பாரத்தை நீக்கும் ஜெபத்தின் ஆற்றல்
- Kirupakaran
- Feb 9
- 5 min read

நமக்கோ, நமது நெருங்கிய குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதாவது நடந்தால், அது நம்மை ஆழமாக தொந்தரவு செய்து, நம் மனதை ஆக்கிரமிக்கும் கவலையையும் ஒரு பெரிய பாரத்தையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், அதே பிரச்சினை மற்றவர்களைப் பாதிக்கும் போது, நாம் பெரும்பாலும் ஆழ்ந்த கவலையையோ பாரத்தையோ உணருவதில்லை. நாம் ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னாலும்,நமக்கோ நம் அன்புக்குரியவர்களுக்கோ காட்டும் அதே அளவிலான அக்கறையை நாம் காட்டுவதில்லை.
நெகேமியா புத்தகத்தில், அவர் மற்றவர்களின் துயரங்களுக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பதில் மதிப்புமிக்க பாடங்களைக் காண்கிறோம். சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும் அவர்களுடைய கடினமான வாழ்க்கை நிலைமைகளையும் பற்றி நெகேமியா அறிந்தபோது, அவர்களுடைய நிலைமையை நுட்பமாக புரிந்துகொள்ள முயன்றார். தம்முடைய சகோதரர்களில் ஒருவரிடம் அவர்களுடைய நிலையையும் எருசலேமின் நிலையையும் பற்றி விசாரித்து, உண்மையான அக்கறையையும் செயல்படுவதற்கான உள்ளத்தையும் வெளிப்படுத்தினார்.
நெகேமியாவின் கேள்விகள்
என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். நெகேமியா 1:2
அவர் யூதாவிலிருந்து வந்த மனுஷரிடத்தில் கேள்வி கேட்கிறார் - அடிமைத்தனத்தின் கீழ், (யூத) ஜனங்கள் எவ்வாறு தப்பிப்பிழைத்தார்கள், பாபிலோன் ராஜ்யத்தின் அடிமைத்தனத்தில் எருசலேம் எவ்வாறு ஆளப்படுகிறது? அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். நெகேமியா 1:3
மீந்திருக்கிறவர்கள் மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள் - பல அவமானகரமான வழிகளில் நடத்தப்படுகிறார்கள்.
எருசலேமின் மதில்கள் உடைக்கப்பட்டு, அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
இந்த நிலைமையை மணிப்பூரின் தற்போதைய நிலைக்கு ஒப்பிடலாம், அங்கு பல வீடுகள் எரிக்கப்படுகின்றன, தேவாலயங்கள் அழிக்கப்படுகின்றன, மக்கள் மிகுந்த கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
நெகேமியா எப்படி பதிலளித்தார்?
இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: நெகேமியா 1:4
இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், நெகேமியா கோபத்தோடும் மோதல் போக்கோடும் எதிர்வினையாற்றவில்லை, மாறாக தன் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தினார். சிறைபிடிக்கப்பட்ட தனது சகோதர சகோதரிகளின் துன்பங்களை நினைத்து துக்கப்பட்டார்.
இந்த நிலையைக் கேட்டு துக்க நிலைக்குச் சென்று, சோகத்தில் அமர்ந்து அழுதார்.
அவரது துக்கம் அவரை உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் தேவனைத் தேட வழிவகுத்தது, மனித தீர்வுகளை நம்புவதை விட தனது உணர்ச்சிகளை தேவனிடம் ஊற்றினார்.
சில நாளாய் – இது, அவர் பல நாட்கள் உபவாசித்து, மிகுந்த வைராக்கியத்துடன் தேவனைத் தேடி ஜெபித்தார் என்பதைக் குறிக்கிறது.
கற்க வேண்டிய பாடங்கள்
நமது தேசத்தில் நடக்கும் கொடுமைகளுக்காக. நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோமா?
இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காக அழுகிறோமா?
