சில வருடங்களுக்கு முன், ஆவிக்குரிய மாற்றம் பெறுவது எப்படி என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆவிக்குரிய மாற்றம் என்பது இறையியல் அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், இறையியல் பள்ளி அனுபவம் இல்லாத உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்களுக்கு அல்ல என்றும் நினைத்திருந்தேன். ஆனால், நான் வேதத்தை வாஞ்சையுடன் படிக்கவும் அதை தியானிக்கவும் ஆரம்பித்தவுடன் , நான் நினைத்தது தவறென்று நிரூபணமாகி விட்டது. ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய மாற்றத்தைப் பற்றி ஆண்டவர் எனக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவரது மாற்றத்தின் கரம் என் மீது உள்ளது. அவர் தமது வேதத்தின் மூலம் நம்மை மாற்றுகிறார். பரிசுத்த ஆவியானவரே நம்மை மாற்றும் ஆசிரியர். நான் ரோமர் 12 : 2 ஐ தியானிக்கும் போது நாம் எப்படி மாற வேண்டும் என்று தேவன் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
தேவனுடைய வார்த்தையை நம் சூழ்நிலைக்கு ஆறுதலாகவும் அல்லது அன்றாட வாழ்க்கைக்கான அறிவுறுத்தலாகவும் பெறுவதற்கு வேதம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. நம் வாழ்க்கையை மாற்றுவதற்கு வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,சத்தியத்தைக் கற்றுக்கொள்வது மட்டும் போதாது; நாம் அதை நேசித்து சத்தியத்தில் வாழ வேண்டும். நாம் வசனத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, வசனம் நம்மை ஆளுகை செய்ய வேண்டும். நாம் வார்த்தையில் இருப்பது போல, வார்த்தை நம்மிலும் இருக்க வேண்டும். அந்த வார்த்தை நம்மை இயேசு கிறிஸ்துவின் சாயலாக மாற்ற வேண்டும்.
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” ரோமர் 12 : 2
நாம் கிறிஸ்துவைப் போல மாறுவதற்கும் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைவதற்கும், ரோமர் 12:2 இலிருந்து நாம் கற்றுக்கொள்ள மூன்று விஷயங்கள் உள்ளன.
தனித்திருத்தல் / காத்துக் கொள்ளுதல்
மறுரூபமாகுதல்
உணர்தல் / அறிதல்
தனித்திருத்தல் – “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்”
நாம் தொற்றிப் பரவும் தன்மையுடைய ஒரு உலக அமைப்பில் வாழ்கிறோம். நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் செல்வாக்கு தான் இயக்குகிறது. பல சமயங்களில் நாம் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். நாம் வாங்குவது, சாப்பிடுவது எல்லாமே மற்றவர்களுக்காக வாழ்கிறோம். சில காரியங்கள் மட்டுமே நம் மகிழ்ச்சிக்காக செய்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு நிலையான போராட்டம் உள்ளது. நாம் வேதத்தைப் படித்து நிறைய கற்றுக்கொள்கிறோம். நாம் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இந்த உலகம் நம்மை அவர்களில் ஒருவராக ஆகும்படி தூண்டுகிறது. அப்பொழுது கிறிஸ்துவுடனான ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் இருந்த இடத்திலிருந்து 3 படிகள் பின்வாங்குகிறோம்.
“இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று எழுதியிருப்பதன் மூலம் பவுல் இங்கே ஒரு பெரிய பாடத்தை கற்பிக்கிறார். இதையே "இந்த உலகத்தின் மாதிரிக்குள் நெருக்கப்படாதே", "இந்த தீய உலக அமைப்பின் வடிவத்திற்குள் அழுத்தப்படாதே" என்றும் கூறலாம்.
