top of page
Kirupakaran

நல்ல குடும்பத்திற்கான இரகசியங்கள் - பாகம் 2



பவுல் எபேசு சபைக்கு எழுதிய நிருபத்தில் ஒரு நல்ல குடும்பத்திற்கான இரகசியங்களைக் கொண்ட “கிறிஸ்தவ வாழ்வுக்கான வழிமுறைகளை” கோடிட்டுக் காட்டியுள்ளார். பவுலின் குடும்ப வரையறை இங்கே கணவன் மற்றும் மனைவிக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. ஏனெனில், அதுவே தேவன் படைத்த முதல் குடும்பம். இந்தப் பதிவு "நல்ல குடும்பத்திற்கான இரகசியங்கள்" என்ற கடந்த பதிவின் தொடர்ச்சியாகும்.

 

குடும்பத்தில் ஒருமனம்  - "அவரது சரீரத்தின் அவயவங்கள்"

ஒரு நல்ல குடும்பம் ஆவியின் ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இதற்கான பதில் எபேசியர் 5:30 இல் "நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும்" என்று சொல்லப்பட்டிருப்பதில் காணப்படுகிறது.

  • ஒரு மகனோ மகளோ எந்த வேலையும் செய்வதற்கு முன் தங்கள் பெற்றோரிடம் எப்படி காரியங்களைக் கேட்பார்களோ, அதைப் போலவே, நாம் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தவுடன், அவருடைய பிள்ளைகளாக குடும்பத்தில் எந்த வேலையும் செய்வதற்கு முன்பு அவருடைய சித்தத்தைத் தேடுவோம்.

  • நீங்கள் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவை உங்கள் குடும்பத்தின் தலைவராகக் கருதாத வரை, குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

  • ஒற்றுமை கிறிஸ்துவின் அன்பிலிருந்து வருகிறது, அது நாம் அவரை குடும்பத்தின் தலைவராக ஏற்றுக் கொண்ட பிறகு நமக்குக் கொடுக்கப்படுகிறது. இயல்பிலேயே மனிதர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். மற்றவர்களை விட நம் சுயத்தைப் பற்றியேக்  கவலைப்படுகிறோம். நம் துணையை விட நாம் நன்றாக நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். கிறிஸ்துவின் ஆவி, சுயநல ஆவியை  நம்மிடமிருந்து உடைத்து கணவன் மனைவிக்கு இடையே அன்பைக் கொடுக்கிறது. ஒரு குடும்பம் ஒற்றுமையுடன் வாழ்வதை நீங்கள் கண்டால் அது கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தால் வருகிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.

  • சாத்தான் குடும்பத்தைப் பிரிப்பவன். அவன் தேவனின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுபவனானதால் குடும்பங்கள் ஒன்றுபடுவதை அவன் விரும்பவில்லை. நமது சுயநல இயல்பை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் குடும்பத்தை உடைப்பதற்கும், குடும்பத்தின் ஒற்றுமையை உடைப்பதற்கும் வழிகளைத் தேடுகிறான். அப்பொழுது தேவனின் சித்தம் அவர்கள் பிரிவினால் கெட்டுப்போகும்.

 

குடும்பத்தில் ஒற்றுமை - "ஒரே மாம்சம்"

இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். எபேசியர் 5:31

மற்றொரு முக்கியமான குடும்ப இரகசியம் எபேசியர் 5:31 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் இந்த வசனத்தைப் பின்பற்றாததால் அல்லது நடைமுறை வாழ்க்கையில் இதைப் பயன்படுத்தாததால் பாழாகின்றன.

1. மனுஷி மனுஷனுக்காகப் படைக்கப்பட்டவள்

மனிதன் தனிமையில் இருக்க முடியாது என்று கண்டறிந்த தேவன் மனுஷியைப்  படைத்தார். அவர் எப்படி உருவாக்கினார் என்பதை வம்ச வரலாற்றில் படிக்கிறோம். ஆதாம் உறங்கும் போது அவளைப் படைத்தார். மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டதால் "மனுஷி" என்று பெயர் சூட்டப்பட்டாள்.

  • பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் 2:18

  • அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:20-22

ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட பிறகு, தேவன் சர்ப்பத்தை சபித்து, ஏவாளிடம், புருஷன் தன் மனைவியை ஆள்வான் என்று கூறினார்.

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். ஆதியாகமம் 3:16

  • தேவன் மனைவியை கணவனுக்கு ஒரு துணையாகவும், குடும்பத்தைக் கட்டுவதற்கும் உருவாக்கினார். – “வேதனையோடே பிள்ளை பெறுவாய்”.

  • மனுஷி மனுஷனுக்காகப் படைக்கப்பட்டாள், அவன் அவளை ஆண்டு கொள்வான் - " உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்". இது ஒரு ஆணாதிக்க வார்த்தை அல்ல, இது தேவனின் வார்த்தை, அதைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. எழுதப்பட்டவை எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும்.

