நாம் அனைவரும் நம் வாழ்வில் பின்னடைவை சந்தித்துள்ளோம். பின்னடைவில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதை தாவீதின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதைப் படிக்கும் முன், சவுல் தாவீதைக் கொல்ல எப்படித் துரத்தினான் என்பதை தெரிந்து கொள்ள இந்த சிறிய வீடியோவைப் பாருங்கள்.
சவுல் இஸ்ரவேலின் முதல் ராஜாவாக இருந்தான். தாவீது ஒரு இளம் மேய்ப்பராக இருந்து, பின் ஒரு புகழ்பெற்ற போர்வீரரானார். இறுதியில் சவுலைத் தொடர்ந்து ராஜாவானார்.
தாவீதின் புகழ் மற்றும் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட சவுல், அவரைக் கொல்வதற்கு, பின்தொடரத் தொடங்கினான். தாவீது சவுலிடமிருந்தும் அவனது படையிடம் இருந்தும் தப்பியோடி, பல ஆண்டுகளாக குகைகளிலும் வனாந்தரப் பகுதிகளிலும் மறைந்திருந்து வாழ்ந்தார்.
ஆபத்து மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்ட போதும், தாவீது தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. அவருடைய மக்களுக்கான பணிகளில் உறுதியாக இருந்தார். சவுலைக் கொல்ல வாய்ப்புக் கிடைத்த பல சந்தர்ப்பங்களிலும் அவனைக் கொல்லாமல் விட்டதன் மூலம் அவர் தனது விசுவாசத்தையும் துணிவையும் வெளிப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில், இஸ்ரவேலின் எதிரிகளாக அறியப்பட்ட பெலிஸ்தியர்களின் தேசத்தில் அடைக்கலம் தேடுவது ஞானமானது என்று தாவீது கருதினார். அவர் காத்துக்கு இடம்பெயர்ந்து, சிக்லாக் நகரில் குடியேறினார், அங்கு அவரும் அவருடன் இருந்த 600 பேரும் ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்கும் மேலாக வசித்து வந்தனர். சிக்லாக் பிரதேசம், மாயோகின் மகனும், காத்தின் அரசனுமான பெலிஸ்தியனாகிய ஆகீசால் தாவீதுக்கு வழங்கப்பட்டது.
தாவீது சிக்லாகில் தங்கியிருந்தபோது, இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போரிட பெலிஸ்தியர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர். ஆகீஸ், தாவீதை உண்மையுள்ள கூட்டாளியாக நினைத்து, அவரை தங்கள் இராணுவ நடவடிக்கைகளில் சேர அழைத்தான். இருப்பினும், பெலிஸ்திய தளபதிகள் தாவீதின் பங்கேற்பை எதிர்த்தனர், தாவீதை போரில் ஈடுபடுத்தாமல் அவரை மீண்டும் சிக்லாகுக்கு அனுப்பும்படி ஆகீஸைத் தூண்டினர். சிக்லாகிற்குத் திரும்ப தாவீதிற்கு மூன்று நாட்கள் ஆனது.
தாவீதும் அவரது ஆட்களும் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அமலேக்கியர்கள் சிக்லாகைத் தாக்கி, அழிவை ஏற்படுத்தி, அவர்களுடைய மகன்களையும் மகள்களையும், அவர்களுடைய உடைமைகள் அனைத்தையும் கைப்பற்றினார்கள்.
அமலேக்கியர்களுக்கு எதிரான தாவீதின் போர், நாம் கற்றுக்கொள்ள ஏராளமான ஆவிக்குரிய ஆழமான கருத்துக்களையும் பாடங்களையும் வழங்குகிறது.
தாவீதின் ஒன்றுமில்லாத (பூஜ்ஜிய) நிலை
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 1 சாமுவேல் 30:3-6
அவர்கள் ஊருக்கு வந்து பார்த்தபோது, உயிருள்ளவர்களின் சத்தம் எதுவும் இல்லாமல், எரிந்த இடிபாடுகளின் குவியலாக, பிசாசின் பட்டணம் போல இருந்தது. எல்லாவற்றையும் இழந்தது போல் தோன்றியது.
