நாம் அனைவரும் வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொள்கிறோம். நம் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த நாள் முதல் இறுதி மூச்சு வரை வாழ்க்கையில் சவால்களை சந்திக்கிறோம். ஒரு குழந்தையிடம் கேட்டால், பள்ளி/நண்பர்கள் என்பன போன்று அவர்களுக்கான சொந்தப் போராட்டங்களைக் கூறுவார்கள். பதின்ம வயதினருக்கு பல வகையான போராட்டங்கள் இருக்கும் (படிப்பு / கேஜெட்டுகள் / வேலை, திருமணம் போன்றவை). பெற்றோர்களைக் கேட்டால், வயதான காலத்தில் (ஆரோக்கியமான வாழ்க்கை / வீடு / கார் / வங்கி இருப்பு / வேலை / வியாபாரம் போன்றவை) சேமிப்பை உருவாக்குவதே அவர்களின் போராட்டமாக இருக்கிறது. முதுமையில் உள்ளவர்களிடம் கேட்கும் போது, அவர்களுக்கான போராட்டம் சுயசார்பு / எதிர்காலம் மற்றும் மரணத்தைக் குறித்த பயம் / உடல்நலக் கோளாறுகள் மற்றும் பலவீனம் / குழந்தைகளைப் பற்றிய கவலை போன்றவைகளாக இருக்கிறது.
நாம் தேவனோடு நடக்கும்போது உலகத்திலிருந்து பிரிக்கப்படுகிறோம். உலகில் நடக்கும்போது ஆவிக்குரிய ரீதியில் நாம் கடந்து செல்ல வேண்டிய பல போராட்டங்கள் உள்ளன. நம்மில் அநேகர் (தேவ பிள்ளைகள்) உலக மக்களைப் பார்த்து குழப்பமடைகிறோம். தீர்வுகளைக் காண உலக மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதற்கு, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்தப் போராட்டத்தை எப்படிச் சமாளிப்பது என்பதை அறியும் அளவுக்கு வளராதது தான் காரணம்.
ஆவிக்குரியப் போராட்டங்கள் என்றால் என்ன ?
உங்கள் போராட்டங்களும் உலகத்தின் போராட்டங்களும் வெவ்வேறானவை
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அந்தகாரத்தின் வல்லமையடன் (சாத்தான்) நடக்கும் ஒரு போராட்டம். "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு". எபேசியர் 6:12
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது போராட்டங்களோடு தான் இருக்கும். இயேசு தாமே மத்தேயு 16:24 இல் இவ்வாறு கூறுகிறார். "அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்". எந்தவொரு போராட்டமும் கிடையாது என்று யாராவது சொல்வார்களானால் அது ஒரு தவறான கோட்பாடாகும். ஆனால், இந்தப் போராட்டங்கள் நம்மை பலவீனப்படுத்த வருவதில்லை, இவை தேவனையும் நமக்காக அவர் வைத்திருக்கும் திட்டங்களையும் அறிந்து கொள்வதற்கான ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கொண்டுவருவதற்கும், அவருக்கும் நமக்கும் நெருக்கத்தை உருவாக்குவதற்கும் தான் வருகின்றன. மேலும், இவை நமது கடைசி மூச்சு வரை இருக்கும். ஏனென்றால் தன்னுடைய காலம் குறைவு என்பதை பிசாசு அறிந்திருக்கிறான், அதனால் அவன் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டே தான் இருப்பான். 'வெளிப்படுத்துதல் 12:12 - "ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்".
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது போராட்டங்களை மேற்கொள்வதாகும். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவரையும் நேசிப்பதால், அவர் நமக்காகப் போராடி, இந்தப் போராட்டங்களின் மூலம் உதவி செய்து நம்மை அவரைப் போல் தூய்மையாக்கி நித்திய வாழ்க்கைக்கு நம்மைத் தயார்படுத்துவார். "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்". கொலோசெயர் 1:13
போராட்ட முறைகள் - ஆதாம் ஏவாளின் ஆதி நாட்களில் செய்தது போல சாத்தான் "மக்களை வஞ்சிக்கும்", "தந்திரமான முறைகளுடன்" போரிடுகிறான். "தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது". ஆதியாகமம் 3:1
இந்தப் போராட்டம் சத்திய ஆவி மற்றும் வஞ்சக ஆவிக்கு இடையேயானதைப் பற்றியது. "நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்". 1 யோவான் 4:6. இதைப் பற்றி பாகம் 2 இல் மேலும் அறிந்து கொள்வோம், இப்போதைக்கு இது ஒரு போர் என்பதை மட்டும் அறிந்து கொள்வோம்.
