நீங்கள் தேவனை எப்படி அழைக்கிறீர்கள்? என் பிதாவே என்றோ , அப்பா என்றோ அல்லது என் கர்த்தரே என்றோ ஜெபிக்கிறீர்களா? அல்லது தேவனே எனக்கு உதவுங்கள் என்று சொல்கிறீர்களா? என் தேவனே (என் பிதா / அப்பா அல்லது கர்த்தர் ) என்று அழைப்பதற்கும் தேவனே என்று அழைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. என் தேவனே என்று அழைக்கும் போது, இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம். மேலும் இந்த அழைப்பில் உங்கள் விசுவாசம் உடனடியாகத் தெரிகிறது. இந்த வார்த்தைகள் நீங்கள் தேவன் மீது வைத்திருக்கும் ஆழமான அன்பையும், அவரை சார்ந்திருப்பதையும் காட்டுகிறது.
”உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” ரோமர் 1:8
ரோமர் 1:8 இல் உள்ள வார்த்தைகளை நான் தியானிக்க ஆரம்பித்தபோது இந்த வலைப்பதிவுக்கான சிந்தனை வந்தது. இதில் பவுல் ”உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” என்று கூறுகிறார். உறவு இல்லாமல் ஒருவரை "என் தேவன்" என்று நம்மால் அழைக்க முடியாது. நாம் நம் குடும்ப உறவுகளை அழைக்கும் போது என் மனைவி, என் மகள், என் மகன், என் மாமா, என் அத்தை என்று அழைக்கிறோம். அடுத்தவர்களோடு உறவு எதுவும் இல்லாத போது நாம் அவர்களை அப்படி அழைப்பதில்லை. ஏனென்றால், நம் குடும்ப உறவுகள் மீது வைத்திருக்கும் அன்பினால் நாம் மிகவும் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறோம்.
ஆகவே, பவுலை இந்த அளவு தேவனுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க தூண்டியது எதுவோ, அதை நாமும் பின்பற்றி தேவனுடனான நமது உறவை தனிப்பட்ட மற்றும் நெருக்கமான உறவாக மாற்றிக் கொள்ளலாம்.
ரோமர் 1 இல் நாம் கற்றுக் கொள்ளும் 4 விஷயங்கள், பவுல் இந்த தனிப்பட்ட உறவை உருவாக்கும்படி செய்தன.
1. இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்
2. இயேசுவே சுவிசேஷத்தின் ஆதாரம்
3. இயேசுவிடம் சுவிசேஷத்தின் தனித்துவம் உள்ளது
4. இயேசுவே கிருபையின் ஆதாரம்
இதை நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்தும் ஆத்துமாவிலிருந்தும் உணரும் போது, இயேசுவின் மீதான அன்பு தேவனுடனான உறவை "என் தேவன்" என்ற நிலைக்கு முதிர்ச்சியடையச் செய்யும். தேவன் தொலைதூரத்தில் உள்ள யாரோ ஒரு நபர் அல்ல, அவர் உங்களுக்குள்ளே இருக்கிறார். நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த சூழ்நிலையில் கடந்து சென்றாலும் அவர் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்.
இதை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள இந்த நான்கு பகுதிகளையும் ஆழமாகப் பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்
பவுல் கொரிந்துவில் சிறையில் இருந்தபோது ரோமர் நிருபத்தை எழுதினார். அவர் ரோமாபுரியில் உள்ள ஜனங்களுக்கு தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்தினார்.
NIV வேதகாமப் பதிப்பு இவ்வாறு கூறுகிறது,
‘இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,’ ரோமர் 1:1
ஆங்கில வேதாகமம் ‘NIV’ மொழிபெயர்ப்பில் , பவுல் "இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஆங்கில வேதாகமம் ‘Amplified Bible’ மொழிபெயர்ப்பில், "இயேசு கிறிஸ்துவின் அடிமையாகிய பவுல்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
இரண்டு பதவிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது (ஊழியக்காரன் மற்றும் அடிமை).
ஒரு வேலைக்காரன் ஒரு எஜமானால் பணியமர்த்தப்படுகிறான், அவன் எஜமான் அவன் செய்கிற வேலைகளுக்கு அவனுக்கு ஊதியம் கொடுக்கிறான். ஆனால், ஒரு அடிமை அவனுடைய எஜமானுக்குச் சொந்தமானவன், அவன் எஜமான் அவனை விலைக்கு வாங்கி இருக்கிறான்.
