40 நாட்கள் வனாந்தரத்தில் இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட கதையைப் படிக்கும்போது, லூக்கா கர்த்தராகிய இயேசுவை குற்றமற்ற மனிதராகவும் நாம் பின்பற்ற வேண்டிய மாதிரியாகவும் முன்வைக்கிறார். வனாந்தரத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள, சோதனைக்கு முன்பும், சோதனைக்குப் பிறகும் கவனிக்க வேண்டும். நாம் நமது கவனத்தை சாத்தான் மீது வைக்காமல் பரிசுத்த ஆவியானவரின் மீது வைக்க வேண்டும். சோதனைக்கு முன்னும், பின்னும், சோதனையிலும் கிறிஸ்துவின் பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வனாந்தரத்தில் இயேசுவின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல வேதாகமப் பாடங்கள் உள்ளன. இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள,பாடுகள் மற்றும் சோதனை பாடங்களின் ஒரு பரிமாணத்தை நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.
லூக்கா 4:1-14
இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான். பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
சோதனைக்கு முன்னும் / பின்னும் / நடுவிலும்
இயேசு வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், ”இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,” என்று வார்த்தை கூறுகிறது. “கொண்டுபோகப்பட்டு” என்ற வார்த்தைக்கு யாரோ வழிநடத்துகிறார்கள் என்று அர்த்தம். இயேசு விருப்பமில்லாமல் சென்றார் என்று அர்த்தம் இல்லை, ஆனால் சாத்தானுடனான இந்த மோதல் தற்செயலாக நடக்கவில்லை என்பதை இது குறிக்கிறது. நாம் இதை இவ்வாறு சிந்திக்க வேண்டும்: ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்கும், வனாந்தரத்தின் வழியாகவும், வனாந்தரத்திற்கு வெளியேயும் அழைத்துச் சென்றார். பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விட்டு ஒரு கணமும் விலகவில்லை. உடல் ரீதியாக பலவீனமான நிலையில் கூட, இயேசு பிசாசை எதிர்கொண்டபோது அவர் மீது பரிசுத்த ஆவியானவர் இருந்தார்.
இயேசுவின் சோதனையைப் பற்றி அடிக்கடி இரண்டு தவறான அனுமானங்கள் செய்யப்படுகின்றன:
தவறான அனுமானம் #1: "இயேசு வனாந்தரத்தில் சோதனைகளினால் மிகவும் வேதனைப்பட்டார்"
பிசாசின் சோதனைகளால் இயேசு மிகவும் வேதனைப்பட்டார் என்று நாம் தவறாக நினைக்கிறோம். ஆனால் வசனம் அப்படி கூறவில்லை. பிசாசு அவரைத் தூண்டிய போது, இயேசு உடனடியாக ஒவ்வொரு முறையும் தேவனுடைய வார்த்தையால் அவனைத் தோற்கடித்தார்.
பிந்நாளில், இயேசு கெத்செமனே தோட்டத்தில், மரணத்தை வெல்வதற்காக, பாவங்களின் கோபத்தினிமித்தம், அவர் பிதாவால் கைவிடப்படும்போது ஆத்துமாவில் வேதனையை அனுபவித்தார். அது தான் உண்மையான வேதனை.
வனாந்தரத்தில் நடந்தது ஒரு உண்மையான சோதனை, ஆனால் இயேசு அதற்காக வேதனைப்படவில்லை. "உன்னால் முடிந்ததைக் கொண்டு என்னை அடி" என்று அவர் பிசாசிடம் சொன்னது போல் இருந்தது. பின்னர் அவர் "உன்னிடம் உள்ளதெல்லாம் அவ்வளவுதானா?" என்று பதிலளித்தார்.
தவறான அனுமானம் #2: "முழு சூழ்நிலையையும் பிசாசு கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்"
முழு சூழ்நிலையையும் பிசாசு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக நாம் தவறாக நினைக்கிறோம்.
வேதத்தை மேலோட்டமாகப் படிப்பது அந்த முடிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். ஆனால், பிசாசுடன் போரிடுவதற்காக ஆவியானவர் வேண்டுமென்றே இயேசுவை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதை சூழல் தெளிவாக்குகிறது.
இயேசு இந்த வனாந்தர போரில் இருந்து பின்வாங்கவில்லை. வனாந்தரத்திற்கு சென்றதன் மூலம், இயேசு தம்முடைய எதிரியைத் துடைத்தழித்து, அவனை “ஒரு மனிதனைப் போலப் போராட” செய்தார். இதன் மூலம், பிசாசு தேவனுடைய குமாரனால் எளிதில் தோற்கடிக்கப்பட்டான் என்பது அம்பலமானது.
