top of page
Kirupakaran

நற்கருணை


உங்களுக்கு உயிர்த்தெழுதல் தின வாழ்த்துகள் !! "புனித வெள்ளி" மற்றும் "ஈஸ்டர்" என்று குறிப்பிடும் போது, அது உயிர்த்தெழுந்த ராஜாவைக் கொண்டாடும் ஒரு உலகபிரகாரமான சடங்கு. இயேசு நம் பாவங்களுக்காக ஒரே ஒரு முறை மட்டுமே மரித்தார் என்றும் அவர் உயிர்த்தெழுந்த ராஜா என்றும் உறுதியாய் இருங்கள்.


“கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” எபிரேயர் 9:28


“மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்”. ரோமர் 6:9-10. அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ராஜா. “மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.”


புளிப்பில்லாத அப்பப்பண்டிகை மற்றும் பஸ்கா

“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.” மத்தேயு 26:17


இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களுடன் கடைசி இராப்போஜனம் உண்டார் என்று மத்தேயு 26 ல் வாசிக்கிறோம். கடைசி இராப்போஜனத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்கு முன், புளிப்பில்லாத அப்பப்பண்டிகை மற்றும் பஸ்கா என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம்.

  • பஸ்காவை உள்ளடக்கிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை யூத வருடத்தின் மையப் பண்டிகையாக இருந்தது. பஸ்காவுடன் தொடங்கி இந்த இரண்டு விருந்துகளும் ஒரு எட்டு நாள் கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்டன. 2022 இல், ஏப்ரல் 15 ஆம் தேதி யூதர்களின் பஸ்கா, இது நாம் ஏப்ரல் 17 ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த இரண்டு பண்டிகைகளும் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரேல் விடுதலை ஆனதைக் கொண்டாடின.

  • புளிப்பில்லாத அப்பப்பண்டிகை என்பது, இஸ்ரவேலர்கள் உண்ணும் அப்பத்தில் இருந்து பெயரிடப்பட்டது. மாவில் சேர்க்கப்படும் ஈஸ்ட் ஆனது அப்பத்தை எழும்பச் செய்து மென்மையாக ஆக்குகிறது. ஆனால் அப்பம் எழுவதற்கு பல மணிநேரம் ஆகும் என்பதால், அவர்கள் ஈஸ்ட் இல்லாமல் அப்பம் செய்தார்கள். அது தயார் செய்து சூடு ஆறியவுடனே சாப்பிடலாம்.

  • புளிப்பில்லாத அப்பப் பண்டிகையைப் போலவே, பஸ்காவும் இஸ்ரவேலர்களுக்கு எகிப்திலிருந்து விடுதலையானதை நினைவூட்டியது. பஸ்காவை ஆசரிக்கும் ஆரம்ப வழிமுறைகள் யாத்திராகமம் 12 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பஸ்காவுக்கு ஆயத்தம் செய்வதில் என்னவெல்லாம் உள்ளடங்கி இருந்தது? ஒரு ஆட்டுக்குட்டியை பல நாட்களுக்கு முன்பே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இன்னும் பல ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஆலயத்தில் ஒரு ஆசாரியரால் வெட்டப்பட வேண்டும்.

    • புளிப்பில்லாத அப்பம், திராட்சை ரசம், கசப்பான கீரை மற்றும் பஸ்கா உணவிற்கான ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்து ஆகியவற்றை வாங்க வேண்டும்.

    • ஒவ்வொரு உணவுப் பொருட்களும் அதனதன் சார்பாக தேவனின் செயல்களை நினைவுபடுத்தும் சிறப்பு அர்த்தத்தை கொண்டிருந்தன.

      • ஆட்டுக்குட்டி - எகிப்தில் உள்ள வீடுகளின் நிலைக்கால்களில் இருந்த இதன் ரத்தம் அவர்களை சங்காரக்காரனிடம் இருந்து காப்பாற்றியது. ஆட்டுக்குட்டியை முழுவதுமாக நெருப்பில் சுட்டு புசித்தார்கள்.

      • புளிப்பில்லாத அப்பம் - உணவை உண்ட அவசர முறையைக் குறிக்கிறது.

      • நான்கு கோப்பை திராட்சை ரசம் - அவர்கள் எகிப்தை விட்டுச் செல்வதற்கு முன்பு கர்த்தர் அவர்களுக்கு அளித்த நான்கு வாக்குறுதிகளை நினைவூட்டியது.

