நாம் வளர்ந்தவுடன், பள்ளியில் பகுதி தேர்வுகள், மாதாந்திர தேர்வுகள், காலாண்டு தேர்வுகள், அரையாண்டு தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் என பல்வேறு தேர்வுகளை எழுதினோம். கல்லூரியில், பகுதி தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் மற்றும் பருவமுறை (செமஸ்டர்)தேர்வுகள் என எழுதினோம். நாம் வளர உதவுவதற்கு வாழ்க்கை நமக்கு பல சவால்களை முன்வைப்பது போல, நமது ஆவிக்குரிய பயணத்தில்,முதிர்ச்சியடையவும் புதிய ஆசீர்வாதங்களைப் பெறவும் தேவன் நமக்கு சோதனைகளைத் தருகிறார்.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுவுடனான ஆவிக்குரிய நடையில், விசுவாசிகளான நாம் ஆவிக்குரிய விஷயங்களிலும் அதன் கொள்கைகளிலும் எப்படி இருக்கிறோம் என்பதைப் பார்க்க அடிக்கடி சோதிக்கப்படுகிறோம். அவர் நம்முடைய பலவீனங்களையும் பலத்தையும் அறிந்திருக்கிறார். சோதனைகள் மூலம் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அவர் அறிய விரும்புகிறார். மேலும், நாம் இன்னும் முன்னேறிச் செல்ல விரும்புகிறார். ஒரு இளம் விசுவாசியாக இருக்கும் போது, சோதனைகள் எளிதாக இருக்கும், ஆனால், நாம் வளரும்போது, இந்த சோதனைகள் கடினமாக இருப்பதை உணர்கிறோம்.
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். லூக்கா 3:17
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 1 கொரிந்தியர் 3:12-13
தேவன் எவ்வாறு வடிவமைத்தார் என்றும் இந்த அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்க, தேவனின் இரண்டு சோதனைகளைக் காணலாம். சோதனையில் ஜெயம் கொண்ட (ஆபிரகாம் / ஈசாக்கு) மற்றும் தோல்வியடைந்த (தாவீது / பத்சேபாள்)ஆகியோரைப் பற்றிப் படிக்கலாம்.
விசுவாச சோதனையில் வெற்றி - ஆபிரகாம் / ஈசாக்கு
ஆபிரகாமுக்கு நீண்ட காலமாக பிள்ளை இல்லாமல் இருந்தது. அவருடைய முதல் பிள்ளையாகிய இஸ்மவேல் மாம்சத்தினால் பிறந்தவன், இரண்டாவது பிள்ளையாகிய ஈசாக்கு தேவனின் ஆசீர்வாதத்தால் பிறந்தவன். அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். ஆதியாகமம் 17:19-21.
தேவன் ஆபிரகாம் (99 வயது) மற்றும் சாராளுக்கு (90 வயது) ஈசாக்கைக் கொடுத்தார்.
தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். ஆதியாகமம் 22:1-24 வசனங்கள், ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கைப் பலியிடச் சொல்லி தேவன் ஆபிரகாமைச் சோதித்த கதையை விவரிக்கிறது. ஆபிரகாம் கீழ்ப்படிதலுடன் ஈசாக்கைப் பலியிடத் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில், ஒரு தூதன் தலையிட்டு தடுத்து, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்கடா பலி கொடுக்கப்பட்டது. இந்த விசுவாச செயல் ஆசீர்வாதங்களையும் திரளான சந்ததியினரையும் தருவேன் என்று தேவன் ஆபிரகாமுக்கு செய்த உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தக் கதையின் சிறு காணொளியை இந்த இணைப்பில் காணலாம் -
தேவனின் சோதனையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள்
தேவனின் சோதனை
தேவன் ஆபிரகாமின் மெய்யான விசுவாசத்தை சோதித்தார். அவருக்கு ஈசாக்கின் ஜீவன் தேவையில்லை. அவர் ஆபிரகாமின் இருதயத்தையே விரும்பினார்.
ஈசாக்கு ஆபிரகாமின் இருதயத்திற்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். தமக்கும் ஆபிரகாமுக்கும் இடையில் ஈசாக்கு ஒரு விக்கிரமாக இல்லை என்பதை தேவன் உறுதிப்படுத்த விரும்பினார்.
