top of page
  • Kirupakaran

பெருமையை விடுத்து தாழ்மையை தேர்ந்தெடுத்தல்



நாம் சாதித்திருப்பதைக் குறித்து ஆத்மதிருப்தியை ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மில் உள்ளன. நாம் பிறரிடம் சொல்லும்போது இது தற்புகழ்ச்சி / பெருமையாக வெளிவருகிறது. நாம் எதையாவது சாதிக்கும்போது அல்லது நம் வாழ்க்கையில் புதிய விஷயங்களைப் பெறும்போது இது நிகழ்கிறது. கல்லூரியில் 9.2 ஜிபிஏ (GPA) பெற்றால், நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறோம். ஒரு வீடு வாங்கினால் பிறர் வைத்திருப்பதை விட இது எவ்வளவு சிறந்தது என்று ஒப்பிடுகிறோம். அதேபோல், ஒரு கார் வாங்கினால் அதே வகை அல்லது அதற்கு கீழ் வகையுடன் ஒப்பிட்டு நாம் வைத்திருப்பது எவ்வளவு சிறந்தது என்று சொல்லுகிறோம்.


ஆண்டவர் ஏன் இந்த சுயதிருப்தி(ஆத்மதிருப்தி) உணர்வைக் கொடுத்தார்? இந்தப் பெருமை எங்கிருந்து வந்தது? என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.


பெருமை என்பது, நமது சாதனைகளுக்கு நம்மை நாமே பெருமைப்படுத்தவும், நமது தோல்விகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டவும் செய்கிற ஒரு மனப்பான்மையாகும். மறுபுறம், மனத்தாழ்மை என்பது நமது சாதனைகள் மற்றும் தோல்விகள் இரண்டையும் தேவனுடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் ஒரு அணுகுமுறையாகும்.


பெருமை என்பது பாவம். வேதம் பெருமையை எவ்வாறு கண்டனம் செய்கிறது என்றும் மனத்தாழ்மையை எவ்வாறு உயர்த்திப் பேசுகிறது என்பதையும் பாருங்கள்.



பெருமை

தாழ்மை

மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்”. நீதிமொழிகள் 16:5

“அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு”.நீதிமொழிகள் 11:2

“மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே”. நீதிமொழிகள் 21:4

“அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்”. நீதிமொழிகள் 16:19

“அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது”. யாக்கோபு 4:6

“தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்”.

மத்தேயு 23:12

“ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்”.1 பேதுரு 5:6

இந்த தலைப்பைப் பற்றிய ஞானம் 1 கொரிந்தியர் 4:7 இலிருந்து வந்தது.


“அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?”. 1 கொரிந்தியர் 4:7


இந்த வசனத்தில் பவுல் மூன்று கேள்விகளைக் கேட்கிறார். இதைப் படிக்கும்போது இதேக் கேள்விகளை நாமும் நம்மைக் கேட்டுக் கொள்ளலாம். இதற்கான பதில்கள் கிடைத்தால், நாம் தாழ்மை மனப்பான்மையை அடைவதோடு, நம் உள்ளத்தில் உள்ள பெருமையும் தானாகவே அகலும்.


“அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்?” 1 கொரிந்தியர் 4:7(a)

  • எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் நாம் தேவனுக்கு நன்றி / துதி செலுத்தாத போது பெருமை வருகிறது.

