top of page
Kirupakaran

மாரநாதா - இரண்டாம் வருகைக்காக காத்திருத்தல்


கிறிஸ்துவின் வருகை சீக்கிரமாக வருவதைப் பற்றி தேவாலயங்களிலும் நற்செய்தி கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆயினும், காலம் கடந்து, தலைமுறைகள் ஆகும் போது, சிலர் இரண்டாம் வருகையின் யதார்த்தத்தை சந்தேகிக்கத் தொடங்கி, அது ஒருபோதும் நடக்காது என்பது போல் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர். இருப்பினும், வாக்குத்தத்தம் உறுதியானது: "மாரநாதா", ஆண்டவர் வருகிறார்.

 

"மாரநாதா" என்ற சொல் “மாரநா” மற்றும் “தா” என்ற இரண்டு அரமிக் வார்த்தைகளிலிருந்து வருகிறது. இதற்கு “ஆண்டவரே வாரும்”,“ஆண்டவர் வருகிறார்” என்று அர்த்தம். இது இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்ற அறிவிப்பையும் அவரது வருகைக்கான இதயப்பூர்வமான வேண்டுகோளையும் குறிக்கிறது.  அவருடனான நித்திய ஐக்கியத்தின் கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

 

அவர் மீண்டும் வருவார் என்ற இந்த வாக்குறுதியை வேதம் உறுதிப்படுத்துகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 22:20 கூறுகிறது, இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

 

இந்த இரண்டாம் வருகை எப்போது / ஏன் / எப்படி நடக்கும் என்று பார்க்கலாம்.

 

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்?

அநேகர் திட்டவட்டமான தேதிகளை அல்லது தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காட்டி கர்த்தர் திரும்பி வரப்போகும் சரியான நேரத்தை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர். இருப்பினும், இது போன்ற கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறோம். அப்படி யாராவது சொன்னால் அது பொய். அதை நம்ப வேண்டாம்.

 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நேரம் பிதாவாகிய தேவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கும் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது.

  • மத்தேயு 24:36: அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

  • 1 தெசலோனிக்கேயர் 5:2: இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

 

"திருடனுடன்" ஒப்பிடுவது கிறிஸ்துவின் வருகையின் திடீர் மற்றும் எதிர்பாராத தன்மையை வலியுறுத்தும் ஒரு உருவகமாகும். வாழ்க்கை வழக்கம் போல் தொடரும் போது அது நடக்கும், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

 

அதே விதமாக, இயேசு இந்த சம்பவத்தை நோவாவின் நாட்களுடன் ஒப்பிடுகிறார்.

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். மத்தேயு 24:37-39

 

நோவாவின் காலத்து ஜனங்கள் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்திச் சென்றது போலவே, இன்று அநேகர் கிறிஸ்துவின் வருகையின் யதார்த்தத்தை கருத்தில் கொள்ளாமல் வாழ்கின்றனர். அவருடைய வருகை திடீரென்றும் மறுக்க முடியாததாகவும் இருக்கும் என்பதால், விழிப்புடனும் ஆயத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதே அழைப்பு..

 

இரண்டாம் வருகையைக் குறித்த வாக்குத்தத்தம் ஏன் இன்னும் நிறைவேறவில்லை?

நமது மனித கண்ணோட்டத்தில் பாத்தால், இரண்டாம் வருகை தாமதமாகிவிட்டது போல் உணரலாம். ஆனால், தேவனின் திட்டத்தில் தாமதம் என்ற ஒன்றே இல்லை. வேதாகமத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவின் வருகைக்கு முன் சில நிகழ்வுகள் வெளிப்பட வேண்டும். மத்தேயு 24:34 இல் இயேசுவின் வார்த்தைகள் : இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

மத்தேயு 24:34 கர்த்தரின் வருகைக்கு முன் நிகழ வேண்டிய குறிப்பிட்ட அடையாளங்களையும் நிகழ்வுகளையும் குறிக்கிறது.

 

இரண்டாம் வருகைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள்

1. உலகளாவிய அடையாளங்கள்

  • யுத்தங்களும் மோதல்களும் நிகழ வேண்டும் : யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. மத்தேயு 24:6

  • இயற்கை பேரழிவுகள் / பஞ்சங்கள் / பூமியதிர்ச்சிகள் : ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7

  • புதிய வாதைகள் மற்றும் கொள்ளைநோய்கள் : இவற்றில் சில தேவபயத்தைக் கொண்டு வருகின்றன. பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். லூக்கா 21:11

 

2. பாவங்கள், அக்கிரமங்களின் அதிகரிப்பு

  • சுயத்தின் மீதும் உலகப் பொருட்கள் மற்றும் இன்பத்தின் மீதும் அன்பு : மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும்,கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும்,இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 2 தீமோத்தேயு 3:1-4