பாவங்களால், அடிமைத்தனத்தில் சிக்கி இரட்சிப்பை இழந்து தவிக்கும் நம் அண்டை வீட்டாரைப் பற்றி கவலைப்படுகிறோமா?
நம் பிள்ளைகள் சந்திக்கும், பரவலான பாவங்களுக்காக அழுகிறோமா?
அழாமல் நம்மால் ஆத்துமாக்களை வெல்ல முடியாது.
அவர்களுக்காக துக்கத்தோடு ஜெபிக்க இந்த வகையான பாரத்தை கொடுக்கும்படி தேவனிடம் கேளுங்கள். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4
பரிந்துரைக்கும் ஜெபம்
பாடம் 1: தேவனைத் துதித்துத் தொழுதுகொள்ளல்
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நெகேமியா 1: 5
நெகேமியா தனது ஜெபங்களுக்கு சர்வவல்லவரின் கவனத்தை ஈர்க்கும்படி அவரைத் துதித்தார்.
நெகேமியா தேவனுடைய மகத்தான அற்புதமான குணாதிசயத்திற்காக அவரைத் துதித்தார்.
நெகேமியா, தேவன் தன் மேல் வைத்திருக்கிற அன்புக்காக அவரைத் துதித்தார்.
நெகேமியா தேவன் உண்மையுள்ளவராக இருப்பதற்காக அவரைத் துதித்தார்.
கற்க வேண்டிய பாடங்கள்
நாம் ஒருபோதும் தேவனை போதுமான அளவு துதிப்பதில்லை, பல சமயங்களில் நமக்கு என்ன வேண்டும் என்று நேரடியாக ஜெபிக்க ஆரம்பிக்கிறோம். சலவைப் பட்டியல் போன்று நாம் கூறும் விண்ணப்பங்களைக் கேட்க, அவர் காத்திருக்கிறார் என்று கருதுகிறோம்.
அவர் சர்வவல்லமையுள்ள கர்த்தர், நாம் அவரை பயபக்தியுடனும் பிரமிப்புடனும் அணுகி அவரைத் துதிக்க வேண்டும், நமது ஜெபங்களை துதியுடன் ஜெபிக்கும்போது எதிரிகளின் கதவுகள் உடைக்கப்படுகின்றன.
பாடம் 2: தேவனின் கவனத்திற்காக அறிக்கை செய்து மன்றாடுதல்
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நெகேமியா 1:6
நெகேமியா தேவனின் கவனத்தை ஈர்க்கும்படி தாழ்மையான கூக்குரலுடன் மன்றாடுகிறார் - அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக.
நெகேமியா இஸ்ரவேல் ஜனங்களுக்காக இரவும் பகலும் தேவனிடம் மன்றாடினார் - உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி.
சிறையிருப்பில் உள்ள ஜனங்களுக்காக, தேவனுக்கு முன்பாக பாவங்களை அறிக்கையிட்டார் - நானும் என் தகப்பனுடைய குடும்பத்தார் உட்பட இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் யாவரும் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன்.
நெகேமியா பாவங்களை அறிக்கையிட்டார் - நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நெகேமியா 1:7
நெகேமியா பாவங்களை பொதுவாக கூறாமல் குறிப்பிட்டுக் கூறி அறிக்கையிட்டார்.
அவர்கள் செய்த பொல்லாத செயல்களை ஒப்புக்கொண்டார்.
பொல்லாத காரியங்கள் இருதயத்திலிருந்து புறப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்றின் உட்புற அம்சங்களை பெரும்பாலும் மனிதக் கண்களால் காண முடியாது.
மோசே அவர்களுக்குக் கொடுத்த கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாததை அறிக்கையிட்டார்.
