top of page
  • Kirupakaran

தேவனின் சித்தத்தை புரிந்து கொள்வது எப்படி ?



ஒரு நபர் கிறிஸ்தவராக மாறிய பிறகு, அடுத்த மிக முக்கியமான படி அவரது வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்வதாகும். ஒரு கிறிஸ்தவரின் மிக முக்கியமான கேள்வி "என் வாழ்க்கைக்கான தேவ சித்தம் என்ன?" என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு, தேவ சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லப்படவில்லை, அவர்கள் தங்களது வாழ்க்கைக்கான தேவ சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறார்கள். ‘ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.எபேசியர் 5:17


பவுல் எபேசுவில் 3 வருடங்கள் தங்கியிருந்து பின் எருசலேமுக்குப் புறப்படவிருந்தபோது, தேவனுடைய பிள்ளைகள் அநேகர் எருசலேமுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று பவுலுக்கு அறிவுரை கூறினார்கள்.

அப்போஸ்தலர் 21:1-14 இல் வாசிக்கும் போது, பவுல் தேவனுடைய சித்தத்திற்கு எதிராகச் செய்வதாக நாம் நினைப்போம். ஆனால் உண்மையில் பவுல் தேவனுடைய சித்தத்தின்படி தான் செய்துகொண்டிருந்தார்.

பவுலின் செயல்கள் என்ன என்பதையும்,தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு அவர் எவ்வாறு வழிநடத்தப்பட்டார் என்பதையும் பற்றி நாம் ஆழமாக தெரிந்து கொள்வதற்கு முன், பல்வேறு வேத அறிஞர்கள் மூலம் நான் கற்றுக்கொண்டதில் இருந்து தேவ சித்தத்தைப் பற்றிப் புரிந்து கொள்வோம்.


தேவ சித்தத்தில் கிறிஸ்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன.

  1. மறைவான சித்தம்

  2. வெளிப்படுத்தப்பட்ட சித்தம்

  3. அனுமதிக்கும் சித்தம்

  4. வழிகாட்டும் சித்தம்

மறைவான சித்தம்

தேவனுடைய மறைவான சித்தம் அவருடைய இறையாண்மையிலிருந்து வெளியேறுகிறது. இது நம் பிறப்பிலிருந்து நித்தியம் வரை அவர் நமக்காகத் திட்டமிட்டதை உள்ளடக்கியது. அந்த காரியங்கள் அவருக்கு மட்டுமே தெரியும், எந்த ஒரு மனிதனுக்கும் தெரியாது.


‘மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.’ உபாகமம் 29:29


தேவன் ஒரு இரகசிய/மறைவான சித்தம் வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். அவர் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தனித்தனியாக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது.


வெளிப்படுத்தப்பட்ட சித்தம்

தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம் என்பது வேதத்தில் உள்ள கட்டளைகளைக் குறிக்கிறது. வேதத்தில் வெளிப்படுத்தியபடி, கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இது குறிக்கிறது.


வெளிப்படுத்தப்பட்ட சித்தம் ஒரு கிறிஸ்தவரால் ஒருபோதும் முழுமையாகச் செய்யப்படுவதில்லை. ஆனால், அது நாம் செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும் அவருடைய உயர்ந்த தராதர நிலை ஆகும்.


உதாரணத்திற்கு, ஆண்டவர் நம்மிடம் ஒரு சூழ்நிலைக்காக ஜெபிக்கும்படி ‘இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.' 1 தெசலோனிக்கேயர் 5:17, என்ற தம்முடைய வார்த்தையின் மூலம் கேட்கும்பொழுது இதற்காக நாம் ஒரு நாள் ஜெபிப்போம். அதன் பின்பு, உலகக் காரியங்கள் முக்கியத்துவம் பெற்று நாம் அதற்காக ஜெபிப்பதை மறந்துவிடுவோம்.


ஒரு கிறிஸ்தவர் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தைக் கைகொள்ளத் தவறினால், அவர் கீழ்ப்படியாமைக்கான விளைவுகளை செலுத்த வேண்டும்.


