயங்களில் அது நடக்கும் என்ற உள்ளுணர்வை நாம் பெறுகிறோம்).

  • நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்.

  • சாத்தானின் தீய சக்திகள்.

 

நீங்கள் விசுவாசத்தினால் வாழ்கிறீர்களா என்பதை அறிய நான்கு நடைமுறை சோதனைகள்

நாம் விசுவாசத்தில் வாழ்கிறோமா என்பதற்கான பதிலைத் தரும் நான்கு நடைமுறைச் சோதனைகள் உள்ளன. நம் சொந்த சூழ்நிலையை அளவிட கற்றுக்கொள்ள, ஆபிரகாமின் வாழ்க்கையை அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை, சோதிக்க நாம் பயன்படுத்தலாம்.

 

சோதனை 1 - "நான் தேவனின் மகிமைக்காக இதைச் செய்கிறேனா அல்லது என்னைப் பிரியப்படுத்துவதற்காக செய்கிறேனா?"

  • ஆபிரகாம் இருந்த சூழல்

    • உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். ரோமர் 4:18-19

  • அவருக்கு என்ன நடந்தது என்பது அடுத்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

    • தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ரோமர் 4:20-22

நமக்கான கற்றல்

  • ஆபிரகாம் நம்பிக்கை மேல் நம்பிக்கையாக இருந்தது அற்புதத்தைச் செய்யவில்லை, தேவனின் மீது வைத்திருந்த விசுவாசமே அற்புதத்தை நடத்தியது.

  • எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புங்கள்” என்று பொதுவாக ஒரு பழமொழி உண்டு - எதில் நம்பிக்கை? நம்பிக்கை மீது நம்பிக்கை? நிச்சயமாக இல்லை.

  • ஆபிரகாமும் சாராளும் தேவனை விசுவாசித்தார்கள், தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை நிறைவேற்றினார்.

  • விசுவாசம் எப்போதும் தேவனை மகிமைப்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ரோமர் 4:20

  • மனிதனால் எதையும் சாதிக்க முடியாது, தேவனால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும் என்று விசுவாசம் எப்போதும் ஒப்புக்கொள்கிறது. மேலும், மகிமை தேவனுக்கே வழங்கப்படுகிறது, ஏனெனில் அவரே ஆதாரமாகவும் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

  • ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ரோமர் 4:22 - தேவன் நமக்குக் கொடுக்கும் பெருமை, அவருடைய நீதியே. இது ரோமர் இல் பவுல் சொல்வதைச் தொடர்புபடுத்துகிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. ரோமர் 1:17

  • உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை, ஊழியம், வேலை, படிப்பு அல்லது எந்தவொரு முயற்சியிலும் முடிவுகளை எடுப்பதற்கு முன் அல்லது செயல்களை செய்வதற்கு முன் அவை உங்கள் விசுவாசத்துடன்  ஒத்துப்போகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

  • தேவ மகிமைக்காக மட்டுமே இதைச் செய்கிறேனா?

  • சுயமகிமைக்காக செய்கிறது போல ஏதாவது ஒரு குறிப்பு காணப்பட்டால், உடனடியாக நிறுத்தி விட்டு, தேவன் வழிகாட்டும் வரை அவருக்காக காத்திருங்கள்.

  • உண்மையான விசுவாசம் தேவனை மகிமைப்படுத்துவதற்கான ஆசைகளால் தூண்டப்படுகிறது.

 

சோதனை 2 - "நான் காத்திருக்க தயாரா அல்லது அவசரமாக முன்னேறி செல்கிறேனா?"

  • விசுவாசமும் பொறுமையும் கைகோர்த்துச் செல்கின்றன.