கற்க வேண்டிய பாடங்கள்
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், நாம் மற்றவர்களுக்காக அறிக்கையிடும்போது பாவத்திலிருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம். தேவனின் பார்வையில் நாமும் பாவிகள்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், நாம் மன்றாடும்போது மற்றவர்களுக்காகத் தேடுவதற்கு முன்பு நம்மைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
இங்கு அவர் இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் என்று கூறி, பின்பு தன்னையும் தன் பிதாவின் குடும்பமனைத்தையும் சேர்த்துக் கொள்கிறார்.
பல நேரங்களில் நாம் பாவங்களை குறிப்பாக அறிக்கையிடுவதில்லை, இங்கே நெகேமியா ஜெபிக்கும்போது அவர் தன்னையும் சேர்த்துக் கொள்கிறார். நமது பரிந்துரைக்கும் ஜெபம் பலனளிக்காததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
இரவும் பகலும் ஜெபிக்கும் பாரத்தோடு நாம் ஜெபிப்பதில்லை. நெகேமியா அதே வைராக்கியத்தோடு பல நாட்கள் ஜெபித்தது போல் அல்லாமல், சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு நிறுத்திவிடுகிறோம்.
ஆபிரகாம், சோதோம் மற்றும் கொமோராவுக்காக ஜெபித்தது போல நாமும் ஜெபிக்க வேண்டும் - ஆதியாகமம் 18:16-33
தானியேலைப் போல ஜெபிக்க வேண்டும் (தானியேல் 9). அவர் ஜனங்களுக்காக மிகுந்த பாரத்துடன் ஜெபித்தார்.
ஸ்தேவான் கல்லெறியப்பட்டபோது ஜெபித்த ஜெபமானது சவுலை பவுலாக மாற்றியது. அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். அப்போஸ்தலர் 7:59-60. அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அப்போஸ்தலர் 8:1(a)
பாடம் 3: தேவனின் கவனத்திற்காக வசனத்தைப் பயன்படுத்தி மன்றாடுதல்
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே. நெகேமியா 1:8-10
"உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து", என்று தேவன் மோசேக்கு கொடுத்த கட்டளைகளை நெகேமியா நினைவுபடுத்தி, சிறையிருப்பின் ஜனங்களுக்காக மன்றாடுகிறார்.
அவர்களை மீட்கக்கூடிய தேவனின் பலத்த கரத்தை நெகேமியா நினைவுபடுத்துகிறார் - தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
கற்க வேண்டிய பாடங்கள்
நாம் செய்யும் தவறுகள் என்னவென்றால், நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதன் அடிப்படையில் மன்றாடுகிறோம். தேவன் நமக்கு உதவும்படிக்கு, வாக்குறுதியைப் பயன்படுத்த வேதவசனத்தை மேற்கோள் காட்டுவதில்லை.
தேவனுடைய சித்தத்தோடு ஒத்துப்போகும் வேத வசனங்களையும் வாக்குத்தத்தங்களையும் நாம் பயன்படுத்தும்போது, நம்முடைய பாதைகள் தவறாக இருக்குமானால் அவர் நமக்கு செவி கொடுத்து, சரியான பாதைக்கு நம்மை வழிநடத்துவார். வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. ஏசாயா 8:20
தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க வசனத்தைத் தியானித்து அதைப் பயன்படுத்துங்கள். அவரிடமிருந்து நமக்குத் தேவையானதைப் பெறுவதற்கு வசனம் பட்டயமாகவும் மிகப்பெரிய உடைமையாகவும் இருக்கிறது. நமக்கு ஆறுதல் அளிக்கும்படி ஒவ்வொரு சூழ்நிலையிலும் வசனம் நம்மை வழிநடத்தும்.
தினசரி தியானம் இல்லாமல் வசனம் வராது, நம்மால் இந்த வசனங்களை சுதந்தரிக்கவும் முடியாது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். சங்கீதம் 1:2-3
பாடம் 4: தேவனின் கவனத்திற்காக மன்றாடுதல்
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப் பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன். நெகேமியா 1:11
தனது ஜெபத்தைக் கவனிக்க வேண்டி மன்றாடினார். "உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக;" என்று தேவனின் கவனத்தையும் அவரது செவிகளின் கவனத்தையும் நாடினார்.
