ஹார்வர்ட் / யேல் / ஐஐடி பல்கலைக்கழகங்களில் உள்ள தத்துவப் பேராசிரியர்கள் முன்பாக கிறிஸ்தவத்தின் வழக்கை முன்வைக்க, தேவன் அழைக்கின்ற ஒரு கிறிஸ்தவராக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? இந்த அறிவுஜீவிகளுக்கு கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை என்று முடிவெடுத்து, அதற்காக வெட்கப்படுவீர்களா? பெரிய அளவு IQ உடைய இந்த ஆண்களும் பெண்களும், முட்டாள் உளறுகிறான் என்று உங்களைப் பார்த்து சிரிக்கக்கூடும் என்று நீங்கள் பயந்து நடுங்குவீர்களா? ஹார்வர்ட் / யேல் / ஐஐடி பேராசிரியர்களோடு அமர்ந்து உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி அவர்களுடன் வாதிடுவது சற்றே பயமுறுத்தும் அனுபவமாகத் தான் இருக்கும். ஆனாலும், பவுல் அத்தேனே பட்டணத்தில் இதைத் தான் எதிர்கொண்டார்.
அத்தேனே பட்டணத்தின் சூழல்
“அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?” அப்போஸ்தலர் 17:16-19
தேவனை ஆராதிப்பதற்காக படைக்கப்பட்ட ஜனங்கள் விக்கிரகங்களை ஆராதிப்பதைப் பார்த்து பவுல் அவர்கள் மேல் கோபமும் , இரக்கமும் கொண்டு அதே சமயம் கலக்கமும் அடைந்தார். அத்தேன்னே பட்டணம் விக்கிரகங்களால் நிரம்பியிருந்ததால், அவர் இந்த விக்கிரக ஆராதனையைக் குறித்து யூதர்கள் / கிரேக்கர்களுடன் தர்க்கம் செய்யத் தொடங்கினார். எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் என்ற இரு பிரிவான ஞானிகளில் சிலர் பவுலுடன் வாதிட்டு, "இந்த வாயாடி என்ன பேசப்போகிறான்?" என்று சொல்லியதாக நாம் வாசிக்கிறோம். மேலும் செல்வதற்கு முன், எப்பிக்கூரர் மற்றும் ஸ்தோயிக்கர் என்பவர்கள் யார் என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்பிக்கூரர்
எப்பிக்கூரர்கள் , எப்பிக்கூரஸ் என்ற கிரேக்க தத்துவஞானியைப் பின்பற்றிய, கிறிஸ்தவ சகாப்தத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.
எப்பிக்கூரர்கள் இன்பத்தை வாழ்வின் முக்கிய நோக்கமாகப் பின்பற்றினர். மேலும் அமைதியான வாழ்க்கையின் இன்பம், வலியிலிருந்து விடுதலை, குழப்பமான ஆசைகள் மற்றும் மூடநம்பிக்கை மீதான பயங்கள் (மரண பயம் உட்பட) இவற்றையே பெரிதும் மதிப்பிட்டனர். அவர்கள் கடவுள்களின் இருப்பை மறுக்கவில்லை, ஆனால் அவர்களுக்கும் மனிதனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்பினர்.
"உண்டு , குடித்து, மகிழ்ந்திரு , ஏனெனில், நாளை இறந்துபோவோம்" என்பதை அவர்கள் தங்கள் பொன்மொழியாக எடுத்துக் கொண்டனர். வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் இல்லை; அனைத்துமே அதிர்ஷ்டம் தான் என்று நம்பினர். மேலும், அதிர்ஷ்ட தேவதையை அவர்கள் சார்ந்திருந்தனர்.
ஒரு எப்பிக்கூரரைப் பொறுத்தவரை, கல்லறைக்கு அப்பால் வாழ்க்கை ஒன்று இல்லை, மரணம் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது, எனவே, இறுதியில் பயப்படவும் ஒன்றுமில்லை, நம்புவதற்கும் எதுவும் இல்லை.
அவர்கள் நாத்திகர்கள். அவர்கள் கடவுள் இருப்பதை மறுத்ததால் அவர்களுக்கு ஆத்துமா மீதோ, கடவுள் மீதோ நம்பிக்கை இல்லை.
ஸ்தோயிக்கர்கள்
ஸ்தோயிக்கர்கள் தார்மீக நேர்மைக்கும், கடமை உணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் பெருமைமிக்க கௌரவத்தை வளர்த்துக் கொண்டனர், மேலும் கௌரவக் குறைச்சலோடு வாழ்வதை விட தற்கொலை சிறந்தது என்று நம்பினர்.
இந்தப் பிரிவினரின் கோட்பாடு என்னவென்றால், உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது (அவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு சக்தி) ஆனால் எல்லாமே விதியால் நிர்ணயிக்கப்பட்டது. கடவுள் கூட விதிக்கு உட்பட்டவர்.