உங்கள் எதிரியை தெரிந்து கொள்ளுங்கள்
எப்படிப் போராடுவது என்று அறிவதற்கு முன், எதிரியையும் (சாத்தான்), அவன் எங்கிருந்து வந்தான்? ஏன் போராடுகிறான்? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
சாத்தான் என்பவன் யார்?
சாத்தான் தேவனின் தூதனாக இருந்தவன் (காக்கும் கேருப்) - அவன் மேட்டிமையால் நிரம்பியிருந்தான் (உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்). அதன் விளைவாக அவன் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தான். அவனுடைய பாவத்தினிமித்தம் அவன் பரலோகத்திலிருந்து தள்ளி விடப்பட்டான். அவன் சிருஷ்டிக்கப்பட்டதில் இருந்து வெளியேற்றப்பட்டது வரையிலான விரிவான பார்வை எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. (இந்தப் பகுதி, பெருமைமிக்க ராஜாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது. எசேக்கியேல் தீர்க்கதரிசி அதை சாத்தானின் வீழ்ச்சியுடன் ஒப்பிடுகிறார்).
“நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்”. எசேக்கியேல் 28:13-17
சாத்தான் ஆவிக்குரியவன் (ஒரு வகை தூதன் - காக்கும் கேருப்), தேவனுக்கு விரோதமாக ஒரு பரலோக கிளர்ச்சியை வழிநடத்தினான், பின்னர் அதன் விளைவாக பூமியில் தள்ளப்பட்டான். லூக்கா 10:18 "அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்". அவனுடைய தனிப்பட்ட பெயராகிய, "சாத்தான்" என்பதற்கு "எதிரி" என்று பொருள். இந்தப் பெயர் அவனின் அடிப்படை இயல்பைக் குறிக்கிறது: அவன் தேவனுக்கும், தேவன் செய்யும் யாவற்றுக்கும், அவர் நேசிக்கும் யாவருக்கும் எதிரி. 2 தெசலோனிக்கேயர் 2:4 "அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்".
எனவே தான் நாம் இரட்சிப்புக்குள் வரும்போது நம்மை தேவனிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மேலும் நாம் உலகத்திற்கு (சாத்தான்) அடிமையாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.
அவன் தன்னை தேவனை மாதிரியே காண்பிக்க முயல்வதால் நாம் அவனை வணங்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். உலகில் / பரத்தில் உள்ள அனைத்தும் தேவனை வணங்குவதால், நாமும் அவனை வணங்க வேண்டும் என்று விரும்புகிறான். அவன் உலகத்தின் அதிபதியாக இருப்பதால், நாம் உலகப் பிரகாரமாக இருக்க வேண்டும் என்றும், உலகம் விரும்பும் அனைத்தையும் வணங்க வேண்டும் என்றும் விரும்புகிறான்.
சாத்தானின் பெயர்கள் என்ன?
நீங்கள் அவனை, சாத்தான் / பிசாசு / அவதூறு செய்பவன் / பெயெல்செபூல் / உலகத்தின் அதிபதி / வான மண்டலங்களின் அதிபதி / இந்த யுகத்தின் கடவுள் / லூசிபர் / வஞ்சிப்பவன் என்று எப்படி அழைத்தாலும் தகும். எல்லா பெயர்களும் ஒன்றுதான்.
அவன் போராடும் வழிகள் வஞ்சனை வழிகள். வஞ்சக ஆவியை வெளிப்படுத்த அவன் பல மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்தி மக்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்கிறான்.
அவன் எதைக் கட்டுப்படுத்துகிறான்?
அவன் பரலோகத்தில் கலகம் செய்தபோது அங்கேயிருந்து வெளியேற்றப்பட்டு, இந்த உலகத்திற்குத் துரத்தி விடப்பட்டான். அவன் இந்த உலகை ஆளுகிறான் - உலகத்தின் அதிபதி.
