நாம் ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும்போது, நம்மில் பலர் புதிய வாய்ப்புகளையும் புதிய தொடக்கங்களையும் தேடுகிறோம். கடந்தகால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தாலும் அல்லது முயற்சிகள் குறைந்துவிட்டாலும் இன்னும், அவை புதிய தொடக்கங்களுக்கு வழி வகுக்கக்கூடும். சில நேரங்களில், தோல்விகள் எதிர்காலத்திற்கான எதிர்பாராத கதவுகளைத் திறக்கலாம்.
பவுல், சீலா, தீமோத்தேயு ஆகியோரின் அனுபவங்களிலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவர் ஆசியாவில் பிரசங்கிப்பதிலிருந்து அவர்களைத் தடுத்தது, மூடிய கதவுகள் பெரிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து, இந்த மூடப்பட்ட கதவைப் பற்றி வாசிக்கலாம்.
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி, அப்போஸ்தலர் 16:6-10
பவுலையும் சீலாவையும் தீமோத்தேயுவையும் பரிசுத்த ஆவியானவர் தடுத்த சரியான வழி தெளிவாக விவரிக்கப்படவில்லை. "வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு" என்ற சொற்றொடர் குறிப்பாக நற்செய்தியைக் குறிக்கிறது. ஏதோ ஒரு வகையில், ஆவியானவர் ஊழியர்களுக்கு இந்த நேரத்தில் (தேவன் அனுமதிக்கும் நேரம் வரை) இந்த பிராந்தியங்களில் பிரசங்கிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
இருப்பினும், ஆசியாவில் இருந்த இழந்து போன ஆத்துமாக்களை தேவன் புறக்கணிக்கவில்லை. இந்தப் பகுதிகள் பிற்பாடு எபேசு, சிமிர்னா, பிலதெல்பியா, லவோதிக்கேயா, கொலோசெ, சர்தை, பெர்கமு, தியத்தீரா உள்ளிட்ட பல நகரங்களில் தேவாலயங்களின் தாயகமாக மாறியது.
மூடிய கதவு என்பதற்கு அது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல - அந்த நேரத்தில், "கதவு" பவுலுக்கு மூடப்பட்டது.
ஆசியா பற்றிய குறிப்பு : புதிய ஏற்பாட்டில், "ஆசியா என்பது ஆசியாவின் ரோமானிய மாகாணத்தைக் குறிக்கிறது, இது நவீன ஆசியா மைனரின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதி பிரிஜியா மற்றும் கலாத்தியாவுக்கு மேற்கே அமைந்திருந்தது.
சிந்தனை : பவுல் தடையின் மூலம் வழிநடத்துதலை அனுபவித்தார். பரிசுத்த ஆவியானவர் பெரும்பாலும் கதவுகளைத் திறப்பதன் மூலம் மட்டுமல்ல, அவற்றை மூடுவதன் மூலமும் வழிநடத்துகிறார்.
டேவிட் லிவிங்ஸ்டன் சீனாவுக்குச் செல்ல விரும்பினார், ஆனால் ஆண்டவர் அவரை ஆப்பிரிக்காவுக்கு வழிநடத்தினார்.
வில்லியம் கேரி பாலினேசியா செல்ல திட்டமிட்டார், ஆனால் ஆண்டவர் அவரை இந்தியாவிற்கு அனுப்பினார்.
அதோனிராம் ஜட்சன் ஆரம்பத்தில் இந்தியாவுக்குச் சென்றார், ஆனால் ஆண்டவர் அவரை பர்மாவுக்கு அழைத்துச் சென்றார்.
தேவன் தம்முடைய சபையை ஊழியத்திற்கான சரியான இடத்திற்கு எவ்வாறு வழிநடத்துகிறார்?
பூட்டப்பட்ட கதவுகளும் இருக்கும், திறந்த கதவுகளும் இருக்கும். உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 3:8
தனிநபர்களுக்கும் முழு குழுவிற்கும் வழிகாட்டுதல் இருக்கும்.
