top of page
Kirupakaran

நீங்கள் தேவனுக்கு பிரியமானவரா?


நாம் அனைவரும் கிறிஸ்துவில் விசுவாசத்திற்குள் வரும்போது, தேவனின் புத்திரர் என்று அழைக்கப்படுகிறோம். வேதம் கூறுகிறது, நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. கலாத்தியர் 3:26


ஆனால் நம்மில் பலர் கலாத்தியர் 3:26 இல் சொல்லப்பட்டுள்ளபடியே இருக்கிறோமே தவிர, ஒருபோதும் ரோமர் 8:14 இல் சொல்லப்பட்டுள்ளபடி தேவனின் புத்திரர் ஆவதில்லை. (மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14). இதன் அர்த்தம் என்ன? உங்கள் தந்தைக்கு 100 பிள்ளைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்க்கும்போது அவர் தனது பிள்ளையாக கருதுகிறார். அவ்வளவே. நீங்கள் மற்ற பிள்ளைகளில் இருந்து வித்தியாசமாக இல்லை. ஆனால் அவர் நெருக்கமாக இருப்பதும் மற்றவர்களை விட அதிகம்  விரும்புவதும் வெகு சிலரை மட்டுமே. அந்த பிள்ளைகளே அவரது பிரியமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். உதாரணத்திற்கு, யாக்கோபு (ஆதியாகமத்தில் இஸ்ரவேல் என்று அழைக்கப்படுகிறார்) பல குமாரரைப் பெற்றிருந்தும், யோசேப்பை மற்றவர்களை விட அதிகமாக நேசித்தார் - இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். ஆதியாகமம் 37:3


"புத்திரர்" என்பதில் ஒரு சிறப்பு உள்ளது - பழைய ஏற்பாட்டில், ஆபிரகாம், யாக்கோபு மற்றும் பிறரைப் பற்றி படிக்கும்போது, அவர்களுக்கு பல குமாரர்கள் இருந்த போதும், தேவனின் ஆசீர்வாதம் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இருந்தது. உதாரணத்திற்கு, ஆபிரகாமுக்கு இஸ்மவேல் மற்றும் ஈசாக்கு என்று 2 குமாரர் இருந்தனர். தேவ சித்தத்தைச் செய்யவும் ஆபிரகாமின் சுதந்தரத்தையும் வாக்குத்தத்தத்தையும் சுதந்தரித்துக்கொள்ளவும், ஆபிரகாமின் ஆசீர்வாதம் ஈசாக்கிற்கு மட்டுமே இருந்தது.


நம்மில் பெரும்பாலோர் தேவனின் புத்திரர் என்று ஜெபிக்கிறோம். நாம் "தேவனின் புத்திரர்" என்பதற்கு நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14


தெளிவான விளக்கம் - தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள் மட்டுமே தேவனின் புத்திரராகும்படியான தகுதி பெறுகிறார்கள் ~ தேர்ந்தெடுக்கப்பட்ட புத்திரர் அல்லது அவருக்குப் பிரியமான புத்திரர்.


பவுல் ஒரு படி மேலே சென்று ஒரு கிறிஸ்தவரை வரையறுக்கிறார்.

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல்ஆ விக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. ரோமர் 8:9

விசுவாசம் இருந்தால் மட்டும் போதாது, தேவனின் ஆவி என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியம். தேவனுடைய ஆவியானவர் பரிசுத்த ஆவியைத் தவிர வேறில்லை.


  • பரலோகத்தில் உள்ள பிதாவாகிய தேவன்

  • பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிற குமாரனாகிய தேவன்

  • பூமியில் இருக்கிற பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் ஒரு பெற்றோரைப் போல, தமது பிள்ளைகளைக் கவனித்து, அவர்களை வழிநடத்துகிறார். பெற்றோர் தமக்குப் பிரியமான குழந்தையை எப்படிக் கவனித்துக்கொள்வார்கள்? குழந்தை எங்கு செல்கிறது என்று கவனமாய் பார்த்து, அதற்குப் பிடித்த அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, எப்போதும் தங்களுடைய பார்வையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டு, தம்மைச் சுற்றி விளையாடுவதை உறுதிசெய்கிறார்கள். அதைப் போலவே, பரிசுத்த ஆவியானவர் தமது புத்திரருக்கு அநேகக் காரியங்களை செய்கிறார்.