  • மனிதனின் அக்கிரமத்தால் அன்பு தணிந்துபோகிறது : அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். மத்தேயு 24:12

  • தற்போதைய நாட்கள் நோவாவின் நாட்களைப் போலவே இருக்கின்றன.   மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆதியாகமம் 6:5,11-12

 

3. விசுவாசிகளின் உபத்திரவம்

  • விசுவாசிகள் தங்கள் விசுவாசத்திற்காக வெறுப்பையும் உபத்திரவத்தையும் சந்திப்பார்கள். இயேசுவின் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிற, கிறிஸ்துவுக்கு உரியவர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார்கள். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப் படுவீர்கள். மத்தேயு 24:9

  • விசுவாசிகளைக் காட்டிக்கொடுக்க அநேகர் யூதாஸைப் போல மாறுவார்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். மத்தேயு 24:10

 

4. கள்ள தீர்க்கதரிசிகளும் வஞ்சகமும்

  • கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள். கிறிஸ்துவின் பெயரால் வருபவர்கள் பலர் இருப்பார்கள், உண்மையில் அவர்கள் கிறிஸ்துவிலிருந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் கள்ள தீர்க்கதரிசிகள், கிறிஸ்துவைப் போல நடித்து வஞ்சிப்பவர்களாக இருப்பார்கள், அவர்கள் மக்களை ஏமாற்றி தங்களைப் பின்பற்றச் செய்வார்கள். ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:5

  • தவறான போதனைகள் மக்களை தவறாக வழிநடத்தும். ஏனெனில், அவர்கள் வஞ்சகத்தில் விழுந்து அந்திகிறிஸ்துவின் செயல்களை நம்புவதற்கு அவை வழிவகுக்கும். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 2 தெசலோனிக்கேயர் 2:3-4

     

5. அந்திக்கிறிஸ்துவின் எழுச்சி

  • அந்திக்கிறிஸ்து ஆட்சி செய்து தேவனைப் போலவே நடப்பான். தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகி அந்திக்கிறிஸ்துவின் பின் செல்லும்படிக்கு இந்த வஞ்சகத்திற்கும் அதன் போதனைக்கும் மக்கள் விழுவார்கள். பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 1 யோவான் 2:18

  • அந்தி கிறிஸ்து ஒரு பொய்யன், அவன் கூறுவது எல்லாம் பொய்.

    • இயேசுவே கிறிஸ்து என்பதை மறுதலிப்பது : இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 1 யோவான் 2:22-24

    • போலியான போதனைகள் : உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2:26-27

  • அந்தி கிறிஸ்து இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பின்பற்றுவான். அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, வெளிப்படுத்தின விசேஷம் 13:3. அந்தி கிறிஸ்து ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் கிறிஸ்துவை போல நடிப்பான். இது உண்மையான உயிர்த்தெழுதலாக இருக்காது - ஏனென்றால் தேவனைத் தவிர வேறு யாராலும் மரித்தோரை எழுப்ப முடியாது.

  • சாத்தான், தனது வல்லமையை, விரும்புகிற அனைவருக்கும் கொடுப்பான். அவர்கள் தங்கள் மனசாட்சியை தியாகம் செய்து அவனுக்கு தலைவணங்க தயாராக இருந்தால், அவன் ஆள்வதற்கு ராஜ்யங்களையும் கொடுப்பான்.

 

6. உலகமெங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்

  • சுவிசேஷத்திற்கான திறந்த வாசல்கள் உருவாகும் - இந்த காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பிரசங்கிக்கப்படும், திறந்த வாசல்கள் உண்டாகும். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14

 

7. இஸ்ரேல் மற்றும் எருசலேமின் பங்கு

  • இஸ்ரேலையும் எருசலேமையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும். பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். லூக்கா 21:24

  • இறுதி நாட்களில் எருசலேம் முக்கிய பங்கு வகிக்கும். இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப்போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும். அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள். சகரியா 12:2-3

 

8. பிரபஞ்ச மாற்றங்கள்

  • வானத்தில் காணப்படும் அசாதாரணமான அடையாளங்கள் பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். பிரபஞ்ச மாற்றங்கள் நமக்கு பயங்கரமாக இருக்கும். சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும். லூக்கா 21:25-26

 

கிறிஸ்துவின் வருகை தாமதமாகவில்லை, தேவனின் பரிபூரண திட்டத்தின்படியே வெளிப்படுகிறது என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

 

நடந்துகொண்டிருக்கும் யுத்தங்கள், நாம் சமீபத்தில் எதிர்கொண்ட உலகளாவிய கொள்ளைநோய் மற்றும் பருவநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கங்கள் என  நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

 

இந்த நிகழ்வுகள் தற்செயலாகவோ அல்லது எதிர்பாராமலோ நடக்கவில்லை. அவை கிறிஸ்துவின் வருகைக்கு முன் நிகழ வேண்டிய, வேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட அடையாளங்களுடன் ஒத்துப்போகின்றன.