அவர் தேவனின் அடியாராகத் தன்னைத் தாழ்த்தினார்.
தான் பானபாத்திரக்காரனாக இருந்ததால் ராஜாவுக்கு முன்பாக குறிப்பிட்ட காரியத்தில் ஜெயத்தைத் தர வேண்டி கேட்கிறார்.
இன்று மனுஷனுக்கு (அவரது ராஜா) முன்பாக காரியத்தைக் கைகூடிவரப் பண்ணியருளும்படி கேட்கிறார், அவர் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தார். இந்த ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார். நெகேமியா 2:2-8 இல், ஏன் துக்கமுகமாயிருக்கிறாய் என்றும் என்ன உதவி தேவை என்றும் ராஜா கேட்பதாக வாசிக்கிறோம். ராஜாவுக்குப் பானபாத்திரக்காரராக பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பவருக்கு, ராஜாவின் கவனத்தைப் பெற முடிந்தது அவருடைய ஜெபத்தின் மூலமே சாத்தியமானது. ராஜா தேசாதிபதிகளுக்கு ஆதரவு கடிதத்தையும் பாதுகாப்பான பிரயாணத்திற்கு தன் ஆட்களையும் அனுப்பி வைத்தார்.
கற்க வேண்டிய பாடங்கள்
நாம் அழைக்கும் போது தேவன் நம்மை கேட்க தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறோம், ஆம் அவர் கேட்கிறார். ஆனால் பயபக்தியும் தாழ்மையும் மட்டுமே அவரை நம்மைக் கேட்க வைக்கும், தேவனே என் ஜெபத்தைக் கேளும் என்று சொல்வதன் மூலம் அல்ல. நம் ஜெபத்தைக் கேட்பதற்கு நம்மைத் தாழ்த்தும் போது பயபக்தி வருகிறது.
தேவன் நம்முடைய ஜெபத்தைக் கவனிக்க வேண்டுமானால் நம்முடைய ஜெபத்தினால் அவரை எவ்வாறு மகிழ்விப்பது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை தன் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எப்படி அழுகிறதோ அது போல.
ஆபிரகாம் சோதோம் கொமோராவுக்காக தீவிரமாக ஜெபித்ததால், லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்ற, ஆபிரகாம் செய்த ஜெபங்களை தேவன் நினைவுகூர்ந்தார். தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார். ஆதியாகமம் 19:29
சுருக்கம் : மீண்டும் சிந்திக்க
நெகேமியா 1 ஐ சிந்தித்துப் பார்க்கும் போது, நீங்கள் எதற்காக ஜெபிக்க வேண்டும், எந்த சூழ்நிலைகள் உங்களை மிகவும் தொந்தரவு செய்கின்றன என்பதைப் பார்த்து, அதற்காக ஜெபிப்பதற்கான பாரத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி தேவனிடம் கேளுங்கள்.
அவர் உங்களை வல்லமையாகப் பயன்படுத்துவார். போராட்டங்களை எதிர்கொண்டால் தளர வேண்டாம். நீங்கள் ஜெபிக்கும்போது, எதிரி நாம் தன்னலமாக இருக்க வேண்டும், மற்றவர்களுக்காக மன்றாடக்கூடாது என்று விரும்புவான். எனவே, அவன் நம் வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்சினைகளை உருவாக்கி கவனத்தை சிதறடித்து, ஜெபத்திலிருந்து விலக்கப் பார்ப்பான். விட்டுவிடாதீர்கள், பிறருக்காக ஜெபிப்பதில் நீங்கள் ஜெயத்தை ருசித்தால், உங்கள் தேவைகள் தானாகவே சந்திக்கப்படும். ஏனென்றால் வசனம் கூறுகிறது, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33
Amen