தேவனுடைய வார்த்தை என்பது வேதத்தைக் குறிக்கிறது, இது அவருடைய அதிகாரப்பூர்வ வார்த்தை என்று கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசிக்கிறோம். இது மனிதகுலத்திற்கான தேவனின் செய்தியைக் கொண்டுள்ளது. மேலும் இது அவருடைய குணத்தையும், இரட்சிப்பிற்கான அவருடைய திட்டத்தையும், நம் வாழ்வுக்கான அவருடைய சித்தத்தையும் வெளிப்படுத்துகிறது. வேதம், இஸ்ரவேலர்களுடனான தேவனுடைய உறவைப் பற்றிய கதையைச் சொல்கிற பழைய ஏற்பாடு மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தை நிறுவுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ள புதிய ஏற்பாடு ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
நாம் வெளிப்படுத்தின விசேஷம் 1:3 ஐ வாசிக்கும் போது, வேதத்தை வாசிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கைக்கொள்ளுகிறவர்களுக்கும் சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதத்தைக் காண்கிறோம். மேலும் அது "காலம் சமீபமாயிருக்கிறது" என்று எச்சரிக்கவும் செய்கிறது.
"இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது". வெளிப்படுத்தின விசேஷம் 1:3
தேவனின் வார்த்தையின் தோற்றம்
வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவன் தமது பரிசுத்த ஆவியானவரின் வாயிலாக தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தியதன் மூலம் எழுதப்பட்டுள்ளது. “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்". 2 பேதுரு 1:20-21
தேவனின் முதல் வார்த்தை இஸ்ரவேல் மக்களிடம் தோன்றியது, அது பத்து கட்டளைகளாக மோசேக்கு வழங்கப்பட்டது. இதை யாத்திராகமம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். "பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை பண்ணினேன் என்றார். அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்". யாத்திராகமம் 34:27-28
ஆதி கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தைப் பின்பற்றினார்கள். அது ஒரு சுருளில் எழுதப்பட்டு, வாசிப்பதற்காக பொதுவான இடங்களில் வைக்கப்பட்டு இருந்தது. மக்கள் வசனங்களைக் கேட்பதற்காக பெரும்பாலும் பொது இடங்களில் கூடுவார்கள். இன்று இருப்பது போல் அச்சிடப்பட்ட புத்தகங்கள் எதுவும் அவர்களிடத்தில் இருக்கவில்லை.
தேவன் ஏன் நமக்கு வேதத்தைக் கொடுத்தார்?
தேவன் குற்றமற்றவர், தூய்மையானவர். பாவம் அவருக்கு சத்துரு. மனிதர்களாகிய நாம் எவ்வாறு பாவமில்லாத ஒரு வாழ்க்கையை வாழலாம் என்பதைப் பார்ப்பதற்கு சில வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தரவும், தவறான பாதையில் செல்லும்போது நம்மைக் கடிந்து கொள்ளவும், அவருடைய சித்தத்தின்படி நடப்பதற்கு நம்மைத் திருத்தவும், பாவத்திலிருந்து விலகி இருக்க தேவ நீதியில் நம்மைப் பயிற்றுவிக்கவும் தேவனுடைய வார்த்தை பயன்படுகிறது. "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது". 2தீமோத்தேயு 3:16,17
நாம் கிறிஸ்துவின் விசுவாசத்திற்குள் வரும் பொழுது, தேவனுடைய வார்த்தை நம்மை அழிவில்லாத வித்தாக வழிநடத்துகிறது. "அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே". 1 பேதுரு 1:23
நாம் இரட்சிப்புக்குள் வரும்போது, அவருடைய சித்தத்தின்படி நம்மை வழிநடத்த தேவனுடைய வார்த்தையின் மூலம் ஆசீர்வாதத்தின் முதல் பலன்களை நமக்குத் தருகிறார். "அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்". யாக்கோபு 1:18
நாம் பாவத்தின் சாபத்திலிருந்து (ஆதாமிடமிருந்து) பிறந்ததால், நம்மிடத்தில் நன்மையானது என்று எதுவும் இல்லை. நாம் வாசிக்கும் போது, தேவன் தம்முடைய நன்மையான வரங்களை நமக்குத் தருகிறார், நாம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்கிறோம். நாம் தேவனிடமிருந்து அனைத்து நன்மையான ஈவையும் பெறுகிறோம். "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை". யாக்கோபு 1:17
தேவனுடைய வசனம் காலப்போக்கில் மாறாது. அது மோசே காலத்தில் இருந்து இன்றைய நாள் வரைக்கும் அதே வார்த்தையாக தான் இருக்கிறது. அது எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். எனவே, நாம் தேவனின் வார்த்தையை விசுவாசிக்கலாம்.
