top of page
Kirupakaran

தேவனும் நம் சரீரமும்


தேவன், மனிதனை தம்மைப் போன்ற சரீரத்துடனும், உள்ளான ஆவியோடும் படைத்தார். உலகை ஆளுவதற்கு அவர் நமக்கு அதிகாரம் கொடுத்தார். நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளோம். ஆனால், இந்த உலகில் நமது சரீரத்துடன் ஆவிக்குரியப் போராட்டத்தை எதிர்கொள்கிறோம். தேவன் இந்த சரீரத்தை தனித்துவமான உருவ அமைப்புகள் மற்றும் திறமைகளுடன் கொடுத்துள்ளார். நம்மில் சிலர் இந்த சரீரத்தைப் பெரிதும் கவனித்துக்கொள்கிறோம், சிலர் அதிகமாக சாப்பிடுகிறோம், சிலர் பட்டினி கிடக்கிறோம், சிலர் தங்கள் தோற்றத்தை மாற்றி, தேவன் கொடுத்த அடையாளத்தை மாற்றும் அளவிற்கு செல்கிறார்கள். நாம் இப்படி செய்கின்ற போது, சாத்தான் பல்வேறு காரணங்களுக்காக இந்த சரீரத்தைக் குறிவைக்க விரும்புகிறான்.


இந்தப் பதிவில், நம் சரீரம் ஏன் தேவனுக்கு முக்கியமானது என்பதையும், ஆவிக்குரிய ரீதியில் வளர நாம் எவ்வாறு அக்கறை கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.


சாத்தான் ஏன் நம் சரீரத்தைத் தாக்கி இந்த ஆவிக்குரிய போராட்டத்தைக் கொண்டுவருகிறான்?

வசனம் கூறுகிறது, கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 1 கொரிந்தியர் 6:20 – நாம் பாவத்திலிருந்து விடுபட்ட ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழும்போது, ​​நம்மிலுள்ள பரிசுத்த ஆவியானவர் அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பாவங்களை அகற்ற உதவுகிறார். நாம் ஆவிக்குரிய ரீதியில் அதைச் செய்யும்போது, சரியான உணவு / சீரான உடற்பயிற்சியுடன் உடலைப் பராமரிப்பதும் அதே அளவு முக்கியமானதாக இருக்கிறது.


1. நாம் தேவனின் சாயலாக இருக்கிறோம்

நாம் தேவனின் சாயலாக இருப்பதால் சாத்தான் தேவனின் பிள்ளைகளாகிய நம்மில் சிலரைத் தாக்குகிறான். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:27


  • தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் படைத்து, உலகத்தின் கிரியைகளை ஆளும்படி அவனை ஆசீர்வதித்திருக்கிறார். இது தான் மனிதனை தமது சாயலாக உருவாக்கியதற்கான ஒரே காரணம். தேவன் எப்படி பிரபஞ்சம் முழுவதையும் ஆள்பவராக இருக்கிறாரோ, அதுபோலவே மனிதனைத் தம் சாயலில் படைத்து அவன் உலகை ஆள வேண்டும் என்று விரும்பினார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். ஆதியாகமம் 1:26

  • தேவன் ஆணையும் பெண்ணையும் படைத்தபோது, ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்துடன் அவர்களைப் படைத்தார். நம்மில் சிலர் அவருடைய சித்தப்படி நடக்கிறோம், சிலர் அவருடைய கிருபையிலிருந்து விழுந்து நம் சுயத்தின்படி நடந்து போராடுகிறோம்.

  • தேவன் தமது சித்தத்தை நிறைவேற்ற வேறு எந்த படைப்பையும் பயன்படுத்தவில்லை. அவருடைய சித்தம் மனிதனால் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. மற்ற கூறுகள் அவருடைய சித்தத்திற்கு உதவியாக இருக்கின்றன.


2. நமது சரீரம் தேவனின் ஆலயம்

  • தேவன் கண்ணுக்குப் புலனாகாதவர், உலகத்தால் அவரைப் பார்க்க முடியாது. இயேசு பரலோகத்திற்குத் திரும்பிவிட்டார், அவரைக் காணமுடியாது. சரீரத்தில் நமது நடத்தையே தேவனை மகிமைப்படுத்தவும் உயர்த்தவும் செய்கிறது. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 1 கொரிந்தியர் 6:19-20

  • வழி தவறிய உலகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு ஒரு ஊடகமாக நம் சரீரத்தைப் பயன்படுத்த அவர் விரும்புகிறார். அவிசுவாசிகள் வேதத்தையோ கிறிஸ்தவ இறையியலையோ படிக்கவோ அல்லது பிரசங்கங்களைக் கேட்கவோ போவதில்லை, இருப்பினும் அவர்கள் நம் வாழ்க்கையைப் படிப்பார்கள். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். பிலிப்பியர் 1:20

