top of page

மகிழ்ச்சி

  • Kirupakaran
  • Dec 29, 2024
  • 6 min read

மகிழ்ச்சி என்பது எல்லோரும் அனுபவிக்கக்கூடிய விவரிக்க முடியாத ஒரு உணர்வு. ஒருவருக்கு, திருமண நிச்சயதார்த்தம் என்பது மகிழ்ச்சியின் தருணம், மேலும் திருமணம் என்பது அவர்கள் இருவருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. அங்கீகாரம் அல்லது வெற்றியை அடைவது சிலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், குழந்தைகள் மற்றும் அனைத்து உலக ஆசீர்வாதங்களையும் பெற்று சமாதானம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்.

புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது, விருந்துகள் கொடுப்பது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்று இந்த மகிழ்ச்சியைத் தேடுவதற்கு உலகம் முழுவதிலும் ஜனங்கள் நிறைய பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். இருப்பினும், உலக மகிழ்ச்சி தற்காலிகமானது, இந்த மகிழ்ச்சி ஞாபகங்களில் மறைவதற்கு முன்பு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும். அந்த உணர்வை மீண்டும் உருவாக்க அடுத்த நிகழ்வைத் தேடுகிறோம்.

 

மகிழ்ச்சி பரலோகத்தின் ஒரு பெரிய பகுதியாகும். நற்செய்தி என்னவென்றால், அதே மகிழ்ச்சியை நாம் இங்கே பூமியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த உலகத்தின் தற்காலிக சந்தோஷங்களை அனுபவிப்பதில் தவறில்லை என்றாலும், உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த நித்திய மகிழ்ச்சியைத் தேடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் பரலோகத்திற்குச் செல்லும்போது உலகத்தின் போராட்டங்கள் மகிழ்ச்சியால் மாற்றப்படும்.

 

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. வெளிப்படுத்தின விசேஷம் 21:1-4

 

பரலோகத்தின் மகிழ்ச்சியை இந்த எளிய சூத்திரத்தில் வெளிப்படுத்தலாம்:

மகிழ்ச்சி (சந்தோஷம்) = இழந்தது + கண்டடைவது

 

லூக்கா 15 காணாமற்போனது, கண்டடைவது மற்றும் மகிழ்ச்சி அடைவது என்ற கருப்பொருட்களை வெளிப்படுத்துகிறது. இந்த உண்மைகளை விளக்குவதற்கு இயேசு மூன்று உவமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்:

  • அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15:7

  • அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 15:10

  • கெட்ட குமாரனைப் பற்றிய உவமை இழந்ததைக் கண்டடைவதன் சாராம்சத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார். இவ்வாறு லூக்கா 15:32 இல் இயேசு முடிக்கிறார்.

 

ஒரு மகிழ்ச்சியான விருந்தின் போது நாம் கூச்சலிட்டு உற்சாகப்படுவது போல, கொண்டாட்டத்தில் பரலோகத்தை வெடிக்கச் செய்யும் மூன்று வகையான மகிழ்ச்சிகள் உள்ளன. 

 

1. கண்டடைவதன் மகிழ்ச்சி


அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15:3-7

  • லூக்கா 15:3-7 இல் காணாமற்போன ஆடுகளின் உவமையுடன் இயேசு பேசுகிறார்.

  • ஒரு ஆட்டு மந்தையை கவனித்தால், அவைகள் எப்போதும் தங்கள் மேய்ப்பனின் குரலை அடையாளம் கண்டு கொண்டு, அவருடைய வழிகாட்டுதலை நம்பி பின்பற்றுவதை பார்க்கலாம். அதேபோல், மேய்ப்பன் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, தாக்கக்கூடிய பல்வேறு வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்கிறான். காலப்போக்கில், மேய்ப்பனின், கூடிவருவதற்கான அழைப்புக்கும் ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை ஆடுகள் கற்றுக் கொண்டு, அவை சரியான முறையில் பதிலளிக்கின்றன.

