நாம் முதிர்ச்சியடையும் போது, நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நம் பெற்றோரைப் பிரியப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறோம். உதாரணமாக, ஒரு தந்தை கண்டிப்பானவராகவும், கல்வியின் வெற்றிக்கு மதிப்பு கொடுப்பவராகவும் இருந்தால், அவரது பிள்ளை கடினமாக முயற்சித்து அதிக மதிப்பெண்களைப் பெற்று, அவரைப் பெருமைப்படுத்தி, அதற்குப் பதிலாக பரிசுகளைப் பெற்றுக் கொள்ளும். சில குழந்தைகள் அவர்கள் விரும்புவதைப் பெற்றுக் கொள்வதற்கு அழுகையின் மூலமோ அல்லது மீண்டும் மீண்டும் வற்புறுத்தியோ, இது போன்ற எளிய செயல்களால் அவர்களது பெற்றோரை இளக வைக்கும் திறன் கொண்டவர்கள்.
தேவனின் பிள்ளைகளாக அவரை எவ்வாறு பிரியப்படுத்துவது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், இதனால் நாம் அவரிடமிருந்து நித்திய ஆசீர்வாதத்தைப் பெற முடியும். நம் வாழ்வில் தேவனைப் பிரியப்படுத்துவது எப்படி என்று தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதுகிறார். அவற்றில் பல நாம் வாழும் 21 ஆம் நூற்றாண்டின் சூழலுக்கு உண்மையாக உள்ளன.
அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப்பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்; புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4:1-12
தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்வதற்கு பவுல் நமக்குக் கற்பிக்கும் ஆறு விஷயங்கள் உள்ளன. இதைப் படிக்கும்போது, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ, நாம் பின்பற்றுவதற்கான இரகசியங்களைப் புரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன.
1. தேவனின் கட்டளைகள்
அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் 4:1,2
“நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே” என்று பவுல் சொல்லத் தொடங்குகிறார். அவர் 2 வது வசனத்தில் இதை மீண்டும் கூறுகிறார், “உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே”, இந்த கட்டளைகள் தேவனின் வார்த்தையிலிருந்து வருகின்றன.
வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கட்டளைகளையும் வழிமுறைகளையும் நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினம் என்று நாம் கூறலாம். அப்படியானால், இயேசு நமக்குக் கற்பித்த இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தேவனின் பிள்ளைகளாகிய நாம் சிலுவையைப் பின்பற்ற வேண்டும்.
சிலுவையில் உள்ள செங்குத்தான "|" - "தேவன் மீதான அன்பு".
சிலுவையில் உள்ள கிடைமட்ட "—" - "ஜனங்கள் மீதான அன்பு".
சிலுவையை எவ்வாறு பின்பற்றுவது என்பதை மாற்கு அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு எளிய கட்டளைகளை வைத்து இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். மாற்கு 12:30,31
உங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் தேவனை நேசிப்பது - "தேவனை முதலாவதாகவும்", உலகின் மற்ற முன்னுரிமைகள் யாவையும் இரண்டாவதாகவும் பாவிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வைக்கிறது. நீங்கள் இதைச் செய்யும்போது, தாவீது சங்கீதத்தில் சொல்லியிருப்பது போல அவர் உங்களை பார்த்துக் கொள்வார். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்". சங்கீதம் 23:1-3
உங்களிடத்தில் அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவது - இது பின்பற்றுவதற்கு மிகவும் கடினமான கட்டளை. மனிதர்களாகிய நாம் மற்றவர்களிடமிருந்து பெறுவதை அடிப்படையாகக் கொண்டே அன்பை பரிமாறிக்கொள்கிறோம், ஆனால் நம்மை நேசிப்பதைப் போலவே நேசிக்கும் அன்பு தான் தேவன் கேட்கும் அன்பு. தேவனின் தன்மையின் உண்மையான அன்பு - "அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்". 1 கொரிந்தியர் 13:4-7
இந்த வகையான அன்பு நம்மிடத்தில் இல்லை. 1 கொரிந்தியர் 13:4-7 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி நம்மை வாழ வைப்பதற்கு தேவனின் அன்பு மட்டுமே உதவும். அவருடைய உதவியால் நாம் நம்மை நேசிப்பது போல் நம் அண்டை வீட்டாரையும் நேசிக்கிறோம்.
