top of page
Kirupakaran

நோவா - வானவில் கதை



இது எனது 150 வது வலைப்பதிவு. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து தாமே தம்முடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மூலம் எனக்கு இரக்கம் காட்டியதற்காக அவரை மகிமைப்படுத்துகிறேன். நம்  ஆண்டவராகிய இயேசு, கடந்த 3 ஆண்டுகளாக வலைப்பதிவுகளை எழுதுவதற்கான எல்லா ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்து வந்துள்ளார்.

நாம் கர்த்தரின் வருகையின் கடைசி நாட்களில் வாழ்கிறோம். நோவாவின் நாட்களில் உலகம் எப்படி இருந்தது என்பதற்கும் நாம் தற்போது வாழும் உலகம் எப்படி இருக்கிறது என்பதற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.


நோவாவின் நாட்கள்

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆதியாகமம் 6:5-6,11-12 


இன்றைய நாட்கள் 

கடைசி நாட்களில் இருக்கிறோம் என்ற குறிப்பை அறிந்துகொள்ளும்படி இவற்றில் பலவற்றை தற்போது பார்க்கிறோம்.

மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2 தீமோத்தேயு 3:1-5

 

பழைய நாட்களுக்கும் இன்றைய நாட்களுக்கும் இடையிலான பொதுவான அம்சங்கள்

  • மனிதனின் அக்கிரமம் வளர்ந்து கொண்டே இருக்கிறது ~ நாம் பாவத்தில் கெட்டுப்போகிறோம், புதிய பாவங்கள் நாளுக்கு நாள் மலருகின்றன.

  • இருதயத்தின் தீமையான காரியங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமைக்கு வழிவகுக்கின்றன.

  • உலக ஆசை கொண்டவர்கள். ஜனங்களின் கண்கள் குருடாக்கப்பட்டு தேவனை விட்டு விலகிச் செல்கின்றன. இன்பமானவைகளின் மீதான  பிரியம்.

  • தேவன் மீது அன்பு இல்லை

 

நோவாவின் நாட்களில் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் 6:6


இந்த கெட்டுப்போன உலகத்தின் மத்தியில், நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஏனெனில், நோவா உலகத்திலிருந்து பிரிந்து, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் 6:8-9 ​​


தேவன் நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அவருடைய கோபத்திலிருந்து காத்துக் கொள்ளும்படிக்கு மிகுந்த இரக்கம் காட்டினார். இந்த ஆவிக்குரியப் பாடங்களை நாம் நம் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டும், அப்பொழுது தேவனிடமிருந்து கிருபையைப் பெற முடியும்.

 

நோவாவின் கதை சுருக்கம்

ஜனங்கள் துன்மார்க்கத்தால் நிறைந்தும், உலகம் சீரழிந்தும் போயிருந்த காலத்தில், நோவா தனது மூன்று மகன்களுடன் தேவனின் பார்வையில் நல்ல  நீதியுள்ளவராக வாழ்ந்து வந்தார். உலகத்தின் அக்கிரமத்தைக் கண்டு மனம் வருந்திய தேவன், ஒரு பெரிய படகைக் கட்டும்படி நோவாவிடம் கேட்டார். நோவா தேவனின் கட்டளைகளைப் பின்பற்றி விலங்குகளையும் உணவையும் சேகரித்தார். 40 நாட்கள் பெய்த மழை, பூமி அனைத்தையும் வெள்ளத்தில் மூழ்கடித்து, உயிர்களையெல்லாம் அழித்தது.


ஒரு வருடம் கழித்து, வெள்ளம் வடிந்தவுடன், நோவாவும் அவருடைய குடும்பமும் விலங்குகளும் படகை விட்டு வெளியேறினர். தேவன் அவர்களை ஆசீர்வதித்து, நிறைய பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்பும்படி கூறினார். உலகில் இனி ஒருபோதும் இது போன்ற வெள்ளத்தை அனுமதிப்பதில்லை என்று தேவன் வாக்களித்து, இந்த வாக்குறுதியின் அடையாளமாக ஒரு அழகான வானவில்லைக் காட்டினார். இந்தக் கதையின் வீடியோ பதிப்பு இந்த Youtube இணைப்பில்



 

நோவாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உலகம் மிகவும் தீமையால் நிரம்பியிருந்த போது அவர் தேவனால்     தனித்துவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நாம் கேள்விப்படுகிறோம். உலகம் முழுவதும் அக்கிரமத்தால் நிரம்பியிருந்த போது அவர் எப்படி நீதியான வாழ்க்கையை வாழ்ந்தார்?

