top of page
Kirupakaran

நேர்மாறான மாற்றம் (U TURN)


நீங்கள் ஒரு புதிய இடத்தில் பயணிக்கும்போது, ​​ஒரு சந்தில் தவறான திருப்பத்தை எடுத்து, கடந்து சென்றுவிட்டால் அது உங்களை வேறொரு சாலைக்கு அழைத்துச் சென்றுவிடும். அதில் தொடர்ந்து செல்லும் போது வழியை தொலைத்துவிட நேரிடும். நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று கண்டறிந்தவுடன், சரியான பாதைக்கு திரும்புவதற்கு நீங்கள் சென்று கொண்டிருக்கும் வழியில் இருந்து U TURN எடுப்பீர்கள்.


நமது ஆவிக்குரிய வாழ்விலும் அப்படித்தான் இருக்கிறது. நாம் தேவனுக்குள் மீண்டும் பிறந்து, ஆவிக்குரிய வாழ்வின் சுவையைப் பெறுகிறோம். சாத்தான் நம்மை உலக இன்பங்களால் தூண்டுகிறான் (பல சமயங்களில் அது வாழ்க்கை முறை என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நாம் ஆவியில் வளர்வதை அவன் விரும்பவில்லை). ஜெபம் பண்ணுவதை புறக்கணிப்பதில் இருந்து மெதுவாக பின்வாங்குவது தொடர்கிறது. பின்பு அது மற்றவகையான பாவத்தின் இன்பங்களுக்கு இடம் கொடுக்கிறது. சிறிது காலத்தில் நாம் பாவத்தை அனுசரித்து, பாவத்திற்கு உணர்ச்சியற்றவர்களாக மாறி பின்தங்கிய நிலைக்கு இட்டுச் செல்லப்படுகிறோம்.


"உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்". எபிரேயர் 3:13


பின்வாங்கிய நிலையிலிருந்து மீண்டும் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு திரும்புவதற்கு மனந்திரும்புதலே ஒரே வழி. மனந்திரும்புதலுக்கான அழைப்பு முக்கியமானது, அது புறக்கணிக்கப்படக்கூடாது. இதுதான் சுவிசேஷத்தின் முதல் வார்த்தை என்று சொல்வது முற்றிலும் சரியானது.


1. யோவான்ஸ்நானகனின் நற்செய்தியின் முதல் வார்த்தை மனந்திரும்புதல் (மத்தேயு 3:1-2)

2. இயேசுவின் நற்செய்தியின் முதல் வார்த்தை மனந்திரும்புதல் (மத்தேயு 4:17, மாற்கு 1:14-15).

3. பன்னிரண்டு சீடர்களின் பிரசங்க ஊழியத்தின் முதல் வார்த்தை மனந்திரும்புதல் (மாற்கு 6:12).


மனந்திரும்புதலும் விசுவாசமும்

ஒவ்வொரு மதமும் மனந்திரும்புதலைப் பற்றி பேசுகிறது. இயேசு கற்பிக்கும் மனந்திரும்புதலுக்கும் உலகத்தின் பார்வையிலான மனந்திரும்புதலுக்கும் வித்தியாசம் உள்ளது. வேதம் "மனந்திரும்புதல்" பற்றி மட்டும் பேசவில்லை; கூடவே "விசுவாசம்" பற்றியும் பேசுகிறது. ("மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்”).

"காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்". மாற்கு 1:15


ஒரு பிரபல எழுத்தாளர் மனந்திரும்புதலை சுவாசத்துடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் - மனந்திரும்புதல் : வெளிவிடுதல் | விசுவாசம் : உள்ளிழுத்தல். ஒன்றாக சேர்ந்து, அது சுவாசித்தல்!

விசுவாசத்துடன் மனந்திரும்புவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேதத்தில் இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.


யூதாஸ்காரியோத்தின் உதாரணம்

யூதாஸின் கதையை நாம் அனைவரும் அறிவோம், யூதாஸ் எவ்வாறு துரோகம் செய்தான் என்பதை சுருக்கமாக இங்கே காணலாம். அவன் எப்படி துரோகம் செய்தான், அவனுடைய மனந்திரும்புதல் எப்படி இருந்தது என்பதை இங்கே தந்திருக்கிறேன்.


யூதாஸின் துரோகக் கதை

"அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்". மத்தேயு 26:14-16,47-49


யூதாஸின் மனந்திரும்புதல்

"அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்". மத்தேயு 27:3-5


கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • அவன் தன் தவறை உணர்ந்து, அதற்காக வருந்தினான் - "மனஸ்தாபப்பட்டு".

  • பணத்தைத் திருப்பிக் கொடுத்ததன் மூலம் தன் தவறை ஒப்புக்கொண்டான் - "அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து:"

  • அவன் தான் பாவம் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டான் - "குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்".

  • இங்கே நடந்தது என்னவென்றால், உலகப்பிரகாரமான மனந்திரும்புதல். அதனால் இறுதியில் அவன் “நான்று கொண்டு செத்தான்”. "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது". 2 கொரிந்தியர் 7:10

பேதுருவின் உதாரணம்

யூதாஸைப் போலவே இயேசுவின் சீஷராக இருந்த பேதுரு இயேசுவை 3 முறை மறுதலித்தார். இராப்போஜனத்திலே இயேசு சொல்லியிருந்தபடியே பேதுரு செய்தார்.


“அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான். அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள். அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்”. லூக்கா 22:54,56-58,60-62


இங்கே பேதுருவுக்கும் மனந்திரும்புதல் நடந்தது. ஆனால், அவருடைய மனந்திரும்புதல் யூதாஸிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதை பேதுருவிடம் இருந்து, நம் வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு கற்றுக்கொள்ளலாம்.


கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • பேதுரு செய்தது மிகப் பயங்கரமான பாவம். இயேசுவே, அது ஒரு பாவம் என்றும் அதன் தாக்கங்களையும் சொல்லியிருந்தார். "மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்". மத்தேயு 10:32-33

  • பேதுருவும் தன் பாவத்திற்காக மனந்திரும்பினார். “வெளியே போய், மனங்கசந்து அழுதான்” என்று வாசிக்கிறோம்.

  • யூதாஸுக்கும் பேதுருவுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், பேதுரு துக்கப்பட்டபோது இயேசுவின் கண்களைப் பார்த்தார். "அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்”.

  • அவர் கண்களைப் பார்த்த பிறகு நடந்த சில செயல்கள் இங்கே உள்ளன. பேதுரு இயேசுவின் வார்த்தையை விசுவாசித்தார், "கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்”.

  • விசுவாசத்தின் காரணமாக, 1 பேதுரு புத்தகத்தை எழுதும்படி அவர் ஒரு புதிய பிறப்பைப் பெற்றார். 1 பேதுரு 1:3-4 வசனங்களில் தனது மனந்திரும்புதலின் செயல்களை எழுதுகிறார். "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்". 1பேதுரு 1:3-4

  • அவருடைய அனுபவத்தின் காரணமாக, இருதயத்தின் இச்சைகளின்படி நடவாமல் எப்படி பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று எழுதுகிறார் - "நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்". 1 பேதுரு 1:14-15


மனந்திரும்புதல் + விசுவாசம் = விட்டுவிடுதல் மற்றும் தூய்மையாகுதல்

மனந்திரும்புதல் + விசுவாசம் = செயல்கள்


மனந்திரும்புதலின் செயல்கள்

மத்தேயு 3:8 - "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்".


விசுவாசத்துடன் மனந்திரும்புதலைத் தொடரும் செயல்கள்


1. தப்பி ஓடுதல் - தப்பி ஓடுதல் என்பது கடந்தகாலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் இருந்து “U TURN” எடுப்பதாகும். நீங்கள் மனந்திரும்பி, தேவன் உங்களை பாவத்திலிருந்து சுத்தப்படுத்தினார் என்று விசுவாசித்தால் மட்டுமே இது நடக்கும். அந்த பாவம் எவ்வளவு மோசமானது என்பது முக்கியமல்ல (எ.கா., விபச்சாரத்தின் பாவங்கள் / போர்னோகிராஃபி / போதைப்பொருள் / குடிப்பழக்கம் அல்லது வேதம் விவரிக்கும் ஏதேனும் கொடிய பாவங்கள்).


2. தேவனுடன் அதிக பரிசுத்தமாக வேண்டும் - நீங்கள் தப்பி ஓடும்போது, உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தமல்லாத பிற பகுதிகளை உங்களுக்கு காட்டும்படி தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். அவர் பல வழிகளில் இதைச் செய்கிறார், அதில் ஒரு வழியானது, நீங்கள் வேதத்தை வாசிக்கும் போது, வார்த்தை உங்கள் இருதயத்திலிருந்து உங்கள் பாவங்களை உணர்த்தும். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது". எபிரேயர் 4:12


3. தேவ சத்தம் - சாத்தானின் ஓநாய் தாக்குதல்கள், நம்மை சிக்க வைத்து மீண்டும் பின்வாங்கிப் போக வைக்கும் முகஸ்துதி வஞ்சகம் இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள செம்மறி ஆடு போல நாமும் தேவனின் சத்தத்தைக் கேட்கிறோம். "நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,". யோவான் 10:11-12,14


4. தேவ சமாதானம் - தேவன் உங்களை பாவத்திலிருந்து மீட்டு, உங்களைக் கழுவிவிட்டார், இனி நீங்கள் பாவத்திற்கு அடிமை இல்லை, பாவத்திற்கான தூண்டுதல் / சோதனைகள் எல்லாம் நீங்கிவிட்டன என்பதை நீங்கள் காணும்போது சமாதானத்தை அடைவீர்கள். தேவனின் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தையும் மனதையும் காத்துக் கொள்வார். "அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்". பிலிப்பியர் 4:7


5. ஓட்டத்தை ஓடிக்கொண்டே இருங்கள் - நித்திய வாழ்வில் இயேசுவுக்காக வாழ நீங்கள் மாரத்தான் ஓட்டம் போல் ஓடிக் கொண்டே இருங்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் உலகின் பாவங்களிலிருந்து விலகி இருங்கள், தேவனுடனான நெருக்கத்தை பிரிக்கும் எந்த ஒரு சிறிய பாவத்தையும் கூட நீங்கள் பொறுத்துக் கொள்ளாதீர்கள். பவுல் விவரிக்கும் வாழ்வை வாழ ஆரம்பியுங்கள். "பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்". 1 கொரிந்தியர் 9:25-27







97 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page