top of page
Kirupakaran

தேவ வழியில் குழந்தை வளர்த்தல்


பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் பெற்றோர்கள் ஆழ்ந்த மரியாதைக்குரிய பங்கைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நமக்கு, நமது தேவன் பரலோகத் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மேலும் பெற்றோர்கள் வாழ்க்கையை உருவாக்குவதிலும் அதற்கான பொறுப்பைச் சுமப்பதிலும் தேவனின் பங்காளிகளாகக் கருதப்படுகிறார்கள்.


வேதத்தைப் படிக்கும்போது, குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்வதற்கு பலர் உள்ளனர். எனது தியானங்களில் ஒன்று சிம்சோனின் பெற்றோரைப் பற்றியது. சிம்சோனைப் பற்றி நியாயாதிபதிகள் 13 ஆம் அதிகாரம் முதல் 17 ஆம் அதிகாரம் வரை வாசிக்கிறோம். சிம்சோனையும் அவனுடைய வல்லமையையும், இஸ்ரவேலரை பெலிஸ்தியர்களிடமிருந்து விடுவிப்பதில் தேவன் அவனுடன் எப்படி அற்புதமான காரியங்களைச் செய்தார் என்பதையும் பலமுறை வாசிக்கிறோம்.


இந்த வலைப்பதிவைப் புரிந்துகொள்ள நியாயாதிபதிகள் 13 ஆம் அதிகாரத்தை முழுமையாகப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். முக்கியமான வசனங்களை இணைத்து புரிந்துகொள்ளும்படி கொடுப்பதற்கு முயற்சிக்கிறேன். சிம்சோன் பிறப்பதற்கு முந்தைய பின்னணி - இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய பார்வைக்கு பல தீமையான செயல்களைச் செய்தார்கள். அதனால் அவர் அவர்களை 40 வருடங்கள் பெலிஸ்தியர்களிடம் ஒப்படைத்தார். சிம்சோன் இஸ்ரவேலர்களை பெலிஸ்தியர்களிடமிருந்து மீட்பதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தை.


சிம்சோனின் தகப்பன் பெயர் மனோவா. அவர் இஸ்ரவேலர்களில் தாண் வம்சத்தைச் சேர்ந்தவர், அவருக்கும் அவரது மனைவிக்கும் பல ஆண்டுகளாக பிள்ளை இல்லாதிருந்தது.


நாம் கற்றுக் கொள்ள பல பாடங்கள் உள்ளன.


பாடம் 1 - தேவனை சார்ந்திருத்தல்

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.

நியாயாதிபதிகள் 13:1-3


  • அவர்களுடைய சக இஸ்ரவேலர்கள் தேவனின் பார்வையில் மிகவும் மோசமானவர்களாக இருந்தபோதிலும் மனோவாவும் அவருடைய மனைவியும் ஆவிக்குரியவர்களாகவும் தேவனை சார்ந்தும் இருந்தார்கள்.

  • 3 ஆம் வசனம் - மனோவாவின் மனைவியின் ஜெபத்தை தேவன் கேட்டு, அவர் ஒரு தூதனை அனுப்பினார். அவர்கள் பல வருடங்கள் அல்லது பல நாட்களாக தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். "இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ" என்று தூதன் கூறுவது, அவள் சில காலமாக இந்த நிலையில் இருந்ததைக் குறிக்கிறது.

  • தேவனைச் சார்ந்திருந்ததன் காரணமாக அவர்கள் ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றார்கள். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் இருந்த போதிலும், தேவனின் தயவால் இது நடந்தேறியது. “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்”.

பாடம் 2 - தேவனின் வாக்குத்தத்தம் மற்றும் கட்டளை

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான் என்றார். நியாயாதிபதிகள் 13:3-5


  • கருவில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை என்றாலும் அவள் கர்ப்பமாகி ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள் என்று தேவன் வாக்குப் பண்ணியதாக முன்பே பார்த்தோம்.

  • கட்டளையில் இரண்டு பகுதிகள் இருந்தன

    • பகுதி 1 - ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

    • பகுதி 2 - நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்.

  • பிள்ளை நசரேயனாக இருக்க வேண்டும் என்பதற்காக, திராட்சரசமும் மதுபானமும் குடிக்கக் கூடாது என்று தேவன் அறிவுறுத்தினார். நசரேய விரதத்தைக் குறித்து தேவன் மோசேயிடம் பேசியதை எண்ணாகமத்தில் வாசிக்கலாம்.