தாவீதின் பார்வையிலிருந்து பாருங்கள் - இந்த நேரத்தில், தாவீதுக்கு ஆதரவாக எதுவும் இல்லை. அவருடைய இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் அனைவரும் எடுத்துச் செல்லப்பட்டு விட்டனர். இஸ்ரவேலில் இருக்கும் யாராலும் அவருக்கு உதவ முடியவில்லை. பெலிஸ்தியர்களும் அவரை விரும்பவில்லை. அவருக்குச் சொந்தமான அனைத்தும் போய்விட்டன. அவரது நண்பர்கள் கூட அவருக்கு எதிராக திரும்பினர், ஏனெனில் அவர்களும் அவர் மீது கல்லெறியும் படி பேசிக் கொண்டார்கள்.
அவர்களின் ஆவிக்குரிய பெலனும் சரீர பெலனும் பூஜ்ஜிய நிலையில் இருந்தது.
அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, ஆவியில் கசப்புடன் இருந்ததால், ஆவிக்குரிய பெலன் இல்லாமல் போனது, “சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால்,… ”.
அவர்களின் சரீர பெலன் இல்லாமல் போனது. ஏனெனில், அழுவதற்கு பெலனில்லாமல் போகுமட்டும் அவர்கள் சத்தமாக அழுதார்கள்,“அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்”.
நமக்கான பாடம்
சாதாரணமாக, ஒன்றுமில்லாத ஒரு பூஜ்ஜிய நிலையில் இருக்கும் போது சக மனிதரிடம் ஆலோசனை கேட்க நினைப்போம் அல்லது சில காரியங்களைச் செய்ய நம் சுயத்தை நம்பியிருப்போம். ஆனால் தாவீது அந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தபோது தேவனைத் தேடினார், “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்”.
நீங்கள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும் உங்கள் வாழ்க்கையின் பகுதிகளை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அந்த நிலையில் உங்களை வழிநடத்த தேவனைத் தேடுங்கள். அது வேலை / தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலை / குழந்தைகள் / குடும்பம் / பாவத்துடனான போராட்டம் அல்லது இன்னும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாமும் தாவீதைப் போல, நமக்கு பெலன் கொடுப்பதற்கு தேவனைத் தேடுவோம்.
பூஜ்ஜிய நிலையில் தேவனின் வழிகாட்டுதல்
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான். தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப் போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள். 1 சாமுவேல் 30:7-10
தாவீது தேவனிடமிருந்து ஆவிக்குரிய வல்லமையைப் பெற்ற பிறகு தான் செய்ய வேண்டிய அடுத்த படிகள் என்ன என்பதை தேவனிடம் கேட்டு மீண்டும் உறுதிப்படுத்தினார், “தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான்”.
தேவனின் பதில் சுருக்கமாகத் தான் இருந்தது, “அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்”.
நமக்கான பாடம்
தாவீது ஏற்கனவே பல யுத்தங்களில் வெற்றி பெற்றிருந்தார். அவர் எதையுமே அவர் விருப்பப்படி செய்யவில்லை. அவர், அனுபவமில்லாதவர் போருக்கு செல்வது போல தேவனின் ஆலோசனையை நாடினார். நாம் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கலாம், பரவாயில்லை, தேவனிடம் அர்ப்பணித்து அவரைத் தேடுவோம்.
நமது வழிகாட்டுதலுக்கான தேவனின் பதில் “அதைப் பின் தொடர்” என்பது போல எப்பொழுதும் சுருக்கமாகவே இருக்கும். ஒரு நீண்ட கதை போலவோ அல்லது நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்றோ இல்லாமல் இது ஒரு சிறிய பதில். இந்தச் சுருக்கமான பதிலில் தேவனின் வார்த்தையைக் கேட்க நம் காதுகள் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நாம் உலக விஷயங்களில் ஈடுபட்டு, அவரிடம் கேட்டால் அவரின் வழிநடத்துதலைத் தவறவிடுவோம்.
தேவன் எப்போதும் தமது வழிகாட்டுதலில் முதல் படிகளை மட்டுமே கொடுக்கிறார். நாம் அவரிடம் கேட்கும்போது அவர் முழு திட்டத்தையும் கொடுப்பதில்லை. இங்கே தாவீதின் வாழ்க்கையிலும் “… அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்” என்று தான் கூறினார். இது தேவன் மீது அவர் கொண்டிருந்த விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகும்.
600 பேரில், 400 பேர் மட்டுமே வர முடிந்தது, ஏனெனில், மீதமுள்ளவர்கள் சோர்வாக இருந்தனர். மனிதர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், 60% திறனுடன் மட்டுமே நாம் போரிடப் போகிறோம் என்று நினைக்கலாம். தேவன் தாவீதின் பக்கம் இருந்ததால், அவர் இதைப் பற்றி கவலைப்படவில்லை.
