top of page
  • Kirupakaran

தேவனின் வரம் மற்றும் பணம்


காணிக்கையாக பணத்தைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை அநேகர் பின்பற்றுகிறோம். எந்தவொரு நல்ல காரணத்திற்காகவும் பணம் கொடுப்பதோ அல்லது தசமபாகம் கொடுப்பதோ சரி தான். ஆனால் நாம் கொடுத்தால் நமக்கு இவ்வளவு ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நமது உலக ஆசீர்வாதத்தை அணுகும் நோக்கம் தவறானது மற்றும் அது ஒரு பாவமான காரியம் ஆகும்.


அப்போஸ்தலர் 8:9-25 ஐ வாசித்தால், சீமோன் என்ற மனிதன் இந்த மனப்பான்மைக்காக அப்போஸ்தலர்களால் கண்டிக்கப்பட்டதைக் காணலாம். இந்த சம்பவத்திலிருந்து நமது ஆவிக்குரிய முதிர்ச்சியை மேம்படுத்த நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

சீமோன் - ஒரு சுருக்கமான அறிமுகம்


‘சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.’ அப்போஸ்தலர் 8:9-11


  • பைபிளில் சூனியம் என்பது அமானுஷ்ய, மாயாஜால நடைமுறைகளைக் குறிக்கிறது. சீமோனுக்கு உண்டாயிருந்த உண்மையான சக்தி தேவனிடமிருந்து வந்ததல்ல, அது சாத்தானிடமிருந்து வந்தது.

  • மக்கள் சீமோனைப் பார்த்து வியப்படைந்தனர். ஏனென்றால், அவன் தனது மாயவித்தைகளால் அவர்களைப் பிரமிக்கப் பண்ணிக் கொண்டிருந்தான். சமாரியர்கள் சீமோனுக்கு உண்மையான ஆவிக்குரிய வல்லமை இருப்பதாக தவறாகக் கருதினர்.

  • அந்த சமயத்தில் அப்போஸ்தலர்கள் துன்புறுத்தப்பட்டதால், அவர்கள் எல்லா தேசங்களுக்கும் சிதறினர். அவர்களில் ஒருவரான பிலிப்பு சமாரியாவுக்கு வந்தார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் குணமாக்குவதைக் கண்ட அநேகர் சீமோனை விட பிலிப்புவே பெரியவர் என்று விசுவாசித்தனர்.

  • தேவனுடைய ராஜ்யம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு ஏற்ற காரியங்களைக் குறித்து பிலிப்பு பிரசங்கித்தபோது அவர்கள் விசுவாசித்தார்கள். முன்பு சீமோன் மற்றும் அவனது மாயவித்தையைக் கண்டு பிரமித்தவர்கள் , இப்போது பிலிப்புவையும் அவர் பிரசங்கித்ததையும் விசுவாசித்தனர். அவர் சுவிசேஷத்தை அறிவித்தார். ஜனங்கள் அதை விசுவாசித்தார்கள்.

  • பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமலே பலர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு வர ஆரம்பித்தனர். இதை, இன்றும் அநேகர் தங்கள் உள்ளுணர்வு காரணமாக தேவனிடம் திரும்புவதற்கு ஒப்பாகக் குறிப்பிடலாம்.

  • சீமோன், பிலிப்பின் பிரசங்கம் மற்றும் அற்புதமான அடையாளங்களைக் கண்டு விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்து அவரைப் பின் தொடர்ந்தான். சீமோன் பிலிப்பையும் அவருடைய ஊழியத்தையும் பின்பற்றுபவனாக மாறினான். இந்த கட்டத்தில் - அப்போஸ்தலர் 8:13வரை சீமானின் விசுவாசம் பொய்யானது அல்லது நேர்மையற்றது என்று சொல்லும்படி எதுவும் இல்லை. இன்னும் அது காலப்போக்கில் அவனது நடத்தை மற்றும் செயல்கள் மூலம் சோதிக்கப்படும்.

தேவனின் வரம் மற்றும் பணம்


‘சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.’ அப்போஸ்தலர் 8:14-17


  • சமாரியாவில் பலர் கிறிஸ்துவின் பக்கம் மனந்திரும்புவதைக் கேள்விப்பட்டு அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் ,யோவானும் அதைக் காண வந்தனர். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஜனங்கள் யாரும் இன்னும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படமால் இருப்பதை அவர்கள் கண்டனர். ஏனெனில், ஆரம்பகால திருச்சபையில், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றால் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியினால் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.

  • ‘இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,’ - எனவே, ஜனங்கள் இலவசமாய் பெற்றுக்கொள்ளும் படியாக அவர்கள் மீது கைகளை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர்.

அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். அப்போஸ்தலர் 8:18-19

  • அப்போஸ்தலர்கள் தங்கள் கைகளை வைப்பதன் மூலம் பரிசுத்த ஆவி ஜனங்களுக்கு தந்தருளப்படுகிறதை சீமோன் பார்த்தான். பேதுருவும், யோவானும் சமாரியர்கள் மீது கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபித்தபோது, ஏதோ நடந்ததை சீமோன் கவனித்தான். அதில் அவன் கவரப்பட்டான்.

  • அவன் அவர்களுக்கு பணத்தைக் கொண்டு வந்தான்: பரிசுத்த ஆவியானவர் வாங்கக்கூடிய அல்லது விற்கக்கூடிய ஒரு சக்தி என்று சீமோன் நினைத்தான். அவன் ஆவியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த விரும்பினான். பரிசுத்த ஆவியானவர் தனது வாழ்க்கையை ஆள்பவர் என்று எண்ணாமல், பதிலாக, தான் விரும்பியபடி பயன்படுத்தக்கூடிய ஒரு சக்தி என்று எண்ணினான்.

‘பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.’அப்போஸ்தலர் 8:20-23

  • சீமோன் தவறாக நடந்து கொண்டதால் அவன் இந்தக் கடுமையான கண்டனத்திற்கு தகுதியானவனாய் இருந்தான். 'உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது' என்ற சொற்றொடரை பிலிப்ஸ் 'நீ உன்னுடைய பணத்துடன் நரகத்திற்கு செல்' என்று இவ்வாறு மொழிபெயர்க்கிறார்.

  • சீமோனின் உள்ளத்தை இது துல்லியமாக விவரிக்கிறது. இருப்பினும், பேதுரு சீமோனுடைய கசப்பை அல்லது அக்கிரமத்தின் பேயை அவனிடமிருந்து அகற்ற முயற்சிக்கவில்லை. மாறாக, பேதுரு அவனை மனந்திரும்புவதற்கும் (மனந்திரும்பி), ஜெபிப்பதற்கும் (தேவனை நோக்கி வேண்டிக்கொள்), மற்றும் நீதிக்கும் (இருதயத்தின் எண்ணத்தைக் கையாளுவதற்கும்) அழைத்தார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள்


  • நம்மில் பெரும்பாலானோர் சீமோன் போலவே நித்திய மகிமையையும், பரிசுத்த ஆவியையும் நம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டு வாங்க முடியும் என்று நினைக்கிறோம். நம்முடைய பணத்தில் ஒரு பகுதியை கொடுப்பதன் மூலம் தேவனுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். சில போதகர்கள் ஆண்டவருடைய பெயரில் பணம் கேட்கின்றனர். இரண்டும் ஆண்டவருடைய பார்வையில் பாவமான காரியமே.

  • தேவன் நம் பாவங்களுக்குப் பரிகாரமாக தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். நாம் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இதை செய்தார். இவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் இலவசமாக செய்யப்பட்டது. எனவே நீங்கள் தேவனிடம் இருந்து பெறும் எல்லாமே இலவசம் தான், அதற்காக யாரும் உங்களிடம் பணம் கேட்க முடியாது. இதை யாரும் பணத்தின் மூலம் வாங்கவும் முடியாது.

  • சீமோனின் நோக்கம் வெளியரங்கமாக்கப்பட்டது போல பல சமயங்களில், நமது நோக்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதில்லை. நாம் செய்வது எப்போதும் சரி என்று நினைக்க வேண்டாம். நாம் தேவனுக்கு பணம் கொடுக்கும்போதோ அல்லது ஏதாவது தொண்டு செய்யும் போதோ நம் இருதயத்தின் ஆழமான நோக்கங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்வோம். பதிலுக்கு இன்னும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பது நோக்கமாய் இருந்தால் நாமும் இன்னொரு சீமோனே.

  • அப்போஸ்தலர்கள் சீமோனிடம் கூறியது போல, இயேசு கிறிஸ்துவின் இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள நாமும் மனந்திரும்பி, அவரிடம் மன்னிப்பு கேட்போம். நாம் மனந்திரும்பி, நம் பழைய வழிகளிலிருந்து விலகிச் செல்லும் போது , தேவன் நம் நடத்தையை அங்கீகரித்து ஆவிக்குரிய ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நம்மை ஆசீர்வதிப்பார்.

  • தேவனுக்கு உங்கள் பணம் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உலகம் முழுவதற்குமான வங்கியாளர். நாம் அவரிடம் வருகிற மனப்பான்மையையும் , முதலில் அவரை எப்படி கனம் பண்ணுகிறோம் என்பதையும் தான் அவர் எதிர்பார்க்கிறார். நம் இருதயத்திலிருந்து அவரைக் கனம் பண்ண வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மேலும் நமது நோக்கங்களும் செயல்களும் அவருடைய நோக்கத்திற்கு உண்மையானவையாக இருக்க வேண்டும். அவரது ஆசீர்வாதங்களை நம் மீது பொழிவதற்கு பணம் ஒரு அளவுகோல் அல்ல.

Recent Posts

See All

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page