  • நம்மிடம் உள்ளதை விட குறைவாக வைத்திருப்பவரோடு ஒப்பிட்டு அல்லது வேறுபடுத்திப் பார்த்து நம்மை திருப்திப்படுத்திக்கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, நாம் தேர்வில் 95% மதிப்பெண்கள் எடுத்திருந்தால், உடனடியாக 95% க்கு மேல் பெற்றவர்கள் எத்தனை பேர், குறைவாக பெற்றவர்கள் எத்தனை பேர் என்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

  • பல சமயங்களில் நான் தாழ்மையுள்ளவன் என்று சொல்கிறோம். நாம் வாங்கிய 95% மதிப்பெண்களுக்கு தேவன் அருளிய ஞானமே ஆதாரம் என்பதை நாம் அறியத் தவறும்போது பெருமை வருகிறது. இதை நம் இருதயத்திலிருந்து உணரும் கணத்தில் நாம் தாழ்மையுடன் இருப்போம், நம் சாதனையைப் பற்றி தற்பெருமை அடிக்க மாட்டோம். ஏனெனில் இதை செய்தது நாம் அல்ல, நம்மில் இருக்கும் தேவனே என்று உணர்ந்துள்ளோம்.

  • நாம் எதைச் சாதிக்கிறோமோ, அதற்கு முதலில் தேவனை கனம் பண்ண வேண்டும் என்ற மனப்பான்மை நம்மிடம் இருந்தால், நம் வாழ்க்கை சூழ்நிலையில் பெருமை ஒருபோதும் வராது.

  • தேவனே நம்மைப் படைத்தார். நம்மிடம் உள்ள திறமைகளைத் தருபவர் அவரே, நமக்கு இருக்கும் குடும்பத்தைத் தந்தவர் அவர் தான், நம்மிடம் உள்ள சொத்துக்களைத் தந்தவர் அவர் தான், இவை எல்லாம் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • நம் வாழ்வில் எதையெல்லாம் பெரிதாக மதிக்கிறோமோ அவை நம் சுயத்தினாலேயே வந்தது என்ற தவறான முடிவுக்கு வருகிறோம்.

  • உங்கள் தோற்றம் எப்படி இருக்கிறது?

    • ஒருவேளை நாம் நம் தோற்றத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளலாம்.

    • நாம் உடற்பயிற்சி செய்து, அனைத்து சரியான உணவுகளையும் சாப்பிடலாம், ஆனால் அது முக்கியம் அல்ல.

  • நம் தோற்றத்தை மேம்படுத்துவது அல்லது புறக்கணிப்பது சாத்தியம் தான் என்றாலும், நாம் பிறப்பதற்கு முன்பே நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் நம் தாயின் வயிற்றில் உருவானது என்பதை தேவனுடைய வார்த்தை நமக்கு நினைவூட்டுகிறது. “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்”. சங்கீதம் 139:13

  • உங்கள் திறமைகள் எப்படி இருக்கின்றன?

  • · எனக்குக் கிடைத்திருக்கும் வெகுமதி பல வருட பயிற்சியின் விளைவு என்று நீங்கள் கூறலாம். ஆம், தேவன் நமக்குக் கொடுத்த திறமைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம்.

  • · ஆனால் யாக்கோபு 1:17 நமக்கு நினைவுபடுத்துகிறது, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை”. யாக்கோபு 1:17

  • உங்கள் உடைமைகள் எப்படி இருக்கின்றன?

  • "நான் என் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தேன். என்னிடம் உள்ளது எல்லாம் அதனால் கிடைத்தவை தான்" என்று நீங்கள் கூறலாம்.

  • வெற்றிகரமாக இருப்பதற்கு கடின உழைப்பு ஒரு முக்கியமான பகுதியாகும். ஆனால் முடிவில் தேவனே நமது பொருளாதார விதியை கட்டுப்படுத்துகிறார்.

  • யோபு தேவனின் பார்வையில் நீதிமானாகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் இந்த சத்தியத்திற்கு வாழும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். “இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே”. யோபு 34:19

  • எளிய வாதம் - ஜீவ சுவாசத்தில் தொடங்கி வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல விஷயமும் உண்மையில் தேவன் தரும் வரம். அப்படியிருந்தும், அத்தகைய வெளிப்படையான உண்மைக்கு பெருமை நம்மைக் குருடாக்குகிறது. அதைத்தான் பவுல், “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்?” என்று நமக்கு நினைவுபடுத்தி, சிந்திக்கும்படி கேட்கிறார்.


உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? 1 கொரிந்தியர் 4:7(b)

  • கிருபை என்பது தேவனின் குணத்தில் இன்றியமையாத பகுதியாகும். கிருபை என்பது அவரது தயவு, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. கிருபையை "தகுதியற்றவர்களுக்கு தேவன் காட்டும் தயவு" என்று வரையறுக்கலாம்.

  • இந்த வழியில் யோசித்துப் பாருங்கள். தேவனுடைய தரநிலைகள் உயர்ந்தவை. உலகில் நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் அந்த நிலையை அடைய முடியாமல் தடுமாறுகிறோம். ஆனால், அவர் தம்முடைய கிருபையால், நான் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருகிறேன் என்று கூறுகிறார். மேலும், தகுதியற்றவர்களுக்கு (நம்மில் பலருக்கு), இன்னும் ஒரு முறை என்ற வாய்ப்பை பல முறை நம் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் வரை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய கிருபை மிகுதியாக இருக்கிறது.

  • அவர் தம் கிருபையை நம் மேல் பொழிகிறார்.

    • அவருடைய கிருபை பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்மை நியாயப்படுத்துகிறது. (ரோமர் 3:24)

    • அவருடைய கிருபை தேவனை அணுகவும், அவருடன் தொடர்பு கொள்ளவும், ஐக்கியம் கொள்ளவும் உதவுகிறது ( எபேசியர் 1:6 ; எபிரேயர் 4:16 ).

    • அவருடைய கிருபை நமக்கு அளவிட முடியாத ஆவிக்குரிய செழிப்பைத் தருகிறது. (நீதிமொழிகள் 10:22; எபேசியர் 2:7)

    • அவருடைய கிருபை நம் ஒவ்வொரு தேவையிலும் நமக்கு உதவுகிறது. (எபிரேயர் 4:16)

    • அவருடைய கிருபையே நம் ஒவ்வொரு விடுதலைக்கும் காரணம். (சங்கீதம் 44:3-8; எபிரேயர் 4:16)

    • அவருடைய கிருபை நம்மைப் பாதுகாக்கிறது, ஆறுதல் அளிக்கிறது, உற்சாகப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது (2 கொரிந்தியர் 13:14; 2 தெசலோனிக்கேயர் 2:16-17; 2 தீமோத்தேயு 2:1)

  • தேவன் நமக்குக் கொடுக்கும் கிருபையை ஏற்கத் தவறும் பொழுது பெருமை வருகிறது. நம்மிடம் இருப்பதெல்லாம் நம் சுயநீதியினால் உண்டானது என்று கூறுவது தேவனின் கிருபையோடு பெருமை போட்டி போடுவதால் தான்.

  • தேவ கிருபை மற்றும் இரக்கத்தை நாம் அங்கீகரிக்கும் தருணத்தில் தாழ்மை நமக்கு வருகிறது. இதைத்தான் பவுல் 1 கொரிந்தியர் 15:10 இல் நன்றாக விளக்குகிறார்.

  • எளிய வாதம் - தேவனின் கிருபையால் வலிமை பெற்றே நாம் சாதித்திருக்கிறோம். நாம் சாதித்ததைக் குறித்து பெருமைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் தேவனின் கிருபை அதை நடக்க வைத்தது. அதைத்தான் பவுல், “உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது?” என்று நமக்கு நினைவூட்டி, சிந்திக்கும்படி கேட்கிறார்.


நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? 1 கொரிந்தியர் 4:7(c)


பவுல் தொடர்ந்து கூறுகிறார், நீங்கள் தேவ கிருபையால் எல்லாவற்றையும் பெற்றிருந்தால், தேவனே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தால்,அவருடைய கிருபை மட்டுமே நமக்கு எல்லாவற்றையும் வழங்குகிறது என்றால், பின்னும் நாம் ஏன் பெருமை பேசுகிறோம்?


