top of page

பகைமையை மேற்கொள்தல்

Kirupakaran

நாம் இந்த உலகில் வாழும்போது, அடிக்கடி பகையை எதிர்கொள்கிறோம். சிலருக்கு, இந்தப் பகை மிகவும் ஆழமாகப் பரவி, தலைமுறைகளையும் தாண்டி, குடும்பங்களைப் பிரிக்கிறது, சில பகை தேசங்களைப் பிரிக்கிறது. வணிக உலகில், போட்டி பொதுவானது,பலர் மற்றவர்களை போட்டியாளர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ பார்க்கிறார்கள்.

 

பழைய ஏற்பாட்டில், காயீன் மற்றும் ஆபேல், யாக்கோபு மற்றும் ஏசாவின் கதைகளில் பகைமையின் உதாரணங்களைக் காண்கிறோம். இந்த மோதல்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்கி காலப்போக்கில் வளர்கின்றன. ஆனால், சற்றே பின்வாங்கி நாம் கேட்கலாம்: காயீன், ஆபேல் அல்லது யாக்கோபு, ஏசா என எல்லா ஜனங்களையும் தேவன் படைத்திருக்கும் போது ஏன் போட்டி இருக்க வேண்டும்? தேவன் நம் ஒவ்வொருவரையும் தம்முடைய சாயலில் படைத்தார், ஆனாலும் சாத்தானின் அழிவுகரமான செல்வாக்கின் காரணமாக பகை உண்டாகிறது. தேவன் படைத்ததை அழிக்க முயல்பவனாக, சாத்தான் பிரிவினையையும் சண்டையையும் வளர்க்கிறான். தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது, திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10

 

போட்டி மற்றும் பகையின் செயல்கள் தேவனிடமிருந்து வந்தவை அல்ல, மாறாக சாத்தானிடமிருந்து வந்தவை. அவன் நம்மை மாம்சத்தின் இச்சைகளுக்கு ஒப்புக்கொடுக்கத் தூண்டி (கலாத்தியர் 5:19-21) நம்மை பாவம் செய்ய வைக்கிறான். இதன் விளைவாக நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பொறாமையின் கண்ணிகளிலும் (1 கொரிந்தியர் 3:3) இந்தப் பகைமை என்ற வலையிலும் விழுகிறோம். இவற்றில் சில குடும்பத்திலும் சில வியாபாரத்திலும் தொடங்குகின்றன, சில தலைமுறை தலைமுறையாகவும் செல்கிறது.

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:19-21

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 1 கொரிந்தியர் 3:3

 

பகைமை குறித்து சவுல் மற்றும் தாவீதின் வாழ்க்கையிலிருந்து கற்றல்


சவுலுக்கும் தாவீதுக்கும் இடையிலான பகையைப் பற்றி ஆழமாகப் பார்ப்பதற்கு முன், அவர்களின் பின்னணியைப் புரிந்துகொள்வது முக்கியம்.

 

சவுல்

  • இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுல், சாமுவேலால் அபிஷேகம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, தீர்க்கதரிசனமும் உரைத்தார். 1 சாமுவேல் 10:1,6,9-10.

  • ஆனால், அமலேக்கியர்களின் காரியத்தில் தேவனுடைய கட்டளைக்கு அவர் கீழ்ப்படியாததால் தேவன் அவரை ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளினார். 1 சாமுவேல் 15:26.

  • அபிஷேகம் அவரை விட்டு நீங்கியவுடன், சவுல் ஒரு பொல்லாத ஆவியால் துன்புறுத்தப்பட்டார் - 1 சாமுவேல் 16:14.

 

தாவீது

  • தேவனுக்காக இருதயம் கொண்டிருந்த, மேய்ப்பனாகிய தாவீதை சாமுவேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார். 1 சாமுவேல் 16:13.

  • தாவீது தேவனின் இருதயத்திற்கேற்ற மனுஷன் என்று விவரிக்கப்பட்டார் (1 சாமுவேல் 13:14). சவுலின் நிராகரிப்புக்குப் பிறகு இஸ்ரவேலை வழிநடத்த தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

பகையின் வேர்கள்


பொல்லாத ஆவியும், பொறாமையும் தான் பகையின் வேர்களாய் இருக்கின்றன. முன்பே யோவான் 10:10 இல் வாசித்தபடி, பிசாசானவன் தேவனால் படைக்கப்பட்ட அனைத்தையும் திருடவும் அழிக்கவுமே வருகிறான். அவன் இங்கே தாவீது மற்றும் சவுலின் வாழ்க்கையிலும் அதையே செய்தான், அது பகையின் வேராக இருந்தது,

 