ஸ்தோயிக்கர்கள், எல்லாமே கடவுள் என்றும், கடவுள் எல்லாவற்றிலும் இருப்பதாகவும் நம்பினர். எனவே, நன்மை, தீமை அனைத்தும் "கடவுளிடமிருந்து" வந்தவை என்று அவர்கள் நம்பினர், எனவே எதையும் எதிர்க்கக்கூடாது, மேலும் மனிதகுலத்திற்கு குறிப்பிட்ட வழி அல்லது விதி எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினர்.
தத்துவ ஞானிகளுடனான பவுலின் வாதம்
தேவன் சிருஷ்டித்தவர் மற்றும் மகத்தானவர்
“உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.” அப்போஸ்தலர் 17:24
“உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர். . .”. உலகம் எல்லா ஞானமும், வல்லமையும், அன்பும் கொண்ட தேவனால் உண்டாக்கப்பட்டது.
மேலும், தேவன் படைத்தவர், படைக்கப்பட்ட பொருள் அல்ல. தேவன், குச்சிகளினாலும் கற்களினாலும் மனிதனால் உருவாக்கப்படவில்லை. ஆனால், மனிதனையும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் தேவன்.
தேவன் மனிதனின் முன்னோடி அல்ல, அவர் மனிதனை விடப் பெரியவர், அவருடைய பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டவர்.
”வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.” அவர் இந்த பூமிக்கும் பிரபஞ்சத்திற்கும் தேவன். மற்றும் அவர் ஆவியாய் இருப்பதால் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் அவரால் வாசம் செய்ய முடியாது.
ஆண்டவருக்கு விக்கிரகத்தை உருவாக்குவது அல்லது அவரை வைத்திருப்பதற்காக ஒரு ஆலயத்தை உருவாக்குவது என்பது அவரை கேலி செய்வதாகும்.ஏனெனில், அவருடைய ஆவி இந்த பிரபஞ்சம் முழுவதையும் அவருடைய பிரசன்னத்தினால் நிரப்புகிறது.
தேவன் தன்னிறைவு பெற்றவர் மற்றும் பாதுகாப்பவர்
“எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.” அப்போஸ்தலர் 17:25
”தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.” -- ஆண்டவர் கொடுக்கிறவர், தமக்கென்று எந்தத் தேவைகளும் இல்லாதவர். மனிதர்கள் தெய்வங்களை மகிழ்விக்கவும், பரிசுகளை கொண்டு வரவும், அவைகளுக்கு தியாகம் செய்யவும், சேவை செய்யவும் வேண்டும் என்று பாகால்கள் வழிபாடு கற்பித்தது. இருப்பினும், உண்மையான தேவன் எல்லாவற்றையும் கொடுப்பவர், அவருக்கு எந்த வகையிலும் மனிதன் தேவையில்லை, ஆனால் மனிதனுக்கு அவருடைய தேவை மிக அவசியம்.
தேவன் பாதுகாப்பவர் - “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர்.”,உண்மையான ஆண்டவர் தம்முடைய உலகத்தின் மீது உறுதியான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார், அவரால் நாம் வாழ்கிறோம், ஒவ்வொரு முறையும் சுவாசிக்கிறோம்.
நாம் அங்கீகரிக்கிறோமோ இல்லையோ, நாம் இருப்பதற்கு ஆண்டவரையே சார்ந்து இருக்கிறோம். அவர்தான் நமக்கு யாவற்றையும் தருகிறார். மனிதர்கள் தாங்கள் ஆண்டவரை சார்ந்து இருக்கவில்லை என்று அறிவிப்பது எவ்வளவு வீம்பானது, முட்டாள்தனமானது. ஒரு எளிய கட்டளையின் மூலம் அவர் ஒரு மனிதனின் சுவாசத்தை நிறுத்தி அவனது உயிரை பறிக்க முடியும்.
தேவன் மனிதனை உருவாக்கியவர் / வரலாற்றின் ஆளுநர்
“மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.” அப்போஸ்தலர் 17:26
“மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, . . .” -- தேவன் மனித இனத்தை ஆதாம் என்ற ஒரு முன்னோடியிலிருந்து வந்த ஒரே குடும்பமாக ஆக்கினார் என்று பவுல் அறிவித்தார்.
தேவன் வரலாற்றின் ஆளுநர் ”முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.” எல்லா ஞானமும், மாட்சிமையும் கொண்ட தேவன் இந்த உலகத்திற்கென்று முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இந்தத் திட்டம் அவருடைய முன்னறிவை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இதன் மூலம் அவர் காலத்தின் பாதைகளை நோக்கி, எல்லாக் காரியங்களும் எப்படி மாறும் என்பதைப் பார்த்து, பின்னர் தமது திட்டத்தை அமைக்கிறார்.