தேவனின் யுத்தம் வித்தியாசமானது
ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான். நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான். தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள். 1 சாமுவேல் 30:11-20
தாவீதும் அவருடைய ஆட்களும் அமலேக்கியர்களைப் பிடிக்க படையெடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, நோய்வாய்ப்பட்டு இறக்கவிருந்த ஒரு மனிதனை சந்தித்தார்கள். மனித ஞானத்தில் இருந்து சிந்தித்துப் பாருங்கள், எதிரி முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் அதிக கவனமாக இருக்கும் போது பலவீனமான ஒருவரை ஏன் கவனிக்க வேண்டும்.
தேவனின் வழிகள் நாம் நினைப்பதை விட வித்தியாசமானவை. அவர் தாவீதை அமலேக்கியர்களிடத்திற்கு வழிநடத்த எகிப்திய அடிமையைப் பயன்படுத்தினார், ஏனெனில் அவன் சிக்லாக் வந்தவர்களில் ஒருவன்.
நமக்கான பாடம்
எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது என்று நாம் கருதும் மிகச் சாதாரணமான விஷயங்களை தேவன் தேர்ந்தெடுத்து, யுத்தங்களில் வெற்றி பெறுவதற்குப் பயன்படுத்துகிறார். இங்கே தாவீதை அமலேக்கியர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சாகக் கிடந்த ஒரு எகிப்திய அடிமையைத் தேர்வு செய்கிறார்.
நம்முடைய மனித ஞானத்திற்கு முற்றிலும் முரணான ஒன்றைச் செய்யும்படி தேவன் கேட்கும்போது, அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஏனெனில், அவருடைய ஞானம் ஆழமானது, கற்பனை செய்ய முடியாதது.
தேவன் நம்மைப் பலப்படுத்தும் போது, பிசாசு தேவனுக்கு எதிராக நிற்க முடியாது. இங்கே இந்த 400 பேரும் உடல் ரீதியாக சோர்வடைந்ததைக் காண்கிறோம். இப்போது அவர்கள் எதிரியை வெல்ல ஒரு நாள் முழுவதும் போராடுகிறார்கள். இந்த வலிமை அவர்களுக்கு கர்த்தரிடமிருந்து வந்தது – “அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்”.
தேவன் நமக்காக யுத்தம் செய்யும் போது, அவர் எப்பொழுதும் முன்பு இருந்ததை விட அதிகமாக ஆசீர்வதிப்பார். தாவீது விஷயத்தில் அவருக்கு கிடைத்தது:
தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
தாவீது அவர்களிடம் இருந்ததை விட அதிக மிருகஜீவன்களை பெற்றார், “…ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்”.
நன்றியுள்ள இருதயம்
அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இந்தக் காரியத்தில் உங்கள் சொற் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான். 1 சாமுவேல் 30:22-24
தாவீது மீண்டும் சிக்லாகிற்குத் திரும்பி, எஞ்சியிருந்த 200 பேரிடம் கொள்ளையடித்தவற்றைக் கொடுத்தார். ஆனால், தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர பிறவற்றை எடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
நமக்கான பாடம்
“சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும்” யுத்தம் செய்த போதும், தாவீது திரும்பி வந்த பிறகு, அந்த வெற்றி தன்னுடையது என்று கூறவில்லை. மாறாக, “கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்;” என்று கூறினார்.
நம்முடைய யுத்தங்களில் நாம் வெற்றி பெறலாம். தேவனின் இரக்கத்திற்காகவும், பூஜ்ஜிய நிலையில் அவர் நம்மை வழிநடத்தியதற்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். தாவீதைப் போல நாமும் அவரைத் துதிக்க வேண்டும்.
தாவீது பல விஷயங்களுக்கு தேவனைத் துதித்தார்.
ஜெயம் தேவனிடத்தில் இருந்து வந்தது - “கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்”.
தேவனிடமிருந்து வந்த பாதுகாப்பு – “கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்”.
அவர் "பாரபட்சம் இல்லை" என்று மக்களுக்கு காட்டினார், அவர் அனைத்து கொள்ளைகளையும் 600 பேருக்கும் பிரித்துக் கொடுத்தார்.
Comments