சூழ்நிலைகள் மூலமாகவும், சில சமயங்களில் அசாதாரணமான சூழ்நிலைகள் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் சூழ்நிலைகளை மதிப்பிடுவதில் பகுத்தறிவைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் வழிநடத்துதல் இருக்கும்.
மகத்தான கட்டளைக்கு கீழ்ப்படிந்து, ஏற்கனவே பாதையில் இருப்பவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட வழிகாட்டுதல் வரும்.
"தேவன் ஒரு கதவை மூடும்போது, அவர் ஒரு ஜன்னலைத் திறக்கிறார்" என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இருப்பினும், எப்போதும் அப்படி இருக்காது.
நாம் ஆழமாக விரும்பும் ஒரு விஷயத்திற்கு தேவன் கதவை மூடக்கூடும், ஏனென்றால் அவரிடம் அதைவிடவும் மிகச் சிறந்த ஒன்று உள்ளது. அவரது சிறந்தது எப்போதும் எந்தவொரு திறந்த ஜன்னலையும் விட பெரியது.
மூடிய கதவை எதிர்கொள்ளும்போது, "ஏன் ஆண்டவரே?" என்று கேட்பதே இயல்பான மறுமொழியாக இருக்கும். ஆனாலும், அப்போஸ்தலர் 16 இல், தேவன் ஒரு ஊழியக் கதவை மூடியபோது, அப்போஸ்தலனாகிய பவுல் அவருடைய நியாயத்தையோ, நேரத்தையோ ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை.
இதைக் குறித்து பவுல் ஒருவேளை ஆச்சரியப்பட்டிருக்கலாம். ஆனாலும், அவர் எதையும் வெளிப்படுத்தவில்லை, தேவனுடைய ஞானத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்தார் (அப்போஸ்தலர் 16:7-8).
பவுலும் அவரோடிருந்தவர்களும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதலின் மூலம் பதிலளித்தனர்.
நீங்கள் ஒரு மூடிய கதவை எதிர்கொள்ளும்போது, கர்த்தரிடம் திரும்பி, அவருடைய வழிகாட்டுதலைத் தேடுங்கள், உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை ஒப்புக்கொடுங்கள். அது கடினமாக இருந்தாலும், சூழ்நிலைக்கான அவரது திட்டத்தை நம்புங்கள்.
பவுலின் ஊழியத்திற்காக தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார், ஆனால் அந்தச் சமயத்தில், பித்தினியா அதில் அடங்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, அவர் மக்கெதோனியா செல்ல கதவு திறந்தது, இது மிகப் பெரிய பணிக் களமாகும்.
அவருடைய தாமதங்கள் பெரும்பாலும் பெரிய ஆசீர்வாதங்களுக்கு முந்தியவை. அவரது மறுப்புகள் நம்மைப் பாதுகாக்கின்றன, காத்திருக்கும்படி அவர் நம்மிடம் கேட்கும் நேரங்கள் நமது விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளாகும்.
உங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அவருடைய நேரத்திற்காக பொறுமையாக காத்திருங்கள், நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். பொறுமை என்பது நமது விசுவாசத்தைக் கூர்மைப்படுத்துவதற்கான ஒரு பயிற்சிக் களம். நாம் காணும் சூழ்நிலைகளால் அல்ல, விசுவாசத்தில் அவரைக் காண வேண்டும்.
பவுலின் பூட்டப்பட்ட கதவு அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து பாடங்கள்
பரிசுத்த ஆவியானவர் பவுலையும் உடனிருந்த ஊழியர்களையும் திறந்த வாசல்களின் வழியாக மட்டுமல்ல, அவற்றை மூடுவதன் மூலமும் வழிநடத்தினார். அப்போஸ்தலர் 16:6-7 இல் இரண்டு முறை காணப்படுவது போல, தேவனின் வழிநடத்துதல் அடிக்கடி தடையின் மூலம் வருகிறது என்பதை நடந்த இந்த தொடர் விஷயங்கள் நிரூபிக்கின்றன.