  • உங்களுக்கு விசுவாசம் இருப்பதாகச் சொல்லியும், விரைந்து சுயமாகச் செயல்பட்டால் அது அவிசுவாச செயலாகும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ரோமர் 10:11

  • உங்களுக்கு உதவி வேண்டி விசுவாசத்தோடு, தேவனை நோக்கி  காத்திருங்கள். அவருக்காகக் காத்திருப்பவர்கள்  ஏமாற்றமடையமாட்டார்கள், வெட்கப்படமாட்டார்கள். அவர் தமது செயல்களை சரியான நேரத்தில் செய்கிறார் (ஒருபோதும் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ செய்வதில்லை).

  • நம் சுயத்தையோ அல்லது சூழ்நிலையையோ சார்ந்து இருந்தால் மட்டுமே அவசரப்படுவோம். உங்கள் விசுவாசம் தேவன் மீது  இருக்கும்போது அவசரப்பட மாட்டீர்கள். அப்பொழுது, உங்களைப் பாதுகாக்க தேவனிடமிருந்து "இச்சையடக்கம்" என்ற ஆவியின் கனி வருகிறது. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23

  • அவசரப்படுவது தேவனின் மகிமையையும் அவரது சித்தத்தையும் பறித்துவிடும்.

  • உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு தேவனுக்குக் காத்திருக்கவில்லை என்றால் அது பாவம். ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே. ரோமர் 14:23

  • தம்மை நம்பி காத்திருக்கும் எவரையும் தேவன் ஒருபோதும் ஏமாற்றமாட்டார். ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16

நமக்கான கற்றல் 

  • தேவனுடனான விசுவாச நடையில் நீங்கள் பொறுமையிழக்கிறீர்களா என்று சோதிக்கவும்.

  • பொறுமையின்மை இருந்தால், அங்கே தேவனின் கிருபையாகிய "இச்சையடக்கம்" இல்லை. உங்களை வழிநடத்தும் ஆவியின் கனியும் இல்லை, நீங்கள் உங்கள் சொந்த வழியில் நடக்கிறீர்கள்.

  • தேவனிடத்தில் விசுவாசம் உள்ளது, ஆனால் பதில்களுக்காக காத்திருக்க பொறுமை இல்லை. தேவனின் வேளையும் நமது நேரங்களும் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் பல நேரங்களில் இது ஏமாற்றமாக இருக்கலாம். சில விஷயங்கள் நிறைவேறிய பின் அவர் தம்முடைய வேளையில் காரியங்களை நடத்துகிறார். நம் கண்களாலும் மூளையாலும் அந்த தாமதத்தை புரிந்து கொள்ள முடியாததால், துரிதமாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

 

சோதனை 3 - நாம் செய்வதை தேவனின் வார்த்தையிலிருந்து காத்துக் கொள்ள முடியுமா?

  • நம்முடைய செயல் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருந்தால் அதைச் செய்ய முடியாது.

  • உரிமை கோருவதற்கான வாக்குறுதிகளையும், கீழ்ப்படிவதற்கான போதனைகளையும் வேதம் நமக்கு வழங்குகிறது. நாம் பின்பற்ற வேண்டிய கட்டளைகள் மற்றும் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை மீறும்போது, நாம் தேவனின் வார்த்தையை விசுவாசிக்காமல்  செயல்படுகிறோம். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10:17

நமக்கான கற்றல்

  • நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், நாம் விசுவாசத்தில் செயல்படவில்லை. அப்படியானால், தேவனுடைய வார்த்தை நம்மை ஆசீர்வதிக்கவோ, அவருடைய நாமத்தை  மகிமைப்படுத்த நம்மை பயன்படுத்தவோ முடியாது என்று அர்த்தம்.

 

சோதனை 4 - நான் கிரியைகளை செய்யும்போது, இது எனக்குள் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தருகிறதா?

பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13

  • உண்மையான விசுவாசம் இருக்கும் போது, மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் சமாதானத்தை உருவாக்கும் செயல்களில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

  • தேவனுடைய சித்தத்தின்படி நாம் செயல்படும்போது, இருதயத்தை ஆளும் சமாதானம் உண்டாயிருக்கும். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கொலோசெயர் 3:15

  • நீங்கள் தேவ சமாதானத்தை இழக்கும்போது, அவருடைய சித்தத்தையும் இழக்கும்படிக்கு நீங்கள் எங்கோ வழிதவறிவிட்டீர்கள் என்பது தெரியும்.

