நாம் அனைவரும் ஒரு நல்ல குடும்பத்தையே விரும்புகிறோம். நல்ல குடும்பத்தின் வரையறையானது, நாம் யாரைக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது. தங்கள் குடும்பத்தின் மூதாதையரிடம் இருந்து தாங்கள் பெற்ற செல்வம் அவர்களை நல்ல குடும்பமாக வைத்திருக்கிறது என்று சிலர் சொல்லலாம். சிலர் நல்ல கல்வி என்று சொல்லலாம், சிலருக்கு அது நல்ல குடும்பப் பிணைப்பாக இருக்கலாம். இவை அனைத்திலும், குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்கு முக்கியமான அன்பு, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை ஆகிய ஆசீர்வாதங்கள் ஒரு நல்ல குடும்பத்திற்கு இருக்க வேண்டும்.
இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான இரகசியங்களை வேதம் நமக்கு கற்பிக்கிறது. பவுல் எபேசு சபைக்கு எழுதிய நிருபத்தில் ஒரு நல்ல குடும்பத்திற்கான இரகசியங்களைக் கொண்ட “கிறிஸ்தவ வாழ்வுக்கான வழிமுறைகளை” கோடிட்டுக் காட்டியுள்ளார். பவுலின் குடும்ப வரையறை இங்கே கணவன் மற்றும் மனைவிக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. ஏனெனில், அதுவே தேவன் படைத்த முதல் குடும்பம்.
இரகசியம் #1 : கிறிஸ்துவில் பயபக்தி
தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:21
இந்த தெய்வபயம் என்பது என்ன? "பெரும் மரியாதைக்குரிய உணர்வு" என்று அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் கிறிஸ்துவிடம் ஜெபிக்க வரும்போது நமக்கு இந்த பயபக்தி இருக்கிறது, தேவாலயத்திற்குச் செல்லும்போது நமக்கு இது இருக்கிறது, பெரிய மனிதர்களை சந்திக்கும்போது நமக்கு இந்த மரியாதை இருக்கிறது.
இந்த தெய்வபயம் நமக்கு எப்படி வருகிறது? தேவன் பெரியவர் என்பதினாலும், நம் வாழ்வில் எதையும் செய்யும் வல்லமையை கொண்டிருக்கிறார் என்பதினாலும் அவர் மீது உண்டாகிற மரியாதையின் வெளிப்பாடாக வருகிறது.
மேலும், ஆழத்திலிருந்து கனம் பண்ணுவதற்காகவும் மரியாதை செலுத்துவதற்காகவும் தேவபயம் இருதயத்தில் இருந்து வருகிறது. எனவே இதற்கு வெளிப்புற செயல் விளக்கம் உள்ளது. சிலர் முகங்குப்புற விழுந்து (சாஷ்டாங்கமாக) வணங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சிம்சோனின் பெற்றோரின் இந்த செயலைப் பற்றி நாம் படிக்கலாம். அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். நியாயாதிபதிகள் 13:20
இங்கே கணவனுக்கும் மனைவிக்குமான தேவனின் அறிவுரை - “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” - மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும், அதே போல் கணவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். “ஒருவருக்கொருவர்” என்ற வார்த்தைக்கு, ஒரு தரப்பு மட்டுமல்லாமல், இரு தரப்பிலும் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தம்.
இந்த கீழ்ப்படிதலை நாம் ஏன் செய்ய வேண்டும்? இது கிறிஸ்துவின் மீதான தெய்வபயத்தின் நிமித்தம் செய்யப்பட வேண்டும்.
நமக்கு கிறிஸ்துவின் மீது அந்த தெய்வபயம் இல்லாத வரை, ஒருவருக்கொருவர் கீழ்ப்படிகின்ற இந்தக் காரியம் வராது.
கிறிஸ்து குடும்பத்தின் தலைவராக இருப்பதை நாம் உணரும்போதும், நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் தேவபயம் இருக்கும் போதும் மட்டுமே கிறிஸ்துவில் தெய்வபயம் ஏற்படுகிறது.
ஆய்வு செய்து சரி செய்ய வேண்டிய காரியங்கள்
கிறிஸ்து மீதான உங்கள் தெய்வபயம் எப்படி இருக்கிறது? நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கிறிஸ்துவை முன்னிறுத்துவதன் மூலம் பயபக்தியைக் காட்டுகிறீர்களா? நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே முதன்மையானவராக இருக்கிறாரா?