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அப்போஸ்தலர் 16:6-7
முதல் உதாரணம் : 6 ஆம் வசனத்தில், பரிசுத்த ஆவியானவர் ஆசிய மாகாணத்தில் பிரசங்கம் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்தார்.
இரண்டாவது உதாரணம் : 7 ஆம் வசனத்தில், அவர்கள் மீசியாவின் எல்லைக்கு வந்தபோது, இயேசுவின் ஆவியானவர் அவர்களை பித்தினியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்தார்.
இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஐந்து பாடங்கள்
1. தேவனை கேள்வி கேட்காமலிருத்தல்
இந்த சூழ்நிலைகளில் நமது இயல்பான மறுமொழி, "ஏன் தேவனே பூட்டினீர்கள்?" என்பதாகத் தான் இருக்கும்.
பூட்டப்பட்ட கதவுகளை எதிர்கொண்டபோது, பவுலும் அவரோடிருந்தவர்களும் கேள்வி கேட்கவோ குறை சொல்லவோ இல்லை. மூடிய ஒரு கதவிலிருந்து மற்றொன்றுக்கு நகர்ந்தாலும், ஆவியானவரின் வழிநடத்துதலில் நடப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
2. தேவனின் ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்
அவர்களின் ஞானம் vs தேவனின் ஞானம் - தேவனுடைய தரிசனத்தின் மூலம் வந்த தேவனுடைய ஞானத்தை அவர்கள் நம்பத் தேர்ந்தெடுத்தனர்.
3. உடனடி கீழ்ப்படிதல் மற்றும் பொறுமையான காத்திருப்பு
தேவன் வழிநடத்துதலைக் கொடுத்தபோது, அவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்கள். முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டியது - போகச் சொன்னால் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்கள், காத்திருக்கச் சொன்னால் காத்திருந்தார்கள்.
தரிசனத்தின் மூலம் வழிகாட்டுதல் கிடைத்தவுடன், காத்திருக்காமல் உடனடியாகக் கீழ்ப்படிந்தனர். (உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி), - அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக் கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி - அப்போஸ்தலர் 16:10
அவர்கள் சாமோத்திராக்கே தீவில் காத்திருக்கவில்லை, மறுநாளிலே புறப்பட்டனர் - துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,அப்போஸ்தலர் 16:11
அவர்கள் பிலிப்பி பட்டணத்துக்கு சென்று, அங்கே பல நாட்கள் காத்திருந்தார்கள் - அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். அப்போஸ்தலர் 16:12
4. தேவனின் எதிர்பாராத திட்டங்கள் (அப்போஸ்தலர் 16:17-38)
பிலிப்பி பட்டணத்தில், அவர்கள் ஜெபிக்கச் சென்றிருந்த ஆற்றின் அருகே தேவனை வணங்குகிறவளாகிய லீதியாளைச் சந்தித்தனர் (அப்போஸ்தலர் 16:13-15). அவர்களை ஜெபம் செய்யும் இடத்திற்கு வழிநடத்துவது மட்டுமல்ல, லீதியாளையும் அவளுடைய வீட்டாரையும் விசுவாசத்திற்குக் கொண்டுவருவதும் அவருடைய திட்டமாக இருந்தது.