1. பொறாமை

சவுலுக்கு தாவீதிடம் இருந்த பகைமையானது பெருமை மற்றும் பொறாமையிலிருந்து உருவானது. அதிலும் முக்கியமாக, தாவீது கோலியாத்தை தோற்கடித்த பிறகு உண்டானது. சரியான கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால், சவுல் ஒரு ராஜா, தாவீது ஒரு தாழ்மையான மேய்ப்பன். சவுல் பதவியில் இருந்தபோதிலும், தாவீதின் அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறார், அதிலும் குறிப்பாக 1 சாமுவேல்18 இல், ஜனங்கள் சவுலை விட மேலாக தாவீதைக் குறித்துப் புகழும் போது மிகுந்த எரிச்சலடைந்தார்.

  • தாவீதின் வெற்றி : 1 சாமுவேல் 17 இல், தாழ்மையான மேய்ப்பனான தாவீது, இராட்சத கோலியாத்தை முறியடித்து, இஸ்ரவேலுக்கு வெற்றியை அளித்தார் என்று வாசிக்கிறோம்.

  • சவுலின் கோபம் : 1 சாமுவேல் 18:6-9 இல், ஜனங்கள் சவுலைக் காட்டிலும் தாவீதையே அதிகமாகப் புகழ்ந்ததைக் காணலாம், இதனால் சவுல் கோபமடைந்து தாவீது தனது சிங்காசனத்தை எடுத்துக்கொள்வார் என்று பயப்படுகிறார்.

    தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். 1 சாமுவேல் 18:6-9

பொறாமைக்கான காரணம்

  • சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். 1 சாமுவேல் 18:7 - ஜனங்கள் தாவீதின் வெற்றியை இந்த வார்த்தைகளினால் பாடிக் கொண்டாடினர். இது தாவீதின் மீது சவுலுக்குப் பொறாமையைக் கொண்டு வந்தது.

  • தேவனே தாவீதுக்கு கோலியாத் மீதான ஜெயத்தைக் கொடுத்தவர் என்பதை சவுல் உணரத் தவறிவிட்டார். தேவனின் வல்லமையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சவுல் தன்னை தாவீதோடு ஒப்பிட்டு பொறாமையால் ஆட்கொள்ளப்படுகிறார். யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 1 சாமுவேல் 17:47

  • சவுலின் பொறாமை தாவீதின் வெற்றிக்குப் பின்னால் இருந்த தெய்வீக வல்லமையைக் காணாதபடி அவனைக் குருடாக்கியது. இது சவுலுக்கு தாவீதின் மீது இருந்த கசப்பை ஆழமாக்கியது. மேலும், சவுலின் மீது இருந்த பொல்லாத ஆவி இரண்டு பக்க ஜனங்களுக்கும் இடையே பகைமையை தூண்டிவிடும்படி அநேக காரியங்களை செய்தது.  

சுய சிந்தனை

  • ஒருவர் வெற்றி பெறும்போது, கண்களுக்குத் தெரியாத தேவனின் கரம் அவர்  பின்னால் இருப்பதை நாம் பார்ப்பதில்லை, மாறாக அந்த நபரையேப் பார்க்கிறோம்

  • பொறாமை என்பது சாத்தானின் குணம், அவன் அதை நம் உள்ளத்தில் ஒரு தீய விதையாக பிடித்துக் கொள்ளத் தூண்டுகிறான்.

 

2. பொல்லாத ஆவி

ஆகாகு ராஜாவையும், அமலேக்கியரின் கால்நடைகளில் சிறந்ததையும் சவுல் விட்டுவைத்ததன் மூலம் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் (1 சாமுவேல் 15:9), தேவன் சவுலிடமிருந்து தம்முடைய ஆவியை விலக்கி, ஒரு பொல்லாத ஆவி அவரை வாதிக்க அனுமதிக்கிறார். கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருந்தது. 1 சாமுவேல்16:14

 

அந்தப் பொல்லாத ஆவி சவுலை கலங்கப் பண்ணியது, இன்னும் அவர் ஜனங்களுடைய ராஜாவாகத் தான் இருந்தார். பரிசுத்த ஆவியானவர் அவரை விட்டு விலகிவிட்டார் என்பதையும், தேவன் இனியும் சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அங்கீகரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அறியவில்லை.

 

சவுலிடம் இருந்த இந்த பொல்லாத ஆவியின் விளைவாக அவர் பல்வேறு செயல்களைச் செய்தார்.