மத்தேயு 24:35 - "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை".
1 பேதுரு 1:25 - "கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே".
வேதத்தை ஏன் படிக்க வேண்டும்?
தேவ வசனம் தற்போதைய கால சூழலில் இல்லை, இது 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாது என்று பலர் வாதிடலாம். "அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்" என்று வேதம் சொல்வது போல் தேவன் எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை. நாம் எதை வாசிக்க வேண்டுமோ அவ்வளவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. "இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்". யோவான் 21:25
வேதம் என்பது தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கும் வார்த்தை, அதை சாதாரண புத்தகம் போல் படிக்க முடியாது. நீங்கள் வசனத்தைப் படித்து, அதின்படி செயல்படவில்லை என்றால், உங்களை நீங்களே வஞ்சிக்கிறீர்கள். "அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்" என்று வேதம் சொல்கிறது. "அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்". யாக்கோபு 1:22
நமது வாழ்க்கை பூமியில் நாம் வாழும் நமது பூமிக்குரிய தேவைகளைப் பற்றியது மட்டுமல்ல. நாம் இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு பெரிய நோக்கம் உள்ளது: தேவனின் சித்தத்தைச் செய்வது மற்றும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்வது. நீங்கள் வேதத்தை வாசித்து அதைப் பின்தொடரத் தொடங்கினால்தான் இது நடக்கும். "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்". மத்தேயு 4:4
நாம் பெரும்பாலும் உலகப்பிரகாரமான, பொருளாதார ஆசீர்வாதத்திற்காகவே ஏங்குகிறோம். ஆனால், தேவன் நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை முதலில் கொடுக்க விருப்பப்படுகிறார். நம் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார ஆசீர்வாதம் அதைத் தொடர்ந்து வரும். நாம் அவரிடமிருந்து நீதியானவற்றைப் பெற ஏங்கும்போதுதான் ஆவிக்குரிய ஆசீர்வாதம் கிடைக்கும். "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்". மத்தேயு 5:6
பூமியில் வாழும் வாழ்க்கை, நூற்றில் ஒருவர் போல, வெறுமனே மகிழ்ச்சியாக வாழ்ந்து இறப்பதற்கு அல்ல. தேவனின் அழைப்பில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவருடைய சித்தத்தைத் தேடும்போதும், அவருடைய நீதியைத் தேடும் போதும் நாம் கிறிஸ்துவுடன் நமது நித்திய வாழ்க்கையைத் தொடர வழி வகுக்கும் நீதியான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். "அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்". மத்தேயு 25:46
வேதத்தை எவ்வாறு படிக்க வேண்டும்?
தேவன் ஏன் நமக்கு அவருடைய வார்த்தையை தந்தார்? நாம் ஏன் வேதத்தைப் படிக்க வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக்கொண்டோம்.இப்போது வேதத்தை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
நாம் கணினி உலகில் வாழ்கிறோம். கைபேசி, கணினி எல்லாவற்றிலும் போகிற போக்கில் வேதத்தை வாசிக்க முடிகிறது. அனைத்தும் சரி தான். ஆனால் வேதம் நம்மை பயத்தோடும் நடுக்கத்தோடும் பயபக்தியோடும் வசனத்தைப் படிக்கும்படி அழைக்கிறது. "பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்". சங்கீதம் 2:11. நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கும் விஷயங்களில் ஒன்று அச்சிடப்பட்ட வேத புத்தகத்தை படிக்க வேண்டும் என்பது. நீங்கள் வேத புத்தகத்தை கையில் எடுக்கும்போது தானாகவே மரியாதையும் பயபக்தியும் உண்டாகும். எலக்ட்ரானிக் பதிப்பை படிக்கும் போது, உங்கள் வழியில் என்னென்ன கவனச்சிதறல்கள் வரும் என்று எனக்குத் தெரியவில்லை, இரண்டாவதாக, அதே டிஜிட்டல் ஊடகம் (கணினி / கைபேசி) வழியாக புனிதமற்ற பல விஷயங்களைப் படிக்கிறீர்கள் / பார்க்கிறீர்கள், அது தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் பயபக்தியை உருவாக்காது.