சிறிது நேரம் ஒதுக்கி, 1 ஆம் வசனத்தை 14 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
முதல் வசனத்தில் “இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய்” என்று ஆரம்பித்து, 14 ஆவது வசனத்தில், சோதனைகளுக்குப் பிறகு “இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே” என்று முடிகிறது. இரு வேறு அனுபவங்கள் :
இயேசு வனாந்தரத்திற்குச் சென்றபோது “ஆவியால் நிறைந்திருந்தார்”.
இயேசு வனாந்தரத்திலிருந்து "ஆவியானவருடைய பலத்தோடு" வெளியே வந்தார்.
நமக்கு சோதனைகள் ஏன் தேவை?
இந்த அனுபவத்திலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கொள்கை என்னவென்றால், தேவன், நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய வல்லமையை வெளிப்படுத்த சோதனையைப் பயன்படுத்துகிறார். ஒருமுறை மார்ட்டின் லூதர் அவர்கள் தேவ ஊழியக்காரரை உருவாக்குவதற்கு மூன்று விஷயங்கள் தேவை என்று குறிப்பிட்டார்.
தியானம் ... ஜெபம் ... சோதனை
முதலாவது தேவனுடைய வார்த்தையை தியானிப்பதைக் குறிக்கிறது.
இரண்டாவது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் அவர் கூறும் "சோதனை" என்பதன் அர்த்தம் என்ன? நாம் பிசாசைத் தேடிச் சென்று சண்டையிட வேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்துகிறாரா? அப்படி இல்லை. ஆனால் நமது ஆவிக்குரிய போர்களில் இருந்து நாம் விலகி ஓடவும் கூடாது.
தேவன் நம்மைச் சோதிக்கலாம், ஆனால் ஒருபோதும் தீமை செய்யத் தூண்டமாட்டார் (எபிரேயர் 11:17)
விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் இறைவன் அவனைச் சோதித்தபோது, ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினான். வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டவன் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தான். எபிரேயர் 11:17
வலுவான சோதனைகளை எதிர்கொள்ளாமல் யாரும் ஆவியில் வளர முடியாது.
"சோதனை" என்ற வார்த்தையை "பாடுகள்" என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறேன். நம்மில் பெரும்பாலோருக்கு சோதனை என்பது தீமை செய்ய ஒரு கோரிக்கை.
ஆனால், கோபத்திற்கு அடிபணியும் போது, நிதானம் இழக்கும் போது, வாக்குறுதிகளை மீறும் போது, நமது மதிப்புகளை சமரசம் செய்யும் போது, நம் நேர்மையை இழக்கும் போது, நாம் நம்புகிறதற்கு எழுந்து நிற்காமல் கோழைகளைப் போல ஒளிந்து கொள்ளும் போது, எந்த பாடும் ஒரு சோதனையாக மாறும். அப்பொழுது நாம் பாவத்தின் சோதனையில் விழுகிறோம்.
நாம் இதை இப்படிச் சொல்லலாம்: ஒரே நிகழ்வு பெரும்பாலும் ஒரு பாடாகவும் சோதனையாகவும் இருக்கும். தேவன் நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்காகக் கொடுப்பதை, சாத்தான் எப்போதும் ஒரு சோதனையாகப் பயன்படுத்துகிறான். அதே நிகழ்வு உங்களுக்கு ஒரு பாடாகவும், பரீட்சையாகவும் சாத்தானின் சோதனையாகவும் இருக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு காரியத்தை நிறைவேற்ற ஆண்டவர் அதைப் பயன்படுத்துகிறார், அதே நேரத்தில் சாத்தான் அந்த நிகழ்வின் மூலம் முற்றிலும் எதிர்மாறான ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறான். இது கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஆவிக்குரிய கொள்கை.
பெரும்பாலும் தேவன் ஒரு நேர்மறையான நோக்கத்திற்காக சோதனை வர அனுமதிக்கிறார், ஆனால் சாத்தான் தனது சொந்த தீய காரணங்களுக்காக அதை பயன்படுத்த முயற்சிக்கிறான்.
பிசாசு வனாந்தரத்தில் இயேசுவிடம் வந்து அவருடைய பரலோகத் தகப்பனுக்குக் கீழ்ப்படிவதற்கான பாதையிலிருந்து விலகிச் செல்லும்படி அவரைத் தூண்டினான் என்று நாம் அறிவோம். “இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,” என்று லூக்கா 4:1 கூறுகிறது. யார் வழிநடத்தினார்கள்? பரிசுத்த ஆவியானவர். யார் தூண்டியது? சாத்தான். இங்கு முரண்பாடு உள்ளதா? இல்லவே இல்லை. தம் குமாரனை வனாந்தரத்திற்கு அனுப்பும்போது என்ன நடக்கப் போகிறது என்று தேவனுக்குத் தெரியுமா? ஆம். அவருக்குத் தெரியும். சாத்தானின் கவர்ச்சியான கூற்றுகளுக்குத் தம் குமாரன் அடிபணிய மாட்டார் என்பதை ஆரம்பத்திலிருந்தே அவர் காட்ட எண்ணினார். தேவன் தமது சொந்த குமாரனை சோதித்தாரா? இல்லை. அவர் தமது குமாரனை பிசாசு சோதிக்கக்கூடிய இடத்தில் வைத்தாரா? இதற்கான பதில் ஆம் என்று தான் இருக்க வேண்டும்.