  • சவுலின் வேதனையைத் தணிக்க, தாவீது சுரமண்டலத்தை வாசித்தார்; (இது ஒரு இசைக்கருவி, இதை இன்றைய கிடாருக்கு ஒப்பிடலாம்) இதை 1 சாமுவேல் 16:16-18 இல் வாசிக்கிறோம். அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்;அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான். 1 சாமுவேல் 16:23

  • சவுல் பொல்லாத ஆவியோடு தீர்க்கதரிசனம் உரைக்கிறார் (1 சாமுவேல் 18:10). அவர் தேவனின் அபிஷேகம் பெற்ற போது தீர்க்கதரிசிகளுக்கு தீர்க்கதரிசனம் கூறிய அதே மனிதர் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (1 சாமுவேல் 10:9-10). மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. 1 சாமுவேல் 18:10

  • சவுலிடம் இருந்த பொல்லாத ஆவி கோபமுண்டாக்கி தாவீதை அழிக்கத்  தூண்டியது - இதை யோவான் 10:10 இல் தேவன் கூறிய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள், "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்வருகிறான்".

சவுலின் ஆத்திரம் தாவீதைக் கொல்ல பல முயற்சிகளுக்கு வழிவகுத்தது என்று வாசிக்கிறோம்.

  • ஈட்டி முயற்சிகள் - சவுல் இரண்டு முறை தாவீதை நோக்கி ஈட்டியை எறிந்தார். அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான். 1 சாமுவேல் 18:1

  • பெலிஸ்தியர் சதித்திட்டம் - சவுல் தன் எதிரிகளான பெலிஸ்தியர் மூலம் தாவீதைக் கொல்ல சதி செய்தார் (1 சாமுவேல் 18:17-21). சத்துரு (பொல்லாத ஆவி) தனது சொந்த ராஜ்யத்தையே (பெலிஸ்தியர்) இந்த செயலை செய்ய பயன்படுத்துகிறது.

  • யோனத்தானின் காட்டிக்கொடுப்பு - சவுல் தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு தன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையியிட்டார். தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; 1 சாமுவேல் 19:1-

  • பல ஈட்டி முயற்சிகள் - சவுல் தாவீதை சுவரோடே சேர்த்து உருவக் குத்திப் போட முயற்சித்தார் (1 சாமுவேல் 19:10).

    • சவுல் மீண்டும் ஈட்டியால் கொல்ல முயற்சித்தார் - அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.1 சாமுவேல் 19:10

    • சவுல் தன் ஆட்களிடம் தாவீதைக் காவல்பண்ணி, கொன்று போடும்படிக்கு கேட்கிறார் (முதல் முறை), சவுலின் மகளாகிய மீகாள் தாவீதைக் காப்பாற்றினாள் - தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி, 1 சாமுவேல் 19:11

    • சவுல் தாவீதைப் பிடிக்கவும் கொல்லவும் தன் ஆட்களை அனுப்பினார் (2 ஆம் முறை) - 1 சாமுவேல் 19:19-20

    • சவுல் தாவீதைக் கொல்லுவதற்கு தன் ஆட்களை அனுப்பினார் (3 ஆம் முறை) - இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 1 சாமுவேல் 19:19-21

  • சவுலின் பின்தொடர்தல் - தாவீதைப் பிடிக்கவும் கொல்லவும் சவுல் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பினார், ஆனால் ஒவ்வொரு முறையும் தேவன் தலையியிட்டார் – (1 சாமுவேல் 19:19-22, 23:15, 26:1-2).

    • அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. 1 சாமுவேல் 19:22

    • சவுல் சீப் வனாந்தரத்தில் தாவீதைத் தேடினார். தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 1 சாமுவேல் 23:15

    • சவுல் மீண்டும் சீப் வனாந்தரத்தில் நேருக்கு நேர் சந்தித்தார் - 1 சாமுவேல் 26:1-2


தெய்வீக பாதுகாப்பு : சவுல் விடாமல் துரத்தினாலும், தேவன் தாவீதை சவுலிடமிருந்து மட்டுமல்லாமல், அவருடைய எல்லா மனிதர்களின் கைகளிலிருந்தும் பாதுகாத்தார். தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 1 சாமுவேல்23:14


சுய சிந்தனை

  • ஒருவர் தொடர்ந்து ஆத்திரத்துடன் நடந்து கொண்டால், அது பெரும்பாலும் சாத்தானிடமிருந்து வந்ததாக இருக்கலாம். இந்த நடத்தையிலிருந்து நம்மை இரட்சிப்பதாக தேவன் வாக்கு பண்ணியிருக்கிறார், அதுதான் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமை (பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பார்) - அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21

 