அனுமதிக்கும் சித்தம்

தேவன் அனுமதிக்கும் சித்தம் விசுவாசக் கோட்பாட்டின்படி அவருடைய மறைவான சித்தத்திற்கு வெளியே எதுவும் நடக்காது என்பதை விளக்குகிறது. ஆனாலும் , பாவத்திற்கு அவர் பொறுப்பல்ல. மனித பாவம் தேவன் அனுமதிக்கும் சித்தத்தின் கீழ் வருகிறது.


இது அவர் செயலற்ற முறையில் அனுமதிக்கும் மனிதர்களின் பொறுப்பான செயல்களுடன் தொடர்புடையது, இருந்தும் அவர் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.


தேவன் அனுமதிக்கும் சித்தம் அவருடைய மறைவான சித்தத்தின் எதிர்மறை அம்சங்களைக் கையாள்கிறது.


உதாரணத்திற்கு, நாம் ஒரு சொத்தை வாங்க விரும்பினால், தேவனுடைய விருப்பத்தை நாடி ஜெபம் செய்வோம். அவருடைய சித்தம் இல்லையென்றால் அதில் போராட்டங்கள் இருக்கும். ஆனால் நமது ஆசைகள் அவருடைய விருப்பத்தை மீறும் போது போராட்டங்கள் சாத்தானிடமிருந்து வருகின்றன என்று குற்றம் சாட்டுவோம். இவ்வாறு செய்யும் போது நாம் தோல்விக்கு அழைத்துச் செல்லப்படுவோம். இதில் தேவன் உங்களுக்கு வாழ்க்கையின் தவறுகளைக் காண்பிப்பார். நீங்கள் மனம் திரும்பியபிறகு அவரது இரக்கங்களினால் உங்களை விடுவிப்பார்.


வழிகாட்டும் சித்தம்

தேவன் தமது மறைவான சித்தத்தில் தீவிரமாக, வேண்டுமென்றே வழிநடத்தும் விஷயங்களை அவரது வழிகாட்டுதல் சித்தம் கையாள்கிறது. இது அவரது இரகசிய சித்தத்தின் நேர்மறையான அம்சங்களுடன் தொடர்புடையது. அவரது பிரசன்னமும், அனுபவமும் இதை வழிநடத்துகிறது என்பதை அறிந்து கொள்ளும்படிக்கு அவரது வழிகாட்டுதல் இருக்கும்.

தேவனுடைய வழிகாட்டும் சித்தம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?


முதன்மை முறைகள்: தேவனுடைய சித்தத்தை தீர்மானிக்க ஐந்து முதன்மை முறைகள் உள்ளன.

  • வேதாகமம் - வேதாகமம் என்பது கர்த்தருடைய வழிகாட்டுதலை தீர்மானிப்பதற்கான முதல் மற்றும் முதன்மையான ஆதாரமாகும். வேதாகமத்தின் கட்டளைகளையும் கோட்பாடுகளையும் அறிந்து, அவற்றை ஒருவர் தன் அனுபவத்திற்குப் பயன்படுத்த வேண்டும். வேத வசனத்திற்கு அல்லது கொள்கைக்கு முரணான காரியத்தை செய்வது ஒருபோதும் தேவ சித்தமாக இருக்காது.

  • ஜெபம் - ஒருவர் எந்தவொரு விஷயத்திலும் கர்த்தருடைய சித்தத்திற்காக நேர்மையாக ஜெபிக்க வேண்டும். தேவன் தனக்கு வெளிப்படுத்தும் எதையும் செய்யத் தாம் தயாராக இருப்பதை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒருவர் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இல்லாவிட்டால், அவர் தேவனுடைய கட்டளையை ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது.

  • ஐக்கியம் - ஒரு கிறிஸ்தவர் ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியம் கொள்வது முக்கியம். நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் நாம் தேவனுக்கு என்னவாக இருக்கிறோம் என்ற அளவிற்கு முக்கியமல்ல. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நாம் எப்போதும் கிறிஸ்துவுடன் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

  • பொது அறிவு - ஒரு கிறிஸ்தவர், ஆண்டவர் கொடுத்த இயற்கையான திறனைப் பயன்படுத்தி அனைத்து காரணிகளையும் படித்து, தேவ சித்தத்தைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், எல்லா பகுத்தறிவும் வேதாகமக் கொள்கைகளாலும், ஜெபத்தினாலும் வழிநடத்தப்பட வேண்டும். ஏனென்றால் மனம் இன்னும் பாவத்தால் கறைபடிந்திருக்கிறது மற்றும் இருதயம் வஞ்சகமானதும், மிகவும் பொல்லாததுமாயும் இருக்கிறது.