1. தேவனுடனான ஐக்கியம்

  • மற்றவர்கள் அக்கிரமம் மற்றும் தீமையின் பின்னால் ஓடிய போது நோவா தேவனுடையக் குரலைக் கேட்க அவரோடு தொடர்ந்து ஐக்கியத்தில் இருந்தார். அவருடைய நீதியைத் தேடினார், அதனால்தான் தேவன்  அவரைப் பற்றி சாட்சியமளிக்கிறார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம் 6:8

  • நோவா தேவனுடன் ஐக்கியமாக இருந்தார். நீங்கள் அவரோடு ஐக்கியத்தில் இருக்கும் போது, அவருடைய குரலைக் கேட்பீர்கள்.மேலும், அவருக்குச் செவிசாய்ப்பீர்கள். தேவன் அவரை பல விஷயங்களில் வழிநடத்தினார்.

    • வரப்போவதைப் பற்றிய எச்சரிக்கை - அடுத்து வருவதைப் பற்றிய தெளிவான வழிகாட்டல், அவர் ஏன் பேழையைக் கட்ட வேண்டும்? - அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். ஆதியாகமம் 6:13

    • பேழையை எவ்வாறு கட்டுவது என்பதற்கான வழிகாட்டல் - பேழையை எவ்வாறு கட்டுவது என்று அவருக்கு வழிகாட்டினார் -  ஆதியாகமம் 6:14-21

    • பேழையைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் - எந்தெந்த விலங்குகளை சேகரிக்க வேண்டும், எந்த சுத்தமான / அசுத்தமான விலங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும், அவரது குடும்பத்தை பேழைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லாவற்றையும் குறித்து கட்டளையிட்டார். ஆதியாகமம் 7:1-3

    • கடைசி நாட்களின் வெளிப்பாடு - அழிவுக்கு 7 நாட்களுக்கு முன்பு  தேவன் அவரை எச்சரித்து, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் 7:4

2. தேவனுக்கு உண்மையாயிருந்தார் 

  • நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் 6:9

  • நோவாவின் பிள்ளைகளின் விசுவாசம் - நோவா நீதிமான் என்றும்  ஒவ்வொரு நாளும் தேவனைச் சார்ந்து இருந்தார் என்றும் வேதம் கூறுகிறது. அவர் சார்ந்திருந்ததைப் பாருங்கள், அவருக்கு 500 வயதான பிறகுதான் பிள்ளைகள் பிறந்தனர். நோவா ஐந்நூறு வயதானபோது, சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான். ஆதியாகமம் 5:32. அவரது விசுவாசம்  மிகவும் உறுதியாயிருந்தது. அவரது ஆசீர்வாதத்திற்காக, 500 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

  • பேழையைக் கட்டுவதற்கு தேவனின் வாக்குறுதியில் விசுவாசம் - தேவன் வந்து ஒரு பேழையைக் கட்டச் சொல்கிறார். நோவாவின் சூழ்நிலையில் உங்களை கற்பனை செய்து பாருங்கள், ஜனங்கள் அநேக உலக இன்பங்களால் நிரம்பியிருக்கிற பொழுது, ஒருவர் வந்து உலகம் மொத்தமாக அழியப் போகிறது. ஒரு பேழையைக் கட்டு என்று கூறினால் நாம் சிரித்து விட்டு, கீழ்ப்படிய மாட்டோம். ஆனால் நோவா தேவனுக்கு  உண்மையாக இருந்ததால் முழு விசுவாசத்துடன் அவரை நம்பினார். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். எபிரேயர் 11:7

  • நோவா இந்த வாக்குத்தத்தத்தின் படி வாழ்ந்தார், விசுவாசத்தினால் தேவனைப் பிரியப்படுத்தினார் - விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6

  • நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழையைக் கட்டியபோது கேலிக்குள்ளானக் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டனர்.

