top of page
Kirupakaran

மெய்யான அப்போஸ்தல வழி


நான் 1 கொரிந்தியர் 12:27-28 வசனங்களைத் தியானித்துக் கொண்டிருந்தபோது, மெய்யான அப்போஸ்தலர்களைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள தேவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்தார்.


“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்”. 1 கொரிந்தியர் 12:27-28


கிறிஸ்தவ விசுவாசத்தின் வளர்ச்சி


தேவன் தம்முடைய சித்தத்தை நம்மில் முழுமையாக நிறைவேற்றுவதற்காக நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து உருவாக்கினார்.


“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்”. எபேசியர் 1:4-6


நாம் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வரும்போது, ஞானஸ்நானம் பெற்று, "கிறிஸ்துவின் சரீரம்" ஆகிறோம். நம்மில் பலருக்கு, நாம் கடந்து செல்லும் ஒரு சூழ்நிலையின் மூலமாகவோ, ஒரு போதகர் கூறும் சுவிசேஷத்தின் மூலமோ அல்லது நம்மைச் சந்திப்பதற்குத் தம்முடைய விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தத் தேவன் தேர்ந்தெடுக்கும் நம் நண்பர் அல்லது உடன் பணிபுரிபவர் அல்லது வேறு யாரேனும் ஒருவர் மூலமாகவோ இது நிகழ்கிறது.


நாம் ஞானஸ்நானம் பெற்றவுடன், "இயேசுவே ஆண்டவர்" என்று நம் வாயிலிருந்து அறிக்கை பண்ணி இரட்சிக்கப்படுகிறோம்.

“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”. ரோமர் 10:9

“ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்”. 1 கொரிந்தியர் 12:3


நாம் பிதாவிடம் இருந்து பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு, இன்னும் கிறிஸ்துவுக்குள் ஒரு குழந்தையைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும்,கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று”. 1 கொரிந்தியர் 3:1


ஒரு சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதற்கும், நமக்காக ஜெபிப்பதற்கும் ஒரு போதகர் அல்லது யாரோ ஒரு நபரையோ தான் இன்னும் சார்ந்து இருக்கிறோம். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் வல்லமையை மறந்து விடுகிறோம்.

“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்”, என்று வசனம் கூறுகிறது.


பரிசுத்த ஆவியின் வல்லமை எவ்வாறு ஒரு அப்போஸ்தலனாகவோ, தீர்க்கதரிசியாகவோ, பிரசங்கியாகவோ, அற்புதங்கள் செய்பவராகவோ அல்லது உதவியாளராகவோ ஆக்குவதற்கு நம்மை வழிநடத்தும் என்பது நமக்குத் தெரியாது.


அப்போஸ்தலன் என்பவன் யார்?


அப்போஸ்தலர் என்பது, போதகர்கள் / மதகுருக்கள் மற்றும் கிறிஸ்துவின் முழுநேர ஊழியர்களை மட்டுமே குறிக்கிறது, மேலும் அது நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு பொருந்தாது என்று நாம் நினைக்கிறோம். அப்போஸ்தலத்துவம் என்பது முழுநேர ஊழியர்களுக்கு மட்டுமே என்று சொல்வது முற்றிலும் தவறு.


அப்போஸ்தலர் என்பதன் அர்த்தம் "ஒரு பணிக்காக அனுப்பப்பட்டவர்" என்று வெப்ஸ்டர் அகராதி கூறுகிறது.

  • ஒருவன் பரிசுத்த ஆவியானவர் தனக்குள் வாழ்கிறார் என்பதையும், “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்”, என்பதையும் தன் இருதயத்திலும் மனதிலும் நம்புகிற முதிர்ச்சியடையும் போது, அவன் ஒரு அப்போஸ்தலரின் மனநிலையை அடைகிறான்.

  • இதற்கு உதாரணம் மத்தேயு 17:14-20 இல் உள்ளது. பிசாசு பிடித்த ஒரு மனிதனை சீடர்களிடம் கொண்டு வந்தபொழுது, அவர்களால் குணப்படுத்த முடியவில்லை.

  • கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவர் உங்களில் வாழ்கிறார், அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார், நீங்கள் செய்யும் எல்லாக் காரியங்களும் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகிறது என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

அப்போஸ்தலன் ஆவது எப்படி?