  • நம்பிக்கை - அடிக்கடி பரிசுத்த ஆவியானவர் அசைக்க முடியாத ஒரு வலுவான நம்பிக்கையை கொடுக்கிறார். அவருக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நமது மனசாட்சியுடன் பேசும் ஆண்டவருடைய மெல்லிய குரல் இது. ஆவியின் உள்ளார்ந்த சாட்சி தான் தேவனுடன் ஐக்கியத்தில் இருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் யதார்த்தம்.

இரண்டாம் நிலை முறைகள் - தேவ சித்தத்தை தீர்மானிப்பதற்கு மூன்று இரண்டாம் நிலை முறைகள் உள்ளன.

  • சூழ்நிலைகள் - தேவன் கதவுகளைத் திறப்பதன் மூலமும் மூடுவதன் மூலமும் நம்மை வழிநடத்தலாம் (கொலோ. 4:3). “ஆண்டவரே, இது உமது சித்தம் இல்லையென்றால் எல்லா கதவையும் மூடி விடுங்கள், நான் தனிப்பட்ட முறையில் என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை" என்றே கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும்.

  • ஆலோசனை - ஒரு விஷயத்தைப் பற்றி பேச சக கிறிஸ்தவர்களின் ஆலோசனையை நாடுவது எப்போதும் விவேகமானது (நீதி. 15:22). அந்த ஆலோசனை நிராகரிக்கப்படலாம், ஆனால் வயதான, அதிக முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து ஞானத்தைப் பெறுவது நல்லது. உண்மைகள் மற்றும் அதைக் குறித்த தெளிவு எல்லாம் ஒரு ஆலோசகர் மூலம் வரலாம். ஆனால் வழிநடத்துதல் தேவனிடம் இருந்து வர வேண்டும். ஒருவர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதில் தேவனிடம் இருந்து வலுவான உறுதியைப் பெற்றிருந்தால் ஒரு ஆலோசகரின் ஆலோசனையை நிராகரிப்பது தவறல்ல.

  • சமாதானம் - தேவன் ஏதாவது ஒரு செயலில் இருந்தால், எல்லா புரிதலுக்கும் மேலான சமாதானத்தைக் கொடுப்பார். (கொலோ. 3:15). ஒருவன் தனக்கு தேவ சமாதானம் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும். அவன் சூழ்நிலையைப் பற்றி உணர்வு பூர்வமாக பயப்படலாம், ஆனால் சரியானதை தான் செய்கிறோம் என்ற சமாதானம் அவனுக்கு இருக்கும்.

பவுல் எவ்வாறு ஆண்டவருடைய சித்தத்திற்கு வழிநடத்தப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இப்போது பவுலின் சூழ்நிலைக்கு வருவோம்.


தேவ சித்தத்திற்கு எதிராக பவுல் செயல்பட்டார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் தவறான புரிதலை இது நீக்கும்.ஆரம்பத்தில், தேவன் பவுலைத் தேர்ந்தெடுத்த பொழுது அவர் தமது ரகசிய சித்தத்தை அனனியாவுக்கு வெளிப்படுத்தினார். இது அவருடைய மறைவான ரகசிய சித்தம், அது பவுலுக்குத் தெரியவில்லை.


அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். அப்போஸ்தலர் 9:15-16


கீழ்வரும் இந்த 6 ஆவிக்குரிய பாடங்களை வாசிக்கும் போது,


அப்போஸ்தலர் 21:1-14 வரை உள்ள வசனங்களை கவனமாகப் படியுங்கள். அப்பொழுது இதைப் புரிந்துகொள்ளவும் உங்கள் வாழ்க்கையில் இதைப் பயன்படுத்தவும் உங்களை வலுவாகத் தூண்டுவார்.