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால், அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்சவற்றல்களையாவது புசியாமலும், தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன். அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன். அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. எண்ணாகமம் 6:1-5,7

  • நசரேயன் என்பவர் நசரேய விரதம் என்னும் ஒரு விசேஷ பொருத்தனை செய்த ஒரு நபர். இந்த விரதத்தின் நோக்கம் தேவனுக்கு அர்ப்பணிப்பையும் சுத்தமாய் இருப்பதையும் காட்டுவதாகும். இந்த விரதம் எண்ணாகமம் 6:1-5 இன் படி செய்யப்படுகிறது. நசரேய விரதம் எடுத்ததாக வேதாகமத்தில் கூறப்படுபவர்களில் சிம்சோன், சாமுவேல் மற்றும் யோவான்ஸ்நானகன் ஆகியோர் குறிப்பிடத்தக்க நபர்கள்.

  • பிறக்கப்போகும் பிள்ளை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்ற தூதனின் அறிவுறுத்தலுக்கு ஒரு பெற்றோராக அவர்கள் கீழ்ப்படிந்தனர். இது, தேவனுக்காகப் பிறக்கப் போகும் பிள்ளைக்கு, கருவிலேயே கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம்.

பாடம் 3 - ஆலோசிக்கும் பெற்றோர்

அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள். நியாயாதிபதிகள் 13:6-7

  • சிறிய விவரங்களைக் கவனித்துப் பாருங்கள் - தேவன் மனோவாவின் மனைவியுடன் பேசினார். அவள் தன்னிச்சையாக நடந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக அவள் தூதரிடம் கேட்டதை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டாள். இது அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாக இரண்டு பேராக இருந்தாலும், அவர்களுக்கு இடையே ஒளிவு மறைவு இல்லாமல் ஆவியில் ஒன்றாக இருந்ததைக் காட்டுகிறது. அந்தக் குடும்பத்தில் ஒற்றுமை நிலவியது.

  • அவர்கள் தேவனைச் சார்ந்து இருந்ததால் குடும்பத்தில் ஒற்றுமை இருந்தது.

பாடம் 4 - ஜெபம்

அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். நியாயாதிபதிகள் 13:8


  • மனோவா தன் மனைவியிடமிருந்து இதைக் கேட்டபின் தேவனிடம் விண்ணப்பம் செய்தார். அவருடைய ஜெபத்திலிருந்து ஆவிக்குரிய ரீதியில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

ஜெபத்தைக் குறித்த கற்றல்

  • தாழ்மையான ஜெபம் - அவர் தனது ஜெபத்தைத் தாழ்மையாகத் தொடங்குகிறார். இந்த வகையான ஜெபம் நம் வாழ்வில் இருக்க வேண்டும்.

  • கெஞ்சும் ஜெபம் - "நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்". அவரது ஜெபம் ஒரு ஏழை கெஞ்சுவதைப் போல இருக்கிறது. பின்னர் அவர் அந்த நபரை அனுப்பும்படி தேவனிடம் கேட்கிறார் ("தூதன்").

  • தேவனைச் சார்ந்திருத்தல் - "பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்". பிள்ளையை எப்படி வளர்ப்பது என்று கற்பிப்பதற்கு அவருக்கு உதவ தூதன் மீண்டும் தோன்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். இது நமக்குப் பெரிய பாடம், பெற்றோராகிய நாம் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று தேவனிடம் கேட்பதில்லை, இங்கு பிள்ளை பிறக்கும் முன்பே எப்படி வளர்க்க வேண்டும் என்று தேவனிடம் கேட்கிறார். தேவனுக்கு முன்பாக அவர் எவ்வளவு விசுவாசமான சாட்சியை வெளிப்படுத்தினார்.

  • ஜெபம் கேட்கப்பட்டது. "தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை". நியாயாதிபதிகள் 13:9

  • ஒரு தாழ்மையான / மன்றாடும் / உண்மையான / தேவனைச் சார்ந்த ஜெபத்திற்கு தேவன் பதில் அளித்தார். "தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்”.

  • தேவன் தூதனை அவரிடத்தில் அனுப்பவில்லை, அதற்கு பதிலாக மீண்டும் அவருடைய மனைவியிடம் அனுப்பினார்.

  • குடும்பத்தின் ஒற்றுமை - "ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள்". நியாயாதிபதிகள் 13:10. தேவன் தோன்றியதைக் கூறுவதற்கு கணவரிடம் மீண்டும் ஓடுகிறாள். அவர்களிடம் மறைவான விஷயங்கள் எதுவும் இல்லை.

பாடம் 5 - சோதித்துப் பார்த்தல்

அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார். நியாயாதிபதிகள் 13:11


  • மனைவி சொன்னவுடனேயே, அவர் அதே நபரா என்று சோதித்துப் பார்ப்பதற்கு அந்த தேவதூதரிடம் (பத்தியில் சொல்லப்பட்ட மனிதனைக் குறிப்பிடுகிறார்) பேச விரைந்தார்.