கீழ்ப்படிதலின் ஆவி
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். ஆதியாகமம் 22:1
தேவன் தன்னை அழைத்த காலத்திலிருந்தே ஆபிரகாமுக்கு கீழ்ப்படிதலின் ஆவியின் அனுபவம் இருந்தது. அதற்கு முன்பும் கூட கீழ்ப்படிதலுடன் செயல்பட்டார். தேவன் அவரை “ஆபிரகாம்” என்று அழைத்தபோது, அவர் “சொல்லும் ஆண்டவரே” என்றோ அல்லது “அப்பா உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ பெருமையோடு நாம் கூறுவதை போல் அல்லாமல், “இதோ அடியேன்" என்றார். இது தான் கீழ்ப்படிதலின் ஆவி.
எரிச்சலின் ஆவி இல்லை
அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். ஆதியாகமம் 22:2-3
ஆபிரகாம் தேவனே, ஏன் என்னுடைய ஒரே குமாரனை பலியிட கேட்கிறீர்கள், நான் அவனை அதிகமாக நேசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் என்றெல்லாம் தேவனிடம் காரணம் சொல்லவில்லை. அவர் பதில் எதுவும் பேசாமல் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்.
பலிக்கான இடம்
அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். ஆதியாகமம் 22:2,4
இந்தச் சோதனையில், சுவாரஸ்யமான காரியம் என்னவெனில், தேவன் ஆபிரகாமிடம் மோரியா தேசத்திற்கு செல்லும்படி கேட்கிறார். இது சென்னையில் வசிக்கும் ஒருவரை மதுரைக்கு போகச் சொல்வது போன்றது.
ஆபிரகாம் எவ்வாறு பதிலளிப்பார் என்பதை சோதிக்கும் நோக்கத்துடன், முதல் நாளே சரியான இடத்தை தேவன் அவருக்கு காட்டவில்லை.
தேவன் தாம் கேட்ட காரியத்தை நிறைவேற்றுவதற்கு ஆபிரகாம் எதுவரை போகிறார் என்பதைப் பார்ப்பதற்காக, 3 நாட்கள் வரை அவருக்கு இடத்தைக் காட்டவில்லை.
அவர் ஈசாக்கை அழைத்துக்கொண்டு 3 நாட்கள் நடந்த பின்பு தேவன் அவருக்கு தொலைவில் உள்ள இடத்தைக் காட்டியதைக் காண்கிறோம். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். ஆதியாகமம் 22:4
ஆராதனையின் ஆவி
அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். ஆதியாகமம் 22:5
ஆபிரகாம் தன் வேலைக்காரனிடம், “... தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்ˮ, என்று கூறினார். அது போன்ற ஒரு சோதனைக் காலத்தில் கூட ஆபிரகாமும் ஈசாக்கும் தேவனை தொழுது கொள்ளும் மனப்பான்மையில் இருந்தனர்.
தேவனுடன் நெருங்கி நடப்பது மட்டுமே இது போன்ற கொடிய சோதனைக் காலத்தின் மத்தியில் அவரை தொழுது கொள்ளும் ஆவியை உருவாக்க முடியும்.
தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதில் 100% உறுதியாக இருக்கிறீர்கள். அந்த வகையான தேவ விசுவாசமே அவர் கொண்டிருந்த உறவாக இருந்தது.
தேவனின் குணாதிசயங்களை நீங்கள் அறிந்திருந்தால் மட்டுமே தொழுது கொள்ளும் எண்ணம் வரும் ( இரக்கம், அன்பு நிறைந்த,காக்கின்ற தேவன்).
"நானும் பிள்ளையாண்டானும் தொழுது கொண்டு.... திரும்பி வருவோம்" என்று கூறும் அளவிற்கு அவர் அவ்வளவு விசுவாசத்தால் நிரப்பப்பட்டிருந்தார். தேவன் ஈசாக்கை பலியாகக் கேட்டிருந்தும் தான் ஈசாக்குடன் திரும்பி வருவேன் என்று சொல்வது என்ன ஒரு விசுவாசம்.
ஈசாக்கின் கீழ்ப்படிதல்
அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். ஆதியாகமம் 22:7
6 முதல் 9 வரையிலான வசனங்களில், ஆபிரகாம் கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல், கிடத்தியதாக வாசிக்கிறோம். ஈசாக்கு ஒரு குழந்தை அல்ல, தனது தகப்பனுடன் சேர்ந்து கட்டைகளை எடுத்துச் செல்லும் அளவு வாலிபனாக இருந்தார்.