வசனத்தை தியானியுங்கள் - நீங்கள் வசனத்தைப் படித்துவிட்டு அதின்படி எதுவும் செய்யாவிட்டால், அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும் என்று யாக்கோபு 1:22 இல் பார்த்தோம். வசனத்தை தியானிப்பது போதகர்கள் அல்லது வேத வல்லுனர்களுக்கானது மட்டுமல்ல, இது நம் அனைவருக்கும் அவசியம். எனவே எப்படி தியானிப்பது என்பது எபேசியர் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது."நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்," எபேசியர் 1:17. நீங்கள் வசனத்தை மீண்டும் மீண்டும் படிக்கும்போது, தேவன் உங்களுக்கு ஞானத்தையும் வெளிப்பாட்டையும் கொடுக்க பரிசுத்த ஆவியானவரின் மூலம் பேசுவார். அவர் 2 தீமோத்தேயு 3:16-ல் சொல்லியபடி செய்வதற்கு வார்த்தையைப் பயன்படுத்துவார். "அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது". 2 தீமோத்தேயு 3:16.
எஸ்றாவைப் போல படியுங்கள்
வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், வார்த்தைக்குக் கீழ்ப்படியவும் அதை இன்னும் ஆழமாகப் படித்தார் என்று வசனம் கூறுகிறது."கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்". எஸ்றா 7:10
எஸ்றா அதிகாலை (பகல்) முதல் மதியம் வரை படித்தார். "தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்". நெகேமியா 8:3
தொடக்கத்தில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை படித்து தியானிக்கலாம். அதிலிருந்து அப்படியே காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் படிக்கும்படி வளருங்கள். இதனால், வார்த்தை நம்மில் வாழும்.
தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது நாம் பெறும் ஆசீர்வாதம்
தேவனுடைய வார்த்தையை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டோம். படிக்கும்போது நாம் செலவழிக்கும் நேரத்திற்கு ஈடாக என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நமக்கு இருக்கிறது.
தேவ ஆசீர்வாதம் - நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறோம், அது ஒரு நாளும் வற்றி போகாது. தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் போது அந்த ஆசீர்வாதத்தை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்". சங்கீதம் 1:2-3
கிருபையும் ஆசீர்வாதமும் - நாம் வேதத்தைப் படித்து, தியானித்து நீதியான வாழ்க்கை வாழ்ந்தாலும், தேவனின் பார்வையில் இன்னும் பாவிகளாகவே இருக்கிறோம். தேவனின் வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கிருபை நமக்கு வழங்கப்படுகிறது, அதன் பிறகு தேவ சமாதானம் நம்மை நிரப்புகிறது. "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது". 2 பேதுரு 1:2
நமக்குக் கொடுக்கப்பட்ட இரகசியங்களைப் பற்றிய அறிவு - மனித அறிவைக் கொண்டு தேவனின் வார்த்தையைப் புரிந்துகொள்வது சில சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும். அவை நம் வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும்படிக்கு, அதை புரிந்துகொள்வதற்காக, அவர் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் அறிவை நமக்காகத் திறக்கிறார். "அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை". மத்தேயு 13:11. முந்தைய தலைமுறைகளில் ராஜாக்களும், தீர்க்கதரிசிகளும் பெற விரும்பிய அவரது ரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். "அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". மத்தேயு 13:11,16-17
தேவனின் வார்த்தை நம்மை பரிசுத்தமாக்குகிறது - நாம் படிக்கும்போது, அது நம்மை பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்குவதற்கு அதன் செயலை செய்கிறது. "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது". எபிரேயர் 4:12