பாடுகள் எப்படி சோதனைகளாக மாறுகின்றன?
தேவன் ஒருபோதும் தம் பிள்ளைகளை பாவம் செய்ய கோரமாட்டார். சாத்தானிடமிருந்து கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளும் இடத்திற்குச் செல்ல அவ்வப்போது தமது பிள்ளைகளை அவர் அனுமதிக்கிறார் என்பதும் உண்மைதான். கடுமையான சோதனைக்கு அவர் காரணமா? இல்லை, அவர் காரணம் இல்லை. அவர் வழிநடத்துகிறார். சாத்தான் தூண்டுதலைச் செய்கிறான். அவருடைய பார்வையில் இது ஒரு பரீட்சை. சாத்தானின் பார்வையில் இது ஒரு சோதனை.
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த மாதிரி ஏற்படுவதை நாம் காண்கிறோம். தேவன் ஒரு பரீட்சையை அனுப்புகிறார், சாத்தான் அதை ஒரு சோதனையாக மாற்றுகிறான். ஒரு தேவ பிள்ளை ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த நோய் அவருடைய சோதனையாக இருக்க முடியுமா? ஆம், முடியும். தேவ பிள்ளையை பூமியில் உள்ள விஷயங்களை விட்டு பரலோகத்தின் விஷயங்களைப் பார்க்க வைப்பதற்கும், பார்வையை அவரிடம் திருப்புவதற்கும், நோக்கங்களைச் சுத்திகரிப்பதற்கும் இது எப்போதும் அவரிடம் இருந்து வரும் ஒரு சோதனையாகும். விசுவாசிகளின் வாழ்க்கையில் வியாதிகளின் மூலம் பல நல்ல காரியங்கள் நிறைவேற்றப்படுகின்றன. சாத்தான் வியாதியின் மூலம் வேலை செய்கிறானா? ஆம். அதே வியாதியின் மூலம் சாத்தான் உங்களை விரக்திக்கும், கோபத்திற்கும், கசப்பிற்கும், இறுதியில் கர்த்தரை விட்டு விலகுவதற்கும் தூண்டிவிடுகிறான். உங்கள் ஆவிக்குரிய நன்மைக்காக தேவன் விரும்பும் வழியையே உங்களை கீழே இழுக்க சாத்தான் பயன்படுத்துகிறான்.
ஒரு வேளை, உங்கள் வேலையை இழக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். "அது தேவனுடைய செயலாக இருக்க முடியுமா?" என்று கேட்கலாம். ஆம், இருக்கலாம். நீங்கள் உங்கள் வேலையை இழந்தால், அவர் உங்களுக்காக ஒரு சிறந்த நோக்கத்தை மனதில் வைத்திருக்க முடியுமா? ஆம், அவர் அடிக்கடி அப்படி செய்கிறார். அவர் உங்களுக்கு ஒரு சிறந்த வேலையைக் கொண்டிருக்கலாம். அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் சில ஆவிக்குரிய குணங்களை உருவாக்க விரும்புகிறார். உலகின் சில விஷயங்கள் உங்களுக்கு விக்கிரகமாக மாறும் அளவுக்கு நீங்கள் அவற்றை நேசித்திருக்கலாம். அப்படி இருக்கும் போது, நீங்கள் ஒரு நல்ல வேலையை இழப்பது நல்லது. தேவனிடம் இருந்து வரும் அந்த சோதனையின் போது, சாத்தான் உங்களை கோபம், விரக்தி மற்றும் மனச்சோர்விற்கு தூண்டுவான்.
இது இன்னொரு வழியிலும் செயல்படுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளத்தில் நல்ல உயர்வு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் பொருளாதார ரீதியாக எப்போதும் இருந்ததை விட சிறப்பாக இருக்கிறீர்கள். பதவி உயர்வு என்பது தேவனுடைய சோதனையாக இருக்க முடியுமா? முற்றிலும் இருக்க முடியும். செழிப்பு என்பது பெரும்பாலும் அவருடைய ஆசீர்வாதங்களை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள் என்பதைப் பார்ப்பதற்கான சோதனையாகும். ஆசீர்வாதத்தை தேவையுள்ளவர்களின் காரியத்தில் நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதை அவர் பார்க்கிறார். அதிகமாக இருப்பது நம்மை விட குறைவாக உள்ளவர்களுக்கு நம் கண்களைத் திறக்க வேண்டும். ஆனால் அதே செழிப்பு பெரும்பாலும் நம்மை பேராசை கொண்டவர்களாகவும், சுயநலவாதிகளாகவும், வசதியற்றவர்களிடம் பார்வையற்றவர்களாகவும் ஆக்குகிறது.