அவன் உலகத்தின் அதிபதியாக இருப்பதால் உலகம் முழுவதும் அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்".1 யோவான் 5:19
அவன் உலகத்தை கட்டுப்படுத்துவதால் நாம் போராட்டங்களைக் கடந்து செல்கிறோம் - தேவ பிள்ளைகள் மற்றும் முழு உலகம் 1யோவான் 5:19 vs எபேசியர் 6:12
1 யோவான் 5:19 "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்".
எபேசியர் 6:12 - "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு".
எதிரியின் பண்புகள்
பின்வருவன சாத்தானின் குணாதிசயங்கள். இது அவனை மகிமைப்படுத்துவதற்காக அல்ல, அவனை நாம் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக. அப்பொழுது தான் நமது ஆவிக்குரியப் போரில் நாம் கவனமாக இருக்க முடியும்.
ஞானமும், அழகும்
எசேக்கியேல் 28:12,13 - இந்தப் பகுதி, பெருமைமிக்க தீரு ராஜாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது. எசேக்கியேல் தீர்க்கதரிசி அதை சாத்தானின் வீழ்ச்சியுடன் ஒப்பிடுகிறார். "மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்". எசேக்கியேல் 28:12
முத்திரை மோதிரம் - அவன் செய்யும் காரியங்களில் சரியாக இருக்கிறான். வஞ்சனையின் ஆவியினால் நம்மை ஏமாற்றுவதற்கு இந்த குணத்தைப் பயன்படுத்துகிறான்.
நிறைந்த ஞானம் - அவனுடைய ஞானத்தின் காரணமாக, அவன் மிகவும் தந்திரமானவன். அவனுடைய தந்திரங்களை நாம் அறிந்து கொள்ள முடியாதபடிக்கு அவன் செயல்திறன்களில் கெட்டிக்காரன். "சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே". 2 கொரிந்தியர் 2:11
பூரண அழகு - அவனுடைய அழகு பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்யும் அழகு அல்ல. மிஸ் வேர்ல்ட் அல்லது மிஸ்டர் யுனிவர்ஸை எடுத்துப் பார்த்தால் அவை மக்களுடன் ஒப்பீட்டளவில் ஒப்பிடப்படுகின்றன. ஆனால் அவனது அழகு "பூரண அழகு". அதனால்தான் அவன் பெருமை கொண்டு, தேவனின் சிங்காசனத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான். இந்தப் பூரண அழகினால் நாம் வஞ்சிக்கப்பட்டு வஞ்சனையின் ஆவியைப் பெறுகிறோம்.
தந்திரங்கள்
அவனுடைய தந்திரங்கள் இணையற்றது. "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்". 2 கொரிந்தியர் 11:3
நீங்கள் அவனை எளிதில் அடையாளம் காண முடியாத அளவு அவன் மிகவும் புத்திசாலி. அவனை தேவன் என்று நம்மை நம்ப வைப்பதற்காக தேவனின் குணங்களைப் (ஒளி / நீதி) பின்பற்றுகிறான். "அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்". 2 கொரிந்தியர் 11:14-15.
கடைசியில் தான் அவனுடைய தந்திரமானத் திட்டங்களைப் பற்றி நமக்குத் தெரிய வரும். சாத்தான் கிறிஸ்துவின் விசுவாசிகளை ஏமாற்றுகிறான், ஆனால், அவன் கிறிஸ்துவின் ஒளியின் குணங்களால் வெளிப்படுத்தப்படுவான்.
வலிமை
மாற்கு அவன் எவ்வளவு வலிமையானவன் என்பதை விவரிக்கிறார்.
"அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது". மாற்கு 5:2-4
அவன் சங்கிலியில் கட்டப்பட்டிருந்தும் யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை – “அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது”.
அவனது வலிமையால் – சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.
இன்று பலர் வலுவாவதற்கு புரதம் / தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சாத்தானின் வலிமைக்கு எதிராக எதையும் ஒப்பிட முடியாது.
அற்புத வல்லமை
"அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,"
2 தெசலோனிக்கேயர் 2:9
அவன் சூனியம் மற்றும் மந்திரவாதிகளின் சக்தி மூலம் அனைத்து வல்லமைகளையும் வெளிப்படுத்துகிறான்.
