top of page

பலப்படுத்தும் நம்பிக்கை : லாசரு விற்கு நடந்த அற்புதத்தின் பாடம்

Kirupakaran

லாசரு இறந்து 4 நாட்களுக்குப் பிறகு இயேசு அவரை உயிரோடு எழுப்பிய அற்புதம் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த அதிசய நிகழ்விலிருந்து பெற வேண்டிய பல மதிப்புமிக்க பாடங்கள் உள்ளன.

 

யார் இந்த லாசரு?

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான். யோவான் 11:1-2

  • அவர் மார்த்தாள் / மரியாளின் சகோதரர் (யோவான் 11:1).

  • அவர் பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்தவர்.

  • அவர் ஒரு யூதராக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது (அவர் யூதர் என்று குறிப்பு எதுவும் இல்லை). லாசரு மரித்த போது அந்தப் பகுதியைச் சூழ்ந்திருந்த அநேக யூதர்கள் அவரைக் காண வந்ததாகக் கேள்விப்படுகிறோம்.

 

இயேசுவோடு அவருடைய உறவு எப்படி இருந்தது?

இயேசுவுடனான மார்த்தாள் / மரியாள் / லாசருவின் உறவு

இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். யோவான் 11:5

  • இயேசு ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். “இயேசு …. அன்பாயிருந்தார்” (வசனம் 5) என்று சொல்லும் போது, ​​இயேசு அவர்களை விசேஷமாக நேசித்தார் என்று அர்த்தமாகிறது. இயேசு அன்பு கூர்ந்த வரிசையும் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மூவரில் கடைசியாக லாசரு இருந்தார்.

  • அவருடைய அன்பின் காரணமாக, லாசரு நோய்வாய்ப்பட்ட செய்தி அவருடைய சகோதரிகள் மூலம் இயேசுவுக்கு அனுப்பப்பட்டது. அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். யோவான் 11:3

  • இயேசுவின் அன்பு - அன்பினால் அவர்கள் (சகோதரிகள்) “ஆண்டவரே”  என்று கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஜனங்கள் இயேசுவை போதகர் என்றும் ரபி என்றும்  அழைத்தனர். ஆனால் இங்கே அவர்கள் அவரை “ஆண்டவரே” என்று அழைக்கிறார்கள்.

  • ஆண்டவர் என்றால் என்ன அர்த்தம்? ஆண்டவர் என்றால் அவரே தேவன் என்று அர்த்தம்.

  • அவர்கள் ஆண்டவரே என்று பல முறை கூறினார்கள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். யோவான் 11:21 என்று மார்த்தாளும், இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். யோவான் 11:32 என்று மரியாளும் கூறுகிறார்கள்.

  • அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது இயேசுவை "போதகர்" என்று அழைக்கிறார்கள், இயேசுவை அழைக்கும் போது "ஆண்டவரே" என்று கூறுகிறார்கள். அவர் தேவனாகவும் அவர்களுக்கு எல்லாமுமாகவும் இருந்தார் என்பதை இது குறிக்கிறது.

  • மார்த்தாளும் மரியாளும் தீர்க்கதரிசனமாக உரைத்தனர்.

  • மார்த்தாள் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பேசுகிறாள் - அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். யோவான் 11:24

  • மரியாள் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள் - இது இயேசுவின் மரணத்திற்கு முன்பாக அவரது சரீரத்தைக் கனம் பண்ணுவதைப் போல இருந்தது. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது - யோவான் 12:3

  • அவர்கள் இயேசுவுடன் கொண்டிருந்த ஐக்கியத்தினாலேயே இயேசு அவர்கள் மேல் அதிகம் அன்பாயிருந்தார். அவர்களுடைய அந்த ஐக்கியமே அவரை ஆண்டவர் என்று அழைக்கவும் அவர் லாசருவை தமது சிநேகிதன் என்று அழைக்கவும் வைத்தது.

