உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிகவும் கடினமான விஷயம் என்ன? உணவை தியாகம் செய்தது, அதிக எடையைக் குறைத்தது, நீட் அல்லது ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றது என்று நாம் பட்டியலிடலாம். கடினம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும்.
நீங்கள் எப்போதாவது உங்கள் சத்துருவை / எதிரியை நேசிக்க முயற்சித்திருக்கிறீர்களா? என் பார்வையில், இது தான் இந்த உலகில் நாம் செய்யக்கூடிய மிகக் கடினமான காரியம். இயேசு இந்த அன்பின் கொள்கைகளைப் பற்றி லூக்கா 6:27-36 இல் போதிக்கிறார்.
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்
“எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே”.லூக்கா 6:27-30
“எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்” என்று இயேசு தொடங்கும் விதத்தைப் பாருங்கள். இது “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று சொல்வதற்கான மற்றொரு வழியாக இருக்கலாம். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன நடைமுறைகள் தேவை என்று சொல்கிறார்.
அன்பு என்ன செய்கிறது என்பதன் மூலம் அன்பு வரையறுக்கப்படுகிறது. நாம் ஒருவரால் நேசிக்கப்பட்டால், அந்த அன்பை திரும்பக் காட்டுகிறோம், ஆனால் “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்று இயேசு கூறுகிறார்.
சத்துரு என்பதன் வரையறை - “ஒரு நபர் மீது வெறுப்பு உணர்வு கொள்பவர், தீங்கு விளைவிக்கும் காரியங்களை வளர்ப்பவர் அல்லது மற்றொருவருக்கு எதிராக விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்; ஒரு பகைவன் அல்லது எதிரி".
நம்மை வெறுக்கும், சபிக்கும், தவறாக நடத்தும், தாக்கும், நம்மை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நம் சத்துருவை நாம் எப்படி நடத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இந்த சத்துரு உங்கள் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவர். நீங்கள் வெறுக்க விரும்புபவர். அவர் தான் உங்களை புண்படுத்தி, உங்களை வீழ்த்த முயல்பவர்.
இது நாம் கற்றுக்கொண்ட மற்றும் செய்து கொண்டிருக்கும் அனைத்து உலக படிப்பினைகளுக்கும் எதிரானது. இது உலகப்பிரகாரமான நம்பிக்கைகள் மற்றும் போதனைகளுக்கு நேர்மாறானது. ஆனால் நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவர் என்றால் இதைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் “எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்”, என்று தான் வார்த்தை தொடங்குகிறது. இது உலகில் உள்ளவர்களுக்கு அல்ல, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்களுக்கானது.
இயேசு கூறியபடி செய்வது மனிதர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து, "என்னுடைய இந்த பலவீனத்தை நான் ஒப்புக்கொடுக்கிறேன், இந்த நபரைப் பார்க்கும்போது வெறுப்பினால் கோபப்படுகிறேன், அவர்கள் பேசிய வார்த்தைகள் என் உள்ளத்தில் ஆழமாக உள்ளன. என் உள்ளத்தில் வேரூன்றியிருக்கிற கசப்பை உங்களிடம் ஒப்புக்கொடுக்கிறேன், ஒவ்வொரு முறையும் நான் அவர்களைக் காணும்போது என்னில் உள்ள வெறுப்பு அவர்கள் மீது என்னை மேலும் கோபப்படுத்துகிறது" என்று கூறும் போது அவர் நம் பலவீனத்தை எடுத்துக்கொண்டு, தெய்வீக அன்பைக் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் அன்பினால் நம்மை உடுத்துவார். இதன் மூலம் நம் சத்துருவை நேசிக்க முடியும்.
நீங்கள் உங்கள் பலவீனத்தை ஒப்புக்கொடுத்தவுடன், இயேசு அளிக்கும் தெய்வீக அன்பு 1 கொரிந்தியர் 13: 4-7 இல் கூறப்பட்டுள்ள குணங்களைக் கொண்டிருக்கும். “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்”. 1 கொரிந்தியர் 13: 4-7
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்று ஏன் இயேசு நம்மைக் கேட்கிறார். ஏனென்றால் பகைமை உணர்வு கசப்பு, வெறுப்பு,கோபம் மற்றும் சாத்தானிடமிருந்து நேரடியாக வரும் பல பாவங்களை ஊக்குவிக்கிறது. இயேசு தூய்மையான பரிசுத்தமான ஆண்டவர், அவர் பாவத்திற்கு எதிரானவர்.