அவனது அற்புத சக்தி மற்றும் தேவன் மோசே / ஆரோன் / பார்வோனை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பவை யாவும் யாத்திராகமம் 7மற்றும் 8 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்". யாத்திராகமம் 7:8-13
சாத்தானின் அற்புத சக்தி தேவனுக்கு எதிராக நிற்க முடியாது - “ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று”.அதனால்தான் எந்த சூனியமும் / மந்திர சக்திகளும் தேவபிள்ளைகளுக்கு முன்பாக நிற்க முடிவதில்லை.
சாத்தானின் மந்திர சக்திகள் எல்லா இடங்களிலும் வேலை செய்யாது என்பதை நினைவில் வையுங்கள். யாத்திராகமம் 8:18-19 ஐ படிக்கும் போது, மந்திரவாதிகள் தங்கள் இரகசிய சக்தியால் எப்படி பேன்களை உருவாக்க முடியவில்லை என்பதை இது காட்டுகிறது. அவர்கள் பார்வோனிடம் “இது தேவனுடைய விரல்” என்று அறிவித்தனர்.
பிளவுபடாத இராஜ்யம்
சாத்தானுக்கு சேனைகளும், அதிபதிகளும் உள்ளனர் - "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு". எபேசியர் 6:12
சாத்தானுக்கு ஒரு சேனையும், அதிகாரமும், அதிபதிகளும், அளப்பரிய வல்லமையும் உண்டு, அப்படியே அவனிடம் ஒரு ராஜ்யமே உள்ளது. அவனுடைய ராஜ்யமும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இயேசு தாமே இதைக் குறித்து மத்தேயு அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். "சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத்தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?". மத்தேயு 12:26
தேவனை எதிர்க்கும் "நோக்கத்தில்" அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். "அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 2 தெசலோனிக்கேயர் 2:4
அவனது அனுபவம்
சாத்தானுடைய தந்திரத்தையும், வஞ்சிக்கும் அனுபவத்தையும் பற்றி ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நம் முற்பிதாக்களாகிய ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து 6000 ஆண்டுகளுக்கு மேலாக அவன் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறான்.
யோபு போன்ற பல குடும்பத்தலைவர்கள், தாவீதைப் போன்ற ராஜாக்கள், யோனா போன்ற தீர்க்கதரிசிகள், இன்னும் இயேசுவும் கூட சாத்தானால் சோதிக்கப்பட்டார். எனவே நீங்கள் எல்லாம் அவனுக்கு இணை இல்லை.
சாத்தான் அவனது வீழ்ச்சிக்கு முன்பாக, தேவனின் வலிமை மிக்க தேவதூதர்களில் ஒருவனாக இருந்தான் (காக்கும் கேருப்). தேவனும் அவருடைய தூதர்களும் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை அவன் நன்கு அறிந்திருக்கிறான்.
அவனது அதீத சுறுசுறுப்பு
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்".
யோபு 2:2 - "கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்". 1 பேதுரு 5:8
அவன் பூமி எங்கும் சுற்றித் திரிந்து தனது கண்களைக் கவரும் ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறான்.
அவன் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே இருக்க முடியும். தேவனைப் போல நம் உள்ளத்தைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ அவன் எங்கும் நிறைந்திருக்க முடியாது.
ஒருபோதும் வாதிட வேண்டாம்
“அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்”. மத்தேயு 4:1-10
நீங்கள் மத்தேயு 4:1-10 ஐப் படித்தால், பிசாசு இயேசுவிடம் வெவ்வேறு கேள்விகளைக் கேட்பதன் மூலம் தனது தந்திரங்களை "மாற்றிக் கொண்டே" இருந்ததைக் காணலாம்.
இயேசு பிசாசுடன் வாதிடவில்லை, "எழுதப்பட்டதை" வெறுமனே மேற்கோள் காட்டினார்.
பிசாசுக்கு வேதம் நன்றாகத் தெரியும். அதனால்தான் அவன் தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய வாக்குத்தத்தங்களுக்கும் பயப்படுகிறான்.
தேவனைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்
சாத்தானுடைய குணாதிசயங்களை உருவாக்கிய விதத்தைப் பார்க்கும்போது, அவன் "உலகின் அதிபதி" என்றால், உலகில் அவனுடைய கட்டுப்பாட்டில் நாம் இருக்கும்போது, சோதனைகளில் நம்மால் எப்படி வெற்றி பெற முடியும்? அவன் அவ்வளவு சக்தி வாய்ந்தவனா? என்ற உணர்வை நாம் பெறக் கூடும். நாம் நினைப்பதையும் அறிந்ததையும் விட தேவன் மிகவும் சக்தி வாய்ந்தவர் மற்றும் வலிமையானவர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
1. சிருஷ்டிக்கப்பட்டவை vs சிருஷ்டிகர்
சாத்தான் சிருஷ்டிக்கப்பட்டவன் - தேவனைப் போன்று அவன் ஒரு படைப்பாளி அல்ல - சாத்தான் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கென்று அவரால் "உருவாக்கப்பட்டான்". இதை முன்பு எசேக்கியேலில் “நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்” என்று படித்தோம்.
“நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்”. எசேக்கியேல் 28:15
தேவன் தேவதூதர்களையும் பரலோகத்தின் சேனைகளையும் படைத்தார். அவன் பரலோகத்தில் தேவனுக்கு எதிராக யுத்தம் செய்ததால், தோற்கடிக்கப்பட்டு பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டான். "வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை". வெளிப்படுத்துதல் 12:7
சாத்தான் "சிருஷ்டிக்கப்பட்டவனாக” இருப்பதால், அவன் "சிருஷ்டித்த" தேவனை விட தாழ்ந்தவன் தான்!
தேவனைப் போலல்லாமல், அவனுக்கு வரம்புகள் உண்டு.
2. இயேசு பெரியவர் மற்றும் வலிமையானவர்
"பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்". 1 யோவான் 4:4
சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியாக இருந்தாலும் இயேசு அவனை விட பெரியவர் (1 யோவான் 4:4). இயேசு என்ற பெயரைக் கேட்டவுடன் அவைகள் நடுங்குகின்றன. "தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன". யாக்கோபு 2:19
இயேசுவின் வல்லமை மற்றொரு நிகழ்விலும் காணப்படுகிறது.
"அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோயின". மத்தேயு 8:28-29,31-32
இயேசு தம்முடைய விரலின் தொடுதல் மூலமாகவே பிசாசுகளைத் துரத்த முடியும். "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே". லூக்கா 11:20
சாத்தான் நமக்கு எதிராகப் போரிடும்போது, அவனை நிராயுதபாணியாக்கும் வல்லமையும் அதிகாரமும் இயேசுவுக்கு உண்டு, ஏனெனில்,.அவர் சிலுவையிலே வெற்றி சிறந்தார். "துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்". கொலோசெயர் 2:15
சில பிரச்சினைகளின் மீதான வெற்றி தற்காலிகமானதாக இருக்கும், ஆனால் ஒருமுறை இயேசு அந்த போராட்டத்தை தூக்கி எறிந்து விட்டால் அது நிரந்தரமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவர் மதுவிற்கோ அல்லது போதைப் பழக்கத்திற்கோ அடிமையாக இருக்கும் போது, அவர் குடிக்க மாட்டேன் என்று கூறினால், அவரால் சிறிது நேரம் மட்டுமே அவ்வாறு இருக்க முடியும். அந்த நபர் தேவ ஆவியால் தொடப்படுகிற தருணத்தில் குடிப்பழக்கம் அல்லது வேறு எந்த அடிமைத்தனத்திற்கும் அடிமையாகும் அடிமைத்தனம் அவரிடமிருந்து தூக்கி எறியப்படுகிறது, இயேசுவிடம் நமக்கு இருக்கும் இந்த சக்தியின் காரணமாக அது மீண்டும் வராது.
கொலோசெயர் 2:15 இல் எழுதப்பட்டிருப்பதால் மட்டுமே சாத்தானின் எந்த சக்தியும் தேவ பிள்ளைகளை மேற்கொள்ள முடியாது.
காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடும் வல்லமையும் அதிகாரமும் இயேசுவுக்கு உண்டு (காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே).பூமியிலும் பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன - மத்தேயு 8:26-27 "அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்".
3. அவன் தோற்கடிக்கப்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சாத்தான் உண்மையில் அவனது இறக்கத்தில் இருக்கிறான் - அவன் முறியடிக்கப்பட்டு, கிறிஸ்துவுடனான போரில் தோல்வி அடைவதே அவனது இறுதி ஆட்டம். இந்த உண்மையைப் பற்றி கூறுவதை சாத்தான் விரும்பவில்லை, அவன் தோற்கடிக்கப்பட்டதாக நாம் சொல்லும்போது அவன் பலவீனமடைகிறான். "சாத்தானே நீ கிறிஸ்துவுக்குள் தோற்கடிக்கப்பட்டாய்" என்பதை அவனுக்கு நினைவூட்டுவதற்கு தைரியமாக இருங்கள்.