  • சாத்தான் நம் சரீரத்தைத் தாக்கும் போது, தொலைந்து போன உலகத்திற்கு கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்த விடாமல் தேவனைத் தாக்குகிறான். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9


3. நம் சரீரம் தேவனின் ஆயுதம்

ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:12-13


  • தேவன் நம்மை ஒரு நோக்கத்திற்காகப் படைத்தார், அவர் நம் ஒவ்வொருவரையும் தமது கருவியாகப் பயன்படுத்துகிறார். பேழையைக் கட்டுவதற்கு நோவாவைப் பயன்படுத்தினார். சாலொமோனையும், ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான அறிவைக் கொண்ட வேலையாட்களையும் தம் ஆலயத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தினார்.

    • சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது. ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை. 1இராஜாக்கள் 6:2,7

    • ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான். 1 இராஜாக்கள் 7:13-14

  • இயேசு தம் சீடர்களின் கைகளையும் கால்களையும் பயன்படுத்தி 5000 பேருக்கு ரொட்டியும் மீனும் போஷித்தார்.

    • இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். மத்தேயு 14:16-19,21

  • உங்கள் சரீரத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள், ஒருபொழுதும் சரீரத்தின் பராமரிப்பைக் குறைக்காதீர்கள். நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:13

  • தனது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து அக்கறையற்ற கிறிஸ்தவர், தன் சரீரத்தை பாழாக்குபவனின் (சாத்தானின்) கைகளில் ஒப்புக் கொடுக்கிறார்.

  • நம் சரீரம் ஒரு விக்கிரகம் போல் இருக்க முடியாது. தேவசித்தம் நிறைவேற்றப்படுவதற்கு அது கவனிக்கப்பட வேண்டும். உங்கள் காரைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அதை ஓட்டுவதற்கு எவ்வளவு பராமரிக்கிறீர்கள், அது ஓட்டக்கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்கும்படி கவனித்துக் கொள்ளுகிறீர்கள். அப்பொழுது தான் ஒரு நல்ல பயணத்தை அனுபவிக்க முடியும்.

  • தேவன், பூமியில் நமக்காக திட்டமிட்டுள்ள பணியை முடிக்க நம் ஒவ்வொருவரையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் போகிறார். அது தேவனின் வல்லமையான ஆவியால் நம் சரீரத்தில் நிகழ்கிறது.

  • தேவனின் திட்டங்களைத் தாக்கவோ தடுக்கவோ சாத்தானுக்கு அதிகாரம் இல்லை. எனவே, அவன் அவருடைய கருவிகளைத் தாக்குகிறான்.


4. நம் சரீரம் தேவனின் பொக்கிஷம்

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 2 கொரிந்தியர் 4:7-10


  • நாம் தேவனால் இரட்சிக்கப்பட்டு, ஜலத்தினால் ஞானஸ்நானம் பெறும்போது, அவர் நித்திய ஜீவனின் பொக்கிஷமாகிய பரிசுத்த ஆவியானவரை நம் சரீரத்திற்குள் வைக்கிறார்.

  • நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுத்த ஆவியானவர் நம்மை பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாகவும் பயன்படுத்தப்படுகிறார். விசுவாசத்தில் வளர, இந்த ஆவியை மற்றவர்களுக்கு விதைக்க வேண்டும்.

  • தேவன் ஆவிக்குரிய வளத்தை அப்போஸ்தலர் பவுலிடம் வைத்தார், பவுல் அந்தப் பொக்கிஷத்தை தீமோத்தேயுவிடம் ஒப்புவித்தார்.

  • தீமோத்தேயு அதைப் பெற்றபோது, அவர் அந்தப் பொக்கிஷத்தை மற்றவர்களின் வாழ்க்கையில் முதலீடு செய்தார்.

    • நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 1 தீமோத்தேயு 1:11

    • ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 1 தீமோத்தேயு 6:20

    • உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 2தீமோத்தேயு 1:14

  • தேவனின் பரிசுத்த ஆவி, கோஹினூர் வைர நகைகள் அல்லது நீங்கள் நினைக்கும் வேறு எந்த விலையுயர்ந்த பொருட்களையும் விட விலைமதிப்பற்றது. ஆனால், அவர் இதை பலவீனமான மனிதனுக்கு கொடுக்கத் தேர்ந்தெடுத்து, மற்ற விசுவாசிகளை தமது ராஜ்யத்திற்குக் கொண்டுவர இந்த பலவீனமான இணைப்பைப் பயன்படுத்துகிறார். தேவன் நம்மை பயன்படுத்தும் விதத்தை நினைக்கும் போது, அது ஆச்சரியமாக இருக்கிறது.