 

இயேசுவுடனான மார்த்தாள் மரியாளின் உறவு

  • இயேசு அவர்களை சிநேகிதர்களாகக் கருதினார் - இயேசு லாசருவை சிநேகிதன் என்று அழைத்தார். இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். யோவான் 11:11

  • பிதாவாகிய தேவனுக்கு மகிமை - வியாதியைக் குறித்து கேட்டபின் இயேசு கூறிய முதலாவது வார்த்தை - இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். யோவான் 11:4

  • ஒரு வியாதி வரும்போது நோயிலிருந்து சுகம் பெறவேண்டும் அல்லது அதிசயம் நடக்கவேண்டும் என்று தான் செயல்படுகிறோம். ஆனால், வியாதிக்காக இயேசு தேவனை மகிமைப்படுத்தினார்.

  • இயேசு தேவனுக்கு மகிமையைக் கொடுத்தார், அப்பொழுது தான், குமாரனும் அதினால் மகிமைப்படுவார் ~ மரித்தோரை உயிர்த்தெழச் செய்வது ஏராளமான யூதர்கள் இயேசுவைப் பின்பற்றவும் அவர்களில் விசுவாசத்தைப் பதிய வைக்கவும் செய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

  • அவர் 2 நாட்களுக்குப் பிறகு சென்றார் - அவர் இந்த வியாதியைக் குறித்து கேள்விப்பட்ட உடனேயே திரும்பிச் செல்லவில்லை. மேலும் 2 நாட்கள் அதே இடத்தில் தங்கியிருந்தார் என்று வாசிக்கிறோம். அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். யோவான் 11:6-7. பொதுவான மனித ஞானம் உடனடியாக விரைந்து செல்லச் சொல்லும். ஆனால்,இயேசு மேலும் 2 நாட்கள் தங்கியிருந்தார். ஒவ்வொரு காரியத்திற்கும் இயேசுவுக்கு சரியான வேளை   இருக்கிறது. நம்முடைய நேரமும் அவருடைய காலமும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

  • நித்திரை VS மரணம் - இயேசு தம் சீடர்களுக்கு நித்தரையாயிருப்பது  என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்கிறார் - அவர்களோடு பேசுகிறார். இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். யோவான் 11:11

  • இயேசு லாசரு நித்திரையாயிருப்பதாகக் கூறுகிறார் ~ அவர் தான் லாசருவை எழுப்பப் போகிறார். அவர் சொன்னதை சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் புரிந்து கொள்ளாமல் பதிலளித்தனர். அவர்களிடமிருந்து வந்த பதிலைப் பாருங்கள். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். யோவான் 11:12

  • இயேசு அளித்த பதிலின் பொழிப்புரை, "உங்கள் நிமித்தம்" என்று இயேசு கோபமான முறையில் அவர்களுக்கு பதிலளித்தார் ~ இது என்னுடன் வாழ்ந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? நான் பேசுவது உங்களுக்குப்  புரியவில்லையா? என்று சொல்லுவது போல இருக்கிறது. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். யோவான் 11:14,15

 

நமக்கான பாடங்கள்

  • இயேசுவிடம் இருந்து நமக்கு ஒரு தனிப்பட்ட அன்பு இருக்க வேண்டும் என்றால், மார்த்தாள் மரியாள் அவரோடு எப்படி ஐக்கியமாக இருந்தார்களோ, அதைப் போல நாமும் இருக்க வேண்டும். நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில் அவரை அப்பா, பிதாவே என்று அழைக்கவும், நம்முடைய தேவைகளுக்கு ஒரு இரட்சகராக அவரை பயபக்தியோடு நோக்கவும் வேண்டும். நாம் இயேசுவை அழைக்கும் போது, ​​அவரும் நம்மை சிநேகிதன் என்று அழைப்பார்.

  • பல சமயங்களில் நாம் அவரது சீடர்களைப் போல காரியங்களைச் செய்கிறோம் - நாம் இயேசுவைப் புரிந்து கொள்வதில்லை, அவருடைய போதனைகளில் நாம் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கற்கும் திறன் வரும்.