  • பவுல் கூறுகிறார், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. ரோமர் 1:17. கடைசி பகுதி சமாதானம். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் வாழும் சங்கிலி வளையம் போல, நீங்கள் அடுத்ததை பிடித்துக் கொண்டு முன்னேறுங்கள்.

நமக்கான கற்றல்

  • நாம் முன்வந்து, விஷயங்களைச் சுயமாக செய்யும்போது, ​​மனித கவலையும் பயமும் நம்மை ஆட்கொள்கிறது. நம்முடைய செயல்கள் அவருடைய சித்தத்தின்படி இல்லை என்பதற்கு இது மற்றொரு அடையாளம். அதேசமயம், நாம் அவரை விசுவாசித்து, அந்தச் செயலைச் செய்தால், சமாதானமும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும் தேவ ஆவியானவர் பதட்டங்களை முறியடித்து ஆவியின் கனிகளால் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

 

பழைய ஏற்பாட்டில் நான்கு சோதனைகளின் பயன்பாடு - ஆபிரகாமும் சாராளும் - ஆதியாகமம் 16

இந்தச் சோதனையைப் பயன்படுத்துவதற்கு முன், ஆதியாகமம் 16 ஆம் அதிகாரத்தை முழுமையாகப் படியுங்கள்.

 

தேவன் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு பிள்ளையை வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் அது உடனே நடக்கவில்லை. அவள் காத்திருந்து பொறுமையிழந்தாள். அதனால் தன் வீட்டுப் பணிப்பெண்ணான ஆகாரை தன் கணவனுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் தேவனுக்கு உதவி செய்ய முடிவு செய்தாள். இந்த முடிவு முற்றிலும் சட்டபூர்வமானது. ஆனால், விசுவாசத்தின் அடிப்படையில் உண்டானது அல்ல. ஆபிரகாம் இதற்கு சம்மதித்து, அதன் மூலம் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

 

நான்கு சோதனைக் கொள்கைகளின் பயன்பாடு

  • சோதனை 1 - ஆபிரகாம் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஆகாரை மணந்தாரா? – இல்லை, அவர் தனது மனைவியை மகிழ்விக்க திருமணம் செய்து கொண்டார்.

  • சோதனை 2 - ஆபிரகாமும் சாராளும் தேவனுக்காக காத்திருக்க விரும்பினார்களா? - இல்லை, அவள் பொறுமையிழந்து, ஆபிரகாம் தன் வீட்டுப் பணிப்பெண்ணாகிய ஆகாரைத் திருமணம் செய்து கொள்ளும்படி செய்தாள். அவர்கள் தேவனுக்கு முன்னால் ஓடி, தங்கள் வீடுகளில் குழப்பத்தை உண்டாக்கி கொண்டனர்.

  • சோதனை 3 - ஒவ்வொரு முறை ஆபிரகாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட போதும் "கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி"(ஆதியாகமம் 15:3-4) என்று வேதம் கூறுகிறது. அவர்கள் வார்த்தையால் வழிநடத்தப்படவில்லை, அவர்கள் சுயத்தால் வழிநடத்தப்பட்டனர் (ஆதியாகமம் 16:3-4).

    • தேவ வார்த்தை - பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, ஆதியாகமம் 15:3-4

    • தேவ வார்த்தையால் வழிநடத்தப்படவில்லை - ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். ஆதியாகமம் 16:3-4

  • சோதனை 4 - அவர்களின் முடிவால் மகிழ்ச்சியும் சமாதானமும்  இருந்ததா? - இல்லை, ஆகார் சாராளை அற்பமாக நடத்தியதால் அவர்களுக்கு துன்பங்களும், அவர்களுக்கிடையே வாக்குவாதமும் உண்டானது. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமது மேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள். அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.. ஆதியாகமம் 16:5-6


Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page