top of page
Kirupakaran

பவுலின் வாழ்க்கை


பைபிளில் உள்ள பவுல் அப்போஸ்தலரின் புத்தகங்கள் நமக்கு பெரிய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மேலும், அவருடைய ஆவிக்குரிய நுண்ணறிவு பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது, மற்றும் சிறந்த கிறிஸ்தவராக இருக்க நம்மைத் தூண்டுகிறது. பவுலைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வதற்கு முன், தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள். அவர் தேவனால் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு சவுல் என்று அழைக்கப்பட்டார், மனமாற்றத்திற்குப் பிறகு அவர் பவுல் என்று அழைக்கப்பட்டார்.


  • எபிரேய கலாச்சாரம் - பவுல் பிறப்பால் எபிரேயராகவும், விருப்பத்தின்படி பரிசேயராகவும் இருந்தார். அன்றைய முன்னணி யூதத் தலைவர்களில் ஒருவரான கமாலியேலின் கீழ் மோசேயின் சட்டத்தைப் படித்தவர். பவுல் (சவுல்) கிறிஸ்துவுக்குள் மாறுவதற்கு முன்பு ஒரு மாணவராகவும், சட்ட ஆசிரியராகவும் புகழ் பெற்றிருந்தார். அவர் தனது மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளை பேரார்வத்தோடு நேசித்தார். அவர் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ தேவாலயத்தையும் வெறுத்தார். மேலும்,அனைத்து கிறிஸ்தவர்களையும் சிறையில் அடைத்து கொல்ல தீவிரமாக முயன்றார்.

  • புறஜாதி கலாச்சாரம் – பவுல் புறஜாதி உலகத்தைப் பற்றியும் அறிந்திருந்தார். அவர் புறஜாதி நகரமான தர்சு பட்டணத்தில் பிறந்து ஒரு ரோமானிய குடிமகனாக இருந்தார். கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரத்தை நன்கு அறிந்திருந்தார். ஒரு யூதராக இருந்துகொண்டு புறஜாதி கலாச்சாரத்தைப் பற்றிய தெளிவான புரிதலுடன் இருந்தார்.

தேவனால் தொடப்பட்ட பிறகு, அவருடைய ஊழியக் காலத்தில் ரோமர் 1 மற்றும் 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசியர் 1 மற்றும் 2, தெசலோனிக்கேயர் 1 மற்றும் 2, தீமோத்தேயு, தீத்து மற்றும் பிலேமோன் ஆகிய பதின்மூன்று புத்தகங்களை எழுதினார்.


பவுலின் சுயம் சார்ந்த வாழ்க்கை


கலாத்தியர் 1 ஆம் அதிகாரத்தை படிக்கும்போது, பவுல் எப்படி இருந்தார் என்றும் கிறிஸ்துவால் எப்படி மாற்றப்பட்டார் என்பதையும் பற்றிய அவரது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை கொடுக்கிறார். இது அவர் எவ்வாறு "சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில்" இருந்து "தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கைக்கு" மாற்றப்பட்டார் என்பதை அறிய உதவும்.


“நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.” கலாத்தியர் 1:13-14


 “நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்;”
  • கிறிஸ்துவுக்குள்ளாக மாறுவதற்கு முன்பு, பவுல் ஒரு பரிசேயராக இருந்தார். மேலும் கறைபடிந்த, மதக்கோட்பாடுகளுக்கு எதிராக இருந்த அன்றைய யூதமார்க்கத்திற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் இருந்தார்.

  • யூதர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பல மரபுகளை யூத சட்டங்களில் சேர்த்தனர்.

  • பவுலின் காலத்தில் இருந்த யூதமார்க்கம் மதக்கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தது. இரட்சிப்பு என்பது நல்ல கிரியைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. கிறிஸ்துவின் மூலம் விசுவாசத்தினால், கிருபையைக் கொண்டு இரட்சிப்பு என்ற கருத்து இல்லை.

