top of page
Kirupakaran

புனித வெள்ளியின் சிறப்பு


புனித வெள்ளி என்பது கிறிஸ்தவ விடுமுறை தினம். மேலும் விசுவாசிகள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு புனிதமான நாள். பொதுவாக, இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தேவாலய ஆராதனைகளில் கலந்துகொள்வது உண்டு. இருப்பினும், புனித வெள்ளி என்பதற்குப் பின்னால் உள்ள பொருள் மற்றும் அந்தப் பெயரைப் பெறுவதற்கு அதில் இருக்கும் சிறப்பு என்ன என்பது குறித்து அடிக்கடி ஆர்வம் உண்டாகிறது.


புனித வெள்ளி தினம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கிறது. ரோமானிய காலங்களில் அடிமைகள், அவமானப்படுத்தப்பட்ட வீரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களே பெரும்பாலும் சிலுவையில் அறையப்பட்டனர். மிகவும் அரிதாகவே ரோமானிய குடிமக்களுக்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. சிலுவையில் அறையப்படுவது மிகவும் கொடூரமான அவமானகரமான மரண முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இதை நகரத்திற்கு வெளியே செய்தார்கள். மேலும், இது அவர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் இருந்தது.


எனவே, சிலுவையில் அறையப்படுவது ஒரு அவமானமான செயல் என்றால், அன்றைய தினம் புனித வெள்ளி என்று ஏன் அழைக்கப்படுகிறது? இயேசு சிலுவையில் அறையப்பட்டதினால் விளைந்த நன்மையின் நான்கு அம்சங்களைப் பார்க்கலாம்.


அவமானத்தில் இருந்து விசுவாசம்


இயேசு சிலுவையில் அறையப்பட்டது அவமானத்தை தகர்த்தெறிந்து மனிதகுலத்திற்கு நம்பிக்கையை அளித்தது.

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:18


  • இயேசு இல்லாத சிலுவையை நீங்கள் பார்த்தால், அது வெட்கத்தின் சின்னமாக இருக்கிறது. அதனால்தான் பவுல், “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,” என்று எழுதுகிறார். ஆனால் கிறிஸ்து இயேசுவின் மேல் நமக்கு விசுவாசம் இருக்கும்போது, சிலுவையின் செய்தி தேவ பெலனாயிருக்கிறது.

  • இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் காரணமாக, சிலுவை நம் அனைவருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது.

  • எப்படி அவமானத்தில் இருந்து நம்பிக்கையைப் பெற்றோம்? இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தில் பல நிகழ்வுகள் உள்ளன.

1. சிலுவை என்பதே ஒரு அவமானமாகத் தான் இருந்தது. ஏனெனில் பொதுவாக அது ரோமானியர்களால் மோசமான பாவிகள் மற்றும் குண்டர்களுக்கே வழங்கப்பட்டது. ஆனால் எந்த பாவமும் செய்யாதவராக இருந்தபோது இயேசு சிலுவையை சுமந்தார்.


2. இயேசுவின் தலையில் முள் கிரீடம் வைத்து, வலது கையில் கோல் கொடுத்து, ஏளனம் செய்து அவரை பரியாசம் பண்ணினர். – “அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,” மத்தேயு 27:28-29


3. அவரது முகத்தில் துப்பினர் - அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். மத்தேயு 27:30


4. அவருடைய வஸ்திரங்களை எடுத்து அதைப் பங்கு போட்டனர் என்று வாசிக்கிறோம். - அவரைப் பரியாசம் பண்ணின பின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். - மத்தேயு 27:31


5. அந்த வழியாய் நடந்துபோகிற ஜனங்களும், போர்ச்சேவகர்களும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், மூப்பரும் பரியாசம் பண்ணி நிந்தித்தார்கள்.

“அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:”,

“அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:”,

“அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்”. மத்தேயு 27:39,41,44

  • இந்த அவமானகரமான செயல்களை எல்லாம் இயேசு சிலுவையில் ஆழ்ந்த வலியோடு சகித்தார். அவர்களை சபிக்கவோ அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தையோ அவர் சொல்லவில்லை. நாம் அவரிடம் வந்து நம் கதையை அவரிடம் சொன்னால், எந்த மனிதனும் புரிந்து கொள்வதை விட அவர் புரிந்துகொள்கிறார். அதனால்தான் சிலுவை மீது நமக்கு விசுவாசம் இருக்கிறது.

  • நாம் வெட்கக்கேடான பல பாவங்களைச் செய்கிறோம். இயேசு சிலுவையில் இந்த வெட்கக்கேடான விஷயங்களைச் சகித்துக்கொண்டதால், அவரால் மீட்பைப் பெறுவோம் என்ற விசுவாசத்துடன் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். ஏசாயா 53:3


அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53:12


இயேசு கிறிஸ்துவின் இரத்தம்


இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. யோவான் 19:30,32-33


ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். யோவான் 19:34-35


  • நடந்த செயல்களின் வரிசையைப் படித்துப் பாருங்கள். அவருடன் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு திருடர்களின் கால்களையம் வீரர்கள் உடைக்க முயன்றனர். அதன் பிறகு அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கண்டார்கள். பின் போர்ச்சேவகரில் ஒருவன் இயேசுவைத் தனது ஈட்டியால் குத்தினான். "உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது".

  • ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு நாம் இரத்தத்தைப் பற்றி பேசுவதில்லை, ஆனால் இயேசுவின் காரியத்தில், "உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது" என்று பார்க்கிறோம். இது எதைக் குறிக்கிறது?