3. கசப்பான ஆவி - சவுலின் செயல்கள் ஜனங்களிடையே பிரிவினையையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தின. கசப்பான ஆவி மற்றவர்களை வீழ்த்தி, குழு மனப்பான்மைக்கு வழிநடத்தும் அளவுக்கு தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது, அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான். 2 சாமுவேல் 2:26

சுய சிந்தனை

  • நம்மிடம் கசப்பான ஆவி இருந்தால், அது ஒருவர் மீது நமக்கு இருக்கும் கோபத்தைத் தூண்டுகிறது, பொறாமை மேலும் கசப்பைத் தூண்டுகிறது. வார்த்தை தெளிவாக உள்ளது, மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; கலாத்தியர் 5:19-21

 

தாவீது பகையை எவ்வாறு எதிர்கொண்டார்?

 

சவுல் மீதான இரக்கம்

  • தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவாக சவுலை தாவீது மதித்ததால் அவர் சவுலுக்கு இரக்கம் காட்டினார். சவுல் எதிரியாக இருந்தபோதும் தாவீது அவருக்கு தீங்கு செய்ய மறுத்துவிட்டார். 1 சாமுவேல் 26:8-9 இல், சவுல் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய நிலையில் இருந்தபோது, தாவீது இவ்வாறு கூறினார், தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த் தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான். 1 சாமுவேல் 26:9

சவுல் மீதான மரியாதை

சவுலின் மரணத்திற்குப் பிறகும்கூட தாவீது அவரை மரியாதையுடன் நடத்தினார்.

  • அன்பும் துக்கமும் : அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள். 2 சாமுவேல் 1:11-12

  • சவுலின் அடக்கத்திற்கு மரியாதை : சவுலை அடக்கம் செய்தவர்களுக்கு தாவீது நன்றி தெரிவித்தார். கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன். 2 சாமுவேல் 2:6

தேவனுடைய வழிநடத்துதலை நாடுதல்

  • எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்பு தாவீது எப்போதும் தேவனுடைய வழிநடத்துதலைத் தேடினார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் தேவனின் சித்தத்திற்கு ஏற்ப இருந்தது. அதை நாம் 2 சாமுவேல் 2:1 இல் வாசிக்கிறோம், பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.

  • தாவீது ஒரு யுத்த வீரராக இருந்தார், ஆனால் சண்டையிடுவதற்கு தனது திறமைகளை சார்ந்திருக்கவில்லை. மேய்ப்பனாக இருந்த நாட்களிலிருந்து அவர் போராடிய அனைத்து யுத்தங்கள் வரையிலும் வெற்றிக்கு வழிநடத்த தேவனையே சார்ந்திருந்தார். தேவனிடம் அவர் எப்போதும் கேட்பது எவ்விடத்திற்குப் போகலாம் என்பது தான்.

தாவீதின் உணர்ச்சிவசப்படும் நிலை

  • தாவீது உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டவர் அல்ல. அவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர், அவர் தனது கடினமான காலங்களில் எப்போதும் அழுதார். எனவே அழும் உணர்ச்சியை பலவீனத்தின் அறிகுறியாகக் கருதாதீர்கள்.

  • 1 சாமுவேல் 30:4 இல், இழப்பை எதிர்கொண்டபோது, தாவீதும் அவரது ஆட்களும் இனி அழ முடியாமல் போகும் மட்டும் சத்தமாக அழுதார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். 1 சாமுவேல் 30:4

சகிப்புத்தன்மையும் சங்கீதமும்

  • பல போராட்டங்களின் மத்தியிலும், தாவீது சவுலுடனான தனது போர்களைப் பற்றி சிந்தித்து சங்கீதங்களை எழுதினார். இந்தச் சோதனைகளின் மூலம், தேவன் தன்னை எவ்வாறு நீதிமானாக வடிவமைத்தார் என்பதை தாவீது தியானித்ததாக சங்கீதம் 18 கோடிட்டுக் காட்டுகிறது.

 

பகைமை / கோபம் / கசப்பான நடத்தைகளை மேற்கொள்ள மீண்டும் சிந்தியுங்கள் 


தாவீதையும் சவுலையும் பற்றிய இந்தப் பாடங்கள் அருமையாக இருக்கின்றன. ஆனால், நான் வேறொரு காலத்தில் வாழ்கிறேன், என்னைச் சுற்றியுள்ள உலகம் மாறிவிட்டது, பாவம் மிகவும் பரவலாக உள்ளது. நான் போட்டியிடவில்லை என்றால், என் தொழில் தோல்வியடையும். இதை நான் தொடரவில்லை என்றால், எனக்குத் தேவையானதைப் பெறுவதற்கான போராட்டத்தில் நான் தோற்றுவிடுவேன் என்று நாம் நினைக்கலாம்.