ஒரு வேலைக்காரன் இன்னும் ஓரளவு தனிப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் தக்க வைத்துக் கொண்டாலும், ஒரு அடிமையானவன் தன் எஜமான் சம்பாதித்த சொத்தைப் போன்றே இருக்கிறான்.
ஒரு அடிமையானவனின் அனைத்து தேவைகளும் அவனது எஜமானால் பூர்த்தி செய்யப்படும். பதிலுக்கு அவன் தன் எஜமானுக்கு அசைக்க முடியாத கீழ்ப்படிதலைக் கொடுக்கிறான். அவன் தனது ஆசைகள் மற்றும் இன்பங்களுக்கு முதல் இடம் கொடுப்பதில்லை. அவன் தனக்காக எதையும் செய்வதற்கு முன் தனது எஜமானுடைய ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறான்.
தன் எஜமானரான இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் பவுல் தன்னை இப்படித்தான் அடிமையாக பார்த்தார். தன் வாழ்க்கை இனி தனக்கு சொந்தம் இல்லை என்பதை பவுல் உணர்ந்தார். பவுல் இப்போது, சிலுவையில் சிந்திய விலை மதிப்பில்லாத இரத்தத்தினால் அவரை வாங்கிய இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்.
அப்போஸ்தல நடபடிகளில் நாம் வாசிக்கிறபடி, இயேசுவைப் பின்பற்றியவர்களை பவுல் கடுமையாகத் துன்புறுத்தினார். தேவ தொடுதலுக்குப் பிறகு, இயேசுவின் அடிமை என்ற மனப்பான்மையைக் கொண்டார். கிறிஸ்துவின் காரியங்களுக்காக தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்தார். கர்த்தருடைய வார்த்தையை உலகெங்கும் எடுத்துச் செல்வதில் பெரும் போராட்டங்களைச் சந்தித்தவர்களில் அவரைப் போல வேறு யாரும் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை.
இந்த மனப்பான்மையின் காரணமாக, அவர் தேவனுடைய திட்டத்தில் ஒரு விதையாக இருந்தார். மேலும் நமது தலைமுறையும் வருங்கால சந்ததியினரும் இயேசுவை நம் சொந்த இரட்சகராக அழைக்கும்படி, தேவ சித்தத்தை செய்தார்.
சுய பரிசோதனை செய்து உங்களை நீங்களே சரிபாருங்கள்
நீங்கள் தேவனிடம் அடிமை மனப்பான்மையைக் கொண்டிருந்தால், உங்களிடம் உள்ள அனைத்தும் அவரிடமிருந்து வந்தவையா?அல்லது இந்த உலகத்தின் அனைத்து விஷயங்களுக்கும், ஆவிக்குரிய காரியங்களுக்கும் நீங்கள் உங்களையேச் சார்ந்திருக்கிறீர்களா?
உங்களிடம் உள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் குறித்து உங்கள் அணுகுமுறை என்ன? உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் - வேலை / செல்வம் போன்றவை, தனிப்பட்ட ஆசீர்வாதங்கள் - நல்ல ஆரோக்கியம், நல்ல குடும்பம் போன்றவை, ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் - தேவன் மீதான அன்பு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவை என உங்கள் ஆசீர்வாதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இவை அனைத்தையும் தேவனிடம் இருந்து பெற்றதாகப் பார்க்கிறீர்களா? அல்லது அவற்றில் பெரும்பாலானதை உங்கள் சொந்த பலத்தில் இருந்து பெற்றதாகப் பார்க்கிறீர்களா? நீங்கள் இந்த உலகில் வாழும் போது, தேவனுடைய ஊழியத்தை கவனிப்பதற்காக இந்த ஆசீர்வாதங்களை எஜமானர் உங்களுக்கு வழங்கியதைப் போல பார்க்கிறீர்களா? உங்களுக்கு இருக்கும் வேலையை தேவன் உங்களுக்கு கொடுத்த வேலையாக பார்த்து அவர் விரும்பும் வழியில் வேலை செய்கிறீர்களா அல்லது வெறும் சம்பளத்திற்கான ஒரு வேலையாக செய்கிறீர்களா? , நீங்கள் இருக்கும் வீட்டை தேவனின் வீடு என்று பார்த்து, அந்த வீட்டை தேவனுடைய மகிமைக்காக பயன்படுத்துகிறீர்களா அல்லது அது வாழ்வதற்கு வெறும் ஒரு வீடு என்று பார்க்கிறீர்களா?