கர்த்தர் பேரழிவுகள், போர்கள், வன்முறை மற்றும் கடினமான நேரங்களை அனுமதிக்கிறார். இதனால், மனிதர்கள் அவரைத் தேடவும் , அவரைச் சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள். அவர் இல்லாமல் யாரும் செயல்பட முடியும் என்று நினைப்பது சுய மாயை மற்றும் அபத்தமானது. மனிதர்கள் ஆண்டவர் இல்லாமல் இருக்க முடியும் என்று நினைப்பதற்கு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவருக்கு மாற்றாக உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ சில விக்கிரகங்களை வைத்திருப்பது தான் காரணம்.
தேவன் சர்வவல்லவர் / நாம் அவருடைய சந்ததி
“ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.” அப்போஸ்தலர் 17:28-29
“ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்;. . “ -- தேவன் ஒவ்வொரு நபருக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவரால் தான் நாம் இந்த பூமியில் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். உண்மையான தேவன் , ஜனங்கள் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ விக்கிரகங்களை சார்ந்து இருக்க விரும்பவில்லை, மாறாக அவரை சார்ந்து இருக்கவே விரும்புகிறார். ஜனங்கள் எல்லாவற்றுக்கும் தம்மைச் சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
தேவன் மனிதனின் தந்தை “ நாம் அவருடைய சந்ததியார்.”, நாம் அவருடைய பிள்ளைகள்.
“நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது”. நாம் ஆண்டவருடைய சந்ததியாகவோ அல்லது அவருடைய பிள்ளையாகவோ இருப்பதால், நமது தெய்வீக இயல்பு மனிதனின் கலை மற்றும் சிந்தனைகளால் உருவான பொன் அல்லது வெள்ளி அல்லது கல் போன்றது என்று நினைக்கக்கூடாது.
பவுலின் வாதங்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால் , அவை எப்பிக்கூரர் மற்றும் ஸ்தோயிக்கர் நம்பிக்கைகளின் சித்தாந்தத்தின் மீது நேரடியாகத் தாக்குவதாக இருந்தது. அவர்கள் செய்யும் விக்கிரக ஆராதனை தவறு என்று அவரால் ஒத்துக் கொள்ள வைக்க முடிந்தது. மேலும் பலர் தங்கள் விக்கிரக ஆராதனையில் இருந்து மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.
”சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.” அப்போஸ்தலர் 17:34
இதன் அர்த்தம் என்ன?
வாழ்க்கையை இன்பமாகப் பயன்படுத்திக்கொள்வதில் நம்மில் அநேகரிடம் எப்பிக்கூரியரின் நடத்தையின் பண்புகள் காணப்படுகின்றன. கஷ்ட காலங்களில், இப்படித் துன்பப்படுவது நம் தலைவிதி என்று கூறி ஸ்தோயிக்கர் மக்களைப் போல மாறிக் கொள்கிறோம். கிறிஸ்துவில் இருக்கும் பலருக்கும், கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கும் இப்படி இருக்கலாம்.
நாமும் ஸ்தோயிக்கர் தத்துவஞானிகளைப் போல தேவன் தான் எல்லாமே என்று சொல்லிக் கொண்டு, பணம், வேலை, புகழ், பெருமை, வாழ்க்கையின் பல பொருள்சார்ந்த விஷயங்கள் போன்ற பல விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டு இருக்கலாம்.
அல்லது, நாளை என்பது இல்லை, வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள் என்று எப்பிக்கூரியர் சொல்வது போல் நாம் வாழ்க்கையை வாழலாம், ஏனெனில் கிறிஸ்தவராக மாறுவதால் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இழக்க நேரிடும்.
தேவனிடம் மனந்திரும்புங்கள், உங்கள் எண்ணங்களை மாற்ற அவர் காத்திருக்கிறார்.அவர் நம் ஒவ்வொருவரையும் ஒரு காரணத்திற்காக உருவாக்கினார். அவரை ஆராதித்து அவருடைய சித்தத்தை நம் வாழ்வில் செய்ய வேண்டும் என்பதே அந்த காரணம். அவரை ஆராதித்தால் மட்டுமே இது நடக்கும்.
“அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.” அப்போஸ்தலர் 17:30 நாம் மனந்திரும்பி அவரிடம் சரணடைந்தாலொழிய,அவரால் செயல்படவும், அவருடைய சித்தத்தை நம்மீது செயல்படுத்தவும் முடியாது. அவருடைய அழகு என்னவென்றால், அவர் உங்களைப் படைத்திருந்தாலும், உங்களைக் கீழ்ப்படிய செய்வதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், அவர் நம் ஒவ்வொருவருக்கும் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். ஆண்டவரிடம் சரணடைந்து அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வோம். இதன் மூலம் அவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். ஏனெனில், அவர் உங்களுக்காகத் திட்டங்களை வைத்திருக்கிறார். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” எரேமியா 29:11
ความคิดเห็น