 

பரிசுத்த ஆவியானவர் தேவனின் புத்திரருக்கு (பிரியமான புத்திரருக்கு)  பின்வருவனவற்றைச் செய்கிறார்.

தேற்றரவாளர்

  • பரிசுத்த ஆவியானவர் "பரிந்துரையாளர்" அல்லது "தேற்றரவாளர்" (உதவியாளர் என்று அர்த்தம்) என்று அழைக்கப்படுகிறார். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26

    • சட்ட விஷயங்களுக்காக நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, நீங்கள் சுயமாகச் செயல்படுவதில்லை. உங்களுக்கு உதவுமாறு வழக்கறிஞரிடம் கேட்கிறீர்கள். அதே மாதிரி, தேவனின் பிரமாணங்கள் மிக உயர்ந்தவை. எனவே, பரிந்துரையாளராகிய  பரிசுத்த ஆவியானவர் அவற்றைக் கையாள்வதற்கு நமக்கு உதவுகிறார்.

    • நாம் கிறிஸ்துவில் வாழும்போது, பின்பற்றி வாழ்வதற்கு நிறைய பிரமாணங்கள் உள்ளன. நீதியான வாழ்க்கை வாழ, நமக்கு அவற்றில் பலவற்றைத் தெரியாது அல்லது அனைத்தையும் பின்பற்றாமல் இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதற்கு நமக்கு உதவுகிறார். மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். ரோமர் 8:13

  • பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும் பரிசுத்த ஆவியானவரை தனியாக எப்போது பூமிக்கு அனுப்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் குமாரனாகிய தேவனைப் போல ஒரு  நீதியான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக  தான். நாம் அவரை நெருங்குவது சாத்தியமற்றது என்பதை அவர் அறிவார், எனவே அவர் ஒரு பரிந்துரையாளராக செயல்படுகிறார், இதனால் நாமும் நாளுக்கு நாள் கிறிஸ்துவைப் போல வடிவமைக்கப்படுவோம்.

  • நமது மாம்சம் (சுய ஆசை) பலவீனமானது மற்றும் பாவமானது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் செய்யும்படி சொல்வதற்கு,மாம்சமானது கீழ்ப்படிந்தால், நாம் நீதியான வாழ்க்கையை நடத்த முடியும். அதனால்தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,

    • மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். ரோமர் 8:4

    • மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ரோமர் 8:10

  • தேவனின் மகத்துவம் என்னவென்றால் - அவர் நமக்கு இரண்டாம் தரமானவைகளைக் கொடுப்பதில்லை. நமக்கு மிகச் சிறந்ததையேத் தருகிறார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அதே பரிசுத்த ஆவியானவர் தான் நமக்கும் பெற்றுக் கொள்ளும்படி இருக்கிறார். நம்மில் இருக்கும் இந்த பெரிய வல்லமையான சக்தியை (SUPER POWER HOUSE) நாம் அடையாளம் கண்டுகொள்ளாமல் பரிசுத்த ஆவிக்கு அடிபணியத் தவறுகிறோம். நம்முடைய வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மற்றவர்களைக் குறை கூறுகிறோம். மேலும் நாம் பலவீனமான மனிதர்கள், என்னால் பரிசுத்தமாக வாழ முடியாது, புனிதர்களால் மட்டுமே அந்த வாழ்க்கையை நடத்த முடியும் என்று கூறிக் கொண்டு நம்மில் பலர் தோற்றுப்போன வாழ்க்கையை வாழ்கிறோம். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11

 

தேவனின் புத்திரர்

  • உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அனுபவம் இருந்தால், நீங்கள் தேவனின் புத்திரர் என்பதை உங்கள் செயல்கள் நிரூபிக்கும். இது புதிய உடன்படிக்கையின் மக்களின் மிக உயர்ந்த விலைமதிப்பற்ற ஆசீர்வாதமாகும். பழைய உடன்படிக்கை மக்களுக்கு இந்த அனுபவம் இல்லை. ஆபிரகாம் / மோசே / தாவீது எங்கு சென்றாலும், அவர்களை வழிநடத்துவதற்கு தேவன் ஒரு தீர்க்கதரிசியையோ அல்லது தூதனையோ அனுப்பினார். இதை பழைய ஏற்பாட்டில் அவர்களின் வாழ்க்கைப் பாடங்களின் மூலம் பார்க்கலாம். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் இந்த தனித்துவமான ஆசீர்வாதம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் இதை சுதந்தரித்துக் கொள்ளும்படியான அதிர்ஷ்டமான தலைமுறை.