அந்த தெய்வபயத்தை எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள்? நீங்கள் தேவனுக்கு முன்னால் வரும்போது, எப்படி தொழுது கொள்ளுகிறீர்கள்?முழங்கால்படியிட்டா? அல்லது கைகளை மேலே உயர்த்தியா? அல்லது கூப்பிய கைகளோடா? அல்லது சாஷ்டாங்கமாக விழுந்தா? எப்படி தொழுது கொள்ளுகிறீர்கள்? இவை அனைத்துமே தெய்வபயத்திற்கான அடையாளங்கள். மிக முக்கியமாக உங்கள் இருதயத்தில் எப்படி உணர்கிறீர்கள்? நீங்கள் அவரை தொழுது கொள்ள வரும்போது பெருமையுடன் வருகிறீர்களா?
கிறிஸ்துவுக்குள்ளான தெய்வபயம் முழு குடும்பத்தாலும் கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது சிலரால் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறதா?
இந்த பயபக்தியின் ஆவி இல்லாமல், நல்ல குடும்பத்தை வழிநடத்த ஆவியின் கனிகள் எதுவும் இருக்காது (அன்பு, சமாதானம், மகிழ்ச்சி).
முதலில் அவரிடமிருந்து பயபக்தியைப் பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள். பின்பு, அதே பயபக்தியை உங்கள் துணையும் கடைப்பிடிக்க வேண்டி கேளுங்கள் (கணவன் vs மனைவி / மனைவி vs கணவன்).
இந்த தெய்வபயம் உங்கள் குழந்தைகளால் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது? அவர்கள் தந்தை / தாய் மற்றும் பிற குடும்பத்தினரோடு சேர்ந்து பின்பற்றுகிறார்களா? அவர்கள் பின்பற்றவில்லை என்றால், கிறிஸ்துவில் பயபக்தியோடு இருக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
இரகசியம் #2 : கணவனுக்கு மனைவியின் கீழ்ப்படிதல்
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். எபேசியர் 5:22
இந்த அறிவுறுத்தலைப் படிக்கும்போது, கணவன் மனைவிக்கு எஜமானாக ஆக்கப்படுவது போன்று தோன்றலாம். ஆனால் அதை அப்படிப் பார்க்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. கீழ்ப்படிதலைப் பார்க்க வேண்டியதே மிக முக்கியமான தகுதி. மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவது "கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல" இருக்க வேண்டும். இந்த கீழ்ப்படிதல் பயத்தினாலோ அல்லது வேறு எந்த காரணிகளினாலோ அல்லாமல் முற்றிலும் பயபக்தியினால் இருக்க வேண்டும்.
பவுல் இந்த அறிவுறுத்தலுடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஏன் கணவனிடத்தில் இந்த கீழ்ப்படிதலோடு நடக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துகிறார். இதற்கான பதில் அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். எபேசியர் 5:23
மனைவி கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
முதல் காரணம் - கீழ்ப்படிதல் என்பது கிறிஸ்துவின் மீதுள்ள தெய்வபயத்தினால் வருவது. எனவே தான் "...கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல..." (எபேசியர் 5:22) என்று அவர் கூறுகிறார்.
இரண்டாவது காரணம் - கணவன் மனைவிக்குத் தலையாயிருப்பதால் கீழ்ப்படிதல்,“புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்”. ஆதியில் தேவன் ஆணையும் பெண்ணையும் உருவாக்கிய போது இதை நிறுவினார். (ஆதியாகமம்2:20-23). அந்தக் காரணத்தினால் கீழ்ப்படிதல் இருக்க வேண்டும்.
மனுஷி எப்படி உருவாக்கப்பட்டாள் - அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:20-22
அவள் எப்படி மனுஷி என்று அழைக்கப்பட்டாள் - அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். ஆதியாகமம் 2:23
மூன்றாவது காரணம் - கீழ்ப்படிதல் ஏனெனில் - கிறிஸ்து திருச்சபையின் தலையாயிருப்பதால், கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் அவருடைய சரீரமாக இருக்கிறோம். அவர் மூலமாகவே நாம் கீழ்ப்படிதலின் ஆவியைப் பெற்றிருக்கிறோம். நீங்கள் திருமணமாகி ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ விசுவாசத்தில் நடக்கிற சகோதரியாக இருந்தால், நீங்கள் உங்கள் கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 11:3
கீழ்ப்படிய வேண்டிய அம்சங்களைக் குறித்து மனைவிகளுக்கு பவுல் கூடுதல் அறிவுரைகளை வழங்குகிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். எபேசியர் 5:24
கீழ்ப்படிதல் என்பது ஆதிக்கத்தைப் பற்றியது என்று பலர் நினைக்கிறார்கள், அது ஆணாதிக்கம் அல்ல.