1 கொரிந்தியர் 4:1-13 ஐ வாசிக்கும்போது பவுல் இதை கொரிந்தியருக்கு நன்றாக விளக்கியுள்ளதைக் காணலாம்.

“இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்”.

1 கொரிந்தியர் 4:1


அப்போஸ்தலன் ஆவதற்கு தேவையான நான்கு விஷயங்கள்

1. கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருத்தல்

2. கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள்

3. விசுவாசத்தை நிரூபித்தல்

4. கிறிஸ்துவிடம் கணக்கொப்புவித்தல்


கிறிஸ்துவின் ஊழியக்காரன்


நாம் 1 கொரிந்தியர் 4:1 முதல் பகுதியில் இவ்வாறு வாசிக்கிறோம்,

“இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும்,” 1 கொரிந்தியர் 4:1


  • கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்பதன் அர்த்தம் என்ன? இது போதகர்கள் மற்றும் முழுநேர ஊழியக்காரர்களுக்கு மட்டுமே பொருந்துமா? இல்லை, கிறிஸ்துவின் அங்கமாக இருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும்.

  • இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் அன்புடன் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படும் போது நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக இருக்கிறோம்.

  • ஒரு ஊழியக்காரனாக, நாம் "கிறிஸ்துவின் அடிமை” என்ற மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். அடிமைகள் தங்கள் எஜமானர்களைச் சார்ந்து இருப்பது போல நாமும் நாம் செய்யும் எல்லாவற்றிலும் கிறிஸ்துவைச் சார்ந்திருக்க வேண்டும்.

  • நமது எஜமானரின் ஆசைகளை முழுமையாக நிறைவேற்றுவது தான் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.

  • வேலைக்காரன் எஜமானுக்குக் கீழ்ப்படிய வேண்டும் - அவன் தானாகவே எந்த காரியங்களையும் செய்ய முடியாது. அவன் தினமும் தன் எஜமானிடம் இருந்து கட்டளைகளைப் பெற்று அதற்கு கீழ்ப்படிய வேண்டும்.

  • தினமும் நாம் அதை எப்படி செய்வது - தினமும் வேதத்தைப் படிக்க வேண்டும்.பின் ஆண்டவருடைய குரலைக் கேட்கும்படி அதை தியானித்து, நம் ஒவ்வொருவரையும் என்ன செய்ய அழைக்கிறாரோ அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள்


1 கொரிந்தியர் 4:1 இன் பிற்பகுதியில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

“தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்”. 1 கொரிந்தியர் 4:1


  • “உக்கிராணக்காரரென்றும்” - இது ஆண்டவருடைய மக்களாகிய நம்மைக் குறிக்கிறது.

  • “தேவனுடைய இரகசியங்களின்” - தேவனுடைய ரகசியங்கள் என்பது அவருடைய ஞானமே அன்றி வேறில்லை. பவுல் இதை 1 கொரிந்தியர் 2:7 ஆம் வசனத்தில் விளக்குகிறார். “உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும்,மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்”. 1 கொரிந்தியர் 2:7

  • இது பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டது. “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்”. 1 கொரிந்தியர் 2:10

  • எனவே, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தேவன் நமக்குள் இருக்கிறார் என்றும், அவருடைய ஞானத்தை நாம் இலவசமாகப் பெறுவோம், அது உலகத்திலிருந்து வரவில்லை, தேவனிடமிருந்தே வருகிறது என்றும் விசுவாசிக்க வேண்டும்.

“நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்”. 1 கொரிந்தியர் 2:12

  • என் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். நான் வசனத்தை தியானிக்க ஆரம்பித்தபோது, ​​நான் எழுத வேண்டியவை மற்றும் செய்ய வேண்டியவைகளைக் குறித்த ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். எனது ஆங்கிலத்தில் இலக்கண பிழைகள் இருக்கும். எனது தமிழில் எழுதும் திறன் மிகவும் மோசமாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போது தமிழில் 35மதிப்பெண்கள் எடுத்து வெறும் தேர்ச்சி மட்டுமே பெறுவேன். தேவன் தம்முடைய மகிமையை பலப்படுத்துவதற்காக என்னுடைய பலவீனத்தில் என்னைப் பயன்படுத்தினார்.