  • "தேவனுடைய புத்திரர்" என்ற முறையில் பிதாவாகிய தேவனையும் குமாரனாகிய தேவனையும் அழைப்பதற்கு அவர் உங்களுக்கு அதிகாரம் தருகிறார். நாம் கிறிஸ்துவின் சுவிகார புத்திரர். எனவே தான் "அப்பா, பிதாவே" என்று ஜெபங்களில் அழைக்கிறோம். இங்கே சிறப்பு என்னவென்றால், நாம் ஜெபத்தில் அப்பா பிதாவே என்று சொல்லும் போது, ​​அழைப்பவர் அவருடைய பிரியமானவர் என்று பரிசுத்த ஆவியானவர் தேவனிடம் சாட்சியம் அளிக்கிறார். கிறிஸ்துவில் நமக்கு என்ன ஒரு அற்புதமான விஷயம் இருக்கிறது. இந்த மாதிரியான அனுபவத்தை வேறு எந்த கடவுளாலும் செய்ய முடியாது. இதுவே கிறிஸ்தவத்தின் உயர்ந்த அடையாளம்.

    • அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். ரோமர் 8:15-16

    • மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலாத்தியர் 4:6-7

  • பாவத்திற்கு அடிமைகளாக அல்லாமல் தைரியமாக வாழ பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார். கிறிஸ்துவில் சுதந்திரம் உண்டு அடிமைத்தனத்தில் சுதந்திரம் இல்லை, ஏதோவொன்றில் கட்டுண்டு இருப்பது (பழைய பாவங்கள் - எ.கா. போதைப்பொருள், மது அல்லது வாழ்க்கையின் பிற பாவங்கள்). பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் தொடப்பட்டு, பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டவுடன், இனிமேல் அடிமைத்தனம் இல்லை, கிறிஸ்துவில் சுதந்திர வாழ்க்கை உண்டாகிறது, சிலுவையில் கிறிஸ்து பெற்ற ஜெயத்தை நம் வாழ்க்கையில் அனுபவிக்கிறோம். உதாரணத்திற்கு, எந்த போதை சிகிச்சையும் குணப்படுத்த முடியாத ​​அளவிற்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இப்பொழுது பழைய வாழ்க்கையின் எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் விடுபட்டிருப்பதை  நாம் காணலாம். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15

  • பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து சுதந்தரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதேபோன்று “தேவனுடைய புத்திரர்” என்ற முறையில் நம்முடைய சுதந்தரம் என்பது கிறிஸ்துவினுடைய அனைத்தையும் பகிர்ந்து கொள்வதாகும், எதுவும் நமக்குத் தடுக்கப்படவில்லை. பெரும்பாலும் கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்வது, பூமிக்குரிய ஆசீர்வாதத்தைப் பற்றி பேசப்படுகிறது, ஆனால், பவுல் இங்கே அதைக் குறிப்பிடவில்லை. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17. நாம் நித்திய ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். (சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன).

    • இயேசுவின் விசுவாசத்தின் ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் - கிறிஸ்துவின் மூலம் நமக்கு விசுவாசம் இருக்கிறது.

    • பாவம் நிறைந்த பூமியில் நீதியான வாழ்க்கை நடத்துவதற்கான ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் - இயேசு எப்படி பூமியில் வாழ்ந்தாரோ அது போலவே.

    • அவர் நாமத்தினால் பிசாசுகளை விரட்ட ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    • பிணியாளிகளைக் குணமாக்க இயேசுவின் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    • பூமியில் நமக்காக இயேசுவின் திட்டங்களைச் செய்ய இயேசுவின் ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் ~ தேவ சித்தம்.

    • நம் பிதாவுடன் பிரத்தியேகமாக பேசுவதற்கு அந்நியபாஷை  ஆவியைப் பகிர்ந்து கொள்கிறோம். (1 கொரிந்தியர் 14:4,14-17)

    • தீர்க்கதரிசனம் சொல்ல உதவும் தீர்க்கதரிசன ஆவியைப் பகிர்ந்து கொள்கிறோம்

    • இயேசுவின் நிமித்தம் துன்பப்படுவதற்கான (அவதூறு / அவமானம் / துஷ்பிரயோகம் போன்றவை) ஆவியைப் பகிர்ந்து கொள்கிறோம், ஆனால் இயேசுவில் உள்ள நீடிய பொறுமையின் ஆவி இந்த எல்லா துன்பங்களிலும் பொறுமையாக இருக்க உதவுகிறது.