 

அவரது இரண்டாம் வருகை எப்படி இருக்கும்?


இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழும்போது, அது எங்கும் ஒலிக்கும் எக்காளத்தின் உரத்த சத்தத்துடன் நடக்கும். அது ஒரு இரகசியமாக இருக்காது.

 

1. பெரிதான சத்தம்: அனைவரும் அறிந்து கொள்வர் (விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள்)

  • கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 1:10

  • வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மத்தேயு 24:31

    • தேவ சத்தத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல் : ஆவியானவருடைய உதவியால் மட்டுமே நாம் தேவனுடைய வெளிப்பாடுகளை உண்மையாக புரிந்து கொள்ளவும் பகுத்தறியவும் முடியும். நாம் ஆவியானவரோடு இசைந்திருக்கும்போது, அவருடைய குரல் ஒரு எக்காளத்தைப் போல சந்தேகத்திற்கு இடமின்றி கட்டளையிடுகிறது.

    • ஆன்மீக உணர்திறன் : ஆவியானவர் இல்லாமல், உலகின் கவனச்சிதறல்களால் அதாவது, தவறான போதனைகள், வஞ்சிக்கும் மதங்கள் மற்றும் உலக இரைச்சல் ஆகியவற்றால் நாம் செவிடர்களாக இருக்கிறோம்.

    • தெளிவான மனசாட்சி : ஒரு சிக்னலைப் பெற வானொலியை டியூன் செய்வதைப் போல, நமது இருதயங்கள் தேவனுடன் சீரமைக்கப்பட வேண்டும். பாவத்திலிருந்து விடுபட்டு, அவருடைய குரலை தெளிவாகக் கேட்க தேவனுடனும் மற்றவர்களுடனும் சரியான நிலையில் இருக்க வேண்டும். அவருடைய இரண்டாம் வருகை விசுவாசிகளுக்கு ஆச்சரியமாக இருக்காது. ஏனென்றால், அவர்கள் மணமகன் கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதற்கு மணமகளைப் போல காத்திருக்கிறார்கள்.

2. அவருடைய வருகை இரகசியமாக இருக்காது

கிறிஸ்துவின் வருகை இரகசியமாக இருக்கும் என்று பல இறையியல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன, அது உண்மை இல்லை, அது ஒரு பொய். கிறிஸ்துவின் வருகை காணக்கூடிய மற்றும் மறுக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். மத்தேயு 24:27

  • அனைவருக்கும் காணப்படும் : கண்கள் யாவும் அவருடைய வருகையைக் காணும். ரகசியமோ தெளிவின்மையோ இருக்காது; இந்த நிகழ்வின் யதார்த்தத்தை யாரும் புறக்கணிக்கவோ அல்லது அதற்கு தப்பிக்கவோ முடியாது.

  • இரட்சிக்கப்படாதவர்களுக்கு திகிலூட்டும் : இரட்சிக்கப்படாதவர்களுக்கு, கிறிஸ்துவின் வருகை கற்பனை செய்ய முடியாத பயங்கரம் மற்றும் நியாயத்தீர்ப்பின் தருணமாக இருக்கும். பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 6:16-17

 

இயேசுகிறிஸ்துவை நமது அடைக்கலமாகவும், பெலனாகவும் நாடி, விழிப்புடனும் அவரில் உண்மையுடனும் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். அவரில் நிலைத்திருப்பதன் மூலம், அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதில் நம்பிக்கை வைத்து அவற்றின் அடையாளங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். 

 

இரட்சிக்கப்பட்டிருந்தாலும், இரட்சிக்கப்படாவிட்டாலும் அனைவரும் தேவனுக்கு சொந்தமானவர்கள் என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது.

இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்கியேல் 18:4

 

அவருடைய இரக்கத்தினால், யாரும் அழியக்கூடாது என்று தேவன் விரும்புகிறார்.

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புவதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18:32.

 

நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் அனைவரும் தம்மிடம் திரும்பவும், இரட்சிக்கப்படவும் தேவன் பொறுமையாக காத்திருக்கிறார். அழைப்பு தெளிவாக உள்ளது: மனந்திரும்பி, இயேசுவை உங்கள் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு, விசுவாச வாழ்க்கை வாழுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், அவருடைய இரண்டாம் வருகையையும், அவருடனான  நித்திய வாழ்வின் மகிழ்ச்சியையும் நீங்கள் எதிர்நோக்கலாம்.

 

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. வெளிப்படுத்தின விசேஷம்2:11     

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page