தேவனிடமிருந்து குழந்தைகளுக்குரிய உணவை உண்ணாமல் திட உணவை நேரடியாகப் பெறுவதன் மூலம், நாம் குழந்தைகளிலிருந்து பெரியவர்களாக வளர்கிறோம் (புதிதாகப் பிறந்த விசுவாசிகள் எல்லாவற்றிற்கும் போதகர்களை அணுகுவதற்கான ஒரு ஒப்புமை). "காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்". எபிரேயர் 5:12,14
நாம் சோதனைகள் மற்றும் பாடுகள் வழியே செல்கிறோம். நம்முடைய சுயபலத்தை விட இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் நாம் விசுவாசிப்பதால், நம்முடைய விசுவாசத்தை கற்பாறையைப் போல வைத்திருக்க வார்த்தை நம்மை பெலப்படுத்துகிறது. "பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது". மத்தேயு 7:25
உலகில் சாத்தானுக்கு எதிரான நமது ஆவிக்குரியப் போராட்டத்தில் சத்தியத்தின் பட்டயமாக செயல்படுகிறது. "இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்". எபேசியர் 6:17
நாம் போராடும் காரியங்களை உருகப்பண்ணுவதற்கும் உடைத்துப் போடுவதற்கும் தேவனுடைய வார்த்தைக்கு வல்லமை உள்ளது. ஏனெனில் சாத்தான் அவருடைய வார்த்தைக்கு அஞ்சுகிறான். "அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்". சங்கீதம் 147:15,18
கடைசி நாட்களும் அவரது மகிமையும்
நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம், நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் அவரிடம் திரும்பவும் அவருக்குக் கீழ்ப்படியவும் எச்சரிக்கிறது. நாம் அவரிடம் திரும்பும்போது, நாம் அவரைத் தான் பின்பற்றுகிறோம் என்று நம்மை வஞ்சிக்கும்படிக்கு அவரைப் போலவே நடந்து கொள்ளும் ஒருவன் இருக்கிறான். ஆனால், உண்மையில் சாத்தானைப் பின்தொடர்கிறோம். எனவே நாம் பிசாசினால் வஞ்சிக்கப்படாமல் இருக்க, எஸ்றாவைப் போல தேவனுடைய வார்த்தையை விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டியதற்கு இதுவும் ஒரு காரணம்.
கடைசி நாட்கள் எப்படி இருக்கும் என்பதையும், தன்னை தேவனாகப் பிரகடனம் செய்வதன் மூலம் அவன் எவ்வாறு உயர்த்தப்பட்டு வணங்கப்பட விரும்புவான் என்பதையும் இந்த வார்த்தை விவரிக்கிறது. "எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்". 2 தெசலோனிக்கேயர் 2: 3-4
அது உண்மையாகவே தேவனிடம் இருந்துதான் வந்தது என்பது போல அவன் தனது வஞ்சகத்தால் அதை உண்மையாக்குவான். நீங்கள் தேவனுடைய அறிவிலும் ஞானத்திலும் வேரூன்றாமல், வெறுமனே வார்த்தையைப் படிக்கின்ற ஒரு சாதாரண கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் ஏமாற்றப்பட்டு அழிந்து போவீர்கள். "அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,". 2தெசலோனிக்கேயர் 2:9-11
கடைசி நாட்களாக இருப்பதால் பரிசுத்தம் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் வார்த்தையைப் படித்து கீழ்ப்படிந்தால் மட்டுமே பரிசுத்தமாக இருக்க முடியும். "ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;". 1 பேதுரு 1:22
நாள் மிக அருகில் உள்ளது, ஏனெனில் அந்த நாள் எதிர்வினை செய்ய நேரமில்லாதபடி ஒரு நொடிப் பொழுதிற்கும் குறைவான நேரத்தில் வந்துவிடும். எனவே அவருடைய வருகைக்கு தயாராக இருப்பதற்கு இது ஒரு எச்சரிக்கை. "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்". 2 பேதுரு 3:10,12
அவர் வருகையில் இரட்சிக்கப்படும்படிக்கு பரிசுத்தமாகவும், அவருக்குப் பிரியமாகவும் வாழுங்கள். "இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!". 2 பேதுரு 3:11
அவர் வருவார் என்று சொல்லப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஆனால், இன்னும் வேளை வரவில்லை. நாம் இரட்சிப்புக்குத் திரும்புவதற்கு தேவன் பொறுமையாகக் காத்திருக்கிறார். "மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;". 2 பேதுரு 3:15
எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது". வெளிப்படுத்தின விசேஷம் 2:29.
Comments