  • 1 கொரிந்தியர் 12:8-10 இல் அவர் கோடிட்டுக் காட்டியபடி, ஒருவன் எந்த வகையான பரிசுத்த ஆவியை பெற வேண்டும் என்பதைத் தீர்மானித்து நமக்கு வழங்குகிறார்.

“இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்”. 1 கொரிந்தியர் 12:11,13

“எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது”. 1 கொரிந்தியர் 12:8-10

விசுவாசத்தை நிரூபித்தல்

“மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்”.1கொரிந்தியர் 4:2


தேவன் தம்முடைய ஞானத்தைத் தந்து, அவருடைய பரிசுத்த ஆவியால் உங்களை வழிநடத்துகையில், ஆவியானவர் செயல்படுவதற்கு நாம் நம்முடைய விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும்.

உங்கள் விசுவாசத்தை தேவனிடம் எப்படி நிரூபிப்பீர்கள்?


1. தேவ அழைப்புக்குக் கீழ்ப்படிதல், அவர் உங்களிடம் சொல்வதற்கு கீழ்ப்படியுங்கள்.

  • தேவன் உங்களுக்கு ஒரு வேலைக்கான ஆசீர்வாதத்தைத் தரும்போது அவரது அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து அந்த வேலையை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேளுங்கள்.

  • வேலையில் அடுத்த நிலைகளை அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் நிறுவனத்தில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளிலும், நீங்கள் வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அவரது மகிமை உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

  • உங்கள் செயல்களின் மூலம் மற்றவர்கள் தேவனை துதிப்பார்கள்.

2. முதலாவது தேவனை மகிமைப்படுத்துங்கள்

  • இந்த கீழ்ப்படிதல் பாதையில், நாம் அதிக ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். நம் மூலமாக அவருடைய வேலையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு ஆசீர்வாதம் நமக்கு வழங்கப்படுகிறது.

  • எல்லா மகிமையையும் தேவனுக்கு செலுத்துங்கள். நீங்கள் யாவற்றையும் தேவனுடைய கிருபையால் பெற்றுக் கொள்கிறீர்கள், உங்களுடைய செயலினால் அல்ல.

“அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்? வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?” லூக்கா 16:11-12

  • இந்த ஆசீர்வாதங்கள் உங்கள் மாம்ச ஆசைகளை மட்டுமே பூர்த்தி செய்யும்படி திரும்பினால், தேவன் ஒரு நாள் அவற்றை அகற்றி விடுவார்.

“ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்”. 1 கொரிந்தியர் 3:12-13


கிறிஸ்துவிடம் கணக்கொப்புவித்தல்


ஒரு ஊழியக்காரனாக நீங்கள் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.

“ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்”. 1 கொரிந்தியர் 4:3-5


  • நீங்கள் அவருடைய விசுவாசத்தின்படி நடக்கும்போது, பல சமயங்களில் அது உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சில சமயங்களில் உங்களையுமே கூட மகிழ்ச்சியடையச் செய்யாது. நீங்கள் செய்வது தேவனுக்கு முன்பாக நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் மனசாட்சியை தெளிவாக வைத்திருங்கள்.

  • மற்றவர்களின் செயல்களையோ அல்லது உங்கள் செயல்களையோ நியாயம் தீர்க்காதீர்கள். தேவனே உங்கள் நியாயாதிபதியாக இருக்கட்டும். நீங்கள் தவறு செய்யும்போது சரியான நேரத்தில் அவர் உங்களை கண்டித்து திருத்துவார்.

அப்போஸ்தலரின் வழியைப் பின்பற்ற உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்


  1. நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற பின் இன்னும் கிறிஸ்துவுக்குள் குழந்தையாக வாழ்கிறீர்களா?

  2. பரிசுத்த ஆவி உங்களுக்குள் வாசம் பண்ணுவதாக இன்னும் விசுவாசிக்கிறீர்களா?

  3. நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தேவனைப் பிரியப்படுத்தும் அடிமை மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா?

  4. தேவன் உங்களிடம் ஒப்படைத்ததில் நீங்கள் எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்கள்?

  5. தேவனின் அழைப்பில் உங்கள் பொறுப்பு என்ன?

13 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page