2. வேசிமார்க்கத்துக்கு விலகி இருக்கவும்
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப்பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். 1 தெசலோனிக்கேயர் 4:3-6
நாம் இந்த வசனத்தைப் படிக்கும்போது, அநேக சமயங்களில், நாம் சுத்தமான வாழ்க்கையை வாழ்வதால் இது நமக்குப் பொருந்தாது,திருமணம் தாண்டிய உறவில் வாழும் சிலருக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறுகிறோம். இந்த ஏமாற்று வேலையை சாத்தான் நம்மிடம் கொண்டு வந்து அந்த பாவத்தை நம் வாழ்வில் தொடர அனுமதிக்கிறான். தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை நாம் புரிந்து கொண்டால், இது நமக்காக சொல்லப்பட்டது அல்ல என்று சிலவற்றை விட்டுவிடுவது சரியானது அல்ல என்று அறிந்து கொள்ளலாம்.
இயேசு இவ்வாறு கூறினார் - "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று". மத்தேயு 5:28. எனவே, நமக்கு சரீர உறவு இல்லை, இது நமக்குப் பொருந்தாது என்ற கருத்து முற்றிலும் தவறானது. நமது கண்கள் பிற ஆண்களை / பெண்களைப் பார்க்கும் போது, நம் இருதயத்தில் இச்சை எதுவும் எழவில்லை என்றால், நாம் இந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம். நம் இருதயத்தில் இச்சை எழுந்தால் அது பாவம்.
வேதத்தில் ஏன் சரீர இச்சை அதிகம் பேசப்படுகிறது? நாம் ஞானஸ்நானம் பெற்று, தேவனுடைய ஆவி நம் சரீரத்தில் வசிக்கும் போது, இதை நாம் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1 கொரிந்தியர் 3:16
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 1 கொரிந்தியர் 6:19
சரீர இச்சை வந்த உடனேயே அது தேவன் வசிக்கும் இருதயம், ஆத்துமா மற்றும் மனதைக் கெடுக்கிறது. தேவனின் பார்வையில் அருவருப்பான வேசிமார்க்கத்திற்கு அது இடம் கொடுக்கிறது.
"வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்". 1 கொரிந்தியர் 6:13
"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்". 1 கொரிந்தியர் 3:17
இந்த மாம்ச இச்சையிலிருந்து நாம் விலகி ஓடினால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும். "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்”, ஏனெனில் இந்த பாவம் தேவன் வசிக்கும் அவர்களின் சுய சரீரத்திற்கு விரோதமானது.
"வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்". 1 கொரிந்தியர் 6:18
3. பரிசுத்தமாகுதல்
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4:7
நாம் பரிசுத்தமாவதற்கு முன்பாக, தேவனுக்குப் பிரியமில்லாத செத்த கிரியைகளை நம் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும். அவருக்குப் பிடிக்காத பல குணங்கள் நம்மில் இருக்கலாம் (கோபம் / பண விஷயங்கள் / வாழ்க்கையின் முன்னுரிமைகள் / தேவனை சார்ந்திராமல் சுயத்தை சார்ந்து இருத்தல் / நேர்மையின்மை / கிசுகிசுக்கள் / காதல் போன்றவை). தேவனின் கட்டளையைப் பின்பற்றி அவற்றை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றுங்கள்.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். மத்தேயு 7:19-20
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். லூக்கா 13: 6-7, 9
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய்,அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். மத்தேயு 18:8
நீங்கள் இவற்றிற்கு விலகி, இவற்றைத் துண்டித்துவிட்டு, தேவனிடம் மனந்திரும்பி, நீங்கள் காயப்படுத்திய மனிதரிடம் மன்னிப்பு கேளுங்கள். "அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்". லூக்கா 13:3. மனந்திரும்புதல் இல்லாமல் பரிசுத்தம் அடைய வழி இல்லை.
நாம் மீண்டும் மீண்டும் பாவங்களை செய்கிற பிறகும் தேவன் நம்மை இலவசமாக மன்னிப்பது போல மற்றவர்களை மன்னியுங்கள் - அதனால் நாம் அவரிடமிருந்து அதிக பரிசுத்தத்தைப் பெற முடியும். "நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்". மத்தேயு 18:35
4. சுய கட்டுப்பாடு
“தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்”.
1 தெசலோனிக்கேயர் 4:4
மனிதன் தன் சுய விருப்பத்தின் படி எதையும் செய்யக் கூடிய தன்மையைத் தேவன் கொடுத்திருக்கிறார். பல நேரங்களில் நாம் சரி என்று நினைத்து முடிவெடுப்பது தவறாகிவிடுகிறது.