சுருக்கம்
சோதனைகளும் பாடுகளும் கிறிஸ்தவ வாழ்வின் இயல்பான பகுதியாகும். அவை நம் ஒவ்வொருவருக்கும் தேவன் வைத்திருக்கும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவர் ஒவ்வொரு நாளும் கடினமான தேர்வுகளை நம் முன் வைக்கிறார். அவரைப் பின்தொடர்வதன் மூலமும், அந்தச் சூழ்நிலைகளில் அவரை விசுவாசிப்பதன் மூலமும் நாம் பலப்படலாம்.
உங்கள் விசுவாசம் உறுதிப்படுத்தப்பட்டு, உலகம், மாம்சம் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது வெற்றி பெற்ற மனிதராக பிறருக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க உங்களால் எதுவும் செய்ய முடியாது. கிருபை என்னும் பள்ளியில், சோதனைகள் இல்லாத பட்டப்படிப்பை தேவன் வழங்குதில்லை. நாம் அனைவரும் பல முறை பல வழிகளில் சோதிக்கப்படுகிறோம்.
நாம் தவறாக பதிலளிக்கும்போது, ஒரு பாடு ஒரு சோதனையாக மாறிவிடும். நம்மைப் பலப்படுத்துவதற்காக நம் வாழ்வில் அனுப்பப்பட்டவைதான், நாம் மாம்சத்தின் பலத்தில் பதிலளிக்கும்போது, உண்மையில் நம்மைக் கிழித்து, நம்மை பலவீனப்படுத்துகிறது. தேவன் நினைக்கும் நன்மையானதை, சாத்தான் தீமைக்கென்று நினைக்கிறான்.
இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தால், பிதா அவரை ஏன் பிசாசினால் சோதிக்கப்படும் இடத்தில் வைத்தார்? இந்த வரிசையைக் கவனியுங்கள்:
அவர் சோதிக்கப்படுவதற்காக, வழிநடத்தப்பட்டார்.
அவர் தயார் செய்யப்படுவதற்காக, சோதிக்கப்பட்டார்.
அவர் அதிகாரம் பெற்றவராக இருப்பதற்காக, தயார் செய்யப்பட்டார்.
நீங்கள் வனாந்தரத்தில் இருக்க வேண்டி இருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த மூன்று உண்மைகளை நினைவில் கொள்ளுங்கள்:
A - நீங்கள் அங்கே தற்செயலாக இல்லை.
B - நீங்கள் அங்கே தனியாக இல்லை
C - நீங்கள் எப்போதும் அங்கேயே இருக்கப் போவதில்லை.
உங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கங்கள் நிறைவேறிய பின், ஆவியானவர் உங்களை வனாந்தரத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். நீங்கள் உள்ளே சென்றதை விட விசுவாசத்தில் பலப்பட்டு வெளியே வருவீர்கள். அவர் ஒருபோதும் நம்மை அழிப்பதற்காக வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்வதில்லை. நம்மைப் பலப்படுத்துவதற்காக அவர் சோதனைக் காலத்தை விரும்புகிறார்.
எனவே, உங்கள் நிலைப்பாட்டில் நில்லுங்கள். கைவிடாதீர்கள். வாழ்க்கை என்பது உங்களைப் பற்றியது அல்ல தேவனைப் பற்றியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வனாந்தரம் உங்களைப் பற்றியது அல்ல. எல்லாம் தேவனைப் பற்றியது.
உங்கள் சோதனைகள் உங்களைப் பற்றியது அல்ல. அவை அனைத்தும் அவரைப் பற்றியது.
உங்கள் ஆவிக்குரிய பயணம் உங்களைப் பற்றியது அல்ல. அவரைப் பற்றியது.
வாழ்க்கை என்பது உங்கள் கனவுகள், உங்கள் நிகழ்ச்சி நிரல், உங்கள் நம்பிக்கைகள், உங்கள் யோசனைகள் அல்லது உங்கள் திட்டங்களைப் பற்றியது அல்ல. வாழ்க்கை என்பது தேவனின் கனவுகள், நிகழ்ச்சி நிரல், யோசனைகள் மற்றும் திட்டங்கள் பற்றியது. அவருடைய ராஜ்ஜியம் வர வேண்டும் என்று தான் ஜெபிக்கிறோம், நம்முடையது அல்ல.
எனவே, சோதனையின் தருணத்தில் உறுதியாக இருங்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது தேவன் உங்களுக்குத் தேவையானதைக் கொடுப்பார் என்று விசுவாசியுங்கள்.
Comments