  • நோவாவும் அவரது குடும்பத்தினரும் தேவனின் உண்மைத்தன்மையின் மூலம் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற வெள்ளத்தைத் தாங்கிக்  கொண்டனர்.

3. கீழ்ப்படிதல்

  • நோவா அந்தப் பேழையைக் கட்டுவதற்கு தேவனுக்கு கீழ்ப்படிந்தார். கருவேல மரங்களை ஏற்றிச் செல்வது, வெட்டுவது / கட்டுவது போன்ற இவை அனைத்தும் கைமுறையாக செய்யப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். பின்னர் செய்வோம் என்று அவர் ஒருபோதும் சோம்பேறித்தனமாக இருக்கவில்லை. அவர் அதை தேவனின் நியமிக்கப்பட்ட நேரத்தில் கட்டினார், வெள்ளத்திற்கு 7 நாட்களுக்கு முன்பு தேவன் அவரை எச்சரித்தார்.

  • நோவா தேவன் சொன்ன எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிந்தார். தேவன் இரண்டு முறை அவருடைய கீழ்ப்படிதலுக்கு சாட்சி கொடுக்கிறார்.

  • முதலாவது முறை தேவன் கூறுகிறார் - "தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம்" - அதாவது தேவனின் நுணுக்கமான அறிவுரைகள் மற்றும் விவரங்களைக் கேட்டு (இவை அனைத்தையும் ஆதியாகமம் 6:13-21 இல் படிக்கலாம்) அவர் சொன்னது போலவே கீழ்ப்படிந்தார் - நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். ஆதியாகமம் 6:22

  • இரண்டாவது முறை தேவன், "கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்" என்று கூறுகிறார். இது தேவன் தன்னிடம் கேட்ட எந்த கட்டளையையும் நோவா புறக்கணிக்கவில்லை என்பதைக் குறிக்கிறது. நோவா தன்னை இரண்டாம் பட்சமாக வைத்து, தேவன் அவருக்கு அறிவுறுத்திய அனைத்தையும் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். ஆதியாகமம் 7:5

  • பேழையை விட்டு வெளியே வரும்படி தேவன் சொன்னபோது தான் நோவா வெளியே வந்தார்.

  • தேவனின் அன்பைக் கைக்கொள்ளுவதன் மூலம் தேவனுடைய  வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, நோவா இந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.  நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:15

4. நோவாவின் மீதான தேவ கிருபை

  • தேவன் ஜனங்களின் பொல்லாங்கான காரியங்களின் நிமித்தம் அவர்கள் மீது கோபமடைந்தார். உலகை வெள்ளத்தால் அழிக்க திட்டமிட்ட போது, அவர் 40 நாட்கள் இரவும் பகலும் மழையை அனுப்பி வெள்ளத்தை உண்டாக்கினார். ஒரு சுவாரஸ்யமான வசனம் உள்ளது.

  • மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது. ஆதியாகமம் 7:23-24

  • தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. ஆதியாகமம் 8:1

  • தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்- நோவாவின் நிமித்தம் தேவன் தமது கோபத்தைத் தணித்துக் கொண்டார் என இதைப் படிக்க வேண்டும்.

  • தேவன் ஏன் கோபத்தைத் தணித்தார்? ஒரு நீதிமான் பேழைக்குள் மேலும் காத்திருக்கும் துன்பத்தை அவர் விரும்பவில்லை.  

5. பொறுமை

  • பொறுமையும் விசுவாசமும் கைகோர்த்துச் செல்கின்றன. நோவாவின் உதாரணத்திலிருந்து இதைக் காணலாம், பேழையைக் கட்டும்படி தேவன் நோவாவிடம் கேட்டபோது, ​​அவர் கர்த்தர் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்தார்.