  • இரத்தத்தின் சுத்தத்தைப் பற்றியும், ஒரு விரதத்தையோ அல்லது விருப்பமான காணிக்கையையோ நிறைவேற்றுவதற்காக தேவனுக்கு எவ்வாறு பலி கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதையும் பற்றி தேவன் மோசேயிடம் கூறியதை நாம் படிக்க வேண்டும்.

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. லேவியராகமம் 17:11


நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ, அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக. லேவியராகமம்22:18-19

  • இயேசு சிலுவையில் எவ்வாறு எடுத்து செல்லப்பட்டார் என்று வாசிக்கிறோம். நமக்காக பலியாக கொண்டு செல்லப்படுகிற ஆட்டுக்குட்டியைப் போல சென்றார். அவர் குற்றமில்லாதிருந்தும் எல்லா அவமானங்களையும் சுமந்துகொண்டு அமைதியாக இருந்தார்.

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53:7

  • யோவான் அதிகாரத்தில் கீழ்க்கண்டவாறு வாசிக்கிறோம்,

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். யோவான் 19:34-35. பாய்ந்து வந்த இந்த இரத்தம் எதைக் குறிக்கிறது?


1. பாவ மன்னிப்பு - இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. மத்தேயு 26:28


2. இயேசுவின் இரத்தத்தால் பாவ மன்னிப்பும் மீட்பும் நமக்கு உண்டு - அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. எபேசியர் 1:7


3. மரணத்திற்கு இட்டுச் செல்லும் பாவங்களிலிருந்து நம் மனச்சாட்சியை சுத்திகரிக்கிறது - நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரேயர் 9:14


4. இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமாகுதல் - உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 1:18-19


சாபமும் மரணமும் முறியடிக்கப்பட்டன


  • தேவனால் பாவத்தை சகிக்க முடியாது, அவர் பாவத்திற்கு எதிரானவர். நாம் யாராவது பாவம் செய்தால் நமக்கு எதிராக ஒரு சாபம் வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம், பாவத்தின் சாபம் உடைக்கப்பட்டது.

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.கலாத்தியர் 3:13-14

  • இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் சாத்தானின் வல்லமை யாவும் அகற்றப்பட்டுவிட்டன. அதனால்தான் சாத்தானை விரட்டுவதற்கு இயேசுவின் நாமத்தில் நமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோசெயர் 2:15. அதனால் தான், ஆவியானவரால் பாதுகாக்கப்படுகிறோம் என்ற நிச்சயம் நமக்கு இருக்கிறது. எனவே எந்த சூனியமும் மந்திர சக்தியும் தேவனின் பிள்ளைகளாகிய நம்மைத் தொட முடியாது.

  • இந்த உலகில் வாழும் போது நமக்கு பல காயங்களும் வடுக்களும் உண்டாகின்றன. நாம் இறந்து நித்தியத்திற்குச் செல்லும்போது, ​​அவை அனைத்தும் அகற்றப்பட்டு, நாம் பரிபூரணமாக ஆக்கப்படுவோம். ஆனால் நம் வாழ்வின் குணப்படுத்துதலை எளிதாக்க உதவும் வடுக்கள் இயேசுவிடம் உள்ளன.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5

  • மூன்றாம் நாள் சிலுவையில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் அவர் மரணத்தை வென்றார். மரணத்தினால் அவரைக் கட்ட முடியவில்லை.அதனால்தான் பவுல் ரோமர் 6:9 இல் “மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை” என்று எழுதுகிறார்.


அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17


மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. ரோமர் 6:9


தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. அப்போஸ்தலர் 2:24


பரிசுத்த ஆவியானவர்


  • இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்ததன் மூலம், நாம் ஒவ்வொருவரும் அவருடைய வல்லமையின் முதல் பலனாகிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டோம். அவர் தமது சீடர்களுக்கு இந்த வாக்குறுதியை அளித்தார்.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

  • பெந்தெகொஸ்தே நாளில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் அனைவருக்கும் தேவனின் வல்லமை கொடுக்கப்பட்டது.

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்போஸ்தலர் 2:1,4

  • நாம் இயேசு கிறிஸ்துவை நமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால், பாவம் நிறைந்த உலகத்தை எதிர்த்துப் போராடும் அதே வல்லமையைப் பெற்றுக் கொள்வோம்.

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11

  • இந்தப் பரிசுத்த ஆவியின் காரணமாக, தேவனை அப்பா, பிதாவே என்று அழைக்கும் புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருக்கிறோம்.

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். ரோமர் 8:15-16


எனவே, குற்றமற்றவராகவும், பாவமற்றவராகவும் இருக்கும் போது, ஒருவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று நீங்கள் நின்று யோசித்துப் பார்த்தால், அதற்கு பதில் "தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பு" தான்.


தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:16-17


பாவத்தினால் யாரும் அழிந்துவிடக் கூடாது என்ற அன்பின் நிமித்தம், இத்தனை பாடுகளுக்கும் தம்மை ஒப்புக் கொடுத்து, அவருடைய இரத்தத்தினாலும் ஆவியினாலும் நாம் மீட்கப்படுவதற்குத் தம்முடைய முதல் கனிகளை நமக்குக் கொடுத்தார்.


எனவே, உங்கள் வாழ்வில் கிறிஸ்துவின் இந்த நற்குணத்தை நீங்கள் விரும்பினால், இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேளுங்கள். பாவத்தில் இருந்து நம்மை சுத்திகரிப்பதன் மூலம் அவர் நம்மை ஆசீர்வதித்து, நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார்.








Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page