  1. நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,’ அப்போஸ்தலர் 21:1 வெளிப்படுத்தப்பட்ட சித்தம் (சகோதரர்கள் மீதான அன்பு) - பவுல் எபேசு தேவாலயத்தின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார். அதை கட்டுவதற்காக அவர் அங்கேயே 3 வருஷம் தங்கி இருந்தார். அவர்களை விட்டுப் பிரிந்து தேவ சித்தத்தைச் செய்யப் போவது அவருக்கு ஒரு கடினமான அனுபவமாக இருந்தது. இங்கே சுற்றிலும் அன்பானவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள், நான் இங்கேயே தங்கி ஊழியம் செய்யட்டும் என்று அவர் வசதியாக அங்கேயே தங்கி இருந்திருக்கலாம். ஆனால் தேவனுடைய சித்தம் மிகவும் ஆழமாக இருந்தது. தேவ சித்தத்தின் மீதான அவரது நம்பிக்கைக்குக் கீழ்ப்படிய வேண்டி அவர் சகோதரர்களின் அன்பிலிருந்து விலக வேண்டியிருந்தது.

  2. அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.’ அப்போஸ்தலர் 21:4-6 வழிகாட்டும் சித்தம் (ஜெபம்,ஐக்கியம், காரியத்தில் நம்பிக்கை) - பவுல் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல ஒரு இடத்தின் அழகைத் தேடவில்லை. அவர் உள்ளூர் தேவாலயத்தையும் கிறிஸ்தவர்களையும் நாடினார், ஏனெனில்,அதுவே அவருக்கான தேவ சித்தமாய் இருந்தது. தனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட கர்த்தரை முதன்மையாக வைத்திருந்தார். ஆண்டவரிடம் ஐக்கியமாக இருந்தார். அது ஜெபத்தில் ஆண்டவருடைய சித்தத்தை பலப்படுத்தியது. சீஷர்கள் ஜெபித்த பிறகு,"நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்". பிறகும் கூட, தேவ சித்தத்தின் மீது அவருக்கு வலுவான நம்பிக்கை இருந்ததால், அவர் எருசலேமுக்குச் செல்ல விரும்பினார்.

  3. 'நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தைவிட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்குவந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.’ அப்போஸ்தலர் 21:7-9 வழிகாட்டும் சித்தம் (காரியத்தில் சமாதானம் மற்றும் ஐக்கியம்) - அப்போஸ்தலர் 8 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட சுவிஷேகர் பிலிப்புவை பவுல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தார். அவருக்கு தீர்க்கதரிசன ஆவியைக் கொண்ட நான்கு மகள்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் யாரும் பவுலுக்கு எந்த ஒரு தீர்க்கதரிசன வார்த்தையும் கொடுக்கவில்லை. பிலிப்புடனான ஐக்கியத்தின் மூலம் பவுல் சமாதானத்தைக் கண்டார். அவர் அங்கே 1 நாள் மட்டுமே தங்க வேண்டியிருந்தது.

  4. ‘நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.’ அப்போஸ்தலர் 21:10-11 வழிகாட்டும் சித்தம் (ஆலோசனை,பொது அறிவு,காரியத்தில் நம்பிக்கை) - அகபு என்னும் தீர்க்கதரிசி, பவுலுக்கு வரவிருக்கும் ஆபத்தைக் காட்சிப்படுத்தி அறிவுரை கூறினார். மேலும், எருசலேமுக்குச் செல்வதற்கு எதிராக கடுமையாக வலியுறுத்தினார். அகபு ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் கி.பி. 56 இல் பஞ்சத்தை சரியாகக் கணித்து கூறிய போது அது நடந்தது. பவுல் அதை அறிந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தாலும், தேவ சித்தத்தை நிறைவேற்ற எருசலேமுக்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய நம்பிக்கையாய் இருந்தது. பவுலின் பொது அறிவு, அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை புறக்கணிக்கும்படி ஆவியால் சமாதானப்படுத்தப்பட்டது. பல சமயங்களில், நாமும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். ஆனால், பவுல் ஜெபத்தில் நிலைத்திருந்ததால், அவருக்கு இந்த வழிகாட்டுதல் கிடைத்தது. ஆவியானவர் தேவ சித்தத்தை செய்யும்படி அவரை வழிநடத்தினார். எனவே, அவர் ஆலோசனையை புறக்கணித்தார்.