  • சாத்தான் விசுவாசிகளைத் தாக்குவதன் மூலம் ஆவிக்குரிய வளத்தைக் கொள்ளையடிக்க விரும்புகிறான், இதன் மூலம் அதை மற்றவர்களுக்கு கடத்த முடியாது. அப்பொழுது இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு, மேலும் வளராது.


5. நமது சரீரம் ஒரு சோதனைக் களம்

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:11-12


  • அதிகாரத்தின் ஆளுமைகளுக்கும் (தேவனின் ராஜ்யம்), அந்தகார லோகாதிபதிகளுக்கும் (சாத்தான்) இடையேயான போராட்டங்கள் உலகில் உண்டு. இந்தப் போராட்டத்தின் சோதனைக் களமாக நாம் பயன்படுத்தப்படுகிறோம்.

  • யோபுவின் வாழ்க்கை ஒரு உன்னதமான உதாரணம், அவர் நீதிமானாக இருந்தார். சாத்தான் தேவனுக்கு முன்னால் வந்தபோது, “கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்".

  • ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு 1:1,6-8

  • யோபுக்கு நிகழ்ந்த ஆவிக்குரிய போராட்டங்கள் யாவும், உலகில் அவரது நீதியான கிரியைகளின் விளைவினால் உண்டானதாகும். மேலும், அனைத்து சரீர போராட்டங்களுக்குப் பிறகும் அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்பதை தேவன் சாத்தானுக்கு நிரூபிக்க விரும்பினார்.

  • யோபுவின் விஷயத்தில், தேவன் சாத்தானுக்கு சவால் விடுத்தார். நம் வாழ்வில், தேவனுடைய கிருபையினால் நாம் பரிசுத்தமாக இருக்கிறோம், அவர் தம்முடைய கிருபையை நம்மிடமிருந்து அகற்றிவிட்டால், அவனால் நம்மை அழிக்க முடியும் என்று சாத்தான் நம் வாழ்க்கையைக் காட்டி அவரிடம் சவால் விடலாம். நாம் அவரில் பலப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த தேவன் இவற்றை அனுமதிக்கிறார்.

  • பவுல் குத்துச்சண்டை வீரரைப் பற்றிய ஒப்புமையைக் கூறி, சாத்தானின் தந்திரங்களில் சிக்கி தகுதியற்றுப் போய் விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

  • மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 9:27

  • அதே போல், தேவன் என்ன செய்ய வேண்டும் என்று அழைக்கிறாரோ அதற்குக் கீழ்ப்படிய, நம் சரீரம் அவருக்கு அடிமையாகச் செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும், மேலும், கோபம் / கசப்பு / விபச்சாரம் / குடி / வதந்திகள் / பொய்கள் போன்றவற்றிற்குத் தூண்டப்படும் போது அதற்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தேவன் நமக்கு ஆயத்தம் பண்ணின வெகுமதியை நாம் இழக்க மாட்டோம்.


சுருக்கம்

சாத்தான் நம் சரீரத்தைப் பயன்படுத்தி, நம்மை வலுக்கட்டாயமாக சோதித்து, நம் பிதாவிடமிருந்து நாம் பெற்ற வெகுமதியைப் பறிக்கிறான். சாத்தானுக்கு நாம் அடிபணியாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த சரீரத்தை எவ்வாறு பாதுகாப்பது? பவுல் ரோமர் 12 இல் கூறுவதைப் பின்பற்றுங்கள்.


  • பவுல் சொல்வது போல், உங்கள் சரீரத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள் - அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1

  • பவுல் சொல்வது போல், உங்கள் மனதை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள் - "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், ... உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”. ரோமர் 12:2

  • பவுல் சொல்வது போல், உங்கள் சித்தத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள் - " ... தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, ... ". ரோமர் 12:2


சாத்தானுக்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், உலகில் தேவன் உங்களை அழைத்ததைச் செய்வதற்கும், அவர் உங்களுக்காக திட்டமிட்டதை நிறைவேற்றுவதற்கும் இது தான் ஒரே வழி. உங்கள் சுயத்தினால் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியாது. தேவனின் பரிசுத்த ஆவியால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். அவருடைய திட்டங்களை நிறைவேற்ற அவர் நம் மூலமாக கிரியை செய்வார். தேவன் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டபடியே அவருடைய வாக்குத்தத்தம் உண்மையாயிருக்கிறது. பிசாசுகளை விரட்டவும்,சரீரத்தில் இருந்து அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும் அதே வல்லமையை அவர் நமக்குத் தருகிறார். ஏனெனில், அவர் தமது சித்தத்தை நிறைவேற்ற வேண்டியது முக்கியம்.


அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, லூக்கா 9:1

அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். மத்தேயு 10:1


Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page