top of page
Kirupakaran

நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்தவரா?



நம்மில் யாரேனும் ஒருவர் 18 வயதை எட்டும்போது வாலிப வயது எட்டியவர்கள் என்று அழைக்கிறோம். அவர்களும் பல சலுகைகளை அனுபவிக்கத் தொடங்குகின்றனர் (வாக்களித்தல் / திருமணம் / வேலைகள் போன்றவை), இதன் மூலம் அவர்கள் சுய சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களை யாராவது "சின்ன பிள்ளை போல நடுந்து கொள்கின்றார்" அல்லது "பாப்பா" என்று சொன்னால் மிகுந்த கோபம் வரும்.


ஆமாம், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இதுவே உண்மை. நாம் வளர்ந்த பெரியவர்களாக இருக்கலாம், ஆனால் நம்மில் பலர் இன்னும் கிறிஸ்து இயேசுவின் பார்வையில் குழந்தைகளாக இருக்கிறார்கள். அநேக நேரங்களில் நாம் வளர்ந்தவர்கள் போல உணவு உண்ணாமல், சிறு பிள்ளைகளைப் போல "பீடிங் பாட்டில்” பாலைக் குடித்துக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய ஒரு காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.


எனவே இந்தப் பதிவில் , கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்தவர்களாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும், நாம் தவிர்க்க வேண்டிய எச்சரிக்கைகள் என்னென்ன என்பதைக் குறித்துப் பார்ப்போம்.


ஆவிக்குரிய வாழ்க்கையில் குழந்தை போல் இருப்பது


கிறிஸ்து இயேசுவே கடவுள் என்று விசுவாசிக்கும் எவரும் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். அவரை விசுவாசித்து அவர் தான் ஒரே மெய்யான தேவன் என்று அறிக்கையிடும் பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்வில் குழந்தைகளாக தேவன் பார்க்கின்றார்.


'பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். ' எபிரெயர் 5:13


நம்மில் அநேகர் இந்த ஆவிக்குரிய குழந்தை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆவிக்குரிய வாழ்வில் நாம் குழந்தையாக இருக்கிறோமா என்று அறிய இந்த நான்கு காரியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


1. நிலையற்ற கிறிஸ்தவ வாழ்க்கை – உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை ஏசுகிறிஸ்துவை சுற்றி உள்ளதா அல்லது நிலையற்றதாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பாருங்கள். பொதுவாக குழந்தைகளை ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒப்படைத்தால் அவரிடம் சிறிது நன்றாக பழகும். அதேபோல் ஆன்மீகக் குழந்தைகளும் ஒவ்வொரு போதனைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். நாம் வாழும் இந்த கடைசி காலத்தில் ஏசு கிறிஸ்துவுக்கு உண்டான போதனைகளை மட்டும் நாம் பின்பற்றுகிறோமா என்று ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் பல போதனைகளுக்குமாறிக்கொண்டு தூக்கி எறியப்படுகிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.

'நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகியபலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், ' எபேசியர் 4:14


2. சடங்காச்சாரமான வாழ்க்கையில் வாழுகிறோமா ?- நம்முடைய வாழ்வில் ஏதேனும் சடங்குகளுடன் வாழ்கிறோமா என்று ஆராய்ந்து பாருங்கள்?, நம்மில் பலர் பெந்தேகொஸ்து, சி. எஸ்.ஐ, சி.என்.ஐ, ரோமன் கத்தோலிக் போன்ற ஆலயத்துக்கு சென்று வழிபடுவோம். ஆனால் இந்த ஒழுங்கு முறை மட்டும் நம்மை கிறிஸ்தவர்கள் என்று ஆக்கிவிட முடியாது. நாம் வேதத்தின் படி வாழ்கிறோமா அல்லது இந்த சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா என்று ஆராய்ந்து பாருங்கள்.

'உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச்சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். ' 1 கொரிந்தியர் 1:12


3. ஆவிக்குரிய வாழ்வில் தூக்கத்துடன் இருப்பது – நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். குழந்தைகளுக்கு நிறைய தூக்கம் தேவை. ஆவிக்குரிய குழந்தைகள் ஆவிக்குரிய ரீதியில் தூங்கிக் கொண்டிருப்பது என்பது தங்களைச் சுற்றியுள்ள பாவங்களை உணராமல் இருப்பது, மற்ற நபர்கள் செய்த பாவத்துடன் ஒப்பிடும்போது தான் செய்த பாவம் மோசமான பாவம் அல்ல என்ற சுய மறுப்புடன் வாழ்வது போன்றவை ஆகும். இவ்வாறு ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள் .