நம்மில் பலர், இந்த ஆசீர்வாதங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டவை எனவே இது எனக்கு சொந்தம் என்று நினைத்துக்கொண்டு, நமக்கு இவற்றை சுதந்திரமாகத் தந்த எஜமானரை (இயேசு கிறிஸ்துவை) மறந்து விடுகிறோம். நம்மிடம் இருப்பதெல்லாம் தேவனுடைய செல்வம் என்பதை மறந்து விடுகிறோம். நாம் வெறும் பாதுகாவலர் / பராமரிப்பாளர் மட்டுமே. தேவன் நம்மை மண்ணிலிருந்து படைத்தார் என்பதை நினைவில் வையுங்கள். நம்மிடம் உள்ள அனைத்தும் ஒழிந்து போகும், அவரோடு இருக்கும் உறவு மட்டுமே நித்தியமாய் இருக்கும்.
தினமும் யாரிடத்தில் இருந்து வழிகாட்டுதலைப் பெறுகிறீர்கள்? இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் எஜமானரிடம் சோதித்துப் பார்க்கிறீர்களா? ஒரு அடிமை தனது எஜமானின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது போல, உங்கள் வாழ்க்கையில் தினமும் தேவனின் அழைப்புக்கு உண்மையிலேயே கீழ்ப்படிகிறீர்களா?
இயேசு கிறிஸ்துவே சுவிசேஷத்தின் ஆதாரம்
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,’ ரோமர் 1:1
பவுல் தன்னை அப்போஸ்தலன் என்று கூறுகிறார். மேலும் வசனத்தின் முடிவில் ”தேவனுடைய சுவிசேஷத்திற்காக” என்று கூறுகிறார்.
”தேவனுடைய சுவிசேஷத்திற்காக” என்றால் என்ன? அது அவரது பரிசுத்தம், அவரது அன்பு, அவரது கோபம் மற்றும் அவரது நீதி - ஆனால் இந்த சுவிசேஷம் தேவனுடைய சுவிசேஷம். இவை அனைத்தும் மேலே தேவனுடைய சிங்காசனத்திலிருந்து இறங்கி வந்தவை. சுவிசேஷத்தின் ஆதாரம் தேவன் என்பது இதன் பொருள். அவர் சுவிசேஷத்தை எழுதியவர். அவர் சுவிசேஷத்தை வடிவமைத்தவர்.
சுவிசேஷம் என்றால் என்ன மற்றும் இதன் வரையறை என்ன?
சுவிசேஷம் என்பது தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக, தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை மீட்கும் இரட்சிப்பின் நற்செய்தியாகும்.
“சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய்,தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.” ரோமர் 1:18
தேவன் அனுதினமும் துன்மார்க்கர்கள் மேல் கோபமாக இருக்கிறார். சுவிசேஷத்தின் மூலம் தான் உங்களையும் என்னையும் போன்ற பாவிகள் விடுவிக்கப்பட்டு, தேவனுடைய கோபத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விட வேறு சிறந்த எதையும் நீங்கள் ஒருபோதும் கேட்கமுடியாது. இது வெறும் நல்ல செய்தி மட்டுமல்ல, நாம் கேட்கக்கூடிய மிகப்பெரிய நற்செய்தி.
சுய பரிசோதனை செய்து உங்களை நீங்களே சரிபாருங்கள்
இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நமக்கு சுவிசேஷம் கிடைத்துள்ளது என்று உறுதியாக நம்பிய பவுல் வைராக்கியத்துடனும்,இரக்கத்துடனும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். அதுவே இயேசுவை தனக்கென்று உடைமையாக்கிக் கொள்ள பவுலுக்கு வழிவகுத்தது. நமது மோசமான சுயரூபங்களான துன்மார்க்கம்,கோபம்,சுயநலம் போன்றவற்றை பார்க்கிறோம். நாம் இப்பொழுது இப்படி இருக்கிறதற்காகவும், கடந்த காலத்தில் இருந்ததற்காகவும் தேவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று நினைக்கிறோம். ஆனால் தேவன் நம்மை ஒரு கிறிஸ்தவராக ஆக்கும்படி தம்முடைய கிருபையால் இந்த கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றினார்.