  • இயேசு நம்மை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார், நாம் அடிக்கடி அவருடைய குரலைக் கேட்டாலும், உலக இன்பங்களால் இழுக்கப்பட்டு நாம் இன்னும் வழிதவற முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். இது ஒரு கண்காட்சியில், அனைத்து உற்சாகமான காட்சிகள் மற்றும் ஒலிகளால் திசைதிருப்பப்பட்டு, பெற்றோரின் குரலில் கவனம் இழக்கிற ஒரு குழந்தையைப் போன்றது. பல சமயங்களில், நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நடக்கும்போது, ​​அதே போன்று செயல்படுறோம். ஏசாயா தீர்க்க்கதரிசி அதை உறுதிப்படுத்துகிறார்,நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். ஏசாயா 53:6

  • நாம் செய்யும் பாவங்களால் வழிதவறி, திசைதிருப்பப்பட்டு வழியில் காணாமல் போகிறோம். காணாமல் போன ஆட்டை அடையாளம் கண்டுகொள்வதில் பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. ஆனாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்கள். நாமும் அவர்களைப் போலவே இருக்க முடியும் - காணாமல் போனவர்களிடமிருந்து விலகி, நம் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படாமல் தொடர்ந்து செல்கிறோம்.

  • லூக்கா 15:4 இல், இயேசு காணாமற்போன ஒன்றைத் தேடுவதற்காக தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுச் சென்றது, ஒவ்வொரு ஆடு மீதும் அவர் கொண்டிருந்த அவரது ஆழமான அன்பையும் அக்கறையையும் நிரூபிக்கிறது. அவர் இப்படித்தான் இங்கே தொலைந்து போனவர்களைத் தேடுகிறார். நமக்குக் கிருபையை கொடுத்து, எந்த வாய்ப்பின் மூலம் நம்மைக் கொண்டு வர முடியும் என்று அவர் காத்திருக்கிறார், அங்கு நாம் அவரது இருப்பை அடையாளம் கண்டு அவரிடம் திரும்புகிறோம்.

  • காணாமற்போன ஆடு அல்லது நாணயம் கண்டுபிடிக்கப்படும் வரை அந்த உரிமையாளருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அதேபோல், ஆவிக்குரிய வாழ்க்கையில் தொலைந்து போன ஒருவர், இயேசு கிறிஸ்துவில் தேவனை அறிவதன் மூலம் வரும் செழுமையான நிறைவை அனுபவிக்க முடியாது. "கண்டடைதல்" (இரட்சிக்கப்படுதல்) என்பது சரியான இடத்திற்கு மீட்டெடுக்கப்படுவது (தேவனுடன் ஒப்புரவாக்கப்படுவது) மற்றும்  நோக்கமுள்ள ஒரு வாழ்க்கையில் (அவருக்கு ஊழியம் செய்வது) அடியெடுத்து வைப்பதாகும்.

  • இழந்து போன பாவிகளை இயேசு தீவிரமாக தேடுகிறார், ஏனென்றால் இது தேவனின் இருதயத்தை, அன்பு நிறைந்த இதயத்தை பிரதிபலிக்கிறது. தொண்ணூற்றொன்பது பேருக்கு அவர் காட்டும் அதே அன்பு தொலைந்து போனவருக்கும் நீட்டிக்கப்படுகிறது.

  • காணாமற்போனவர்களைக் கண்டடைந்து இரட்சகரிடம் கொண்டு வரும் மகிழ்ச்சியோடு சில சந்தோஷங்களை ஒப்பிடலாம்.

 

சிந்தித்துப் பார்க்க  

  • நீங்கள் வழிதவறிவிட்டதாக உணர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களைக் கண்டுபிடித்து, தவறான இடத்தில் இருப்பதிலிருந்து சரியான இடத்தில் இருப்பதற்கு உங்களை மீட்டெடுக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர், கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் சுவிசேஷகர்கள் அல்லது தேவாலயங்கள் அல்லது உங்களையும் என்னையும் போன்றவர்கள் மூலம் இதை செய்கிறார்.