அவர்கள் லீதியாளை ஆற்றின் அருகே சந்தித்தார்கள் - நாம் ஒருபோதும் நினைக்காத இடங்களுக்கு, தம் மக்களை அனுப்ப தேவன் அசாதாரணமான வழிகளில் செயல்படுகிறார், அவர்கள் ஜெபிப்பதற்காக அங்கு சென்றனர். ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். அப்போஸ்தலர் 16:13
ஆனால் அவர்களை அந்தப் பெண்ணிடம் பேச வைக்க அவர் வேறு திட்டங்களைக் கொண்டிருந்தார். அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். அப்போஸ்தலர் 16:14-15
இந்த இடத்தில் தான் பிலிப்பி பட்டணத்தின் விசுவாசிகளுக்கு பிலிப்பியர் புத்தகம் எழுதப்பட்டது. அப்போஸ்தலர் 16:17-38
5. பிலிப்பி சிறையில் நடந்த மாற்றம் (அப்போஸ்தலர் 16:16-40)
சிறையில் நடந்த கதையில் தேவனின் வழிகள் கற்பனையாக இருக்க முடியாது. பிலிப்பி பட்டணத்தில் குறி சொல்லும் அடிமை ஒருத்தி அவர்களுக்கு எதிர்பட்டாள். அவள் சத்தமிடுவதைக் கேட்டு பவுல் மிகவும் கோபமடைந்து, அவளிடத்தில் இருந்த ஆவியை வெளியே வரும்படி கடிந்துகொண்டார். இந்தக் காரியம் அவரை சிறையில் தள்ளியது.
சிறையில் நடந்த மாற்றம்
அவர்கள் கடுமையாக சாட்டையால் அடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர் - அவர்கள் ஒருபோதும் கசையடியைக் குறித்தோ சிறையில் தள்ளப்பட்டதைக் குறித்தோ புகார் கூறும் நிலையில் இருக்கவில்லை. நள்ளிரவில் துதிப்பாடல்களைப் பாடி தேவனை தொழுது கொண்டார்கள். பவுலிடமிருந்து நாம் எவ்வளவு பெரிய பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். சவால்கள் நம் வழியில் வரும்போது சோர்ந்து விடுகிறோம், ஆனால் அவர்கள் எதிர்மாறாக இருந்தனர், தேவனைத் துதித்துப் பாடினார்கள்.
ஜெபிக்கவும் செய்தனர் - அவர்களின் ஜெபம் ஒரு நிலநடுக்கத்தை அனுப்பியது - அவர்கள் அதோடு நிற்காமல் அதையே தொடர்ந்து செய்தார்கள் - அவர்களிடம் என்ன ஒரு விசுவாச மனப்பான்மை இருந்தது.
சிறைக் கதவுகள் அனைத்தும் திறந்தன - அவர்கள் ஓடவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நேர்மையைத்தான்.
அவர்கள் அங்கேயே நின்று சிறைச்சாலைக்காரனைப் பார்த்தார்கள் - அவன் பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போன போது, தப்பி ஓடுவதற்குப் பதிலாக அவனைக் காப்பாற்றினார்கள். பவுல் தானும் தன்னோடிருந்த அனைவரும் அங்கு இருப்பதாக அவனுக்கு உறுதியளித்தார்.
அவர்கள் சிறைச்சாலைக்காரனை விரக்தியிலிருந்து காப்பாற்றி, அவனையும் அவனுடைய குடும்பத்தாரையும் இரட்சிப்புக்கும் ஞானஸ்நானத்திற்கும் வழிநடத்தினார்கள்.
சாட்டையால் அடித்த அதே சிறைச்சாலைக்காரன், இப்போது, காயங்களைக் கழுவி, நன்றாக கவனித்துக் கொண்டான். இது தான் சுவிசேஷத்தின் வல்லமை. மறுநாள் அதிகாரப்பூர்வ உத்தரவு வந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
தேவனுடைய மூடிய கதவுகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அவர் சரியானதையும் தம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் நன்மையானதையும் செய்வார்.
சுருக்கம்
அநேக சமயங்களில், தேவனுடைய சித்தத்தைப் பகுத்தறிவதற்கு நாம் போராடுகிறோம், ஏனென்றால் அது சில சமயங்களில் அவருடைய நோக்கத்துடன் ஒத்துப்போவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த உணர்வுகளால் பாதிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மூடிய கதவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால், தேவன் நம்மை முன்னேற அனுமதிக்கவில்லை என்று நாம் புகார் செய்யக் கூடும். ஆகையால், இந்த அனுபவத்தைக் கடந்து வந்த தேவ மனிதர்களை நோக்கிப் பார்த்து, அவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வது அவசியம். ஒரு உதாரணம் கிறிஸ்தவ சுவிசேஷகர் ஜார்ஜ் முல்லர், அவர் மிகப்பெரிய சுவிசேஷகர்களில் ஒருவர் மற்றும் விசுவாசமுள்ள மனிதர். தேவனுடைய சித்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பற்றிய அவரது வழிகளைப் புரிந்துகொள்வது நமது மூடிய கதவுகளைத் திறக்கக் கூடும்.
