top of page
Kirupakaran

பதிலளிக்கப்படாத ஜெபம்



நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது பல சின்ன சின்ன பொருள்கள் வாங்க வேண்டும் என்று விரும்பி இருப்போம். அதற்காக நம் அப்பாவிடம் அநேக நேரம் பிடிவாதம் கொண்டு கேட்போம். என் வாழ்வில் நடந்த ஒரு பழைய சம்பவத்தை (35 வருடங்கள் முன் ) குறித்து இங்கு பகிர்கிறேன். நான் சின்ன பையனாக இருக்கும் போது எனக்கு ஒரு ரன்னிங் ஷூஸ் வாங்க வேண்டும் என்று என் அப்பாவிடம் அனுதினமும் கேட்டுத் தொல்லை பண்ணினேன். பாட்டா (பவர்), அடிடாஸ் என்ற இரண்டு மாடல் மட்டும் தான் நன்றாக இருந்தது. அதனால் அதில் ஏதேனும் ஒன்று எனக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரியப்பட்டேன். என்னுடைய அப்பாவின் வரவு செலவு என்ன என்று தெரியாமல் அவரிடம் அனுதினமும் கேட்பேன்.கடைசியாக ஒரு நாள், ஒரு தள்ளுபடி விற்பனையில் என் அப்பா அதை எனக்கு வாங்கிக் கொடுத்தார். அதுவும் என்னுடைய பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார், அதை நான் பார்த்துப் பார்த்து உபயோகம் செய்தேன். என்னைப் போல உங்களுக்கும் ஒரு குட்டிக் கதை இருக்கும், ஆனால், வயதாக ஆக நாம் என்ன வேண்டும் என்பதை

சூழ்நிலை அறிந்து கேட்கிறோம்.


ஆம் பிரியமானவர்களே, நம்முடைய தகப்பனாகிய தேவனிடமும் நாம் சிறுபிள்ளைகள் போல பல தேவைகளைக் கேட்கின்றோம். ஆனால் நம் தகப்பன் ஒரு சில காரியங்களை / தேவைகளை நமக்குக் கொடுக்க மறுக்கின்றார். இதற்கு என்ன காரணம் என்று தெரிவதற்கு, நீங்கள் ஜெபிக்கும் ஜெபத்தை ரெகார்ட் செய்து திரும்பக் கேளுங்கள், உங்கள் ஜெபத்தில் கிட்டத்தட்ட 90% உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்பது மட்டும் தான் இருக்கும். பொதுவாக, நம்முடைய ஜெபம் நமக்கு ஒரு வீடு இருந்தால் இதைவிட பெரிய வீடு, ஒரு போன் இருந்தால் ஐபோன், ஒரு வேலை இருந்தால் இன்னும் அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு… இது போன்ற பல தேவைகளை சார்ந்து தான் இருக்கின்றது. இப்படி ஜெபம் செய்வது தவறு என்று நான் கூறவில்லை, நானும் அப்படி தான் ஜெபித்துக் கொண்டு இருந்தேன். பல நேரங்களில் நாம் கேட்கும் காரியங்களில் நம்மை சிறு பிள்ளைகள் போல தான் நம்முடைய ஆண்டவர் பார்க்கின்றார்.


பல முறை நாம் கடவுளிடமிருந்து பதில்களை ஆசீர்வாதங்களாகப் பெறுகிறோம்.

சில ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை. உங்கள் ஜெபங்களுக்கு கடவுள் ஏன் பதில் அளிக்கவில்லை என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

கொலோசியர் 1:9-12 ஐ தியானிக்கும்போது, இந்த "பதிலளிக்கப்படாத ஜெபத்தை" குறித்து ஆண்டவர் என்னோடு பேசினார். இதைக் குறித்து இந்த வரையறையில் காண்போம்.


நாம் கேட்கும் காரியங்கள் எல்லாம் நம்முடைய சுயம் சார்ந்து இருப்பதால் தான் நம்முடைய ஜெபம் பதிலளிக்கப்படாதஜெபமாக இருக்கின்றது. நம் தேவைகள் எல்லாம் ஆண்டவருடைய சித்தத்திற்கு உகந்ததா என்று அறியாமல் நம் தேவைகளை மட்டும் சார்ந்து இருப்பது தான் பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.



ஆண்டவரிடம் நம்முடைய ஜெபம் எப்படி இருக்க வேண்டும்?