  • வாழ்க்கையின் விக்கிரகங்களால் நிரப்பப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்வதே நாம் தற்புகழ்ச்சி கொள்வதற்கும், பெருமைப்படுவதற்கும் காரணம். நீங்கள் செய்யும் காரியங்களில் தேவனுக்கு முதலிடம் இல்லை. நாம் தேவனோடு நடக்கும்போது, அவர் உங்களுக்கும் எனக்கும்அவருடைய பல வரங்களைத் தருகிறார். இவை நம்மால் பெறப்பட்டவை என்று நாம் நினைக்கிறோம். தேவனிடம் இருந்து தான் இவற்றைப் பெற்றிருக்கிறோம் என்பதை நாம் மறக்கும்படி சாத்தான் செய்து விடுவதால், தேவனை மேன்மைப்படுத்த தவறுகிறோம். நாம் அப்படி உணரும் தருணத்தில், பெருமை உள்ளே வருகிறது. தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதால் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.

  • பெருமை நம்மை ஆட்கொண்டு விட்டால் ஆண்டவருக்கு அடிபணிய மாட்டோம். மாறாக மாம்சத்திற்கு அடிபணிய ஆரம்பித்துவிடுவோம்.

  • நாம் பின்பற்றுவதற்கு பவுல் ஒரு சிறந்த உதாரணம். அவருக்கு பல ஆவிக்குரிய வரங்கள் தரப்பட்டிருந்தாலும், தமது வரங்களின் பலனை வெளிப்படுத்தும்போது எல்லாம் எப்போதும் தாழ்மையுடன் இருந்தார். மேலும், அவர் என்ன செய்தாலும், தேவனை உயர்த்தி மகிமைப்படுத்தினார்.

  • இந்த பெருமையைத் தவிர்க்க, நாம் பொதுவாக தவறவிடுகிற, ஒரு சிறந்த ஆலோசனையை பவுல் வழங்குகிறார்.

“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்”. கலாத்தியர் 6:4-6

  • உங்கள் பெருமையை சோதித்துப் பார்க்க, நீங்கள் செய்யும் செயல்களை மற்றொருவருடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக, உங்களுக்கு எதிராகவே ஒப்பிட்டுப் பாருங்கள்.

  • ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக ஒன்றைப் பெறும்போது “திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்” (இயேசு), நீங்கள் பெற்றதை மற்றவர்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். இது உங்களை மனத்தாழ்மையாகவும் தேவனுக்கு நன்றியுள்ள இருதயம் கொண்டவர்களாகவும் மாற்றும்.

சுருக்கம்

இந்த மூன்று காரணங்களுக்காக பெருமையை விடுத்து தாழ்மையை தேர்ந்தெடுங்கள்.


  1. நீங்கள் யார் என்பதும், உங்களிடம் இருப்பதும் எதுவுமே உங்களிடமிருந்து வரவில்லை. இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை. நீங்கள் உங்களை உருவாக்கவில்லை, தேவனே உங்களைப் படைத்தவர். தாழ்மையோடிருக்க இந்த மனப்பான்மையைக் கொண்டிருங்கள்.

  2. நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எங்கு இருந்தாலும் தேவனின் அபரிமிதமான கிருபையினால் தான் இருக்கிறீர்கள். அவருடைய கிருபை தான் உங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது என்பதை நினைவுகூருங்கள். அவருடைய கிருபைகளுக்காகவும் இரக்கங்களுக்காகவும் அவருக்கு மகிமை செலுத்துங்கள்.

  3. உங்கள் செயலை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் உங்களோடே சோதித்துப் பார்க்க, பவுலின் அறிவுரையை நினைவில் வையுங்கள். வெறுமனே இதைச் செய்து பாருங்கள், நீங்கள் சாதித்ததைப் பற்றி தற்பெருமை கொள்வது / பெருமைப்படுவது எவ்வளவு குழந்தைத்தனமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page