இங்கே "பிரபஞ்சம்" என்றால் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியம். பவுல் உலகில் உள்ள மக்களைப் பற்றி பேசவில்லை. நாம் உலகில் உள்ள மக்களை நேசிக்க வேண்டும் மற்றும் அவர்களை சென்று அடைய வேண்டும். நாம் "உலகிலிருந்து" தனித்து நிற்க வேண்டும், ஆனால் உலகில் இருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது. அதாவது, நாம் உலகில் இருக்க வேண்டும், ஆனால் உலகத்தைச் சார்ந்தவர்களாக அல்ல. தண்ணீரில் நிற்கும் ஒரு படகைப் பாருங்கள். அது தண்ணீரில் உள்ளது, ஆனால் தண்ணீர் ஒருபோதும் படகிற்குள் வராது. கிறிஸ்தவர்களாகிய நாம் உலக அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலர் யோவான் இவ்வாறு எழுதுகிறார், “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” 1 யோவான் 2:15
தேவன் வெறுக்கும் அன்பும், நாம் வெறுக்க வேண்டிய அன்பும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலக ஒழுங்கின்படி சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த உலகத்தை நாம் நேசிக்கக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத தீமையான ஆவிக்குரிய சாம்ராஜ்யம் இந்த யுகத்தின் கடவுளால் நிர்வாகிக்கப்படுகிறது. இது தேவனுக்கும் தேவன் வகுத்துள்ள சத்திய தரநிலைகளுக்கும் எதிரானது.
உலக உடைமைகளையும், தேவன் தரும் ஆசீர்வாதங்களையும் கொண்டிருப்பதில் தவறில்லை. உடைமைகளின் மீது உங்கள் இதயத்தையும் உங்கள் வாழ்க்கையையும் வைப்பது தவறு. உங்கள் உடைமைகளைத் திறந்த கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள், தேவன் உங்களிடம் ஒப்படைத்துள்ள சொத்துக்களைப் பராமரிப்பவர் / மேற்பார்வையாளர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் உடைமைகளை தேவனின் மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். அவைகளை நேசிப்பது போலவும் எப்பொழுதும் அதைப் பேணுவது போலவும் அதனிடம் ஒட்டிக் கொள்ளக் கூடாது. தேவனை நேசித்து, உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அவருடைய மகிமைக்காகவும் அவருடைய ராஜ்யத்திற்காகவும் பயன்படுத்துங்கள். அதுதான் திறவுகோல் .
இரண்டாம் பகுதியில் யோவான் “ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால்” என்று எழுதுகிறார். எவரேனும் இந்த வாழ்க்கையை இவ்வுலகில் உள்ள விஷயங்களுக்காக மட்டும் வாழாமல், இந்த உலகத்தின் புகழுக்காகவும், செல்வங்களுக்காகவும், உலகம் போற்றுவதற்காகவும் வாழ்ந்தால், "அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" என்று அவர் கூறுகிறார். பிதாவின் அன்பும் உலகத்தின் மீதான அன்பும் ஒரே இருதயத்தில் இருக்க முடியாது. ஒன்று மற்றொன்றை இடமாற்றம் செய்யும். பிதாவின் அன்பு நம் உள்ளத்தில் வரும் போது, உலகப் பொருட்களின் மீதான அன்பு இடம்பெயர்ந்து வெளியேறுகிறது. ஆனால், இந்த உலகத்தின் மீதுள்ள அன்பை நாம் மீண்டும் உள்ளே நுழைய அனுமதித்து, சாத்தான் அவனது முன்னுரிமையைப் பெற அவனுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை நிறுவினால், இது பிதாவின் மீதான நம் அன்பை வெகுவாகக் குறைக்கிறது. இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ முடியாது.
3 ஆம் பகுதியில் யோவான் "அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” என்று எழுதுகிறார்.மேலும் அவர், “நீங்கள் உலக விஷயங்களுக்காக வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் இன்னும் மனம் திரும்பவில்லை என்பதும் நீங்கள் தேவனை அறியவில்லை என்பதும் உறுதி. ஏனெனில் பிதாவின் அன்பு அவனிடத்தில் இல்லை” என்று கூறுகிறார்.