தகப்பனுக்கு கீழ்ப்படிதலுள்ள மகனாக ஈசாக்கை ஆபிரகாம் வளர்த்த விதம் பற்றி இது பேசுகிறது.
சர்வாங்க தகனபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று ஈசாக்கு கேட்பது, அவர் ஆபிரகாமைப் போல் தெய்வீகமாக வளர்க்கப்பட்டதைக் குறிக்கிறது.
இங்கே கீழ்ப்படிந்தது ஆபிரகாம் மட்டும் அல்ல, ஈசாக்கு கூட பலிபீடத்தில் தன்னைப் பலியாக ஒப்புக் கொடுப்பதற்கு அவருடைய தகப்பனைப் போல் கீழ்ப்படிதலுடன் இருந்தார்.
தேவன் தம் வாக்குத்தத்தத்திற்கு ஒருபோதும் தாமதிப்பதில்லை
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆதியாகமம் 22:11-13
ஆபிரகாம் தேவனை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை, தாமதமின்றி கீழ்ப்படிந்தார். அவர் கேட்கும் ஒரு காரியத்தை நாம் செய்தால், அவர் தாமதமின்றி சரியான நேரத்தில் அடுத்த படியை வெளிப்படுத்துவார்.
தேவன் ஒருபோதும் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ பதிலளிப்பதில்லை. குறித்த நேரத்தில் காரியங்களை செய்கிறார். தேவைப்படும்போது ஒரு ஆட்டுக்கடாவை வழங்கினார். அதனால்தான் ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே” (கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்) என்று பேரிட்டார்.
ஆபிரகாமின் ஆசீர்வாதம்
சோதனையில் ஜெயம் கொண்டபிறகு தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். நாம் ஆபிரகாமின் சந்ததியினர்.
திரளான ஜாதிகளுக்குத் தகப்பன் - ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால், தேவன் அவரை ஒரு புதிய பெயரைக் கொடுத்து ஆசீர்வதித்தார் - “திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்". (இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் 17:5).
தேவனுடைய சிநேகிதன் : அவர் தேவனுடன் ஒரு புதிய உறவில் நுழைந்தார். அவர் "தேவனுடைய சிநேகிதன்" என்று அழைக்கப்பட்டார். (அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். யாக்கோபு 2:23).
அவருடைய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் காரணமாக தேவனுடைய நீதி அவருக்கு வழங்கப்பட்டது.
விசுவாசிகளின் தகப்பன் - விசுவாசத்தின் மூலம், ஆபிரகாம் ஒரு புதிய கனத்தைப் பெற்றார் - "விசுவாசிகளின் தகப்பன்ˮ. (மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும், ரோமர் 4:11).
விசுவாச சோதனையில் தோல்வி - பத்சேபாளுடனான தாவீதின் அனுபவம்
தேவனின் சோதனையின் மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம். இங்கே, சோதனையில் தாவீது தோல்வியடைந்தார்.
தாவீது / பத்சோபாளின் உதாரணம் - 2 சாமுவேல் 11 ஐப் படியுங்கள் அல்லது கதையைத் தெரிந்து கொள்ள இந்த சிறிய காணொளியைப் பாருங்கள் - https://youtu.be/j3mr4sWnZ8c?si=MxzgN7kA9mPH3pqu&t=22
தாவீது பத்சேபாள் கதை சுருக்கம் - தாவீது ராஜா பத்சேபாள் குளிப்பதைக் கண்டு அவளை விரும்புகிறார். அவளை வரவழைத்து, அவளோடு சேர்ந்தார். இதன் விளைவாக அவள் கர்ப்பமாகிறாள். அதை மறைக்க தாவீது அவளது கணவன் உரியாவை போரில் கொல்ல ஏற்பாடு செய்கிறார். உரியாவின் மரணத்திற்குப் பிறகு, தாவீது பத்சேபாளை மணந்தார். இந்தச் செயல் தேவனுக்கு மனமடிவை உண்டாக்கி, தாவீதுக்கும் அவரது வீட்டாருக்கும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தாவீதைப் போன்ற தேவபக்தியுள்ள ஒருவர், தினமும் தேவனோடு தொடர்பிலிருந்தவர் எப்படி இன்னொருவரின் மனைவிக்கு ஆசைப்பட்டு தடுமாறினார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ராஜா என்ற அந்தஸ்தும், எந்தப் பெண்ணையும் தேர்ந்தெடுக்கும் திறனும் இருந்தபோதிலும், தேவன் இந்தச் சோதனையை அனுமதித்து, அவரது குறைகளை வெளிப்படுத்தி, அவரை வளர்ச்சியை நோக்கி வழிநடத்தினார்.