இயேசுவும் கடைசி இராப் போஜனமும்

“இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம் பண்ணினார்கள். சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து,அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” மத்தேயு 26 :19-29


கடைசி இராப்போஜனத்தில் மூன்று விஷயங்கள் நடந்தன.

1. இயேசு துரோகத்தை முன்னறிவித்தல்

2. பழைய பாரம்பரிய பஸ்கா à புதிய உடன்படிக்கை

3. ஆட்டுக்குட்டியின் இரத்தம் à புதிய உடன்படிக்கையின் இரத்தம்


இயேசு துரோகத்தை முன்னறிவித்தல்

“சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.

அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.” மத்தேயு 26:20-22


  • இவர்களில் பதினோரு பேரின் மறுமொழியும் 22 ஆம் வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ”அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்”. இந்த அறிக்கையில், மத்தேயு மிகவும் வலுவான, வீரியமான, உள்ளத்தின் பாரத்தைக் குறிக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கிறார்.

  • யூதாஸ்காரியோத்தின் துரோகத்தின் மூலமான பாடங்கள் - "பேராசை மற்றும் உலக இன்பங்கள் மீது இருக்கும் பற்று பெரும்பாலும் துரோகத்திற்கான முதல் படியாகும்". யூதாஸின் இருதயத்தை இயேசு அறிந்திருந்தார்.

  • 3 ½ வருடங்கள் இயேசுவுடன் நடந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பேரில் யூதாஸ்காரியோத்தும் ஒருவன். இயேசு செய்த அற்புதமான செயல்களை கண்டிருந்தான். மேலும் அவருடைய வல்லமையுள்ள காரியங்களை அருகிலிருந்து பார்த்திருந்தான். இருந்தபோதும் அவருக்கு துரோகம் செய்தான். இதில் நமக்கான பாடம் என்னவெனில், ஒருவர் தேவனுக்கும் மற்ற காரியங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தும் அவருடைய அழைப்பிலிருந்து ஆன்மீக ரீதியில் வெகு தொலைவில் இருக்கலாம். இது, தேவாலயத்தின் எல்லா காரியங்களிலும் நாம் பங்கெடுத்தாலும் நமது ஆவிக்குரிய அழைப்பில் இயேசுவிடம் இருந்து தொலைவில் இருப்பதைப் போன்றது.

பழைய பாரம்பரிய பஸ்கா --> புதிய உடன்படிக்கை

“அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.” மத்தேயு 26:26


இந்த ஒரே போஜனத்தில் இயேசு பழையதை நீக்கி புதியதைக் கொண்டு வந்தார். இது மாற்றத்தின் போஜனமாக இருந்தது. கிறிஸ்து தமது சீடர்களுடனான இந்த போஜனத்தில் தமக்கென புதிய நினைவு போஜனம் ஒன்றை ஏற்படுத்தினார்.


  • இது எகிப்தில் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின் மீது கவனம் செலுத்தாமல் கல்வாரியில் கொல்லப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியான "இயேசு" மீது கவனம் செலுத்துகிறது.

  • அவர் எடுத்துக்கொண்ட அப்பம் புளிப்பில்லாத அப்பம். ஸ்தோத்திரம் செலுத்திய பின்பு, அதைப் பிட்டார். அந்தச் செயல்கள் ஒரு பஸ்கா உணவிற்கு பொதுவானவை. ஆனால் பின்னர் கிறிஸ்து , “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்று புதிதாக ஒன்றைக் கூறினார். பஸ்கா விருந்தில், புளிப்பில்லாத அப்பம் யூதர்களுக்கு எகிப்தில் இருந்து விடுதலையானதை நினைவூட்டியது. இப்போது இயேசு அப்பத்தை தம்முடைய சரீரம் என்று கூறுவதன் மூலம்,உண்மையான விடுதலை தம் மூலமாக வரும் என்று வாக்குறுதி கூறுகிறார்.

  • நாம் ஒரு பாவச் சுபாவத்துடன் பிறந்திருக்கிறோம். அதை நாம் ஆரம்ப காலத்திலும், அடிக்கடியும் நிரூபித்துக் காட்டுகிறோம். நாம் பாவத்திற்கு அடிமைகள் என்றும், நம்மால் விடுதலை பெற முடியாது என்றும் வேதம் கூறுகிறது.