யோவான் தொடர்ந்து ”ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” 1 யோவான் 2 :16 என்று கூறுகிறார். மேலும் மேலும் என்பதற்கான தேடுதல் மற்றும் பசி, தேவன் கொடுத்ததில் திருப்தியடையாமல் இருப்பது இவை யாவும் மாம்சத்தின் இச்சை ஆகும். "ஜீவனத்தின் பெருமை" என்பது நாம் ஆசைப்படுகிற விஷயங்களை அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் போது நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும் ஆணவமும் பெருமையும் ஆகும். அடுத்த வசனம் இவ்வாறு சொல்கிறது, “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” 1 யோவான் 2 :17. யோவான் சொல்வது என்னவென்றால், முழு அமைப்பும் தன்னைத்தானே அழித்துக் கொண்டு வீழ்ச்சி அடைகிறது. ஆனால் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவன் என்றென்றும் வாழ்வான்.
மற்றொரு சூழலில் யாக்கோபு உலகத்தின் மீதான அன்பையும் சிநேகத்தையும் விபச்சாரம் என்று அழைக்கிறார். “விபசாரரே, விபசாரிகளே,உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” யாக்கோபு 4:4 "விபச்சாரம்" என்ற சொல் பாலியல் உறவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இங்கே யாக்கோபு ஆன்மீக விபச்சாரம் பற்றி பேசுகிறார். அவர் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தவர்களைப் பற்றி பேசுகிறார், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவரை நேசிக்கவும் நாம் ஆண்டவருடன் உடன்படிக்கை செய்கிறோம். ஆனால் அதற்கு மாறாக, நம் அன்பை உலகத்தின் மீது காட்டும்போது, திருமண உறுதிமொழியை மீறுபவர்களைப் போலவே நாமும் இந்த உடன்படிக்கையில் இருந்து மீறுகிறோம்.
மறுரூபமாகுதல் – “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”
உலகத்திற்குள்ளும் உலக அமைப்புக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படும் சவால்கள் கிறிஸ்தவர்களாகிய நமக்கு உண்டு. ஆனால் பவுல் இங்கே நமக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறார்.
“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” என்று அவர் கூறுகிறார். வசனத்தின் முதல் பாதி, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று எதிர்மறையாக இருந்தது. இப்போது நேர்மறையான அறிவுரை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று அல்ல. இரண்டும் செய்ய வேண்டும். இது ஒரே நாணயத்தின் பூ மற்றும் தலை போன்றது. ஒன்று குளிர்ந்த நீர்; மற்றொன்று வெந்நீர். இது இரண்டும் வேண்டும். “மறுரூபமாகுங்கள்” என்ற வார்த்தையின் அர்த்தம் உள்ளும் புறமுமாக கிறிஸ்துவின் சாயலுக்குள் தீவிரமாக மாறுதல். “மறுரூபமாகுங்கள்” - இது ஒரு கம்பளிப்பூச்சி எப்படி பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ அதே பதத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் நிகழும் மாற்றம் என்பது நாம் முன்பு இருந்ததிலிருந்து இப்போது தேவன் நம்மை மாற்றியமைக்கிறார்.
“மறுரூபமாகுங்கள்” - நாம் எப்படி மாற்றப்படப் போகிறோம்? “உங்கள் மனம் புதிதாகிறதினாலே”. அதாவது நம் மனதில் தேவனுடைய எண்ணங்கள் மற்றும் அவர் மீதான விசுவாசம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். மேலும் நமது நம்பிக்கைகள் வேதாகமத்தில் வேரூன்றியதாகவும் நன்கு நிலைநாட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நாம் ஒரு கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நாம் ஒரு நித்திய முன்னோக்கைக் கொண்டிருக்க வேண்டும், இதன்மூலம் நாம், தேவன் வாழ்க்கையை எப்படி மதிப்பிட வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படி மதிப்பீடு செய்ய முடியும். மனம் போகிற வழியில் வாழ்க்கையும் செல்கிறது.
"பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." கொலோசெயர் 3:2, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மற்றும் கிறிஸ்துவின் மீதும் நித்தியமான காரியங்களிலும் கவனம் செலுத்துங்கள். மத்தேயு 22:37 இல், "இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" என்று பதிலளித்தார். ஒரு மாற்றமடைந்த வாழ்க்கைக்கு ஒரு மாற்றமடைந்த மனது தேவைப்படுகிறது. மேலும் தேவன், கிறிஸ்து மற்றும் அவருடைய ராஜயத்தைப் பற்றிய மேலான எண்ணங்கள் உயர்ந்த, புனிதமான வாழ்க்கையை உருவாக்குகிறது.