நீங்கள் தேவனைத் தேர்ந்தெடுக்கவில்லை, அவர் தம்முடைய சுவிசேஷம் / பரிசுத்த ஆவி மற்றும் எல்லா நித்திய ஆசீர்வாதங்களையும் கொடுப்பதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவர் கொடுத்த ஆசீர்வாதங்கள் யாவும் உங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும். தேவனிடமிருந்து பெற்றுக் கொண்ட சுவிசேஷத்திற்காக நீங்கள் எத்தனை முறை நன்றியுள்ளவர்களாக இருந்தீர்கள்?.
தேவனின் சுவிசேஷம் நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இந்தப் பரிசை மற்றவர்களுக்கு எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம்? அது தேவனின் சித்தத்துடன் ஒத்துப் போக உதவுகிறது.
இயேசுவிடம் சுவிசேஷத்தின் தனித்தன்மை உள்ளது
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,’ ரோமர் 1:1
ரோமர் 1:1 இல் "தேவனுடைய சுவிசேஷத்திற்காக" என்று வாசிக்கும்போது, சுவிசேஷத்தின் தனித்துவத்தை நாம் கவனிக்கலாம். "ஒரு சுவிசேஷத்திற்காக" என்று சொல்லப்படாமல் வெறுமனே "சுவிசேஷத்திற்காக" என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது வேறு சுவிசேஷம் எதுவும் இல்லை என்று பொருள்படும் வகையில் இது சுவிசேஷத்தின் தனித்துவத்தைப் பற்றி பேசுகிறது, தேவனிடம் அழைத்துச் செல்லும் மலையை நோக்கி செல்லும் பல பாதைகளில் ஒன்றைப் போல, சுவிசேஷம் என்பது ஒருபோதும் "ஒரு" சுவிசேஷம் என்று கூறப்படுவதில்லை.
ஒரே ஒரு சுவிசேஷம் மட்டுமே உள்ளது, அது இயேசு நமக்கு வெளிப்படுத்திய அவருடைய சுவிசேஷம். ஒவ்வொரு முறையும் சுவிசேஷத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "சுவிசேஷம்" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இது ஒரே ஒரு சுவிசேஷத்தையேக் குறிக்கிறது.
1 கொரிந்தியர் 15:1 ஆம் வசனம் முதல் முக்கியத்துவம் வாய்ந்த “சுவிசேஷத்தை” குறிக்கிறது. கலாத்தியர் 1:7,9 வசனங்களில் "ஒரு சுவிசேஷம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. “வேறொரு சுவிசேஷம் இல்லையே;” கலாத்தியர் 1:7 , "நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை" கலாத்தியர் 1:9.
அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.1 கொரிந்தியர் 15:1
“வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” கலாத்தியர் 1:7,9.
புதிய ஏற்பாடு முழுவதும் பல குறிப்புகள் உள்ளன. சுவிசேஷம் எப்போதும் ஒரே ஒரு சுவிசேஷமாகவே வழங்கப்படுகிறது.
நரகத்திற்கு செல்ல பல பாதைகள் உள்ளன. ஆனால், பரலோகத்திற்கு செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ”மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.” நீதிமொழிகள் 14:12. மனித மதம், ஞானம் அல்லது ஒழுக்கம் போன்றவை மூலம் , தேவனை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு சுய-கருத்து வழியும் நித்திய மரணத்திற்கு வழிவகுக்கிறது.
“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” யோவான் 14:6. தேவனிடம் எப்படி வர வேண்டும் என்பதில் இயேசு ஒரு பிரத்யேக உரிமை கோரினார். பேதுரு ஆலோசனை சங்கத்தின் முன் நின்று இவ்வாறு கூறினார்,”அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”அப்போஸ்தலர் 4:12
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:5. எத்தனை கடவுள்கள் இருக்கிறார்களோ அத்தனை மத்தியஸ்தர்கள் இருக்கிறார்கள். தேவன் ஒருவரே, எனவே, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒருவர் மத்தியஸ்தராக இருக்கிறார், அது இயேசு கிறிஸ்து.