பவுல் கொலோசெ பட்டணத்து மக்களுக்கு எழுதுகையில், கொலோசெயர் 1: 9-12-ல், அவர்களுக்காக அவர் செய்த ஜெபங்களைக் குறித்து விளக்குகின்றார். இதிலிருந்து நாம் எப்படி ஜெபிப்பது மற்றும் ஜெபத்திற்கான பதிலை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதைக் கற்றுக் கொண்டு அதை நம்முடைய சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தலாம். இது நம்முடைய ஜெபங்கள் எல்லாம் பதில் அளிக்கப்படும் ஜெபமாக மாற உதவும்.



ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பது


'இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், ' கொலோசெயர் 1:9


முதலாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, எல்லா ஞானத்தோடும் அவருடைய சித்தத்தை அறிந்தவர்களாக இருப்பது.


அதேபோல் நம்முடைய ஆண்டவர் கற்றுத்தந்த ஜெபத்தைப் பாருங்கள்.


'அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. ' மத்தேயு 6:8-13


வசனம் இவ்வாறு துவங்குகிறது “'அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்”,


முதலாவது “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக”



1. இந்த இரண்டு இடங்களிலும் (கொலோசெயர் 1: 9 மற்றும் மத் 6: 9) - ஆண்டவரின் சித்தம் முதன்மையாக வருகிறது. இதில் ஆண்டவரின் சித்தமே நம்முடைய மனித ஆசைகளை / விருப்பத்தை விட முக்கியம் என்று வலியுறுத்தப்படுகிறது.


2. ஆண்டவரின் சித்தம் என்ன என்று அறிய, நாம் ஜெபிக்க வேண்டும். அநேக நேரங்களில் நம்முடைய சுய சித்தத்திற்கு ஏற்றவாறு நம்முடைய ஜெபங்களை செய்கின்றோம். இனிமேல், நம் ஆண்டவரின் சித்தம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக ஜெபிக்க நம்மை மாற்றிக் கொள்வோம்.


3. அவருடைய சித்தம் என்ன என்று எப்படி அறிவது ? “நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,” அப்படி என்றால் என்ன ? , இதற்கு நாம் ரோமர் 8:27 காண்போம்

'ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ' ரோமர் 8:27


4. நாம் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுக்கும் பொழுது, நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து நம் விருப்பங்கள் அவருடைய சித்தத்திற்கு உகந்ததாக இருந்தால் அதை மேலும் வளர விடுவார். இல்லாவிடில் அதை உடனே உங்கள் இருதயத்தில் இருந்து அந்த விருப்பம் செயலிழந்து போகும்படி செய்வார். இது மிக முக்கிமான ஒன்று. கொஞ்சம் கவனமாகப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.


5. நம்முடைய விருப்பங்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப்பதை விட்டு விட்டு, நம்முடைய ஜெபங்களை முதலாவது அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம். நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருக்கவேண்டும் என்று தான் இந்த உலகைப் படைத்து இருக்கிறார். நமக்கு ஒரு தேவை இருக்கும் போது அதைக் கண்டிப்பாகத் தருவார். ஒரு வேளை உங்களுக்கு ஒரு பெரிய விடை தரலாம், ஒரு உயர்பதவி தரலாம், அவர் தர நினைப்பதை யாரால் தடுக்க முடியும் ? அவர் சர்வ வல்லமை உள்ள தேவன். அவர் சொன்னால் எல்லாம் ஆகும். நீங்கள் உங்கள் தேவைகளுக்காகப் போராடாமல், அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்.


6. அநேக நேரங்களில் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்த பின், உடனடியாக எல்லாம் அறிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றோம். நம் ஆண்டவர் நம்மை ஒவ்வொரு படியாகத் தான் வழிநடத்துவார். ஆகவே காத்திருங்கள், உங்கள் மேல் அக்கறை உள்ளவர், உங்களை வழிநடத்துவார்.


கர்த்தருக்கு தகுதியான வாழ்க்கை வாழ ஜெபியுங்கள்

'சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், ' கொலோசெயர் 1:10


பவுலின் ஜெபத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டாவது காரியம், தேவனுக்கு தகுதியான வாழ்க்கை வாழ ஜெபிப்பது.

1. தேவனுக்குத் தகுதியான / பிரியமான வாழ்க்கை வாழ்கிறோமா என்று நம்முடைய ஜெபங்களில் நாம் ஆண்டவரிடத்தில் கேட்பதில்லை. நாம் மற்றவர்களைப் பார்க்கிலும், பாவமற்ற வாழ்க்கை வாழுகின்றோம் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்கின்றோம், இதனால் நாம் தேவனிடத்தில் தகுதியான / பிரியமான வாழ்க்கை வாழ்கிறோமா என்று கேளாமலிருக்கின்றோம்.