  • பவுலின் முந்தைய கல்வி, கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலம் கிருபையின் சுவிசேஷத்தைக் குறித்து சிந்திக்க அவருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஏனென்றால் யூதமார்க்கம் நற்செய்தியின் சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர் நம்பினார்.

“தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி”
  • பவுல், தேவனின் பெயரால் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் அளவிற்கு யூத மார்க்கத்தின் மீது அவ்வளவு வைராக்கியம் கொண்டிருந்தார். தேவனுடைய சித்தத்தைச் செய்கிறோம் என்று முழுமையாக நம்பினார். அவர் எருசலேமில் வீடு வீடாகச் சென்று, கிறிஸ்தவர்களை தேடிப் பிடித்து, அவர்களை சிறைக்கு இழுத்துச் சென்றார். (சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். அப்போஸ்தலர் 8:3)

  • பவுல் கிறிஸ்தவர்களின் மரணத்திற்கு கூட சம்மதித்திருந்தார். (அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். அப்போஸ்தலர் 26:10) தேவாலயத்தை பூமியின் முகத்திலிருந்து முற்றிலும் அழித்துப் போட அவர் உறுதியாக இருந்தார்.


“என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.”
  • பவுல், யூத மதத்தின் மீதான தனது வெறித்தனமான வைராக்கியத்தில் “என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்” என்று கூறுகிறார். அவர் அன்றைய காலத்தின் பெரும்பாலான ஜனங்களை விட யூத மார்க்கத்தை நன்கு அறிந்திருந்தார்.

  • கிறிஸ்தவத்தைப் பற்றிய தனது மனதை மாற்றிக் கொள்வதற்கு பவுல் உணர்ச்சிவசப்பட்ட மன நிலையில் இல்லை. எந்த நிர்பந்தங்களோ அல்லது பிற உளவியல் சாதனங்களோ அவரை கிறிஸ்துவுக்குள் மாற்ற முடியாதபடி அவர் யூத மரபுகளால் மிகவும் ஆழமாக மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்.


பவுலின், தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கை


தேவன் அவரைத் தொட்ட பிறகான தனது மாற்றத்தை அவர் விவரிக்கிறார்.


“அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்” கலாத்தியர் 1:15


“நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து,”

  • தன் மனமாற்றத்தின் போது தேவன் தனக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி பவுல் பேசுகிறார். இயற்கைக்கு அப்பாற்பட்ட வழியில் தேவன் அவரது வாழ்க்கையில் தலையிட்டு பவுலின் வாழ்க்கையின் முழுப் போக்கையும் மாற்றி அமைத்தார்.

  • இங்கே பவுலுடனான தேவனின் தொடர்புகள், மனிதர்களாகிய நம்மில் எவரும் புரிந்துகொள்ள முடியாத, தேவனின் நித்திய திட்டத்துடன் தொடர்புடையவை. பவுலின் யூதப் பின்னணி, கல்வி, மதவெறி மற்றும் கிறிஸ்துவை அறியாமலிருந்தது ஆகிய எல்லாவற்றையும் தேவன் தமது கிருபையால் ஒதுக்கி வைத்தார்.

  • பவுல் புரிந்து கொள்ள அதிகக் கடினமான ஒரு மனிதர். மனிதனால் சாதிக்க முடியாததைச் செய்ய தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார்.

  • பவுல் தனது மனமாற்றத்தை தேவனுடைய இறையாண்மை நோக்கங்களுக்குத் திரும்ப செல்வதன் மூலம் மட்டுமே விளக்க முடியும். பிறக்கும் போது அல்லது அவர் தாயின் வயிற்றில் இருந்தபோதே, தேவன் அவரை இரட்சிப்பு மற்றும் அப்போஸ்தலத்திற்கு ஒதுக்கினார். பவுல் எந்தவொரு மனிதத் தேர்வுகளையும் செய்வதற்கு முன், தேவன் அவரது வாழ்க்கைக்கான ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.