2. மனுஷன் தன் தந்தையையும் தாயையும் விட்டு செல்ல வேண்டும்

இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, எபேசியர் 5:31

  • பெரும்பாலான குடும்பங்கள் இந்த முக்கியமான அறிவுறுத்தலை மறந்துவிடுகின்றன. நீங்கள் பெற்றெடுப்பவர்கள் (மகன் அல்லது மகள்), பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மட்டுமே மகனாகவும் அல்லது மகளாகவும் இருப்பார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டவுடன், "மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு," செல்ல வேண்டும்.

  • தகப்பனை விட்டு தாயோடு போ என்றோ, தாயை விட்டு தகப்பனுடன் போ என்றோ வசனம் சொல்லவில்லை. “தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு" என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

  • இங்கே “தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு” என்பது தாய் தகப்பன் இருவரையும் கைவிடுவது அல்ல - அவர்கள் இதுவரை உங்களைக் கவனித்துக்கொண்டதால், இனிமேல் அவர்களைச் சார்ந்திருப்பதை விட்டுவிடவே இங்கே சொல்லப்படுகிறது. நீங்கள் எதை விரும்புவீர்கள், என்ன சாப்பிடுவீர்கள், என்ன உடுத்துவீர்கள் என்பது போன்ற எல்லாம் அவர்களுக்குத் தெரியும். ஆனால்,திருமணம் செய்து கொண்ட பிறகு, நீங்கள் தந்தை மற்றும் தாயை சார்ந்து இருப்பதை விட்டுவிட வேண்டும்.

  • "தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு" என்பது பெற்றோரை அவமரியாதை செய்வதில்லை. ஒரு பிள்ளையாக நீங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் உங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு அவர்களை சார்ந்து இருக்கக் கூடாது.

  • மகனின் / மகளின் குடும்பம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதில் வெளியிலிருந்து பெற்றோரின் அதிகப்படியான குறுக்கீடு இருந்தாலோஅல்லது பிள்ளைகள் அவர்களை அதிகமாக சார்ந்திருப்பதாலோ பெரும்பாலான குடும்பப் பிரச்சினைகள் எழுகின்றன. அன்பினால் நாங்கள் அறிவுறுரை கூறுகிறோம் என்று சிலர் கூறலாம். குடும்பத்தின் ஒற்றுமையை உடைக்க சாத்தான் பயன்படுத்தும் பொய் இது. 

  • கிறிஸ்து குடும்பத்தின் தலைவர். கணவன் மனைவி அவர்களின் குடும்பத்தை நடத்துவதை அவர் கவனித்துக்கொள்வார். குடும்பத்தை எவ்வாறு நடத்துவது என்பதை தந்தை மற்றும் தாய் தலையிட்டு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை.

  • நீங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு இப்போது நீங்களும் உங்கள் மனைவியும் தான் உங்கள் குடும்பம்.

  • மக்கள் (குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள்) ஆலோசனையோ  அறிவுரையோ கூறலாம். ஆனால் கணவர் சபையின் தலைவர் போன்றவர், அவர் தனது தந்தைக்கு விருப்பமானதைத் தீர்மானித்து அவருடைய அறிவுறுத்தல்களின்படி கீழ்ப்படிகிறார். அதே போன்று,உங்கள் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதன் அடிப்படையில் அல்லாமல் தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடி நீங்கள் கீழ்ப்படியுங்கள்.

  • அனைத்து குடும்ப விஷயங்களும் கணவன் / மனைவி மற்றும் பிதாவாகிய தேவன் (குடும்பத்தின் தலைவர்) ஆகியோருக்கு இடையே தான் இருக்க வேண்டும்.

  • நீங்கள் கணவன்-மனைவியாக ஒற்றுமையாக இருக்கிறீர்களா? அல்லது உங்கள் குடும்பத்தினர் அறிவுரை கூறுகிறார்களா? (உங்கள் தந்தை / தாயிடமிருந்து பெறுவது) என்பதை ஆராய்ந்து பாருங்கள். - அவ்வாறு செய்தால், நீங்கள் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை.

3. ஒரே மாம்சம் 

“… இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்”. எபேசியர் 5:31  

  • ஒரே மாம்சம் - கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் சரீர ஆத்தும ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது.

  • பவுலின் போதனையானது ஆதியாகமம் 2:23-24 இல் எதிரொலிக்கிறது. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2:23-24

  • கணவன் தன் மனைவியோடே இசைந்திருப்பான் - இங்கே இந்த வசனத்தின் அர்த்தம் சரீரம் / ஆத்துமா / ஆவி ஆகியவற்றில் ஐக்கியப்படுவதைக் குறிக்கிறது. இது, நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு, கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுகிறதைப் போன்றது. நாம் தேவனை திரித்துவத்தில் (பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி) ஒரே சரீரமாக ஒன்றிணைத்து தொழுது கொள்ளுகிறோம்.

  • அவர்கள் எப்படி ஒரே மாம்சமாயிருக்கிறார்கள் என்பதைப் பற்றி இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். மாற்கு 10:6-9

  • அவர்கள் ஒரே மாம்சமாக மாறியவுடன், அவர்களுக்கிடையே ஒருமனம் என்பது, அவர்களின் முந்தைய மகன் மற்றும் மகள் நிலையில் இருந்து கணவன்-மனைவியாக இணைக்கும் தேவனின் செயலிலிருந்து வருகிறது.

