வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பொறுமை ஒரு முக்கிய மூலப்பொருள், ஆனால் இன்றைய வேகமான உலகில் அது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. சீன மூங்கில் மரம் பொறுமையின் சக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது வளர்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகும். முதல் நான்கு வருடங்களுக்கு தரைக்கு மேலே எந்த வளர்ச்சியும் காணப்படுவது இல்லை. ஐந்தாவது ஆண்டில், திடீரென்று ஆறு வாரங்களில் 80 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்துவிடும். வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பொறுமை அவசியம் என்பதை இந்தக் கதை நமக்குக் கற்பிக்கிறது.
தேவன் நீடிய பொறுமையை வெளிப்படுத்துகிறார். அவருடைய பொறுமையை நாம் வேதம் முழுவதும் வாசிக்கிறோம்.
தேவனுடைய பொறுமை நாம் மனந்திரும்புவதற்காகவே
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்". 2 பேதுரு 3:9
"அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?". ரோமர் 2:4
பல நேரங்களில் நாம் தேவனின் வழிகளைத் தவறாகப் புரிந்துகொள்கிறோம். உலகம் பாவத்தால் நிரம்பியுள்ளது. கடந்தகால வாழ்க்கையோடு நாம் இப்போது வாழும் காலத்தை ஒப்பிடும்போது பாவம் அதிகமாக வளர்வதைக் காண்கிறோம். இன்னும் இதற்கு முடிவே இல்லை, தேவன் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று நாம் யோசிக்கலாம். நாம் மனந்திரும்புவதற்கு அவரிடம் வருவதற்காக அதிக காலம் கொடுத்து நம் பாவங்களில் பொறுமையாக இருக்கிறார். “…ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்". 2 பேதுரு 3:9
பாவிகளாகிய நாம் மரணத்திற்குள்ளாக்கப்பட வேண்டும். "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்". ரோமர் 6:23. அவருடைய செயலின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவின் முன் நிற்கும்படிக்கு நித்திய ஜீவன் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாவம் நிறைந்த உலகில் நாம் வாழும்போது, நாம் திரும்பி வந்து மனந்திரும்புவதற்கு அவர் தமது கிருபையையும் இரக்கத்தையும் நமக்குத் தருகிறார். ஆனால் மனிதர்களாகிய நாம் கிருபையை பயன்படுத்திக் கொண்டு அதிகம் பாவம் செய்கிறோம். ஒருக்காலும் நாம் அப்படி தொடர முடியாது (ரோமர் 6:1-3), பொறுமை விரைவில் முடிந்துவிடும் (ரோமர் 11:22).
"ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?" ரோமர் 6:1-3
"ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்". ரோமர் 11:22
இஸ்ரவேலரின் உதாரணம்
தேவன் இஸ்ரவேலர்களிடம் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதில் இருந்து அவருடைய பொறுமையைப் புரிந்துகொண்டு, அதை நம் வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வழிநடத்தவும், அடிமைத்தனத்தின் கட்டுக்களிலிருந்து விடுவிக்கவும் மோசேயைத் தேர்ந்தெடுத்தார்.
பார்வோனையும் அவனுடைய இராணுவத்தையும் அழித்தார். ஒருவராகிலும் தப்பவில்லை. பார்வோனுக்கு மனந்திரும்புவதற்கு பல வாய்ப்புகள் கொடுத்த பிறகும் அவன் தோற்றுப் போனான். இறுதியாக, அவன் அழிக்கப்பட்டான்.
"இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்". "ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை". யாத்திராகமம் 14:18,28
செங்கடலிலிருந்து கானானுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியது. ஆனால் தேவன் இஸ்ரவேலர்களை 40 ஆண்டுகள் பாலைவனத்திற்குள் வாழும்படி அழைத்துச் சென்றார். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு மன்னாவையும் காடையையும் கொடுத்தார். அவர்கள் அதிருப்தியடைந்து, எகிப்தில் தங்கள் அடிமைத்தன வாழ்க்கையைத் தொடர்ந்து திரும்பிப் பார்க்கையில், பாலைவனத்தில் அவர்கள் அனுபவித்த அனைத்து கஷ்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.
"நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது".
"அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது, அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்". எண்ணாகமம் 11:5-7,31-32
வாக்குப் பண்ணப்பட்ட கானான் நாட்டைக் காண்பிப்பதற்கு ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொரு பிரபுவை அடையாளம் காணும்படி தேவன் மோசேயிடம் கூறினார். இவ்விதத்தில், அவர்கள் தங்கள் கோத்திரத் தலைவரிடம் இருந்து கேட்டால் குறைந்தபட்சம் நம்புவார்கள்.
"கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்". "அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி". எண்ணாகமம் 13:1-2,27
அதைக் கண்டபிறகு, அவர்கள் உரத்த குரலில் அழுது, தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக முறுமுறுத்தனர்.
"அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்". எண்ணாகமம் 14:1-3
இந்தச் செயல் தேவனின் கோபத்தைத் தூண்டியது, ஆனால் மோசே அவரிடம் மக்களுக்காகப் பரிந்து பேசி, அவர்கள் மீதான கோபத்தைத் தணிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
"கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?". "என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்". எண்ணாகமம் 14:11,18-20
40 ஆண்டுகளில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகும் கூட, அவர்கள் இன்னும் மோசேவுக்கோ கர்த்தருக்கோ செவிசாய்க்கவில்லை. இறுதியாக, தேவனின் கோபம் நூனின் மகன் யோசுவா மற்றும் எப்புன்னேயின் குமாரன் காலேப் தவிர மற்ற அனைவரையும் எரித்தது.
"என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்". எண்ணாகமம் 14:24
மனந்திரும்புதலைத் தாமதிக்கும் நமது சாக்குபோக்குகள்
என் பாவம் மற்றவர்களைப் போல மோசமானதல்ல - நாம் பெரும்பாலும் நம்முடைய பாவங்களை மற்றவர்களின் பாவங்களுடன் ஒப்பிட்டு, "என் பாவம் அவர்களுடையது போல் மோசமானதல்ல" என்று கூறுகிறோம். ஜனங்கள் தங்களை கலிலேயர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இயேசு சொன்னதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
"பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்". லூக்கா 13:1-3
அவரது கிருபையால் துணிகரம் கொள்கிறோம் - பல சமயங்களில் நாம் ஒப்பிட்டுப் பார்த்து, "இந்தப் பாவத்திற்காக தேவன் என்னை முன்பே தண்டிக்கவில்லை", எனவே இந்த பாவத்தில் தொடர்ந்தாலும் பரவாயில்லை என்று கூறி அந்த வழியில் இருந்து மனந்திரும்பாமல் இருக்கிறோம்.
"துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்". பிரசங்கி 8:11-12
நாம் கிருபையின் புதிய காலத்தில் வாழ்கிறோம் - "நான் கிருபையின் கீழ் வாழ்கிறேன்", தேவன் இரக்கமுள்ளவர், அதனால் நான் தொடர்ந்து பாவம் செய்தாலும், அவருடைய கிருபை என்னை மூடும் என்று நினைக்கிறோம்.
"மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று". ரோமர் 5:20
"ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?". ரோமர் 6:1-2
கிறிஸ்து பரிந்து பேசுபவர், குற்றம் சாட்டுபவர் அல்ல - கிறிஸ்து நம்மைக் குற்றம் சாட்டுவதில்லை. ஆம் அவர் நம் பாவத்தைக் குறித்து நம்மைக் குற்றம் சாட்டுவதில்லை. அவர் எனக்காய் பரிந்து பேசுபவர், அதனால் நான் மனந்திரும்புவதற்கு காலம் தாழ்த்தலாம் என்று நினைக்கிறோம்.
"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே". ரோமர் 8:1-2
நான் தேவனுக்கு விசேஷமானவன்... நான் இன்றியமையாதவன் - நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் செயலுக்காகவும் அழைக்கப்பட்டுள்ளோம், அதனால்தான் நம் காலத்திற்கு முன்பே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இருப்பினும், நாம் அவருக்கு இன்றியமையாதவர்கள் என்று கருதக்கூடாது, ஏனென்றால் அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற எண்ணற்ற வழிகளும், ஏராளமான திட்டங்களும் அவர் வசம் உள்ளன. நாம் இன்றியமையாதவர்கள் என்று நாம் நம்பினால், நாம் ஒரு மாயை நிலையில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.
இல்லை, தேவன் இஸ்ரவேலருடன் செய்தது போல் நம்மையும் கடந்து செல்ல முடியும்.
"அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான். இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்". ரோமர் 10:20-21
நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கும் பொழுது, இஸ்ரவேலர்களைப் போல் பிடிவாதமாக இருக்காதீர்கள்.
"ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;". எபிரேயர் 3:7-10
நீங்கள் தேவனிடம் மனந்திரும்புவதற்கு இன்றைய தினம் மிகவும் சீக்கிரம் என்று நினைத்தால், அவர் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாளைய தினம் மிகவும் தாமதமாகிவிடும்! “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்…”.
"நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்". வெளிப்படுத்தின விசேஷம் 3:19-20,22.
Comments