கீழ்ப்படிதல் என்பது உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும், தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதாக இருக்க வேண்டும்.
சிலவற்றில் நான் கீழ்ப்படிந்து சிலவற்றில் சுயத்தின்படி நடந்து கொள்ளலாமா? என்று சில மனைவிகள் கேட்கலாம். எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும் என்று கட்டளை தெளிவாக இருக்கிறது, “மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்”. “எந்தக் காரியத்திலேயும்” என்பது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் குறிக்கிறது. உங்கள் கணவரின் விருப்பு வெறுப்புகளுக்கு இது பொருந்தும்.
உங்களுக்கு நலமாக இல்லாத காரியங்களில், உங்கள் கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது, தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால், தேவன் இந்தச் செயல்களைக் கனம் பண்ணி உங்கள் நிலைமையை மாற்ற ஆசீர்வதிப்பார். நம் தேவன் இரக்கத்தால் நிறைந்தவர். அவர் உள்ளான, சிறிய உணர்வுகளைக் கூடப் புரிந்துகொள்கிறார். மேலும், அவருக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் கவனத்தில் கொள்கிறார். தேவன் உங்களை என்ன செய்ய அழைக்கிறாரோ அதற்கு நீங்கள் கீழ்ப்படியும் போது சூழ்நிலைகளைப் பார்க்காதீர்கள்.
ஆய்வு செய்து சரி செய்ய வேண்டிய காரியங்கள்
நீங்கள் ஒரு மனைவியாக இருந்தால், தேவனின் கட்டளைகளின்படி நடக்கிறீர்களா என்பதைப் பார்க்க இதை ஆராயுங்கள்.
எல்லா விஷயத்திலும் நான் என் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா? அல்லது சில காரியங்களில் மட்டும் கீழ்ப்படிகிறேனா?
உங்கள் கணவரை எப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் கிறிஸ்துவை எப்படி கனம் பண்ணுவீர்களோ, அவரிடம் எப்படி பயபக்தியோடு நடந்து கொள்வீர்களோ அதே மாதிரி உங்கள் கணவரை நடத்துகிறீர்களா?
உங்களுக்குப் பிடிக்காத குணங்கள் உங்கள் கணவருக்கு இருந்தாலும் அவருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறீர்களா?
மனக்குறையோடும் முறுமுறுப்போடும் கீழ்ப்படிகிறீர்களா? கீழ்ப்படியும் போது முணுமுணுப்பு மனப்பான்மை உள்ளதா? கேட்க வேண்டிய கேள்வி : நீங்கள் தேவனுக்கு கீழ்ப்படியும் போது ஒவ்வொரு முறையும் மனக்குறையோடு, முறுமுறுக்கிறீர்களா?
இரகசியம் #3 : கணவன் தன் மனைவியிடம் அன்பு கூரவேண்டும்
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 5:25-27
வேதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் எப்போதும் சரியானதாக இருக்கும். மேலும், அவைகள் ஒருவரின் திருமணத்தை முழுமையாக்குகிறது. முதல் இரண்டு இரகசியங்களைப் படிப்பது ஒரு பக்கம் மட்டும் உறவை உருவாக்கும், ஆனால் பவுல் கணவர்களுக்கு ஒரு முக்கியமான கட்டளையை எழுதுகிறார். இது "அன்பு" என்பது திருமணத்தின் இருதயம் மற்றும் ஆத்துமாவாகும் என்று திருமணத்தை சுருக்குகிறது. மேலும், இது கணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்” என்பது மிக முக்கியமான கட்டளையாகும்.
சவால் என்னவென்றால், திருமணமான ஆரம்ப நாட்களில் ஒருவர் தனது மனைவியை நேசிப்பார், ஆனால், வருடங்கள் சென்ற பிறகு அன்பு மாறத் தொடங்குகிறது.
கிறிஸ்துவிற்கு சபையின் மீதான அன்பை கணவர்கள் பின்பற்ற வேண்டும். (27 ஆம் வசனத்தின் பிற்பகுதி அதைப் பற்றி பேசுகிறது).
கிறிஸ்து அன்பினால் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் – “கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, … தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்”.
ஜனங்களையும் தேவாலயத்தையும் பரிசுத்தமாக்க, கிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக மரித்தார். கிறிஸ்துவிடமிருந்து நமக்குள் பரிசுத்தத்தைப் பெறுகிறோம் – “…பரிசுத்தமாக்குகிறதற்கும்..”.