  • “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று வார்த்தை கூறுகிறது, அதனால்தான் திருமணம் என்பது தேவனுக்கு முன்பாக நாம் செய்யும் ஒரு புனிதமான செயலாகும்.

  • ஒரு குடும்பமாக அவர்கள் பெருகி, தங்கள் வாழ்வில் தேவனின்  விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அவர் அவர்களை ஒன்றாக்கினார்.

  • நம் ஒவ்வொரு விருப்பத்திலும் ஒரே சரீரம் மற்றும் ஒரே மாம்சம் என்ற சரீர வாழ்க்கை இருக்க வேண்டும். புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள். 1 கொரிந்தியர் 7:3-5

  • கணவன்-மனைவி இடையே ஆத்துமாவிலும் சரீரத்திலும் ஒரே மாம்சம் என்ற உணர்வு புரிந்து கொள்ளப்பட்டவுடன், அங்கே திருமணத்திற்கு வெளியேயான தவறான உறவிற்கு இடமில்லை. வேறொரு ஆணையோ  பெண்ணையோ பார்க்கும்படியான கண்களின் இச்சைக்கு இடமில்லை. நீங்கள் தேவனின் கட்டளையை மீற மாட்டீர்கள்.

  • சாத்தான் இந்த ஒற்றுமையை (ஆத்தும ரீதியாகவும், சரீர ரீதியாகவும்) உடைத்து,  திருமணமான பிறகும் நீங்கள் ஆணும் பெண்ணும் தனித்தனியாக இருப்பதை உணர வைக்க முயற்சிக்கிறான் என்பதை நினைவில் வையுங்கள். பிற அவிசுவாசிகள் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிற உதாரணங்களையும், விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்  மகிழ்ச்சியாக வாழ்வதையும் அவனால் காட்ட முடியும். அவன் உலகத்தின் அதிபதியாக இருப்பதால் எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். அவன் ஒரு பொய்யனாகயிருப்பதால் நீங்கள் அவனை எதிர்க்க முடியாது. தேவனின் வசனம் மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பு.

  • உங்கள் குடும்பத்தில் ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க நீங்கள் தீவிரமாக இருந்தால், தேவனின் வார்த்தையைப் பின்பற்றுங்கள். வெளியுலகத்தைப்  பார்க்காதீர்கள். தேவனையும் உங்கள் குடும்பத்தையும் உள்நோக்கிப் பாருங்கள். ஒற்றுமையை பாதிக்கும் வெளிப்புற சார்புகளை அகற்றவும் (நண்பர்கள், தந்தை, தாய் அல்லது ஏதேனும் வெளிப்புற உறவுகள்).  கிறிஸ்துவை குடும்பத் தலைவராகச் சார்ந்திருப்பதும், கிறிஸ்துவில் உள்ள பயபக்தியும் மட்டுமே சாத்தானின் தந்திரங்களை உடைக்க முடியும்.

 

ஆய்வு செய்து சரி செய்ய வேண்டிய காரியங்கள்

  • குடும்பத்தில் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையென்றால், கிறிஸ்து உங்கள் குடும்பத்தின் தலைவராக இருக்கிறாரா? என்பதை ஆராயுங்கள்.

  • கணவன் மற்றும் மனைவி இருவரும் அவரது சரீரத்தின் அவயவங்களாக இருக்கிறீர்களா? - வெளிச்சத்தில் நடக்காவிட்டாலும்,கிறிஸ்துவின் போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றாலும், அவர்கள் அவருடைய சரீரத்தில் அவயமாக இருக்க முடியாது.

  • திருமணமான பிறகு, கணவனாக வாழ்கிறீர்களா? அல்லது இன்னும் உங்கள் பெற்றோருக்கு மகனாக வாழ்கிறீர்களா?

  • திருமணமான பிறகு, மனைவியாக வாழ்கிறீர்களா? அல்லது இன்னும் உங்கள் பெற்றோருக்கு மகளாக வாழ்கிறீர்களா?

  • உங்கள் குடும்ப விவகாரங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு தெரியும்? உங்கள் ஒற்றுமையைக் காண இது ஒரு எளிய சோதனை.

  • உங்கள் குடும்பத்தில் எவ்வளவு தூரம் வெளிப்புறத் தலையீடு உள்ளது? அப்படி இருக்குமாயின், நீங்கள் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை.

  • யோபுவைப் போல ஜெபியுங்கள் (அவருக்கு 10 பிள்ளைகள் - 7 மகன்கள் மற்றும் 3 மகள்கள்), ஆனால் அவர் இளம் பெண்ணை இச்சையோடு பார்க்காமல் இருக்க வேண்டி ஜெபிக்கிறார். என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? யோபு 31:1. தேவனோடு ஒருமனமும்,  குடும்பத்தில் ஒற்றுமையும் இருந்தால் மட்டுமே இந்த ஜெபங்கள்  பதிலளிக்கப்படும்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page