4. மற்றவர்களை குறை கூறுவது / முறுமுறுக்கும் ஆவியோடு வாழ்வது – உங்களுக்கு எப்போதும் மற்றவர்களை குறை கூறும் சுபாவம் உள்ளதா?, தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தை அநேக நேரங்களில் முறுமுறுத்துக்கொண்டே வாழ்கிறீர்களா?, இயேசு நமக்குக் கற்பித்தபடி அவருடைய அன்பு நமக்குள் உள்ளதா, எல்லாவற்றிலும் நாம் அன்பு சார்ந்து காரியங்களை செய்கின்றோமா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

'அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. '1 கொரிந்தியர் 13:4



ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்தவர்களைப் போல் இருப்பது


ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்தவர்களைப் போல் இருப்பது குறித்து வேதம் சொல்லுவதாவது ,


'பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும்ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.' எபிரெயர் 5:14


மனிதர்களாகிய நமக்கு உணர்வுகள் உள்ளன. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட, இந்த ஆறு உணர்வுகள் உள்ளனவா என்று ஆராய்ந்து பாருங்கள்.


1) பகுத்தறியும் திறன் – இது ஒரு மிக முக்கியமான ஆவிக்குரிய உணர்வு - தேவனின் வார்த்தையைப் பகுத்தறிவது. ஒருவருக்கு கடவுளின் வார்த்தையைப் போதித்தால், அந்த போதனை கடவுளிடம் இருந்து வருகின்றதா அல்லது சுயத்தில் இருந்து வருகிறதா என்று ஆராயும் சக்தியைக் கொண்டு இருப்பார்கள். இந்த சக்தி அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் மூலம் வரும். இவ்வாறு ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு வளர்ந்தவர்களைப் போல் இருக்கிறீர்களா என்று அறிந்து கொள்ள பகுத்தறியும் சக்தி / உணர்வு உள்ளதா என்று ஆராய்ந்து பாருங்கள்.


'மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடையஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிறவார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப்பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ' 1 கொரிந்தியர் 2:11-14


2) இயேசுவை ருசிபார்த்த சுவை - வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் / என்ன போராட்டங்கள் வந்தாலும் , இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களை எல்லா கஷ்டங்களிலும் வழிநடத்தும் அனுபவத்தை நீங்கள் ருசித்தீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். ' சங்கீதம்34:8


3) இயேசு கூப்பிடும் சத்தம் – நீங்கள் கடவுளிடமிருந்து விலகிச் செல்லும்போது இயேசுவின் குரல் கேட்கிறதா என்று ஆராயுங்கள். ஒரு செம்மறி ஆடு தனது மேய்ப்பர்களின் குரலை ஒரு தனித்துவமான ஒலியுடன் எப்படிக் கேட்குமோ அது போல அவருடைய குரலை நாமும் தெளிவாகக் கேட்க முடியும் , அவரை விட்டு நாம் சற்று விலகினால் இது தெளிவாகக் கேட்கும்.


'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோஅவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. 'வெளிப்படுத்தின விசேஷம் 2:7


4) இயேசு கிறிஸ்துவின் பார்வை – இயேசு காண்பிப்பதைக் காணும் உணர்வு உங்களுக்கு இருக்கிறதா என்று ஆராயுங்கள். நீங்கள் பார்க்கும் சில செயல்கள், கிறிஸ்து இயேசுவின் மீதான உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தும் உணர்ச்சிகளை உங்களில் கொண்டு வரும். சில காரியங்கள் உங்களை எச்சரிக்கை செய்து நீங்கள் மனந்திரும்பி கடவுளிடம் நெருங்கி வருவதற்கான வழிவகுக்கும். பரிசுத்த ஆவி இந்த காரியங்களை நம்முடைய பார்வை / ஞானத்திற்கு கொண்டுவர உதவுகிறது. இத்தகைய அனுபவம் நம் தேவனோடு உள்ள உறவை மென்மேலும் வளர்க்கும்.

'அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். ' எபேசியர் 1:8


5) இயேசு கிறிஸ்துவின் வாசனை - நாம் இயேசுவோடு நடக்கும்போது பல முறை சாத்தான், இயேசுவைப் போல நடித்து நம்மை ஏமாற்றுவான். தன் எஜமானுக்கு உண்மையாக இருக்கின்ற ஒரு நாய் தன் மோப்பசக்தி கொண்டு அதன் எஜமானை அடையாளம் காண முடியும். அதே போல நமக்கு கடவுள்மீது பயமும், பயபக்தியும் இருக்கும்போது இயேசு நம்மோடு இருக்கின்றாரா என்பதை நாமும் உணர முடியும்.


'எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால்நான் திருப்தியடைந்திருக்கிறேன். ' பிலிப்பியர் 4:18


6) இயேசு கிறிஸ்து நம்மைத் தொடும் உணர்வு – பல முறை நாம் இயேசுவோடு நடக்கும்போது, ஜெபிக்கும்போது, சோதனைகளில் இருக்கும்போது, அல்லது பாவம் செய்யும்போது அவரின் தொடுதலை நம்மால் உணர முடியும். உங்கள் இதயங்கள் மென்மையாகவும், கடவுளின் வழிகளில் இணைந்திருந்தாலும் மட்டுமே இந்த அனுபவத்தை பெறமுடியும்

'அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலேதேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடேநடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். ' எபேசியர் 4:18-19


ஆவிக்குரிய கனிகள்


நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்போது தேவன் நமக்குப் பல தாலந்துகளை / ஆசீர்வாதங்களைத் தருகிறார். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று தான் அதனை நமக்குத் தருகின்றார்.


'எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்றபயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 'எபிரெயர் 6:7


ஒரு நிலம் மழையால் ஆசீர்வதிக்கப்பட்டும், செடி / கொடி / கனிகள் தர மறுத்தால் அந்த விவசாயியை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். அந்த நிலம் ஒரு தரிசு நிலம் என்று தான் கூறுவார்கள். அதே போல தான் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவுடன், அவருடைய ஆசீர்வாதத்தின் பலனை நாம் அனைவருக்கும் பகிர வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். நாம் உண்மையிலேயே கனிகளைக் கொடுக்கும்போது, நாம் இயேசுவில் நிலைத்திருக்கிறோம் மேலும் கடவுளிடமிருந்து விழும் ஆபத்தும் நமக்கு இல்லை.


'நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக்கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ' யோவான் 15:5


'அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிறமரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். ' சங்கீதம் 1:3


ஆவிக்குரிய வாழ்க்கையின் எச்சரிக்கைகள்


கீழே விழுவது vs கீழ் வீழ்ச்சி - இயேசுவோடு நடக்கும் போது நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நம்முடைய மாற்றங்களை / வெளிப்பாடுகளை நம்மோடு இருப்பவர்கள் உணரமுடியும். நாம் இயேசுவோடு நடக்கும் போது உலகத்தாரை விடத் தனித்துக் காணப்படுவோம். ஆனால் சாத்தான் அதை விரும்பாமல் நம்மை பாவ சூழ்ச்சியில் தள்ள முனைவான். நாம் அவ்வாறு பாவ சேற்றுக்குள் விழும் போது தேவனுடைய கிருபை நம்மை அந்த சூழ்நிலையில் இருந்து நம்மைக் காத்து மீட்டு எடுக்கும். இது தான் "கீழே விழுவது".

'நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். ' நீதிமொழிகள் 24:16



"கீழ் வீழ்ச்சி" என்பது தேவனை அறிந்த பின்பு மெதுவாக அவருடைய வழியில் இருந்து விலகி அவரை விட்டுப் பிரிந்து வேறு போதனைகளுக்கு அடிமை ஆவது. சாத்தான் ஒவ்வொரு கடவுளின் பிள்ளைகளிடத்திலும் தொடர்ந்து பல தந்திரங்களைக் கையாளுவான். அவ்வாறு போய்விட்டால் நம்மைத் திரும்பக் கொண்டு வர எந்த ஒரு வழியும் கிடையாது. இதைத் தான் வேதம் கூறுகின்றது, “மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறதுகூடாதகாரியம்.”


'ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடையநல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடையகுமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய்அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். ' எபிரெயர் 6:4-6


தடைகள் –நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் பாவம் நமக்குத் தடையாக இருக்கும். ஆனால் பாவம் இல்லாத சிலவிஷயங்களும் உள்ளன, இவை தேவ சித்தத்தை அடைவதற்கு நமக்குத் தடைகளாக இருக்கும் . உதாரணத்திற்கு, நம்மில் பலர் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கிறோம், அல்லது பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். அதில் வரும் "லைக்", "ரீபோஸ்ட்" போன்றவற்றில் கவனம் செலுத்தி, தேவனின் காரியங்களை விட்டுவிட்டு பலமணி நேரம் அதில் செலவு செய்கிறோம். இது போல உங்கள் வாழ்வில் ஏதேனும் காரியம் உள்ளதா என்று ஆராய்ந்து பாருங்கள். இதைக் குறித்து ஜெபம் செய்யுங்கள். தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.


'ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும்முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; ' எபிரெயர் 12:1


சோம்பேறித்தனமாக மாறுவது ஆவியில் வளர்ந்து வரும் போது நாம் செய்த சில காரியங்களை, ஆவிக்குரிய முதிர்ச்சியின் ஒரு நிலையை அடைந்தவுடன், செய்ய சோம்பலாகி விடுகிறோம். இது கடவுளிடமிருந்து நம்மை பிரித்துச் செல்வதற்காக, சாத்தான் தனது குறிக்கோள்களைக் கொண்டுவருவதற்கு இடமளிக்கிறது. பைபிள் வாசிப்பு / ஜெப நேரம் போன்ற காரியங்களைத் தவிர்ப்பதில் இருந்து இது தொடங்குகிறது. மெதுவாக நாம் கடவுளின் விசுவாசத்திலிருந்து விலகி, அவருடைய கிருபையிலிருந்தும், நமக்காக திட்டமிடப்பட்ட ஆசீர்வாதங்களில் இருந்தும்விலகுவோம். இந்த மாதிரி ஏதேனும் காரியத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


'உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியேஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். ' எபிரெயர் 6:12


எனவே, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்,

  • ஆவிக்குரிய முதிர்ச்சியில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் - ஒரு குழந்தை vs வளர்ந்தவர்கள்

  • ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் கனி தரும் மரங்களாக இருக்கிறீர்களா?

  • ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் கீழே விழுந்து எழும்புகிறவரா அல்லது கீழ் வீழ்ச்சி உள்ளவரா?


672 views0 comments

Recent Posts

See All

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page