  • மரணத்திற்கு இயேசுவின் மீது எந்த வல்லமையும் இல்லை, அவரால்  மரித்தவனைக் கூட உயிரோடு எழுப்ப முடியும் என்ற அளவிற்கு இயேசுவின் மீது விசுவாசம் வைப்போம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இதே நிலை இருக்கலாம். ஒரு மூடிய கதவு, மருத்துவரால் குணப்படுத்த முடியாத ஒரு நோய், ஒரு நம்பிக்கையற்ற  காரியம் அல்லது எந்த சூழ்நிலையானாலும் சரி, இயேசுவால் உயிர்ப்பிக்க முடியும். உயிர்த்தெழுந்தவர் மீது நம் நம்பிக்கையை வைப்போம்.

 

மரித்தவரை உயிரோடு எழுப்பிய அதிசயம்

லாசருவைக் கல்லறையில் வைத்து நாலு நாளாயிற்று. சகோதரிகள் தங்கள் சகோதரனைக் குணமாக்கும்படி இயேசுவிடம் வார்த்தை அனுப்பியதைப் பார்த்தோம்.

 

1. இயேசுவிடம் மார்த்தாள் எப்படி நடந்து கொண்டாள்?

  • இயேசு வருவதைக் கேட்டு மார்த்தாள் இயேசுவைப் பார்க்க ஓடி வந்தாள், மீட்பர் வந்து பார்க்கும் வரை அவள் வீட்டில் தங்கவில்லை.

  • முதலில் அவரை ஆண்டவரே என்று அழைத்தும், இரண்டாவது நீர் இங்கேயிருந்தீரானால்.... என்றும் கூறி இயேசுவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினாள் - மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். யோவான் 11:21-22

  • விசுவாச பேச்சு உயிர்த்தெழுதல் பேச்சுக்கு வழிவகுக்கிறது - அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். யோவான் 11:24-26

  • உயிர்த்தெழுதல் பேச்சு தேவனை மகிமைப்படுத்த வழிவகுக்கிறது - அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். யோவான் 11:27

 

2. இயேசுவிடம் மரியாள் எப்படி நடந்து கொண்டாள்?

  • இயேசு வந்தபோது மரியாள் வீட்டில் இருந்தாள், அவளைப் பார்க்க வந்திருந்த மற்ற யூதர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

  • அவள் இயேசுவின் பாதத்தில் விழுந்தாள் - அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். யோவான் 11:29,32

  • அவரை ஆண்டவரே என்று அழைத்தும், நீர் இங்கேயிருந்தீரானால்.... என்றும் மார்த்தாள் கூறிய அதே வார்த்தைகளைக் கூறி இயேசுவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினாள்.

  • மார்த்தாள் இயேசுவை நோக்கி ஓடி வந்தாள், மரியாள் அவர் பாதத்தில் விழுந்தாள் ~ இது இயேசுவிடம் அவர்கள் கொண்டிருந்த சார்பையும் அன்பையும் காட்டுகிறது.

 

3. மார்த்தாள் மரியாள் யூதர்களைப் பார்த்தவுடன் இயேசு கொண்ட இரக்கம்  

அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். யோவான் 11:33-34

  • இந்தப் பெண்களும், யூதர்களும் அழ ஆரம்பித்தபோது, ​​இயேசு ஆவியிலே கலங்கித் துயரமடைந்து அவர்களுடன் சேர்ந்து கண்ணீர் விட்டார்.

  • தாம் லாசருவை உயிரோடு எழுந்திருக்கப் பண்ணப் போகிறதை அறிந்திருந்தும் கண்ணீர் விட்டார். அவர் ஆறுதலளிக்கும் தேவன்.

  • அவர் தாம் பிரசங்கித்த ஒவ்வொரு வார்த்தையின்படியும் வாழ்ந்தார். மலைப்பிரசங்கத்தில், துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள் என்று  பிரசங்கித்தார். அதன்படியே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை இங்கே பார்க்கிறோம். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4

  • அவர் கல்லறையினிடத்திற்கு வந்தபோது மிகவும் கலங்கினார் - அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. யோவான் 11:38

  • இயேசுவை ஆழமாகத் தூண்டிய விஷயங்கள் சூழ்நிலையின் செயல்களை அடிப்படையாகக் கொண்டவை.