  • அவர் "பிரித்தெடுத்து" என்று கூறும் போது, "சுற்றி ஒரு எல்லையை வைப்பது" அல்லது "குறித்து வைப்பது" என்று பொருள்படும். தேவனுடைய நிலைப்பாட்டில் இருந்து, பவுலின் முழு வாழ்க்கையும் அவர் பிறந்த தருணத்திலிருந்து குறிக்கப்பட்டது. அவருடைய மாற்றமும் அப்போஸ்தலத்துவமும் தேவனால் திட்டமிடப்பட்டது.


“தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்”

  • தேவனின் முன்குறிக்கப்பட்ட திட்டம் கிருபையை அளித்து பவுலை இரட்சிப்புக்கும் அப்போஸ்தலத்துவத்திற்கும் அழைத்தது. மாற்றத்திற்கு முந்தைய நிலையில் பவுல் தேவனிடம் இருந்து எதையும் பெறுவதற்கு தகுதியானவராக இருக்கவில்லை. அவர் தேவனுக்கும், கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரியாக இருந்தார். அவர் கிருபைக்கு தகுதியானவராக இருக்கவில்லை, அதைக் கேட்கவும் இல்லை.

  • ஆனாலும் கிருபை அவரைக் கண்டு காப்பாற்றியது. பவுலின் மனமாற்றம் ஆரம்பம் முதல் முடிவு வரை இயற்கைக்கு அப்பாற்பட்டது. (அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அப்போஸ்தலர் 9:3-6)

  • தேவனால் தொடப்பட்ட பிறகு, தேவ கிருபையைப் புரிந்துகொள்வதில் பவுலுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. (ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. 1 கொரிந்தியர் 15:10)

  • இது சாத்தியமற்றது என்பதைக் காட்டுவதற்காக பவுல் தனது முதல் 14 ஆண்டுகால ஊழியத்தின் சுருக்கமான வரலாற்றைத் தருகிறார். (எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். கலாத்தியர் 1:17-18)

  • இந்த மூன்று வருட தனிமையில், பவுல் கிறிஸ்துவிடமிருந்து கிருபையின் நற்செய்தியைக் கற்றுக்கொண்டார். தனிமையின் இந்த நேரத்தில், அவர் பழைய ஏற்பாட்டு வசனங்கள், கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் இறப்பு மற்றும் அவரது மனமாற்றத்தின் அனுபவங்களைப் பற்றி தியானித்தார். அவர் ஒரு புதிய இறையியலை உருவாக்கிக் கொண்டிருந்தார், ஏனென்றால் கிரியைகளைப் பற்றிய அவரது கடந்தகால கற்றல் அனைத்தும் கிருபையைப் பற்றிய அவரது புதிய கண்டுபிடிப்பால் சிதைந்துவிட்டது. அவர் சட்டம், கடுமையான சட்ட அனுசரிப்பு மற்றும் இரட்சிப்புக்கான நல்ல செயல்களில் மூழ்கியிருந்தார். அவரது மனதை மாற்ற கிறிஸ்துவின் போதனை தேவைப்பட்டது.

  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் இறுதியாக எருசலேமுக்குச் சென்றார், ஆனால் அவர் பதினைந்து நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார். அப்போஸ்தலர்களில் இருவரை மட்டுமே சந்தித்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, சிரியா மற்றும் சிலிசியா பகுதிகளில் ஊழியம் செய்தார். மேலும் எருசலேமிலிருந்து வந்த எந்த அப்போஸ்தலர்களுடனும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எருசலேம் தேவாலயத்தில் இருந்து முற்றிலும் தனித்திருந்தார். எனவே, அவருடைய செய்தி ஆவியானவரை அன்றி எருசலேம் பகுதியில் உள்ள எந்த ஒரு நபரிடமிருந்தும் வந்திருக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் தாமே அவரை வழிநடத்தி ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

  • முதல் பதினான்கு ஆண்டுகளில் பவுலின் ஊழியம் மனிதர்களின் பார்வையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, ஆனால் இந்த ஆண்டுகளை தேவன் இந்த மனிதனுக்கு கிருபை மற்றும் வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களைப் பயிற்றுவிக்கவும் கற்பிக்கவும் பயன்படுத்தினார். பவுலின் முக்கியமான ஊழியம் அவருக்கு சுமார் நாற்பத்தைந்து வயதாக இருந்தபோது வந்தது. அவர் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டார். ஏனென்றால் கடினமான வழிகளில் தேவன் அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தார்.