ஞானஸ்நானத்தின் மூலம் கிறிஸ்து நம்மைப் பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்கினார் – “தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் … ”.
கிறிஸ்து தம்முடைய ஒரே பரிசுத்த ஆவியைத் தந்தருளியதால், நாம் உலகத்தின் பாவங்களிலிருந்து விலகி இருக்கிறோம்.
நாம் பாவிகளாயிருக்கும் போதும் கிறிஸ்து தம்முடைய இரக்கத்தையும் கிருபையையும் நமக்குத் தந்தருளினார். நீங்கள் எத்தனையோ முறை பாவமன்னிப்புக் கேட்ட பிறகும், எத்தனை முறை அதே தவறைச் செய்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இருந்தும் அவருடைய அன்பின் நிமித்தமாக அந்த நடத்தையை அவர் பொறுத்துக் கொண்டார்.
எனவே கணவர்களின் அன்பு கிறிஸ்துவின் அன்பைப் பின்பற்ற வேண்டும், எனக்கு சமாளிக்க கடினமான மனைவி இருக்கிறாள், என்னை கோபப்படுத்துகிறாள், எனக்கு ஆத்திரமூட்டுகிறாள், இந்த செயல்களால் அவள் மீதான என் அன்பு போய்விட்டது என்று சிலர் சொல்லக்கூடும். ஆம், நீங்கள் உங்கள் மாம்சத்திலிருந்து (சுய) அன்பைச் செலுத்தினால், அது எப்போதும் உங்கள் துணையின் தவறுகளையேப் பார்க்கும். ஆனால் கிறிஸ்துவின் சரீரத்தை உடுத்திக் கொண்டு, அவருடைய அன்பு உங்கள் சுயத்தை மேற்கொள்ளும்படி கேளுங்கள், அப்போது பழையது நீங்கி, அன்பில்லாத சூழ்நிலைகளில் கூட அன்பு செலுத்த கிறிஸ்துவின் அன்பு வரும்.
கிறிஸ்துவின் அன்பு நமது மனித அன்பைப் போன்றது அல்ல. கணவர்கள் தங்கள் மனைவியை நேசிக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்தும்போது, கிறிஸ்துவின் அன்பைப் பின்பற்றுமாறு அவர்களைக் கேட்கிறார். கிறிஸ்துவின் அன்பானது அகாப்பே (எதிர்பார்ப்பற்ற) அன்பு. இது 1 கொரிந்தியர் இல் வரையறுக்கப்பட்டுள்ளது.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:4-8
இந்த அன்பு சாத்தியமில்லை, தேவனுக்கு மட்டுமே இது சாத்தியம், நம்மைப் போன்ற மனிதர்களுக்கு, இது பொருந்தாத, இயற்கைக்கு மீறிய விஷயம் என்று சிலர் கூறலாம். ஆம் உண்மைதான். மனிதர்களாகிய நமக்கு பலவீனங்கள் உள்ளன. ஆனால் நாம் தேவனிடம் ஊக்கமாகக் கேட்டால் அவர் ஆவியின் கனிகளைக் கொண்டு நம்மை ஆசீர்வதிக்கத் தயாராக இருக்கிறார். நம்முடைய பழைய சுயத்தை அகற்றி, அவருடைய ஆவியின் கனியைக் கொண்டு ஆசீர்வதிக்கிறார்.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23
கலாத்தியர் 5:22 இல் கொடுக்கப்பட்டுள்ள ஆவியின் கனிகளில் முதல் பலனைக் கவனியுங்கள், அது “அன்பு”. தேவன் தம்முடைய பிள்ளைகளை அதே “அன்பு” மூலம் ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறார். கலாத்தியர் 5:22 -"ஆவியின் கனியோ, அன்பு, ... ”. 1 கொரிந்தியர் 13:4-8 இல் சொல்லப்பட்டுள்ள அதே அகாப்பே அன்பு தான் கலாத்தியர் 5:22 இல் பேசப்பட்டுள்ளது. அந்தப் பலனை நாம் தான் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பெறுவது சாத்தியமில்லை என்று புகார் செய்யாதீர்கள். நம்பிக்கையோடும், வாஞ்சையோடும், நேர்மையோடும் கேட்டால், அவர் இந்த அன்பின் கனியைப் பொழிவார். அந்த அன்பு வந்தவுடன், அன்பில்லாத சூழ்நிலையைக் கூட விரும்புவோம். கோபம் / ஆத்திரம் / கசப்பு என்ற அன்பில்லாத உணர்ச்சிகளைக் காட்ட மாட்டோம்.