ஜார்ஜ் முல்லரின் பணியின் சுருக்கம்(bio..)
ஜார்ஜ் முல்லர் (1805-1898) ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் மற்றும் கொடையாளி ஆவார், இங்கிலாந்தில் ஆதரவற்றோர் இல்லங்களை நிறுவி நடத்துவதில் அவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானவர். அவர் தனது வாழ்க்கையை ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களைப் பராமரிப்பதற்காக அர்ப்பணித்தார். அவர் ஜெபத்தையும் தேவனுடைய ஏற்பாட்டின் மீதான விசுவாசத்தையும் மட்டுமே சார்ந்திருந்தார். முல்லர் தேவனின் வழிகாட்டுதலின் மீதான ஆழ்ந்த நம்பிக்கைக்காகவும் புகழ் பெற்றவர். ஜெபத்தின் வல்லமைக்கான அவரது அர்ப்பணிப்பு கிறிஸ்தவ விசுவாசத்தில் குறிப்பிடத்தக்க நபராக ஆக்கியது, அதிலும் குறிப்பாக, விசுவாச அடிப்படையிலான தொண்டு மற்றும் ஊழியத்தின் பகுதிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நபராக மாறினார். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் அதன்படி நடக்கவும் நாடுகிற நிறைய பேருக்கு அவருடைய வாழ்க்கை தூண்டுதலாக இருக்கிறது.
முல்லரும் அவரது மனைவியும் ஆதரவற்ற குழந்தைகளுடன் பணிபுரிவது 1836 ஆம் ஆண்டில், முப்பது சிறுமிகள் தங்குவதற்காக பிரிஸ்டலில் வில்சன் தெருவில் தாங்கள் இருந்த 6ஆம் நம்பர் வாடகை வீட்டை தயார் செய்ததன் மூலம் தொடங்கியது. விரைவில், வில்சன் தெருவில் மேலும் மூன்று வீடுகள் சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்கள் மற்றும் இளைய குழந்தைகளுக்கும் தயார் செய்யப்பட்டன. இறுதியில் பராமரிக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்தது.
முல்லர் ஒருபோதும் குறிப்பிட்ட நபர்களிடமிருந்து நன்கொடைகளை நாடவில்லை, தனது அனைத்து தேவைகளுக்கும் சர்வவல்லவரையே நம்பியிருந்தார். அவர் தனது சட்டைப் பையில் இரண்டு ஷில்லிங் 50 சென்ட்களுடன் பணியைத் தொடங்கினார்; ஆனால், தனது தேவைகளை மனிதர்களுக்குத் தெரியப்படுத்தாமல், அறுபது ஆண்டுகளாக பெரிய கட்டிடங்களை எழுப்புவதற்கும், ஆதரவற்றோர்களுக்கு அன்றாடம் உணவளிக்கவும் தேவையான வழிவகைகளை ஜெபத்திற்குப் பதிலாகப் பெற்றார். அந்த சமயங்களில் எல்லாம் ஒரு பொழுதும் குழந்தைகள் சாப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை, அவர்கள் எப்போதாவது சாப்பிடாமல் இருக்க வேண்டியிருந்தால், இந்தப் பணியைத் தொடர கர்த்தர் விரும்பவில்லை என்பதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொள்வேன் என்று திரு.முல்லர் கூறினார். சில சமயங்களில் உணவு நேரம் நெருங்கிவிடும் ஆனால், உணவு எங்கிருந்து வரும் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முல்லர் அந்த இல்லங்களுக்குப் பொறுப்பேற்றிருந்த இருபதாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் தேவன் எப்போதும் அதை சரியான நேரத்தில் அனுப்பினார்.