    • தேவனால் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்முடைய விடுதலையை அவர் சாத்தியமாக்கினார்.

“நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”ரோமர் 5:7-8

  • நாம் அப்பத்தை உண்ணும் பொழுது, அவர் நம்மை விடுவிப்பவர் என்றும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக அவரை விசுவாசிக்கிறோம் என்றும் சொல்கிறோம். நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையை நிலைநிறுத்த வேண்டும். அப்பத்தை உண்பதன் மூலம் நாம் சிலுவையில் நடந்தவற்றில் பங்கு கொள்கிறோம் அல்லது பயன் பெறுகிறோம் என்று கூறுகிறோம். நாம் மன்னிப்பையும், தேவனோடு மீண்டும் ஐக்கியப்பட்ட உறவையும் அனுபவித்து வருகிறோம்.

ஆட்டுக்குட்டியின் இரத்தம் --> புதிய உடன்படிக்கையின் இரத்தம்

“பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” மத்தேயு 26:27-29


  • “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்று இயேசு சொன்ன போது பழைய பாரம்பரியமான திராட்சை ரசம் மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தம் எல்லாம் போயின. இது யூதர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்காகவும் தான்.

  • முதற்பேறான மகன்கள் காப்பாற்றப்படுவதற்காக வீட்டு வாசலில் இரத்தம் தெளிக்கப்பட்ட பழைய பாரம்பரியம் இயேசுவின் இரத்தத்துடனான புதிய உடன்படிக்கையில் இல்லாமல் போய்விட்டது.

  • உடன்படிக்கை என்பது இரு தரப்பினரும் ஒரு உறவில் நுழைந்து பராமரிக்கும் ஒப்பந்தமாகும். இங்கே “புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்று இயேசு ஒரு புதிய உடன்படிக்கையை அறிவிக்கிறார். இது இரத்தம் சம்பந்தப்பட்ட ஒன்று; ஆனால் அது அவருடைய இரத்தம்! இது இனி விலங்குகளின் இரத்தம் அல்ல, ஆனால் ”என்னுடைய இரத்தமாயிருக்கிறது”, என்று இயேசு சொல்கிறார்.

  • சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது; அது "ஊற்றப்பட்டது". “ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது”. எபிரெயர் 10:4

  • இயேசுவின் இரத்தம், நம் மனசாட்சியை, மரணத்திற்கு வழிநடத்தும் செயல்களிலிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் நாம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வோம்.

“நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” எபிரேயர் 9:14,28


இந்த பஸ்கா விருந்து இன்று நமக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

  • ”நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது”,”நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.” என்று இயேசு கூறினார்.

  • அப்பமும் இரத்தமும் இயேசுவின் மீது விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால்தான் தேவாலயத்திற்குச் செல்லும்போது புனித நற்கருணை விசுவாசிகள் அல்லாதவர்களுக்கு ("அப்பம் மற்றும் ஒயின்") வழங்கப்படுவதில்லை.

  • ஒவ்வொரு முறையும் நாம் கர்த்தருடைய பஸ்கா விருந்தில் பங்கேற்கும்போது, ​​இவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் இது வெறும் சடங்காக மாறிவிடும். அதில் இயேசு நம்மைப் பின்பற்றும்படி சொன்னதன் உண்மையான அர்த்தம் இருக்காது.

  • நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது.

    • நாம் அனைவரும் உணவின் சுவையை அறிந்து, அது நன்றாக இருந்தால் மட்டுமே சாப்பிட விரும்புவோம். இதேபோல், என் சரீரத்தை புசியுங்கள் என்று இயேசு கூறும்போது, ​​ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை வாசித்து (புசி) , அவருடைய சரீரத்தை (பரிசுத்த ஆவி) சார்ந்து இருக்கும்படி சொல்கிறார். இது இல்லாமல் நம்மால் இயேசுவை ருசித்துப் பார்க்க முடியாது.

    • நாம் அனைவரும் உணவை வாயில் மென்று உணவின் சுவையை அனுபவிக்கிறோம். அதே போல் தேவனின் வார்த்தை நம் உள்ளத்திலும் மனதிலும் நுழைவதற்கு முன்பு தியானிக்கப்பட வேண்டும். தேவ ஆவியின் மூலம் நாம் வார்த்தையை ருசிக்கலாம். அவர் நம் பாவங்களை கண்டித்து, உலகத்தின் பாவங்களிலிருந்து நம்மைத் தப்பி ஓடச் செய்வார். பழைய சுயத்தை விட்டு ஒரு புதிய நபராக நம்மை மாற்றுவார்.