 

தோற்றுவிடுவோம் என்ற எண்ணம் எதிரியிடமிருந்து வருகிறது. தேவன் கோபத்திலோ பழிவாங்கும் எண்ணத்திலோ செயல்படுவதில்லை. தேவன் கோபத்தில் நம்மைப் பின்தொடர்ந்திருந்தால், அவர் மீதான நம்முடைய மனப்பான்மைக்கும் நடத்தைக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருப்போம். ஆனால் அவருடைய இரக்கமும் தயவும் நம்மை ஒவ்வொரு நாளும் வழிநடத்துகின்றன. இயேசு கிறிஸ்து நமக்கு பரிந்துரையாளரும் சமரசம் செய்பவருமாயிருக்கிறார். நாம் அவருக்கு சத்துருக்களாக இருந்தபோது அவர் நம்மை தேவனுடன் சமரசம் செய்ய வந்தார் (அவரைப் பிரியப்படுத்தாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம், உலகப்பிரகாரமானவர்களாக இருந்தோம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தோம்). சிலுவையின் கிரியையின் மூலம், நாம் சமாதானம் செய்பவர்களாகவும், ஒருங்கிணைப்பவர்களாகவும் மாறலாம். நம் உள்ளங்களில் உள்ள பகைமையை மேற்கொண்டு கிறிஸ்துவின் வல்லமையால் எதிரியை வெல்லலாம்.

  • முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். கொலோசெயர் 1:21-22

  • நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:10

 

நாம் ஒருவருக்கொருவர் சமாதானத்துடனும் இணக்கத்துடனும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். "ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்" என்று ரோமர் 12:16 கூறுகிறது, இது கேள்வியை எழுப்புகிறது: நான் அமைதியாக இருக்க வேண்டுமா?, மற்றவர்கள் எனக்கு செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ஆம், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் வலியையும், உணர்வுகளையும், நீங்கள் சுமக்கும் கோபத்தையும் ஜெபத்தில் தேவனிடம் ஒப்படைப்பதுதான். 1 பேதுரு 5:7 இல் வேதாகமம் நமக்கு சொல்லுகிறது, "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்".

 

கலாத்தியர் 5:19-21 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி போட்டி, பொறாமை, கோபம் மற்றும் உங்கள் எல்லா உணர்ச்சிகள் மற்றும் பாவங்களை நீங்கள் ஒப்புக்கொடுக்கும் போது, தேவன் உங்களுக்காக தம்முடைய யுத்தமாக போராடுவார், உங்கள் யுத்தமாக அல்ல, இதை உங்களிடமிருந்து அவருக்கு மாற்றுகிறீர்கள். வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது - நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. 2 நாளாகமம் 20:15 

 

தேவன் நமக்காக யுத்தம் செய்யும்போது, நாம் அமைதியாக இருக்க அழைக்கப்படுகிறோம். நமது மாம்சம் நம்மை செயல்பட தூண்டலாம், ஆனால் நாம் அமைதியாக இருக்க வேண்டும். (நாம் அவரைச் சார்ந்து அவருடன் நடக்கும்போது மட்டுமே இது வரும்). கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். யாத்திராகமம் 14:14

 

தேவன் நமக்காக யுத்தம் பண்ணும் போது, நம் எதிரிகள் தோற்று ஓடிப்போவார்கள், ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்!! அல்லேலூயா. உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். உபாகமம் 28:7

 

உங்கள் எல்லா உணர்ச்சிகளையும் அவை எவ்வளவு வேதனையானதாகவோ,  ஆழமாக வேரூன்றியதாகவோ அல்லது அவை தலைமுறை தலைமுறையாக பரவியிருந்தாலும் கூட எல்லாவற்றையும் தேவனிடம் ஜெபித்து ஒப்படையுங்கள்.  இது கடினமாகத் தோன்றலாம், ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவருக்கு மாற்றுவதற்கு எதுவும் கடினம் கிடையாது. அவர் உங்கள் யுத்தங்களை தம்முடையதாக போராட தயாராக இருக்கிறார். அவரை விசுவாசித்து அவரிடம் சரணடையுங்கள்.

 

எனது 200 வது வலைப்பதிவை எழுத அனுமதித்த தேவனின் இரக்கத்திற்காகவும்  ஞானத்திற்காகவும் நன்றியோடு துதிக்கிறேன். இதைச் சாத்தியமாக்கிய என் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும், கனமும், துதியும் உரித்தாகுக.

1 comentario

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
Philip C
02 feb
Obtuvo 5 de 5 estrellas.

Amen

Me gusta

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page