  • நீங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனோடு நடப்பவர்களாக இருந்தால், தொலைந்து போனவர்களுக்காக இயேசுவைப் போல பாரத்தை சுமக்கிறீர்களா? ஒருவேளை அது கிறிஸ்துவை அறியாத ஒரு அண்டை வீட்டாரோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். வழி தெரியாததால் தொலைந்து போனார்கள். நீங்கள் அவர்களுக்கு வழி காட்ட முடியுமா?

 

2. திரும்பி வந்ததால் உண்டான மகிழ்ச்சி


 கெட்ட குமாரனின் கதையைப் பற்றிய ஒரு சிறிய வீடியோ -  





இரண்டு குமாரரின் கதை : பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது,அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். லூக்கா 15:11-19

 

கலகக்கார குமாரன் திரும்பி வந்த காரியத்தில் உள்ள முக்கிய ஆவிக்குரிய பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக அவருடைய பக்கத்தைப் பார்க்கலாம்.

  • ஊதாரி (கெட்ட) குமாரனின் கதையில், "ஊதாரி" என்ற வார்த்தைக்கு வீணான என்று அர்த்தம்.

  • இளைய குமாரனின் மூன்று அனுபவங்கள் தந்தையின் நற்குணத்தை அவனுக்கு உணர்த்தின.

பேராசை

  • இளைய குமாரன் உலக இன்பங்கள் மீதான வலுவான ஆசையால் உந்தப்பட்டான், உறவுகளை விட பொருள் சார்ந்த விஷயங்களை மதித்தான். பேராசை கொண்ட ஒருவர், எவ்வளவு பொருட்களைக் குவித்தாலும் உண்மையில், ஒருபோதும் திருப்தி அடைவதில்லை, இந்த மனநிறைவின்மை இறுதியில் வாழ்க்கையில் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

  • சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களை பொருளாசையைக் குறித்து இயேசு எச்சரித்தார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். லூக்கா 12:15

  • கெட்ட குமாரன் இதை கடினமான வழியில் கற்றுக்கொண்டான், பணத்தால் வாங்க முடியாத விஷயங்களை நீங்கள் புறக்கணித்தால் பணத்தால் வாங்கக்கூடிய விஷயங்களை நீங்கள் அனுபவிக்க முடியாது.

பாவம் சுதந்திரத்தை உறுதியளிக்கிறது

  • குமாரன் தான் விரும்பிய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ தந்தையிடம் தன் பங்கைக் கேட்டான், அவன் சுதந்திரத்தை விரும்பினான்.

  • பாவம் வெளியிலிருந்து விடுதலையை உறுதியளிக்கிறது, ஆனால் அது தோல்விகளைக் கொண்டுவருகிறது, அடிமைத்தனத்திற்கு மட்டுமே வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பீர் பாட்டிலை குடித்து ரசிக்கும் ஒருவர், தான் சுதந்திரமாக இருப்பதாகவும்,பானத்தை அனுபவிப்பதாகவும்  உணர்கிறார். விரைவில் இது 2 ஆக மாறும். பின்பு 3, 4 என ஆகி பின்னர் அடிமைத்தனத்திற்கு இட்டு செல்லப்படுகிறார். இனி 1 குடித்தால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை, 4 குடித்தால் தான் அந்த மகிழ்ச்சி கிடைக்கும். பின்பு அவர் ஒரு அடிமையாக மாறுகிறார். (நான் இப்படி இருந்தேன்.)