“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின”. 2 கொரிந்தியர் 5:17

  • நாம் நோய்வாய்ப்பட்டால் மட்டுமே மருந்து சாப்பிடுகிறோம், பரிந்துரைக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் அதை உட்கொள்வதை நிறுத்திவிடுகிறோம். “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது”, என்பதே நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. சரீரத்தை (தேவனுடைய வார்த்தையை) மருந்தாக எடுத்துக் கொள்ளும்படி நமக்கு சொல்லப்படவில்லை. அதை தினமும் உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்திருக்கும் போது மட்டும் வந்து சாப்பிட முடியாது. இயேசுவின் வார்த்தை நமக்கு "தினசரி ஊக்கமூட்டும் மேற்கோள்கள்" அல்ல. இயேசு புசியுங்கள் என்று கூறுகிறார், சுவைத்துப் பாருங்கள் என்று சொல்லவில்லை. புசிப்பதும் ருசிப்பதும் இரு வேறு காரியங்கள். நம்மில் பலர் தேவனின் வார்த்தையை நமக்கு தேவைப்படும் போது மட்டும் ஒரு மருந்தாகப் பயன்படுத்துகிறோம் அல்லது அவருடைய வார்த்தையை நம் தினசரி வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் மேற்கோள்களாக சுவைக்கிறோம். அவர் புசியுங்கள் என்று சொல்கிறார். அவர் ஒரு பெருந்தன்மையான தேவன்.ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் அவருடன் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர் நமக்குத் தம்மைத் தாராளமாகத் தந்து மகிழ்விக்கிறார்.

  • புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

    • தேவன் தாமே நமக்கு அவருடைய இரத்தத்தின் மூலம் உடன்படிக்கை செய்திருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். இரத்தத்தை பயன்படுத்தி உடன்படிக்கை செய்பவர் பூமியில் எவரும் இல்லை “புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது”என்று இயேசு கூறியுள்ளார்.

    • கிறிஸ்துவின் சரீரத்தை நாம் உண்ணும் போது, நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களிலிருந்து இயேசுவின் இரத்தம் நம்மைக் காப்பாற்றுகிறது என்பதை நினைவில் வையுங்கள். நாம் செய்யும் பாவத்தின் காரணமாக நம்மை மரணத்திற்கு ஏதுவாக கண்டிக்கும் நம் மனசாட்சியை சுத்திகரிக்க அவர் தமது இரத்தத்தைப் பயன்படுத்துகிறார்.

“நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” எபிரேயர் 9:14

  • நாம் ஆண்டவரோடு நடக்கும்போது, சாத்தானால் உலகில் போராட்டங்களும் கஷ்டங்களும் ஏற்படும்.

“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு”. எபேசியர்6:12

  • கிறிஸ்துவின் இரத்தம் சாத்தானிடமிருந்து வரும் எல்லாப் போராட்டங்களிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

  • இயேசுவின் இரத்தத்தால் நாம் கிருபை பெறுகிறோம். தேவன் எதிர்பார்க்கும் தரநிலைகளை விட நம்முடைய தரநிலை தாழ்ந்ததாக இருந்தாலும், அவருடைய கிருபை நம்மை அவரோடு நடக்கச் செய்து நாளுக்கு நாள் நம்மை பூரணப்படுத்துகிறது.

“நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்”. ரோமர் 6:14,18

  • அவருடைய சரீரத்திலும், அவருடைய புதிய உடன்படிக்கையிலும் பங்குகொள்ளும்படியான இந்த உறவின் காரணமாக,அவரை "அப்பா பிதாவே" என்று அழைக்கும் பாக்கியம் பெற்ற அவருடைய வாரிசுகளாகவும், பிள்ளைகளாகவும் இருக்கிறோம்.

“மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்”. ரோமர் 8:14-16

  • நீங்கள் கர்த்தரிடம் வந்து உலகத்திற்காக ஒரு வாழ்க்கை, கர்த்தருக்காக ஒரு வாழ்க்கை என்று இரட்டை வாழ்க்கை வாழ்ந்தால், பவுல் விளக்குவது போல் தேவனின் கோபத்தை அழைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?”. 1 கொரிந்தியர் 10:21-22


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page