உலகம் தீமையைக் கொண்டு தீமையை வெல்வதற்கே கற்றுக்கொடுக்கிறது. ஆனால் நம்முடைய நன்மையான செயல்களால் தீமையை ஜெயிக்க வேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார். நீங்கள் செய்யும் இந்த அதிசயமான செயலால், நீங்கள் காட்டும் அன்பு எதிரிகளின் இதயத்தில் வெளிப்படும். அது அவர்களை இயேசுவிடம் வரச் செய்யும்.
பொதுவாகவே, நம்முடைய கோபத்தையும் வெறுப்பையும் பல நியாயமான காரணங்களைக் கூறி நியாயப்படுத்துகிறோம். நம் பக்கத்தில் எந்தத் தவறும் இல்லாமல், தவறு பிறரிடம் இருந்தாலும் இயேசு சொல்வது அந்த நபருக்கு எதிராக அன்பைக் காட்டுவது தான். ஆனால் பாவத்தையோ அல்லது அவரின் தவறான பக்கத்தையோ நேசிக்காதீர்கள். நீங்கள் அன்பைக் காட்டினால், எதிரானவரின் பாவமும் தவறும் நம்மால் அகற்றப்படும். ஏனெனில் இயேசுவின் ஒளி ஒரு நபரின் அனைத்து அசுத்தங்களையும் அகற்றும் வல்லமை கொண்டது.
அன்பின் செயல்கள்
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”. லூக்கா 6:27-31
ஆம் ஆண்டவரே, நான் உம்மிடம் ஜெபித்தேன். 1 கொரிந்தியர் 13:4-7 இல் நீங்கள் விவரித்த அன்பை நான் பெற்றுக் கொண்டேன், நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லலாம்.
இயேசு ஒரு நல்ல போதகர், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்று அவர் கற்பிக்கும் முறையைப் பாருங்கள். “,” - இதை கவனியுங்கள்.
"," இதற்குப் பிறகு செயல்கள் ஆரம்பிக்கின்றன.
உங்களை மிகவும் வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்.
உங்களைத் தவறாக நடத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள்.
உங்களை ஒரு பக்கம் அறைந்தவனுக்கு மறுபக்கத்தைத் திருப்பிக் காட்டுங்கள்.
உங்கள் மேலங்கியை ஒருவன் எடுத்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுங்கள்.
ஒருவன் உங்களிடமிருந்து ஏதாவது ஒன்றை வேண்டுமென்றே எடுத்துக் கொண்டால் அதை தயங்காமல் கொடுங்கள்.
“மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”, இப்படி தான் நாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில் எதையும் நமக்கென்று செய்யும் போது மிகவும் நேர்மையாகவும் ஆர்வமாகவும் செய்வோம்.
இயேசுவைச் சார்ந்திருக்காவிட்டால், நம் சுயத்தினால் இது கூடாத காரியம். நம்மில் உள்ள இயேசுவின் ஆவியால் மட்டுமே இந்த செயல்களைச் செய்ய முடியும். ஏனெனில், நம்முடைய சுயமானது இயேசு நமக்குச் செய்யக் கற்றுக் கொடுத்ததற்கு நேர்மாறாக செய்யும்படி கட்டப்பட்டுள்ளது.
செயல்களின் பலன்கள்
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்”. லூக்கா 6:35-36
இந்த பத்தியில் இயேசு விவரிக்கும் செயல்களைப் படியுங்கள். எல்லாம் "," காற்புள்ளியைத் தொடர்ந்து வருகிறது.
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்
நன்மை செய்யுங்கள்
கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள் - உலக அன்பு என்பது அன்பு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து ஒரு எதிர்பார்ப்புடன் வரையறுக்கப்படுகிறது. ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள் என்று இயேசு கூறுகிறார்.