சுய பரிசோதனை செய்து உங்களை நீங்களே சரிபாருங்கள்
ஒவ்வொரு மதமும் சத்தியத்தின் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதால் சகிப்புத்தன்மை கொண்ட, அரசியல் முறைபாடுகளுக்காக பாடுபடும் உலகில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு மதமும் கடவுளைப் பற்றிய ஒட்டுமொத்த அறிவுக்கு சில பங்களிப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இன்றைய அடிப்படை முக்கிய மதிப்பு சகிப்புத்தன்மை. தேவனை அடைய ஒரே ஒரு வழி தான் உள்ளது - இரண்டு அல்லது மூன்று வழிகள் அல்ல - அந்த ஒரு வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகும்.
நீங்கள் கிறிஸ்தவத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற உங்கள் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள். நீங்கள் அரசியல் முறைபாடுகளுக்காக பாடுபடுபவர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் கருத்துக்களை இயேசுவிடம் திருப்புங்கள். ஏனெனில், தேவனிடம் செல்வதற்கு இயேசுவைத் தவிர வேறு வழியில்லை.
இயேசுவே கிருபையின் ஆதாரம்
”அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.” ரோமர் 1:6,7
நாம் கிருபையை அவர் மூலமாகப் பெறுகிறோம். பாவிகளுக்குச் சுவிசேஷம் சொல்லப்பட்டாலும், நம் சுபாவப்படி நாம் அனைவரும் இன்னும் பாவிகளாகவே இருக்கிறோம். நம்முடைய பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்காமல் அவருடைய கிருபையினால் நமக்கு இரக்கத்தைத் தருகிறார்.
”பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”ரோமர் 6:23. “கிருபைவரம்” என்பது அவர் நமக்கு அளித்த கிருபையைக் குறிக்கிறது. அதன் மூலம் நாம் கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை அடையும்படி இரட்சிக்கப்படுகிறோம்.
இந்தக் கிருபையானது யூதர்கள் / புறஜாதிகள், கருப்பு / வெள்ளை, அல்லது பழுப்பு நிற தோலுடையவர்களுக்கு மட்டுமல்ல. அவர் யாவருக்கும் தேவன். அவர் தமது கிருபையை எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இலவசமாக வழங்குகிறார்.
இந்த கிருபை நாம் அவர் மீது வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே வருகிறது. இயேசு கிறிஸ்துவே தேவன், அவர் மட்டுமே என்னை காக்கக் கூடிய இரட்சகர் என்று நாம் விசுவாசிக்கும் தருணத்தில், கிருபை நமக்கு இலவசமாக வருகிறது.
சுய பரிசோதனை செய்து உங்களை நீங்களே சரிபாருங்கள்
பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே ஆதாரமாகக் கருதியது தான் அவரை இயேசுவின் மீது வலுவாக சொந்தம் கொள்ள வைத்தது. அவருடைய ஊழியத்தில் ஏராளமான போராட்டங்களை சந்தித்த போதும் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும்படியான வைராக்கியம் அவருக்கு இருந்தது. அதே மாதிரியான விசுவாசம் நமக்கு அவரிடத்தில் உள்ளதா?
தேவன் உங்களுக்குக் காட்டிய கிருபைக்கு நன்றி செலுத்துங்கள். நம்மிடம் எவ்வளவோ குறைகள் இருந்தபோதிலும், அவர் நம்மைத் தேர்ந்தெடுத்து, அனுதினமும் நமக்குக் கிருபையை அளிக்கிறார். இதனால் நாம் தகுதியானவர்களாக இருந்தும், தேவனின் கோபத்திற்கு ஆளாவதில்லை.
உங்களைக் குறித்து தேவன் சங்கடப்படும் பகுதிகளை வெளிப்படுத்தும்படி இந்த கிருபையைப் பயன்படுத்தி, அவரிடம் கேளுங்கள். மேலும் உங்கள் வாழ்க்கையின் பாவத்தை மாற்றும்படி கேளுங்கள். அவர் உங்களுக்கும் எனக்கும் அளித்த கிருபை, நாம் பாவத்தில் தொடராமல், அதைப் பார்த்து மனந்திரும்புவதற்கும் நம்மை மேலும் பரிசுத்தமாக்குவதற்கும் தான்.
Commentaires