  5. ‘இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.’ அப்போஸ்தலர் 21:12-13 வழிகாட்டுகிற சித்தம் (சூழ்நிலை, சமாதானம் , காரியத்தில் நம்பிக்கை) - "இருதயத்தை உடைக்கிறது" என்ற பவுலின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் "என் விருப்பத்தை கரைக்கிறது" என்பதே. அவர்களுடைய அழுகை, பவுலை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்தி, கிட்டத்தட்ட எருசலேமுக்குச் செல்வதற்கான தீர்மானத்தை மாற்றும்படி இருந்தது. அவர்களுடைய கெஞ்சல்கள், அவனுக்காக தேவன் வெளிப்படுத்திய சித்தம் என்று பவுல் அறிந்திருந்ததில் இருந்து பவுலின் மனதைத் திசைதிருப்பியது. "இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்."அப்போஸ்தலர் 20:22-23. இது அப்போஸ்தலர் 9:15-16 இல் அனனியாவுக்கு தேவனது இரகசிய சித்தம் வெளிப்படுத்தப்பட்டதைப் போலவே உள்ளது. பவுல், அவர்களின் வேண்டுகோளுக்கு (சூழ்நிலை) அடிபணியவில்லை. அவர் தனது சொந்த வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டியிருந்தது. எருசலேமுக்குச் செல்வதில் அவரது மனம் உறுதியாக இருந்தது. மேலும் அவர் தனக்குக் காத்திருக்கும் எதற்கும் தயாராக இருப்பதாக உணர்ந்தார்.

  6. 'அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.’ அப்போஸ்தலர் 21:14-15 தேவனின் இரகசிய விருப்பத்திற்கு அடிபணிய வேண்டும் என்ற உறுதி, அவரை சமாதானப்படுத்த முடியாததால், அவர்கள் அமைதியாகிவிட்டனர். 'அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்". பவுல் எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருப்பதை அவருடைய கிறிஸ்தவ நண்பர்கள் உணர்ந்தபோது, அவர் தேவ சித்தத்தின் படியே செய்கிறார் என்று நம்பி, “கர்த்தருடைய சித்தம் நிறைவேறும்” என்று சொன்னார்கள். அவர்கள் ஆண்டவருடைய இரகசிய, இறையாண்மையுள்ள சித்தத்தைக் குறிப்பிட்டார்கள். தங்களுக்கு என்ன தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டாலும் பவுலின் வாழ்க்கைக்கான கர்த்தருடைய இரகசிய சித்தத்திற்கு கீழ்ப்படிய அவர்கள் இப்போது தயாராக இருந்தனர்.பவுல் எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியால் மிகவும் வலியுறுத்தப்பட்டார் ,அப்போஸ்தலர் 20:22-23. பவுலைப் பயன்படுத்தி ராஜாக்களுக்கும் பூமியின் குடிகளுக்கும் கர்த்தருடைய நாமத்தை அறிவிக்க வேண்டும் என்பதே தேவனுடைய மறைவான சித்தமாய் இருந்தது.

‘அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.’ அப்போஸ்தலர் 9:15-16

நீங்கள் அப்போஸ்தலர் 22-24 வரை வாசித்துப் பார்த்தால் , அவர் எருசலேமில் கைது செய்யப்பட்டது, இராஜாக்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க ரோம் சென்றது மற்றும் இந்த பயணத்தில் அவர் அனுபவித்த பாடுகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். கர்த்தர் அனனியாவிடம் பேசியது போலவே அவருடைய சித்தம் சரியாக நிறைவேறியது.


முடிவுரை - உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன கடந்து செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ள இந்த ஆவிக்குரிய கோட்பாடுகளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். இதை தினமும் ஒரு பழக்கமாக மாற்றி கொண்டு, உங்கள் தினசரி செயல்கள் தேவன் வழிகாட்டுகிற சித்தத்தின் படி நடக்கிறதா என்று பாருங்கள். அதன் மூலம் நீங்கள் சரியான பாதையில் நடக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், தேவன் அனுமதித்த சித்தத்தை செய்யாமல் இருப்பதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page