அவன் பரலோகத்தில் தோற்கடிக்கப்பட்டு உலகத்திற்குள் தள்ளப்பட்டான் (எசேக்கியேல் 28:17). இயேசுவின் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் அவனுக்கு எந்த சக்தியும், அதிகாரமும் இல்லை (யோவான் 14:30).
"உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்". எசேக்கியேல் 28:17
"இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை". யோவான் 14:30
சாத்தானிடம் உள்ள அனைத்து வல்லமையும், சாபங்களும் சிலுவையில் முறியடிக்கப்பட்டன. "துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்". கொலோசெயர் 2:15
அவன் நித்திய அக்கினியில் இருக்கவும், அழிக்கப்படவும் விதிக்கப்பட்டான். "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்". மத்தேயு 25:41
4. தேவனின் புத்திரரும் அவர்களின் பாதுகாப்பும்
தேவனின் ஆவியால் உலகத்திலிருந்து பிரிக்கப்படும்படி நாம் தொடப்படும்போது, நாம் அவருடைய புத்திரராக மாறி, அவருடைய ஆவியில் பாதுகாக்கப்படுகிறோம். "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்". ரோமர் 8:14-15
சிலுவையில் மரணத்தை வென்ற தேவனுடைய அதே ஆவியை நாம் பெறுகிறோம்.
நாம் தைரியத்தின் ஆவியைப் பெறுகிறோம், அது உலகின் அடிமை மனநிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
அதே ஆவி அப்பா என்று கூப்பிட வைக்கிறது - அவர் மூலம் "அப்பா, பிதாவே" என்று கூப்பிடுகிறோம்.
கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்து பூமியின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட நித்திய ஜீவனைப் பெற ஒரு இரட்சிப்பைக் கொண்டு வந்தார் - "கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்". எபிரேயர் 9:28
கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சாட்சியை பாவச் செயல்களிலிருந்து சுத்தப்படுத்தி, எல்லா அந்தகாரத்தின் குழிகளிலும் இருந்து நம்மை மீட்டெடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது - "நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!". எபிரேயர் 9:14
தேவ பிள்ளைகளைச் சுற்றி தேவன் வேலி அமைத்திருப்பதால் அவரின் அனுமதியின்றி அவரின் புத்திரரைத் தொடும் சக்தியும் அதிகாரமும் சாத்தானுக்கு இல்லை. போராட்டங்கள் உண்மையானவை என்று ஏமாற்ற அவனால் வெளியில் இருந்து போராட்டங்களைக் கொண்டு வர முடியும். தேவனின் அனுமதியின்றி அவர் பிள்ளைகள் மேல் அவனால் விரலைக் கூட வைக்க முடியாது. யோபுவின் புத்தகத்தில் நாம் இதை வாசிக்கலாம். "அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்". யோபு 1:9-10,12
சாத்தான் நம்மை பயமுறுத்தி நடுங்கச் செய்தாலும், தேவனின் வாக்குத்தத்தம் உண்மையானது. பயப்படாமல் இருக்கும்படிக்கு அவர் நம்மை ஆறுதல்படுத்துகிறார். பலங்கொண்டு திடமானதாயிருங்கள் ஏனெனில், அவர் நம்முடன் வருகிறார், அவர் நம்மைக் கைவிட மாட்டார். "நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்". உபாகமம் 31:6
அடுத்த பாகத்தில் நாம் எப்படி போராடுவது / நம்மிடம் உள்ள கருவிகள் / நம் போராட்டத்தை பலவீனப்படுத்தும் பகுதிகள் இவற்றை எல்லாம் கற்றுக் கொள்வோம். அப்பொழுது தான் நம்மால் ஒரு பயனுள்ள போரை நடத்த முடியும்.
நீங்கள் கடந்து செல்லும் எந்த ஒரு போராட்டத்தையும் போராடுவதற்கு தேவ ஆவி உங்களை உயர்த்தும்படிக்கும் மேலும் தேவனின் வார்த்தை அவரது மகிமைக்காக பயன்படுத்தப்படுவதற்கும் நான் ஜெபிக்கிறேன்.
Comments