இந்த விசுவாச மனிதன் இதை எப்படி ஜெயித்தார்? தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தேவனுடைய சித்தத்தை கண்டறிவதற்கான இந்த ஆறு நடைமுறை வழிகளை அவர் பரிந்துரைக்கிறார்.
1. உங்கள் சுய விருப்பத்தை ஒப்புக்கொடுங்கள்
தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை, நீங்களே செய்து கொடுங்கள் என்று சொல்லி உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் அனைத்தையும் தேவனிடம் ஒப்புக் கொடுங்கள். இது 90% பிரச்சினைகளை நீக்குகிறது.
இந்த நிலையில், அவருடைய சித்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது வெகு தொலைவில் இல்லை.
2. உணர்வுகளை சார்ந்து இருக்காதீர்கள்
இதைச் செய்த பிறகு, முடிவை உணர்விற்கோ அல்லது எளிய அபிப்ராயத்திற்கோ விட்டுவிடாதீர்கள், அவ்வாறு செய்வது குழப்பத்திற்கும் ஏமாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
3. தேவனுடைய வார்த்தையின் மூலம் ஆவியானவரின் சித்தத்தைத் தேடுங்கள்
தேவனுடைய வார்த்தையின் மூலமாக அல்லது அதன் தொடர்புடன் ஆவியானவரின் சித்தத்தைத் தேடுங்கள்.
ஆவியும் வார்த்தையும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். வார்த்தை இல்லாமல் ஆவியானவரை மட்டுமே சார்ந்திருப்பது நம்மை மாயைக்கு ஆளாக்குகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தினால், அவர் எப்போதும் வேதவாக்கியத்தின்படியே செய்வார்,ஒருபோதும் அதற்கு முரணாக இல்லை.
4. தெய்வீக சூழ்நிலைகளைக் கவனியுங்கள்
தெய்வீக சூழ்நிலைகள் என்பது தேவனின் தலையீட்டால் அல்லது அவரது சித்தத்தால் வழிநடத்தப்படுவதுபோல் தோன்றும் சம்பவங்கள் அல்லது சூழ்நிலைகளைக் குறிப்பிடுகின்றன. அவை தற்செயலாகவோ அல்லது எதிர்பாராததாகவோ தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஒரு பெரிய தெய்வீக திட்டத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றன.
நாம் உடனடியாக புரிந்து கொள்ளாவிட்டாலும், கிறிஸ்தவ சிந்தனையில், இந்த சூழ்நிலைகள் தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற திரைக்குப் பின்னால் செயல்படுவதை பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.
தேவனுடைய வார்த்தையின் மூலமும் ஆவியின் மூலமும் வெளிப்படுத்தப்பட்ட அவரது சித்தத்தோடு ஒத்துப்போவதால் தெய்வீக சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி அவர் நம்மைக் கேட்கிறார்.
5. ஜெபியுங்கள்
தேவனுடைய சித்தத்தை தெளிவாகவும் சரியாகவும் வெளிப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள்.
6. காத்திருங்கள்
இறுதியாக, அவருடைய நேரத்துக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் காத்திருங்கள். பொறுமையே முக்கிய நல்லொழுக்கம், ஏனெனில் அது உங்கள் சுயத்திற்குப் பதிலாக அவரை சார்ந்திருப்பதை உள்ளடக்கியது. தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பது என்பது இதன் பொருள். நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2 கொரிந்தியர் 5:6
நீங்கள் இந்தப் புதிய ஆண்டைத் தொடங்கும்போது, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு இதைப் பொருத்திப் பாருங்கள், கடந்த காலத்தின் மூடிய கதவுகள் அனைத்தும் உங்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கும், மேலும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கான தேவனுடைய திட்டத்தில் நாம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவோம்.
Comments