  • பாவத்தின் சம்பளம் மரணம். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23

மனந்திரும்புதல்

அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். லூக்கா 15:15-17

  • மனந்திரும்புதல் என்பது மன மாற்றத்தைக் குறிக்கிறது, குமாரன் பன்றிகளுக்கு உணவளிப்பதைக் கண்ட போது இதுதான் நடந்தது.

  • “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது” - இந்த வார்த்தை அவன் உண்மையில் அவனாகவே இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. பாவத்தில் ஒரு "பைத்தியக்காரத்தனம்" உள்ளது, அது நமக்குள் இருக்கும் தேவ சாயலை முடக்கி, உள்ளே இருக்கும் "மிருகத்தை" விடுவிக்கிறது. அந்த வாலிபன் தன்னைப் பற்றியும் தன் சூழ்நிலையைப் பற்றியும் உணர்ந்து, மனம் மாறி, தான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொண்டான். தனது தந்தை ஒரு தாராளமான மனிதர் என்பதையும் தனது வாழ்க்கை தொலைதூர நாட்டில் இருந்த சுதந்திரத்தை விட வீட்டில் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதையும் ஒப்புக் கொண்டான். ரோமர் 2:4 இல் சொல்லப்பட்டுள்ளபடி, மனிதனின் பாவத்தன்மை மட்டுமல்ல, தேவனின் நற்குணமே மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது. அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? ரோமர் 2:4

  • உண்மையான மனந்திரும்புதல் விருப்பம், மனம் மற்றும் உணர்ச்சிகளை உள்ளடக்கியது - "நான் எழுந்து... நான் போய்... நான் தங்குவேன்...ˮ.

  • மனந்திரும்புதல் உண்மையிலேயே தேவனுடைய கிரியையாக இருந்தால், பாவிகள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாமல், இயேசு கிறிஸ்துவில் தங்கள் இரட்சிக்கும் விசுவாசத்தை வைத்து, கீழ்ப்படிதலில் பிரதிபலிப்பார்கள்.

 

பிதாவின் நற்குணம்

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். லூக்கா 15:20

  • இந்த பத்தியில், தகப்பன் தன் மகனை வரவேற்க ஓடியது மட்டுமல்லாமல், ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் செய்வதன் மூலம் அவன் திரும்பியதை கௌரவப்படுத்தினார் என்று இயேசு காட்டுகிறார்.

  • தகப்பன் தன் இளைய மகனை பாவஅறிக்கையை முடிக்கக் கூட அனுமதிக்கவில்லை; அவனை குறுக்கிட்டு, அவனை மன்னித்து, உடனடியாக ஒரு கொண்டாட்டத்திற்கு உத்தரவிட்டார்.

  • மனந்திரும்புகிற பாவிகளிடம் நம்முடைய பரலோக பிதா இயேசு காட்டுகின்ற அணுகுமுறையை, தகப்பனின் செயல்கள் பிரதிபலிக்கின்றன. அவர் இரக்கத்திலும் கிருபையிலும் ஐசுவரியமானவர், அவர்கள் மீதான அவரது அன்பு அளவிட முடியாதது.

  • அவருடைய குமாரன் சிலுவையில் பலியிடப்படாமல் இது சாத்தியமில்லை. அவருடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.கிருபை என்பது கிரயத்தை செலுத்தும் அன்பு.

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதுதான் பிதாவிடம் வருவதற்கான ஒரே வழி.

  • இளைய குமாரன் வித்தியாசமான ஒன்றை அனுபவித்தான்: "பிதாவே, எனக்குத் தாரும்" என்று சொல்வதற்குப் பதிலாக, "கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்" (வச.19) என்று கூறினான். அவன் ஒரு ஊழியக்காரனாக இருக்க மனமுள்ளவனாக இருந்தான், அந்த மனத்தாழ்மை அவனுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தந்தது. (எபேசியர் 2:8-10; தீத்து 3:3-7).