தேவனின் சில சோதனைகளில் நாம் தோல்வியடையும் போது, நம்மை மேம்படுத்த மனந்திரும்பும் ஆவி வருகிறது.
நாம் கீழ்ப்படியாதபோது அல்லது சுய விருப்பத்திற்கு அடிபணியும்போது, நாம் செய்கின்ற பாவத்திலிருந்து தப்ப முடியாது. இந்த பாவங்கள் தேவனின் சோதனையில் நம்மை தோல்விக்கு வழிநடத்துகின்றன.
நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் விலை கொடுக்க வேண்டும், அவருடைய கிருபை மட்டுமே நம்மை வெளியே கொண்டு வரமுடியும்.
தாவீதின் தோல்வியில் இருந்து பாடங்கள்
தாவீதின் பார்வையில் தான் செய்த தவறை அவர் உணரவில்லை, நம்மைப் போல் அவரும், சுய நீதியுள்ளவன் என்று தன்னை நினைத்திருந்தான். ஆனால் தேவன் அவருடைய தவறுகளை சரி செய்ய தாவீதிடம் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார்.
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். 2 சாமுவேல் 12:7-10
இந்த சோதனையில், அவர் தோல்வியடைந்து பாவம் செய்தபோது, இந்த தோல்விக்காக ஒரு விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது. தோல்விக்கான விலையை தேவன் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த விஷயத்தில், பிறந்த பிள்ளை இறந்துவிடுவான் என்று கூறினார்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான். அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார். ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான். 2 சாமுவேல் 12:11-14
கர்த்தருடைய வார்த்தை இறுதியானது, நாம் அவரோடு எவ்வளவு சண்டையிட்டாலும் விஷயங்கள் மாறாது. நாத்தானுக்கு தேவன் சொன்னது போலவே, பிள்ளை இறந்து விட்டது. தாவீது எவ்வளவு உபவாசமிருந்தும், தேவன் தம் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தம்முடையவர்கள் பாவம் செய்தாலும் தேவன் அவர்களை விட்டுவிடுவதில்லை.
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது. அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான். அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான். ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள். 2 சாமுவேல் 12:15-18
இந்த சோதனைகள் நமக்கு என்ன கற்பிக்கின்றன ?
தேவனிடமிருந்து வரும் சோதனைகள், நம்மை வெட்கத்தில் தலை குனிந்து போக செய்வதற்காக வருவதில்லை. அவைகள் அவருடனான நமது உறவை மேம்படுத்துவதற்காக, அவரை அதிகமாக சார்ந்திருப்பதற்காக, அவர் ஒரு புதிய ஆசீர்வாதத்தை வழங்குவதற்காக தான் வருகின்றன. ஒரு பள்ளிக் குழந்தை தேர்வில் தேர்ச்சி பெறுவது போல தான் இதுவும். ஒரு மாணவன் முதலிடம் பெற்றால், பள்ளி முழுவதும் பாராட்டுகளைப் பெறுவான், மேலும் சில செய்தித்தாள் விளம்பரங்களிலும் வருவான். அதுபோல நாமும் அவருடைய திட்டத்தில் பயன்படுத்தப்படுவோம்.
சோதனைகள் நம்மை வளர்ப்பதற்காகத் தான் வருகின்றன. நாம் தேவனோடு நடக்கிறோமா அல்லது உலகத்தோடு நடக்கிறோமா என்று வேறுபடுத்திப் பார்ப்பதற்கு இந்த சோதனைகள் தேவை. இந்த சோதனைகளை நாம் வெறுத்தாலும், ஆவிக்குரிய ரீதியில் வளர இது முற்றிலும் அவசியம். சோதனைகள் என்பது நம்மில் உள்ள பயனற்ற பதர்களை எரிக்கவும், நமக்கு பயன்படாத மரக்கட்டை, வைக்கோல் ஆகியவற்றை எரிக்கவும் செய்கிறது. அது உருகும்போது நம்மை தூய தங்கமாக மாற்றுகிறது.
தேவன் தம் பிள்ளைகளிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார் — ஆவி அல்லது கீழ்ப்படிதல் மனப்பான்மை. ஆபிரகாமை சோதித்தது போல, நாம் இன்னும் அவருக்கு நெருக்கமாக இருக்கிறோமா இல்லையா என்று தேவன் அடிக்கடி நம்மைச் சோதித்துப் பார்க்கிறார்.