  • 40 நாட்களுக்குப் பிறகுதான் அவர் படகின் ஜன்னலைத் திறந்தார் என்று வாசிக்கிறோம் - ஜன்னலைத் திறப்பதற்கு அவர் 40 நாட்கள் காத்திருந்தார்.  நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. ஆதியாகமம் 8:6-7

  • மழை நின்றதும் படகைச் சுற்றியுள்ள தண்ணீர் வற்றி வறண்ட நிலத்தைப் பார்க்க 1 வருடம் ஆனது. அந்த நாட்களிளெல்லாம் அவர் படகிலேயே இருந்தார். ஒரு வருடமாக இந்த எல்லா விலங்குகளுடனும் படகுக்குள் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தண்ணீர் மீதான பயம், விலங்குகளின் அழுக்கு, வறண்ட நிலத்தைப் பார்க்க இருக்கும் தீவிரமான விருப்பம் எல்லாம் இருந்தும் கூட தேவன் அவரை வரச் சொல்லும் வரை அவர் அவசரப்படவில்லை. அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது. ஆதியாகமம் 8:13

  • காய்ந்த நிலத்தைப் பார்த்த பிறகும் கூட நோவா படகை விட்டு வெளியே வரவில்லை, கர்த்தர் அவரை வெளியே வரச் சொன்ன பிறகுதான் வெளியே வந்தார். நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். ஆதியாகமம் 8:16-18

  • நோவா நம்மில் அநேகரைப் போல இல்லை, அவர் சூழ்ந்திருந்த தண்ணீரைக் குறித்து ஒருபோதும் புலம்பவும் இல்லை, நிலத்தை உலர வைக்கும்படி தேவனிடம் எந்த பிடிவாதமும் காட்டவும் இல்லை. ஜலத்தை வற்ற வைக்க தேவன் காற்றை அனுப்புவதற்கு, தேவனின் சரியான நேரத்திற்காக காத்திருந்தார்.

6. நீதி

  • ஆதியாகமம் 6 ஆம் அதிகாரத்தில் இவ்வாறு வாசிக்கிறோம். நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் 6:9

  • நோவாவை நீதிமான் என்று தேவன் சாட்சியமளித்தார். நீதியின் அடையாளம் அவரது செயல்களில் வெளிப்படுகிறது. அவர் பேழையை விட்டு வெளியேறி நேரடியாக நிலத்திற்கு செல்லவில்லை.

  • அவர் தேவனுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவருக்கு தகனபலி செலுத்தினார். அவருடைய இந்த செயல் மிகவும் நன்றாக இருந்ததால் சுகந்த வாசனை என்று கர்த்தர் சாட்சியமளிக்கிறார். அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. ஆதியாகமம் 8:20-21

  • தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கை - தேவன் பூமியை மீண்டும் வெள்ளத்தால் அழிக்க மாட்டார் என்ற வாக்குத்தத்தம் - நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். ஆதியாகமம் 9:9,11

  • உடன்படிக்கையின் அடையாளம் வானவில் – இது, தேவன் எவ்வளவு பெரிய கிருபையுடன் இருக்கிறார், அவர் மீண்டும் நம் மீது கோபத்தை  அனுப்பமாட்டார் என்பதை நினைவுபடுத்தும் ஒரு அடையாளம். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். ஆதியாகமம் 9:12-15

  • கர்த்தராகிய இயேசு வரும் நாள் நோவாவின் நாட்களை விட பயங்கரமானதாக இருக்கும்.

    • ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். மத்தேயு 24:21-22

    • உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். தானியேல் 12:1

    • வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும், கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். யோவேல் 2:30-32

 

நமக்கு நேரம் குறைவாகவே உள்ளது. தேவனின் கடைசி நாட்களின் வலி மிகவும் பயங்கரமானதாக இருக்கும். நோவாவைப் போல நாம் பிரித்தெடுக்கப்படாவிட்டால்,  அவருடைய கோபத்திலிருந்து நாம் தப்ப முடியாது. தேவனிடம் நெருங்கி இருக்க இந்த 6 குணங்கள் இருக்க வேண்டும், அப்பொழுது கடைசி நாட்களில் நம் மீது வரக்கூடிய கோபத்திலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

 

அடுத்த முறை நீங்கள் ஒரு வானவில்லைப் பார்க்கும்போது, தேவன் நோவாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் அவர் சீக்கிரம் வருகிறார் என்று எச்சரிக்க அவருடைய கடைசி நாட்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார் !! விழித்துக்கொள்ளுங்கள் !! எழும்புங்கள் !! அவரை தொழுது கொள்ளுங்கள்.

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page