இயேசு பரிசுத்தராய் இருக்கிறார். பாவம் பரிசுத்தத்தின் எதிரி. நாம் பாவிகளாக இருந்தபோது இயேசு இந்த வகையான அன்பை நமக்குக் காட்டினார். சிலுவையில் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். இதனால், நாம் செய்யும் பாவங்களினால் உண்டாகும் தேவனின் கோபத்திலிருந்து மீட்கப்படுகிறோம். இனி ஒருபோதும் பாவம் செய்யாதபடிக்கு இயேசுவின் இரத்தத்தால் நாம் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறோம்.
பலன்கள்
1. “உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்” - இந்த "மிகுதியானது" எதைக் குறிக்கிறது?
அவருடைய பார்வையில் நாம் தவறு செய்யும்போது நாம் பெறும் கிருபையையும் இரக்கத்தையும் இது குறிக்கிறது.
தேவனின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது.
கலாத்தியர் 5:22-23 இல் விவரிக்கப்பட்டுள்ள, ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை நமக்குக் கொடுப்பதை இது குறிக்கிறது. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை”. கலாத்தியர் 5:22-23
இது நம்மை அறிவுறுத்தி, வழிநடத்தும் ஆவியைக் குறிக்கிறது. “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்”. கலாத்தியர் 5:24-25
2. உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
“நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்” - இதுவே ஆண்டவரிடமிருந்து நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த ஆசீர்வாதம்.
யாராவது உங்களுக்கு நன்மை செய்யும் போது உங்கள் குழந்தைகளாக இருக்கும்படி நீங்கள் எப்போதாவது வெகுமதி அளித்திருக்கிறீர்களா? அப்படிச் செய்தால் எல்லா உலக ஆசீர்வாதங்களும் அவர்களுக்கு வாரிசு உரிமையாக வழங்கப்படும்.
அதே போல, “உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்” என்று இயேசு கூறும்போது - சாத்தானின் வஞ்சகங்களுக்கு எதிராக போராடுவதற்காக சிலுவையில் இருந்து அவரை எழுப்பிய இயேசுவின் அனைத்து வல்லமையையும் சுதந்தரிக்கும் உரிமையை அவர் நமக்கு வழங்குகிறார்.
அவரது பிள்ளைகளுக்கு உலகத்தின் போராட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கான வாக்குத்தத்தம் - "பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்". 1 யோவான் 4 :4
கிறிஸ்துவின் அதே வல்லமை நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
“தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,” எபேசியர் 1 : 19-20
"உன்னதமானவர்" - ஆதியாகமம் 1:1 இல் “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று வாசிக்கிறோம்.
அவர் வானத்தையும் பூமியையும் படைத்த தேவன். நாம் அத்தகைய வல்லமையும் உறுதியும் கொண்ட அவருடைய பிள்ளைகள் என்பதே வாக்குத்தத்தம்.
நாம் அவருடைய பிள்ளைகள் என்பதால், நித்தியத்திற்கும் அவருடைய பரலோகத்தில் நமக்கு ஒரு இடம் இருக்கிறது. பரலோக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பாருங்கள். "பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது". வெளிப்படுத்தின விசேஷம் 21:1-4
நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
நமக்கு யார் மீது மிகப்பெரிய கசப்புணர்வு இருக்கிறதோ அல்லது நாம் முரண்படுகிற ஒருவரையோ அடையாளம் கண்டு, தேவனுடைய செயல்களை நாம் பின்பற்றுவதற்கு அவருடைய அன்பைக் காட்டும்படி ஆண்டவரிடம் கேட்கலாம்.
ஒருவருடன் மட்டுமே இதைச் செய்யும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். ஒரு நபருடன் முடித்தவுடன், அடுத்த நபரைத் தேர்வு செய்யுங்கள். முதலாவது முடிந்தவுடன் அவர் உங்களை நன்றாகப் பக்குவப்படுத்துவார், இரண்டாவதற்குப் பிறகு இன்னும் சிறப்பாகச் செய்வார். நீங்கள் அவரைப் போலப் பரிசுத்தமாக்கப்படும் வரை இந்தப் பட்டியல் தொடரும்.
Yorumlar