தேவனுடைய வார்த்தையில் நாம் மூழ்கும்போது இது தொடங்குகிறது. எனவே, நாம் வேதத்தை வாசிக்க, படிக்க வேண்டும். அமர்ந்திருந்து அதன் பிரசங்கம் மற்றும் போதனைகளைக் கேட்க வேண்டும். அதை தியானிக்க வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டும். அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். யோவான் 17:17ல் "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்"என்று இயேசு ஜெபிக்கிறார். நம் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்த தேவன் பயன்படுத்தும் கருவி அவருடைய வார்த்தையான “வேதம்”, அது நம் மனதைப் புதுப்பிக்கிறது, நம்மைக் கண்டிக்கிறது, ஆறுதல் அளிக்கிறது, நம் எண்ணங்களைச் சுத்தப்படுத்துகிறது மற்றும் நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும்போது நம்மை பலப்படுத்துகிறது. இது வெறும் அச்சிடப்பட்ட காகிதம் அல்ல. எபிரெயர் 4:12 இவ்வாறு கூறுகிறது, "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.".
உணர்தல் - “தேவனுடைய. . . . சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக”
தனித்திருத்தல் மற்றும் மறுரூபமாகுதல் குறித்துப் பார்த்தோம். இப்போது "உணர்தல்" குறித்துப் பார்க்கலாம். உலகத்திற்கு இணங்காமல், நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலம் மறுரூபமாவதன் விளைவு என்ன?
"தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக" என்று பவுல் கூறுகிறார். அதாவது நீங்கள் தேவனுடைய வார்த்தையால் உங்கள் மனதைப் புதுப்பித்துக்கொண்டால், "பகுத்தறியும்" அல்லது "அனுபவத்தால் அறிந்து கொள்ளும்" திறன் உங்களுக்கு இருக்கும்.
இந்தப் பாதையில் நீங்கள் நடக்க ஆரம்பித்தவுடன், உங்கள் தனிப்பட்ட அனுபவம் தேவனின் சித்தத்தைச் செய்வதாக இருக்கும், மேலும் உலகில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை நோக்கி நடப்பீர்கள். பல சமயங்களில், இந்த விஷயங்கள் உங்கள் சொந்த விருப்பங்களிலிருந்து வந்ததா அல்லது அது தேவனின் விருப்பமா என்று சோதித்துப் பார்ப்பீர்கள். அது நாம் தனிமைப்படுத்தி, மறுரூபமாகும்போது தான் வரும். அது இல்லாமல் வராது.
நமது கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதுமே இந்த குறுகிய பாதையில் தேவ சித்தத்தின்படி வாழ வேண்டும். நமது கிறிஸ்தவ வாழ்வில் தேவ சித்தத்திற்குப் புறம்பாக வாழும்படியான எந்தப் பகுதியும் இல்லை.
“தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்" - "பரிபூரணம்" என்பது உண்மையில் நமக்கு சிறந்ததை வழங்கும் தேவனின் பரந்த இயல்பைப் பற்றி பேசுகிறது.
தேவ சித்தம் “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்" என்று பவுல் கூறுகிறார். தேவனின் சித்தத்தை விட நமது விருப்பம் சிறந்தது என்று நம்பும்படிக்கு நாம் சாத்தானால் ஏமாற்றப்படுகிறோம். ஆண்டவர் கொடுப்பது நமக்கு "சிறந்தது" என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் விரும்பியது நமக்குக் கிடைக்கவில்லை என்றால் நாம் விரும்பியதை விட பெரிய திட்டங்கள் நமக்காக அவரிடம் இருப்பதாக அர்த்தம். நாம் விரும்புவதை பெற்றுக் கொள்வது மட்டும் தேவனுடைய சித்தம் இல்லை, மாம்சத்திலிருந்து நாம் விரும்பும் விஷயங்களை தடுப்பதும் ஆகும். ஏனெனில் அவர் நமக்கு சிறந்ததைத் தர விரும்புகிறார்.