    • உலகத்தில் இயேசு எப்படி தாழ்மையுடன் இருந்தாரோ, அது போல இருக்க மனத்தாழ்மையின் ஆவியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    • கிறிஸ்துவின் அதே சமாதானம் / மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் நாம் பெறலாம். (மத்தேயு 5:3-12)

    • கிறிஸ்துவுடன் என்றென்றும் வாழ நித்திய ஜீவனைப் பகிர்ந்து கொள்கிறோம் - வெளிப்படுத்தின விசேஷம் 22

    • பரிசுத்த ஆவியாகிய தேவன் நமக்காக இருக்கும்போது, இவ்வுலகில் நமக்கு எதிராக வரக்கூடிய எவரும் இல்லை. இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31

மனதிற்கு உதவுகிறார்

  • சாத்தானின் முதன்மையான இலக்கு நம் மனம்., கிறிஸ்தவ வாழ்க்கையிலிருந்து நம்மை விலக்கி உலகிற்கான ஒரு வாழ்க்கையை வாழும்படி செய்கிறான். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 11:3

  • பாவத்திற்கு அல்லது பரிசுத்த ஆவிக்கு அடிபணிவதற்கு நம்மை அனுமதிப்பதில் மனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான், தேவனின் மனதைப் பெறும்படி நம் மனம் புதுப்பிக்கப்படுவதற்கு தேவனின் வார்த்தையில் வேரூன்றுவது முக்கியம். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2 அப்போது, தேவசித்தம் என்ன என்பதை நீங்கள் சோதித்து அங்கீகரிக்க முடியும் - அவருடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்.

  • நம் மனம் தேவனின் ஆவியால் வழிநடத்தப்பட வேண்டுமானால், அவரது சத்தியத்தால் நம் மனதைப் புதுப்பிக்க வேண்டும்.

    • ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. கொலோசெயர் 3:9-10

    • அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, எபேசியர் 4:22-23

  • சத்திய வார்த்தையால் நம் மனதைப் புதுப்பித்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடிபணியும்போது, அவர் நமக்கு சமாதானத்தையும், தேவனோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையையும் பெற உதவுகிறார். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8:6

  • நம் மனதை விட்டுக்கொடுத்து, நம்மை அழைத்துச் சென்று வழிநடத்தும்படி தேவனிடம் கேட்காவிட்டால், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதைக் கைக்கொள்ள மாட்டார். இது புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கை.

 

ஜெபத்தில் உதவுகிறார்

  • நம்மிடையே, கிறிஸ்துவில் வாழும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எளிதில் கோபம் அடைபவர்கள் முதல் முதிர்ச்சியடைந்தவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். நாம் ஜெபிக்கும்போது, தேவன் எதிர்பார்க்கும் விதத்தில் நம்முடைய ஜெபம் இருக்காது. பரிசுத்த ஆவியானவர் நமது ஜெபத்திற்குப் பரிந்து பேசுபவராக செயல்பட்டு, பிதாவாகிய தேவனிடம் ஜெபிக்க நமக்கு உதவுகிறார்.

  • ஜெபத்தில் நாம் மீண்டும் மீண்டும் வைக்கும் வார்த்தைகளை தேவனிடம் சரியானபடி வைப்பது, ஜெபிக்க வேண்டிய விருப்பங்கள், ஜெபிக்க வேண்டிய இருதயத்தின் பாரங்கள், இழந்த ஆத்துமாக்களுக்காக இருதயத்தில் பாரம், பிரிந்தவர்களுக்காக ஜெபிக்க துக்கத்தின் ஆவி இவை அனைத்தும் ஜெபிக்க உதவும் பரிசுத்த ஆவியானவராலே வருகிறது. அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8:26

  • நம்முடைய பாவங்களுக்காக நாம் குற்றஞ்சாட்டப்படுகிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக சாத்தான் தேவனுக்கு முன்பாக குற்றம் சாட்டுகிறான் (பாவம் செய்யும்படி தூண்டி, மயக்குகிறான். நாம் பாவம் செய்தவுடன், தேவனிடம் வந்து நம்மை குற்றம் சாட்டுகிறான்), ஆனால், வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் தேவனின் குமாரனாகிய இயேசு, நமக்காகப் பரிந்துபேசி, நாம் ஜெபிக்கும்போது அவற்றை மேற்கொள்ளும் கிருபையை நமக்கு அனுப்புகிறார். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ரோமர் 8:34

  • பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தையும் மனதையும் ஆராய்ந்து, பிதாவாகிய தேவன் / குமாரனாகிய தேவன் நமக்காக அவருடைய சித்தத்தைச் செய்யும்படி கேட்கிறார், நமக்காகத் திட்டமிடப்பட்ட பரிபூரண சித்தம், இது பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. என்ன ஒரு அற்புதமான தேவனை நாம் சேவிக்கிறோம். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:27

  • ஆரம்பகால அப்போஸ்தலர் சபை இதைப் புரிந்துகொண்டு ஜெபத்தை விடாமல் இருந்தார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர் 2:42

 

தொழுது கொள்ள உதவுகிறார்

  • நமது ஒரே நோக்கம் தேவனைத் தொழுது கொள்வது தான். தேவனில்  உள்ள சாயலின் மூலம் அவரைத் தொழுது கொள்ளுவதற்கான ஆவி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

    • ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதியாகமம் 5:1

    • தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24

  • சங்கீதங்கள், ஆவிக்குரிய பாடல்கள் பாடுவதற்கு உதவுகிறார். கர்த்தரைப் பாடி, அவரது பாடல்களுக்கு இசையமைக்கும்போது, அழுகை / மகிழ்ச்சி / நடனம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டு வர, பரிசுத்த ஆவியானவர் நம் ஆத்துமாக்களை இருதயத்திலிருந்து பாடும்படி உற்சாகப்படுத்துகிறார். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, எபேசியர் 5:18-20

 

எதிர்காலத்திற்கான நம்பிக்கை

  • ஒவ்வொரு நாளும் நாம் போராட்டங்கள் / சோதனைகள் / சவால்கள் மற்றும் உலகின் பல சிரமங்களால் நிரப்பப்படுகிறோம். கிறிஸ்துவில் இருப்பவர்கள் விட்டுவிடுவதில்லை. அவர்கள் இன்னும் கிறிஸ்துவுக்காக ஒரு வாழ்க்கையை வாழ, ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தயம் போல, முந்தைய நாட்களில் செய்ததை விட இன்னும் சிறப்பாக ஓட  முயல்கிறார்கள். ஏனென்றால், பரலோகத்தில் நமக்காக நித்திய ஜீவன் வைக்கப்பட்டிருக்கிறது, அது நித்தியமானது என்ற நம்பிக்கையின் உறுதி நமக்கு இருக்கிறது.

    • கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14

    • நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். பிலிப்பியர் 3:20-21

  • பரிசுத்த ஆவியானவர் இவ்வாறான அறிவினால் நமக்கு உதவி செய்து, ஓடுவதற்கு பலம் தருகிறார். பரலோகத்தில் இருப்போம் என்ற நம்பிக்கையுடன் ஓடுகிறோம். நம்முடைய இரட்சிப்பின் நம்பிக்கையாகிய இயேசுவின் மீது விசுவாசம் வைத்து ஓடுகிறோம். பரலோகம் எப்படி இருக்கும், பரலோகத்தில் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும் போன்றவற்றைக் குறித்து, தானியேல் / வெளிப்படுத்தின விசேஷம் போன்றவற்றில் உள்ள தீர்க்கதரிசனங்களைப் படிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? ரோமர் 8:24

 

நீங்கள் விசுவாசம் மட்டுமே உள்ள, விசுவாசத்தால் மட்டுமே வாழ்கிற ஒரு ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவரா என்பதை ஆராய்ந்து பாருங்கள். சபைக்கு  செல்லும்போது எல்லாம் நன்றாக இருக்கிறது, சபையிலிருந்து வெளியே வரும்போது, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட அனுபவம் இல்லாதபோது அது வெளியேறுகிறது.

 

பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படாவிட்டால், நீங்கள் தேவனுக்குப் பிரியமானவர் அல்ல. உங்கள் வாழ்க்கை தேவனுக்கு முன்பாக எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை சுய ஆராய்ச்சி செய்து பார்த்து, உங்களை அவருக்குப் பிரியமானவராக  ஆக்குவதற்கு ஆவியானவர் உங்களை வழிநடத்துவதற்கு உண்மையான இருதயத்துடன் தேவனிடம் கேளுங்கள்.

 

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Feb 04
Rated 5 out of 5 stars.

Good Anna

Like
bottom of page