கீழ்ப்படியாமையின் ஆவியோடு தேவனின் கட்டளையை / வார்த்தையை மீறி, நம்மை அவர் கேட்பதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க வைக்க சாத்தான் செயல்படுகிறான். இது தேவனுடைய ஆசீர்வாதத்தை பறிப்பதாகும். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். எபேசியர் 2:1-2
கீழ்ப்படியாமை உணர்வை முறியடிப்பதற்கான ஒரே வழி, தேவன் மீது விசுவாசம் வைத்து, கீழ்ப்படியாமையின் செயலை அகற்றுவதற்கும், கீழ்ப்படிவதற்கு விசுவாசத்தைக் கொடுப்பதற்கும் அவருடைய உதவியைக் கேட்பது தான். நம் நிலைமை, பலவீனம் யாவும் அவருக்குத் தெரியும். எல்லாரும் ஆபிரகாமைப் போல் இல்லை, தோமாவைப் போல் பலர் சோதித்து அதன் பின்பே கீழ்ப்படிய விரும்புவர். நம் ஒவ்வொருவரையும் எப்படி கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். அவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்து உதவி கேட்பது தான் ஒரே வழி. "ஆகாயத்து அதிகாரத்தை" வெல்வதற்கு நம்முடைய சுயம் போதாது, அவன் நம்மை ஏதாவதொரு கவர்ச்சியான விஷயத்தால் கவர்ந்திழுக்கும்போது, அவனுடைய கீழ்ப்படியாமையின் வலையில் விழ நாம் எடுத்துச் செல்லப்படுகிறோம்.
கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவகோபாக்கினை வரும் என்று நாம் எச்சரிக்கப்படுகிறோம்.இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; எபேசியர் 5:6
மாம்சத்திற்கும் ஆவிக்கும், பழைய சுபாவத்திற்கும், புதிய சுபாவத்திற்கும் இடையே எப்போதும் ஒரு முரண் இருந்து கொண்டே இருக்கும். இரட்சிப்பு பழைய சுபாவத்தை மாற்றவோ, மேம்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியாது (ரோமர் 6:7). பழைய சுபாவத்தை மேற்கொள்ள ஒரே வழி, தேவனுடைய அழைப்பை ஏற்று, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதாகும்.
பழைய சுபாவங்களுக்கு இடங்கொடுக்கும் போது ஒரு கிறிஸ்தவனுக்கு (துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:14) எப்போதும் போராட்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும்.
மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ரோமர் 6:7. மாம்சத்தின் மீதான வெற்றி சிலுவையில் அறையப்படுதல் முலம், . ஆவியானவர் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய நமக்கு பலன் கொடுப்பார்.
உலக மக்கள் கீழ்ப்படியாமையிலிருந்து இன்னும் கீழ்ப்படியாமைக்குக் கீழே இறங்கும்போது... தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்களாகிய நாம் கீழ்ப்படிதலிலிருந்து மேலும் கீழ்ப்படிதலுக்கு வளருவோம்.
தேவனின் சோதனை எந்த நேரத்திலும் இருக்கலாம், அவருடைய சோதனைக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அது பள்ளியில் தேர்வுகள் எப்படி குறித்த காலத்தில் நடைபெறுகிறதோ அது போல் அல்ல. கடையில் சிறியதாக ஏதோவொன்றை வாங்கும்போதோ அல்லது பெரிய காரியங்களிலோ, நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை தேவன் சோதித்துப் பார்க்கலாம். நீங்கள் அவரோடு நெருக்கமாக நடக்கும்போது அவருடைய சோதனையின் குரல் உங்களுக்குப் புரியும். வாழ்க்கையில்,உலகத்திற்கும் தேவனுக்கும் நெருக்கமாக இருக்கும் பகுதிகளைக் கவனியுங்கள். பண விவகாரங்கள், நேர்மையான காரியங்கள் மற்றும் நாம் தோல்வியடையக்கூடிய வேறு எந்த விஷயத்திலும் அவர் சோதிக்கக் கூடும். ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகு அவரை கனம் பண்ணுகிறீர்களா? அல்லது உங்களை மேன்மைப்படுத்துகிறீர்களா? என்று சோதித்துப் பார்ப்பார்.
Amen