2. நாம் இந்த உலகின் எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்கத் தான் கடவுள் இந்த உலகை நமக்காகப் படைத்தார்.அதே நேரத்தில் நாம் ஒரு குற்றமற்ற புனிதமான வாழ்க்கையை வாழ்வதே, அவருடைய விருப்பம் என்பதையும் மறந்து விடாதிருங்கள்..


3. உங்களுடைய வாழ்வில் ஆண்டவருக்கு பிடித்தம் இல்லாத காரியம் என்ன என்று ஆண்டவரிடம் ஜெபியுங்கள். அவர் அதை உங்களுக்கு ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவார், அநேக நேரம் நாம் செய்துகொண்டு இருக்கும் காரியங்கள் நம் பார்வையில் மிக சரியாக இருக்கும், ஆண்டவர் நமக்கு

வெளிப்படுத்தும் போது, நாம் அதை உணர்ந்து, நம்மில்மனமாற்றம் உண்டாகும்.


4. நான் இதற்கு ஒரு சாட்சி. நான் இவ்வாறு ஜெபித்த பிறகு ஆண்டவர் எனக்குள் அநேக மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கிறார். இன்னும் பல மாற்றங்களை செய்வார். நான் அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஆண்டவர் என்னையே மாற்றும் போது உங்களையும் மாற்ற வல்லவர்.


5. “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து” பவுல் குறிப்பிடும் இந்த நற்கனிகள் குறித்து கலாத்தியர் 5:22 கூறுவதாவது,

'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். ' கலாத்தியர் 5:22


அவருடைய சக்தியினால் பலப்படுத்தும்படி ஜெபியுங்கள்


'சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 'கொலோசெயர் 1:11



மூன்றாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, பொறுமையும், நீடிய சாந்தமும். நம்முடைய ஆண்டவரை பின்பற்றும் போது நாம் அநேக பாடுகளை அனுபவிக்க வேண்டும். ஆண்டவருடைய ஆவி நம்மோடு இல்லாவிடில் நம் வாழ்க்கை திசை மாறிப் போகக்கூடும்.


1. ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நீங்கள், தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்பட ஜெபியுங்கள். சாத்தான் நமக்கு உபத்திரவங்களைக் கொண்டுவர பல திட்டங்கள் யூகிப்பான். தேவனுடைய ஆவி ஒன்று தான் நம்மைக் காத்து வழிநடத்தக்கூடும்.


2. அநேக நேரங்களில் நம்முடைய சுயத்திற்கும், ஆவிக்கும் இடையில் போராட்டங்கள் இருக்கும். இந்த இரண்டு விஷயங்களும் எப்போதும் ஒன்றொக்கொன்று எதிர்மாறாக இருக்கின்றன. நீங்கள் ஆண்டவருடைய ஆவியால் வழிநடத்தப்படும்போது ஆவியின் பாதையில் அவர் உங்களை வழிநடத்துவார். நீங்கள் வேதத்தில் வாசிக்கிற படியே, ஆவியோடு நடக்கத் தீர்மானியுங்கள்.


'பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ' கலாத்தியர் 5:16-17


3. ஆவிக்குரிய வாழ்க்கையில் நடக்கும் போது நமக்கு பாடுகளும் , போராட்டங்களும் நிறைந்து காணப்படும். கடவுளின் விருப்பத்திற்கு சரணடைய நீங்கள் முடிவு செய்யும்போது, தவறு செய்து விட்டதாக அவை உங்களை நினைக்க வைக்கும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று நம்மை நம்ப வைப்பதற்காக சாத்தான் நம்மை ஏமாற்றுகிறான். ஆனால் உண்மை என்னவென்றால், போராட்டங்களின் போது தான் அவரது இருப்பை நாம் அதிகமாக உணர முடியும். எனவே வலி மற்றும் போராட்டங்கள் இருப்பது கடவுள் இல்லாததைக் குறிக்காது. எனவே, உங்கள் வாழ்க்கையில், கடவுளின் திட்டத்தைக் குறித்த உங்களது பார்வையை விலக்காதிருங்கள் . சோதனைகள் மற்றும்பாடுகள் மூலம் அவர் உங்களை ஒழுங்குபடுத்துகையில் கவனம் செலுத்துங்கள்.


4. போராட்டம் வரும் போது ஜெபியுங்கள். ஆண்டவர் உங்களுக்கு அதை தாங்கும் சக்தியை தந்து, நாம் எதிர்பாராத வழியைக் காண்பிப்பார். பவுலுடைய வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.