 

சிந்தித்துப் பார்க்க

  • பிதாவின் நற்குணத்தை ஒரு காலத்தில் அனுபவித்த கெட்ட குமாரனா நீங்கள்? அப்படியானால், அவர் உங்களுக்குக் காட்டிய அக்கறையையும், அவருடைய இரக்கத்தின் ஐசுவரியத்தையும், அவர் உங்களை நடத்திய விதத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.

    • தேவனுடைய கிரியைக்கு விரோதமாக இருக்கின்ற உங்களின் கலகத்தனமான மனப்பான்மையைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

    • மனந்திரும்பி, "பிதாவே, நான் இழந்ததை மீண்டும் பெற என்னை ஒரு ஊழியக்காரனாக ஆக்குங்கள்" என்று மகிழ்ச்சியோடு கூறுங்கள்.

    • உண்மையான மனந்திரும்புதலுக்கு வழிநடத்தும் தெய்வீக துக்கம் உண்டாகட்டும்.

  • நீங்கள் கெட்ட குமாரனாயிராவிட்டால், உங்களை அவருடைய கரங்களில் வைத்திருந்த அவருடைய அன்புக்காகவும் கிருபைக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். சத்துரு கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போன்றவன், ஆனால் அவருடைய கிருபையால், நாம் இரட்சிக்கப்படுகிறோம் - நமது சொந்த நற்கிரியைகளால் அல்ல.

 

சுருக்கம்

  • மற்றவர்களை இரட்சிக்கவே நாம் இரட்சிக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்த வேண்டும். மற்றவர்களை இராஜ்யத்திற்குள் கொண்டு வர நாம் மறுபடியும் பிறக்கிறோம். தேவனின் குடும்பத்தில் மற்றவர்களை வரவேற்க நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். அதிகமானவர்களை சீஷராக்குவதற்காக நாம் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிறோம். திருச்சபை இல்லாதவர்களை அடைய நாம் திருச்சபையின் ஒரு பகுதியாக இருக்கிறோம். பரிசுத்தத்திற்கான வழியை மற்றவர்களுக்குக் காட்ட நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

  • நாம் பரலோகத்திற்கு செல்லும் வழியில் இருக்கிறோம், வெறுங்கையோடு நம் ஆண்டவரை சந்திக்க முடியாது. ஒருவரின் வீட்டிற்குச் செல்லும்போது, பரிசை எடுத்து செல்வது போல, அவர் விரும்பும் ஆத்துமாக்களுடன் நாம் கர்த்தருடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

  • சில தேவாலயங்களில், மகிழ்ச்சி குறைவாக உள்ளது - மக்கள் தொங்கிய முகங்களுடன் எந்த உற்சாகமும் இல்லாமல் இருக்கிறார்கள். பதில் எளிது: ஆத்தும ஆதாயம் இல்லை. காணாமற்போன ஆட்டை மேய்ப்பன் கண்டபோது, தன் நண்பர்களையும் அக்கம்பக்கத்தாரையும் அழைத்து, “என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்” என்று கூறினான்.

  • பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவது என்பது தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமல்ல, அது ஒரு நியமனம், தேவனுடைய அன்பை இன்னும் அறியாத இழந்து போன ஆத்துமாக்களைத் தேடுவதற்கான, ஆதாயப்படுத்துவதற்கான ஒரு நியமனம்.

  • பிசாசானவன் கடைசி வரை பயங்கரமாக எதிர்த்துப் போராடுவான், ஏனென்றால் ஆத்துமாவை ஆதாயப்படுத்துவது நரகத்தில் எண்ணிக்கையை குறைத்து, பரலோகத்தை நிரப்புகிறது. காணாமற்போனவர்களுடன் அவருடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள பிதாவின் பலத்தைத் தேடுங்கள், இதனால் அவர்கள் கண்டடையப்படவும் இரட்சிக்கப்படவும் முடியும்.

 

1 commento

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
Philip C
29 dic 2024
Valutazione 5 stelle su 5.

Amen

Mi piace

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page