தேவனின் பிள்ளைகளாக இருக்கும் நாம் நம் சுய ஆசைகளை விட்டுவிட்டு, அவருடைய சித்தப்படி பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஏனெனில் நம்முடைய சுய ஆசைகள் தேவனின் ஆவிக்கு விரோதமானது. "மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது". கலாத்தியர் 5:17
மாம்சத்தை மேற்கொள்ளும் ரகசியம் தேவனைத் தேடுவதும் அவருடைய ஆவியால் வழிநடத்தப்படுவதும் ஆகும். அப்பொழுது, உங்கள் சுய இச்சைகள் அழிக்கப்படும். "பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்". கலாத்தியர் 5:16
சிலுவையில் நான் மரிக்க வேண்டும் என்று நாம் கூறும்போது ஏமாற்றங்கள் மற்றும் சோதனைகளால் தொடர்ந்து தூக்கி எறியப்படுவதால் இது மிகவும் கடினமான செயலாகும். தேவன் நம்மை என்ன செய்ய அழைத்தாரோ அதற்கு நேர்மாறாக செய்ய ஆசைப்படுகிறோம்.
ஆனால் தைரியமாக இருங்கள் - நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சோதிக்கப்படுவதை அவர் அனுமதிக்க மாட்டார் என்று அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். சோதிக்கப்படும்போது அவரிடம் உதவி கேளுங்கள். கடந்து செல்ல அவர் தமது ஆவியினால் உதவுவார்.
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். 1கொரிந்தியர் 10:13
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். யாக்கோபு 4:7-8
5. பரிசுத்தம்
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4:7
இதில் ஒரு பகுதி பரிசுத்தம் மற்றொரு பகுதி சுத்திகரித்தல். பரிசுத்தம் இல்லாமல் நாம் தேவனைத் தரிசிக்க முடியாது என்று தேவன் கூறுகிறார். "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே". எபிரேயர் 12:14
தேவன் பரிசுத்தமாக இருப்பது போல நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று வார்த்தை கூறுகிறது - "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே". 1 பேதுரு 1:16
நிறைய அசுத்தங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம், இது நம்மை இடறலடையச் செய்து, தேவனின் பார்வையில் பரிசுத்தமற்றவர்களாக இருக்கச் செய்கிறது.
நம்மை பரிசுத்தமற்றவர்களாக ஆக்கும் உலக விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படி தேவன் கூறுகிறார். இந்தச் செயல் உங்களைப் பரிசுத்தமற்றவர்களாக்கி பாவத்திற்கு இட்டுச் செல்லுமா என்பதைப் பற்றி இருமுறை சிந்தித்துப் பாருங்கள்.
"ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து". 1 பேதுரு 1:13-14
நீங்கள் விழிப்புடன் இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதால் கீழே உள்ள குணங்களில் எவை உங்களை பரிசுத்தக்குலைச்சலாக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள். "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்". கலாத்தியர் 5:19-21
ஆம், நாம் விழுந்து, பரிசுத்தமற்றவர்களாகி பாவத்திற்குள் வழிநடத்தப்படுவோம். அங்கேயே நிற்காதீர்கள். திரும்பி வந்து மீண்டும் பரிசுத்தமாக ஆக மனந்திரும்புதலையும் பரிசுத்தத்தையும் கேளுங்கள். "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் ". 1 பேதுரு 1:15
6. தேவனுக்குப் பிரியமான அமைதியான வாழ்க்கை
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4:12
நமது சொந்த தொழில் மற்றும் வேலையில் கவனம் செலுத்தும் எளிய அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வசனம் தெளிவாக கூறுகிறது. உங்கள் கைகளில் இருந்து சம்பாதித்து, நீங்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும். யாதொரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்து பிறர் வாழ்வில் கிசுகிசுக்களால் இடையூறுகளை ஏற்படுத்தாதீர்கள். "உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்". 2 தெசலோனிக்கேயர் 3:11
நன்மை செய்ய வேண்டும் என்றும் நன்மை செய்வதில் சோர்ந்து போக வேண்டாம் என்றும் வசனம் நமக்கு கற்பிக்கிறது. "சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்". 2 தெசலோனிக்கேயர் 3:13
கடினமாக உழைத்து, உழைப்பின் பலனை உண்ணுங்கள். பவுலைப் போல வாழுங்கள் - "இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்றுநடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்". 2 தெசலோனிக்கேயர் 3:7-8
Comentarios