இவற்றை நம் வாழ்வில் பயன்படுத்துவது எப்படி?
உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்க, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்.
தனித்திருப்பதற்கான அறிகுறிகள் இல்லாமை
உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமைகள் என்ன?
உங்கள் நாளை எங்கு தொடங்குகிறீர்கள்?ஆண்டவருடனா அல்லது உலகத்துடனா?
தினசரி வழிகாட்டுதலுக்கு நீங்கள் யாரைச் சார்ந்திருக்கிறீர்கள்?
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை எவ்வளவு கனம் பண்ணுகிறீர்கள்? உங்கள் சம்பளம் அல்லது உங்கள் வணிகத்திலிருந்து வருமானம் வரும்பொழுது என்ன செய்வீர்கள்? தேவனுடன் தொடங்குகிறீர்களா அல்லது உலகக் கடமைகளில் இருந்து தொடங்குகிறீர்களா?
நீங்கள் ஏதேனும் புதிய விஷயத்தைப் பெறும்போது அவருக்கு நன்றி கூறுகிறீர்களா? அல்லது அப்படியே நகர்ந்து விட்டு, நீங்கள் உணரும் போது நன்றி செலுத்துகிறீர்களா?
பெரும்பாலான கேள்விகளுக்கு நீங்கள் தேவனை இரண்டாம்பட்சமாய்க் கருதினால், நீங்கள் உலகப் பார்வையில் செல்லும்படிக்கு அவருடைய அன்பிலிருந்து விழுந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தேவன் அன்பும், அக்கறையுமுள்ள பிதா. நீங்கள் முற்காலத்தில் கொண்டிருந்த அதே ஐக்கியத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவரிடம் திரும்பி வர எளிய ஜெபத்தோடு அவரைத் தேடுங்கள்.
மாற்றத்திற்கான அறிகுறிகள் இல்லாமை
நீங்கள் வேதத்தை அறிவிற்காகப் படிக்கிறீர்களா? அல்லது அதைப் பயன்படுத்துகிறீர்களா?
நீங்கள் வார்த்தையைப் படித்து தியானிக்கிறீர்களா?
உங்கள் பலவீனமான பகுதிகளைக் காட்டி உங்களை மாற்றிக் கொள்ளும்படிக்கு வார்த்தை உங்களோடு பேசுகிறதா?
நீங்கள் வேதத்தைப் பயன்படுத்திப் பார்க்காவிட்டால் அதை வாசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம்மை அறிவாளிகளாக ஆக்குவதற்காக தேவன் தம்முடைய வார்த்தையைக் கொடுக்கவில்லை. 1 கொரிந்தியர் 3:19 இல் பவுல் குறிப்பிடுவது போல "இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது".
வேதத்தைப் படித்து விட்டு செயல்படாமல் இருப்பது நம்மை மரித்தவர்களாக ஆக்குகிறது. நாம் மறுரூபமாக வேண்டும் என்றால் நம் செயல்களைச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் வாசித்து தியானிப்பதைப் பின்பற்றுகிறீர்களா?
உணர்தலுக்கான அறிகுறிகள் இல்லாமை
நீங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் அது தேவனுடைய சித்தமா அல்லது உங்கள் சொந்த விருப்பங்களா என்று சோதித்துப் பார்க்கிறீர்களா?
நீங்கள் ஒரு வேலையைச் செய்வதற்கு முன், அது தேவனுக்கு சித்தமா என்று அவரிடம் சரிபார்க்கிறீர்களா?
மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி நாம் வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்பதில் திருப்தியடைய வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே உங்களை மாற்றிக்கொண்டு முதிர்ச்சியடைய விரும்பினால், ஆண்டவரைத் தேடி, உங்களை மாற்றும்படி அவரிடம் கேளுங்கள். அவர் உங்களைத் தொடாமல், உங்களை மறுரூபமாக்கி கிறிஸ்துவைப் போன்ற நபராக மாற்றுவார் என்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
Comments