5. கர்த்தர் உங்கள் பாடுகளை / சூழ்நிலைகளைக் காட்டிலும் பெரியவர், இதை என்றும் நினைவில் கொள்ளுங்கள் . அவர் சாத்தானின் சாவை ஜெயம் கொண்ட தேவன், கண்டிப்பாக நம்முடைய பாடுகளை / சூழ்நிலைகளை மாற்றக் கூடிய சக்தி அவரிடம் உண்டு, இதை விசுவாசியுங்கள்.


ஜெபத்தில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்


'ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். 'கொலோசெயர் 1:12-13



பவுலிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நான்காவது காரியம் , நம்முடைய ஜெபங்களில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதாகும்.


1. அநேக நேரம், நம்முடைய அறிவுக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறோம். இந்த வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.


2. ஆண்டவருக்கு எல்லா நேரமும் நன்றி கூறவேண்டும். நாம் அறிந்தும் / அறியாத பல தீங்குகளில் இருந்து அவர் நம்மை விலக்கிப் பாதுகாக்கிறார். அதற்காய் நாம் அவருக்கு நன்றி கூறவேண்டும்.


3. நமக்கு பதில் கிடைக்காத ஜெபத்திற்காகவும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு வேளை நாம் கேட்கும் காரியங்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியதின் நிமித்தம் அவர் பதில் அளிக்காமல் இருக்கக்கூடும். அதற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள்.


4. ஒவ்வொரு மாதமும் ஆண்டவர் உங்களுக்கு செய்த காரியத்திற்காக அந்த மாதம் கடைசி நாளில் நன்றி செலுத்துங்கள். இதை அனுதினமும் குறித்து வைத்து மாதத்தின் கடைசி நாள் அதை வைத்து ஜெபித்துப் பாருங்கள். நீங்கள் வியக்கும் அளவுக்கு உங்கள் லிஸ்ட் நன்றி சொல்லும் பெரிய ஒரு லிஸ்ட் ஆக இருக்கும், ஆண்டவர் நம் நன்றிகளை மிகவும் கனம் பண்ணுவார். இதன் மூலம் உங்கள் ஆசீர்வாதம் மேலும் பெருகும்.


5. நாம் தாவீது ராஜாவைப் பார்த்து நன்றி சொல்லும் காரியங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.

'அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. ' சங்கீதம் 106:1


'ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.'சங்கீதம் 50:23


ஆண்டவர் உங்கள் தேவைகளை அறிவார்


நாம் ஆண்டவரின் பிள்ளைகள், எனவே நம் தேவை என்ன என்று அவருக்குத் தெரியும். நமக்குத் தேவைகள் இருக்கும் போது அவர் ஒருபோதும் நம்மைத் தவிக்க. விட மாட்டார்.



நம்மில் அநேகர் பெற்றோர்களாக இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் கூறும் முன்பே நம்மால் புரிந்து கொள்ள முடியும். அது போல தான் நம் தகப்பனாகிய ஏசு நம்மைப் பார்த்துக் கொள்வார். உங்களுக்கு ஒரு பெரிய வீடு தேவை என்று கர்த்தர் எண்ணினால் அதை கண்டிப்பாகத் தருவார்.


சாத்தான் பல நேரம் நம்மைக் குழப்பிப் பொய் சொல்லுவான். ஆண்டவரை சார்ந்து இருங்கள். கண்டிப்பாக அவர் உங்கள் தேவைகளை சந்திப்பார், வேதம் கூறுகிறது,


'ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? ' மத்தேயு 6:26


ஆகவே, பவுல் கற்றுக்கொடுத்ததின் படியே, உங்கள் ஜெபங்களை திறம்பட பிரார்த்தனை செய்து, உங்கள் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைக்கும்படி செய்யுங்கள்.

சுருக்கம்


இதை நம் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய ஜெப முறைகளை மாற்றுவோம்

  1. ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பது

  2. கர்த்தருக்கு தகுதியான வாழ்க்கை வாழ ஜெபிப்பது

  3. அவருடைய சக்தியினால் பலப்படுத்தும்படி ஜெபிப்பது

  4. ஜெபத்தில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது

  5. ஆண்டவர் உங்கள் தேவைகளை அறிவார்

உங்கள் ஜெபங்கள் வெறும் "உங்கள் விண்ணப்ப லிஸ்ட் " ஜெபமாக மட்டும் இராமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.


 



Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page