கணவன் மனைவியை நேசிப்பது வெளிப்புற குணங்களின் நிமித்தமாய் இருக்கக் கூடாது (அழகு / அதிக சம்பாத்தியம் / கீழ்ப்படிதல் / இன்பம் போன்றவற்றுக்கு மட்டும்).
கணவன்மார்கள் கிறிஸ்துவில் பயபக்தியுடனும், குடும்பத்தின் தலைவனாக கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து நடந்தாலும் மட்டுமே இந்த அகாப்பே அன்பைப் பெறுவார்கள்.
ஆய்வு செய்து சரி செய்ய வேண்டிய காரியங்கள்
கிறிஸ்துவின் மீது உங்கள் பயபக்தி எப்படி இருக்கிறது? இது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தானா அல்லது எல்லா நாட்களிலும் உள்ளதா?
கிறிஸ்து உங்கள் குடும்பத்தின் தலைவரா? நீங்கள் இதை வெறுமனே ஜெபத்தில் மட்டும் சொல்கிறீர்களா அல்லது உங்கள் இருதயத்திலிருந்து இதை விசுவாசிக்கிறீர்களா?
குடும்பத்தின் மீதான அன்பு எப்படி இருக்கிறது? இது கிறிஸ்துவின் அன்பைப் போன்று இருக்கிறதா? விட்டுக் கொடுத்தலினால் வருகிற அன்பா அல்லது நிர்ப்பந்தத்தினால் உண்டாகிய அன்பா?
அன்பு திருமணத்தின் ஆரம்ப நாட்களில் இருந்ததைப் போன்று உள்ளதா அல்லது அது கசப்பாக மாறி விட்டதா? கசப்பு சாத்தானிடம் இருந்து வருகிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார் அவரிடம் கசப்பு காணப்படுவது இல்லை (1 கொரிந்தியர் 13:5-6 ".. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்."). 1 கொரிந்தியர் 13:4-8 இல் அவர் தமது அன்பின் தன்மைகளை வரையறுத்துள்ளார். எனவே நீங்கள் ஆராந்து பார்த்து, உங்கள் மனைவியிடம் கசப்புடன் இருந்தால், தேவனின் ஒப்புக் கொடுங்கள்.
நாம் வாழும் இந்த உலகில், யாரும் பூரணமாக இல்லை. கணவன் தன்னிடம் எந்தக் குறையுமில்லாமல் பரிபூரணமாக இருக்க முடியாது, அதே போன்று மனைவியும் இருக்க முடியாது. நமது பலவீனங்களை உணர்ந்து, தேவனுக்கு முன்பாக முழங்காலிட்டு, அவரிடம் ஒப்புக் கொடுத்து, தேவனே என்னை பரிபூரணமாக்குங்கள், எங்கள் வீட்டின் தலைவராக இருங்கள் என்று சொல்வது முக்கியம். கிறிஸ்து குடும்பத்தின் தலைவராக இருக்கும்போது, கணவன், மனைவியின் காரியங்களை அவர் பரிபூரணமாக்குவார். இதைப் பற்றி இருவரும் ஒன்றாக முழங்காலிட்டு ஜெபிப்பது முக்கியம். ஒருவர் அடுத்தவருக்காக இதைச் செய்ய முடியாது.
கிறிஸ்து ஆணையும் பெண்ணையும் தம் சாயலில் ஒன்றாகப் படைத்தார். நமக்கு ஒரு நல்ல குடும்பமும், ஆண்டவரின் ஆசீர்வாதங்களும் வேண்டுமானால், முழங்கால்படியிட்டு, "அப்பா, நீங்கள் எங்கள் குடும்பத் தலைவராக இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய உலக உடைமைகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் உமது தெய்வீக வழிகாட்டுதலுக்கு ஒப்புக் கொடுத்து, எங்களை பரிபூரணமாக மாற்றும்படி கேட்கிறோம். உமது சாயலுடன் எங்களை இணைத்து, கிறிஸ்துவின் குணாதிசயங்களை எங்களுக்கு அணிவித்து, ஆவியின் கனிகளை எங்களுக்குத் தந்து, எங்கள் பழைய சுயம் நாங்கள் ஆக விரும்புகிற புதிய கிறிஸ்துவைப் போல் மாறுவதற்கு உதவுங்கள். எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களை உமது சாயலாக ஆக்குங்கள்", என்று இந்த எளிய ஜெபம் செய்ய வேண்டும்.
Comentarios