  • அவர்கள் அவருடைய பாதத்தில் விழுந்தார்கள்.

  • அவர்கள் அவரிடத்தில் ஓடி வந்தனர்.

  • ஜனங்களின் அழுகை மற்றும் லாசரு இறந்த பிறகும் அவர்கள் அவர் மீது விசுவாசம் வைத்திருந்தது.

  • இயேசு எப்போதும் ஆழமாக அசைக்கப்படும் போது அற்புதம் செய்தார், அவர்களுக்கு ஒரு அற்புதம் தேவை என்று அவர் உறுதியாக நம்புகிறார்.  நாம் அவரை ஆழமாக அசைக்காததால் நமக்கு அற்புதங்கள் கிடைக்கவில்லை. நாம் அழுதுவிட்டு பின்பு நின்றுவிடுகிறோம். அவர் நம்மைத் தொடும்படி அவரை ஆழமாகத் தூண்டும் செயல் எதையும் நாம் செய்வதில்லை.

 

4. இயேசு அற்புதம் செய்கிறார்

இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். யோவான் 11:39

  • கல்லறையைப் பார்த்ததும் அங்கிருந்து கல்லை அகற்றும்படி கூறினார். அதைக் கேட்டதும் மார்த்தாள் "இப்பொழுது நாறுமே" என்று கூறினாள். இந்த நிலை ஏற்பட இயேசு 2 நாட்கள் காத்திருந்தார். லாசரு மரித்து சரீரம் அழுகிய நிலையில் இருந்தது    .

  • சூழ்நிலை சாத்தியமற்றதாக இருக்கும் போது இயேசு மார்த்தாளிடம் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார் ~ இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். யோவான் 11:40. இதே போன்ற அவிசுவாசமான தருணங்கள் நமக்கு எப்போதும் உண்டு, இது மிகவும் பொதுவானது, ஆனால் இயேசு மார்த்தாளைக் கடிந்து கொள்ளாமல் அவளுக்கு உறுதியளித்தார்.

  • அற்புதம் செய்யும்படி இயேசு பிதாவிடம் வேண்டினார். இயேசு 4 நாட்களுக்கு முன்பு பேசியதற்கு (வசனம் 4) இது ஒத்துப் போகிறது.

  • இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். யோவான் 11:4

  • இயேசு ஜெபித்த பிறகு என்ன செய்தார்? - அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். யோவான் 11:41-43

  • லாசருவைக் கூப்பிடும் போது "வெளியே வா" என்றும் பிசாசுகளைத் துரத்தும் போது, ​​"அப்பாலே போ" என்றும் இயேசுவின் வார்த்தைகள் எப்பொழுதும் சுருக்கமாகவே இருந்தன ~ இது நமது இரட்சகரின் வல்லமை மற்றும் அதிகாரத்தை பிரதிபலிக்கிறது.

  • இயேசு மேலே பிதாவைப் பார்த்து, ஆவியிலே அவரோடு பேசி மீண்டும் உறுதிப்படுத்தினார் - "....பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ... ". யோவான் 11:41,42

  • 2 நாட்களுக்குப் பிறகு இயேசு இங்கு வந்தது பிதாவின் செயலை அடிப்படையாகக் கொண்டது, தாமதம் அவருடையது அல்ல, அவர் தமது பிதாவின் சித்தத்தின் அடிப்படையில் வந்தார். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். யோவான் 11:42

 

5. அநேகம் யூதர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்

  • இயேசு தேவகுமாரன் என்றும் மேசியா என்றும் யூதர்கள் அறிந்து கொள்ள இந்த அற்புதம் நடக்க வேண்டி இருந்தது. ஒரு யூதரை நம்ப வைப்பது சாத்தியமில்லை. ஆனால் இங்கே, மரித்து அழுகிப் போன ஒரு மனிதன் உயிரோடு வருவதன் மூலம் தமது குமாரனை மகிமைப்படுத்துவதும் ஏராளமான யூதர்கள் தங்கள் நம்பிக்கையில் இயேசுவிடம் திரும்பி அவரைப் பின்தொடர்வதும் பிதாவின் சித்தமாக இருந்தது.

  • அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். யோவான் 11:45-46

  • அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். யோவான் 12:9

 

6. இந்த நிகழ்வுக்குப் பிறகு பரிசேயர்கள் இயேசுவை எதிர்த்தார்கள்

  • இயேசுவை இதுபோன்ற அற்புதங்களைச் செய்ய அனுமதித்தால், அவர் நம் ஆலயங்களையும் நம் தேசத்தையும் கைப்பற்றி விடுவார், தங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைய திட்டமிட்டனர். அவர் மீது குற்றம் சாட்டவும், அவரை சிலுவைக்கு  அழைத்துச் செல்லவும் அவர்களுக்கு இதுவே தூண்டுதலாக இருந்தது.

  • அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள். யோவான் 11:47-48

  • மரித்தவனை உயிரோடு எழும்ப செய்தது, இயேசுவை விசுவாசிக்கும்படி ஏராளமான யூதர்களை கொண்டுவந்திருக்கும். இது ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது, அவர்களால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

 

அற்புதத்தில் இருந்து பாடங்கள்

  • இயேசுவின் குமாரரும் குமாரத்திகளுமாக நாம் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

  • அதே வல்லமையும் அதிகாரமும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதை மறந்துவிடுகிறோம் - மரித்தவர்களை உயிரோடு எழுப்ப இயேசுவைப் போல உரத்த குரலில் வெளியே வா என்று சொல்லவும், பிசாசுகளைத் துரத்திய போது அவரைப் போன்று அப்பாலே போ என்று சொல்லவும் நமக்கு அதிகாரம் இருக்கிறது. அதே வல்லமையைப் பயன்படுத்தி காரியங்களை நம்மால் மாற்ற முடியும்.

  • நாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்த வேண்டும். அற்புதம் நடப்பதற்கு இது தான் ஒழுங்கு.

  • நாம் நமது இரட்சகரிடம் பேசும்போது ஆண்டவரே, பிதாவே என்று சொல்ல வேண்டும்.

  • லாசரு வெளியே வந்ததும் அவரது பிரேதச் சீலைகளை கட்டவிழ்த்துவிடும்படிக் கூறினார்.

  • மரித்து அழுகிய நிலையில் இருந்த ஒருவன் மீண்டும் உயிரோடு எழும்பி  நடப்பதைக் காணும் போது அந்த இடம் எப்படி இருந்து இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்ய நான் சவால் விடுகிறேன். அந்த தருணத்தை கற்பனை செய்யும் போதே புல்லரிக்கிறது ~ தேவனின் வல்லமையான செயல்களுக்காக அவரைத் துதிப்போம்.

  • அவிசுவாசிகளிடம் அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் காணப்படும் போது எதிரி அலறுகிறான். ஒரு எழுப்புதல் ஏற்பட வேண்டுமானால் அந்த ஆவி ஊற்றப்படுவதற்கு நீங்கள் தேவனிடம் மன்றாடுங்கள். அந்தக் காலத்தில் அநேகம் யூதர்கள் இரட்சிக்கப்பட்டது போல இன்னும் பலர் இரட்சிக்கப்பட தேசத்தில் அந்த எழுப்புதலின் ஆவிக்காக ஜெபியுங்கள். இந்தியாவில் இரட்சிக்கப்படாதவர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

  • பரிசேயர்களின் அச்சுறுத்தலுக்குப் பிறகு இயேசு பொது இடங்களுக்குச் செல்லவில்லை, நாமும் அதையே பின்பற்ற வேண்டும்.இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வரும்போது, ​​​​நாம் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும், நியமிக்கப்பட்ட நேரம் வரும் வரை பொதுவெளியில் இருக்கக்கூடாது.

  • அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள். யோவான் 11:56-57

  • இயேசு என்ன செய்தார்? ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். யோவான் 11:54

 

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Philip
Jun 09, 2024

Amen

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page