பவுலின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்

  1. தேவனின் இயற்கைக்கு மாறான தொடுதல் எந்தவொரு கடினமான நபரையும் மாற்றும்.

  2. தேவன் தொட்டவுடன், சட்டக்கோட்பாட்டின் மதிப்புகள் போய்விட்டன.

    1. பவுல் கிறிஸ்துவுக்குள்ளாக மாற்றப்பட்டு அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டவுடன், அவர் தனது யூத பின்னணி, மரபுகள் மற்றும் மார்க்கம் அனைத்தையும் முற்றிலும் உடைத்தெறித்தார். இதைச் செய்தபோது, ​​எபிரேய கலாச்சாரத்தில் பெற்ற புகழ், அதிகாரம், செல்வாக்கு, செல்வம் என அனைத்தையும் அவர் இழக்க நேரிட்டது.

    2. கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவைப் போல் அல்லாத நமது பிறமத செயல்களை அடிக்கடி முறித்துக் கொள்ள வேண்டும். இந்த முறிவை உருவாக்குவது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் நாம் கிறிஸ்துவுக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால் அது அவசியம்.

  3. கிருபை நமக்கு அருளப்பட்டுள்ளது. (ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. 1 கொரிந்தியர் 15:10)

    1. தேவகிருபை அவரைக் கழுவி, மாற்றியது. ஒவ்வொரு நாளும், அவருக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அவர் மதித்தார். மேலும், அன்றாட வாழ்க்கையில் அவரை வழிநடத்திய தேவனின் கிருபையைக் குறிப்பிடுகிறார்.

    2. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிருபை சிலுவையில் இயேசு பெற்ற ஜெயத்தின் விளைவாகவே வந்தது. அது பூமியில் காண முடியாத, மிகவும் மதிப்புமிக்கது. ஆனால், நாம் தேவனுடைய கிருபையை மிகவும் இலகுவாகக் கருதி, எளிதாக எடுத்துக்கொள்கிறோம்.

  4. பயனுள்ள ஊழியம் - எந்த ஒரு கிறிஸ்தவனும் திறம்பட ஊழியம் செய்வதற்கு முன், கிருபையின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்வதில் நேரத்தை செலவிட வேண்டும்.

    1. இரட்சிப்பை உண்மையாகப் புரிந்துகொள்வதற்கும் அங்கீகரிப்பதற்கும் கிருபை ஒரு திறவுகோலாகும். மேலும் அது கிறிஸ்துவுக்கு சேவை செய்வதற்கான சிறந்த உந்துதலாக இருக்கிறது.

    2. பவுலுக்கு கிருபையின் கோட்பாடுகளை போதிக்க தேவன் மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டால், புதிதாக மதம் மாறியவர்களை மூப்பர்கள், தேவாலய நிர்வாகிகள், பிரசங்கிகள் மற்றும் ஆசிரியர்களாக நியமிப்பதை நாம் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?கிருபையின் பயனுள்ள கருவியாக இருப்பதற்கு காலம் தேவைப்படும்.

நீங்கள் வாழ்க்கையில் என்ன சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. வந்து மாற்றுவதற்கு உதவுமாறு இயேசுவிடம் கேளுங்கள். அவர் வந்தவுடன், எல்லா மாற்றங்களும் நடக்கும், பழையது போய்விடும். நல்ல செய்தி என்னவென்றால், அவர் பவுலுக்கு எப்படி செய்தாரோ, அது போல உங்களையும் என்னையும் தொட, அதே இயேசு இன்றும் ஜீவனோடு இருக்கிறார்.

1,214 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page