  • தேவன் "நான் தான்" என்று பதிலளித்தார் - இதை மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கிறேன். நம்மிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும்போது, ​​மனிதர்களாகிய நாம் நம் பின்னணியைப் பற்றி கூறுவதற்கு நிறைய காரியங்கள் சேர்த்து, பின் எல்லாவற்றையும் சொல்லுவோம். ஆனால் தேவனின் பதில் "நான் தான்" என்பதாக மட்டுமே இருந்தது.

  • நமக்கான மற்றொரு பாடம் என்னவென்றால், நாமும் அவரிடம் பல கேள்விகளைக் கேட்கிறோம். அவர் நமக்கு "நான் தான்" என்ற குறுகிய வடிவத்தில் பதிலளிக்கிறார். அவரைக் கேட்க நம் காதுகள் திறந்திருக்க வேண்டும். அது குறுகியதாக இருப்பதால் பல சமயங்களில் நம்மால் அவரைப் புரிந்து கொள்ளவோ கேட்கவோ முடிவதில்லை.

அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான். நியாயாதிபதிகள் 13:12

  • முந்தைய ஜெபம் "பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக" (நியாயாதிபதிகள் 13:8)என்பதாக இருந்தது.

  • இங்கே அவர் ஒரு படி மேலே சென்று, “அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும்” என்று கேட்கிறார். தேவதூதன் அவர் மனைவிக்கு சொன்ன அதே பதிலை அளித்தார். மனோவா தேவனுக்குப் பலி செலுத்தும்படி, தன் மனைவியிடமும் தூதனிடமும் கேட்ட செய்தியை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

  • அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான். நியாயாதிபதிகள் 13:15-16

  • கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான். மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். நியாயாதிபதிகள் 13:19-20

  • தேவன் அவர்களுடைய பலியை அங்கீகரித்தார். “அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்;”.

  • அவர்கள் தேவனைக் கனம் பண்ணி, தரையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டனர், “அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்”.

பாடம் 6 - சிம்சோன் பெற்ற ஆசீர்வாதங்கள்

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார். நியாயாதிபதிகள் 13:24,25


  • நசரேய விரதத்தைப் பின்பற்றியதால், தேவன் மனோவாவின் மனைவிக்கு குழந்தை பிறக்கும்படி கிருபை செய்தார்.

  • தேவன் கொடுத்த ஆசீர்வாதம் – “அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்”.

  • தேவ ஆவி அவரை வழிநடத்தியது – “கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்”. ஒருவர் பெற்றுக் கொள்ளக் கூடிய மிகச் சிறந்த பரிசு இது தான். என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் அவருக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, என்ன செய்ய வேண்டும் என்று தேவன் அவரை வழிநடத்துகிறார். நீங்கள் நியாயாதிபதிகள் 14 ஆம் அதிகாரத்தைப் படித்தால், சிம்சோன் திருமணம் செய்து கொள்ள ஒரு பெலிஸ்திய பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தேவன் அவரை வழிநடத்தியதைக் காணலாம்.

  • அதே ஆவியினால், அவர் தனது வெறும் கைகளால் சிங்கத்தை கிழித்துப் போட்டார். "அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை". நியாயாதிபதிகள் 14:6

  • அதே ஆவியினால் அவர் 30 பேரைக் கொன்று போட்டார் - "கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்". நியாயாதிபதிகள் 14:19

  • அதே ஆவியினால் அவர் 300 நரிகளைப் பிடித்து வாலோடே வால் சேர்த்து தூண்களில் கட்டினார். "புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக்கட்டி,". நியாயாதிபதிகள் 15:4

  • அதே ஆவியினால் கழுதையின் தாடை எலும்பால் ஆயிரம் பேரைக் கொன்று போட்டார் - "அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்". நியாயாதிபதிகள் 15:14-15

  • தேவன் செய்த இன்னும் பல காரியங்கள் உள்ளன - சிம்சோன் பெலிஸ்தியர்களை எப்படி மேற்கொண்டார் என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள நியாயாதிபதிகள் 15,16 அதிகாரங்களை வாசிக்கவும்.


நமக்கான ஆவிக்குரிய பாடங்கள்

  • தேவனைச் சார்ந்திருத்தல் - ஒரு பெற்றோராக அல்லது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோராக நீங்கள் தேவனை எவ்வளவு சார்ந்திருக்கிறீர்கள்? உங்களை நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டு, நீங்கள் அவரைச் சார்ந்திருக்க அவரின் உதவியை நாடுங்கள். நம்மிடம் செல்வம் / திறமை / உலகில் உள்ள அனைத்தும் இருப்பதாக நாம் கூறலாம். ஆனால், தேவனின் உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

  • தேவனின் ஐக்கியம் - கணவன் மனைவியாக, இருவரும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறீர்களா? ஏதாவது ஒளிவு மறைவு இருக்கிறதா? தேவனோடு ஐக்கியம் இருக்கிறதா? உங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவ ஐக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவரிடம் கேளுங்கள். நீங்கள் இருவர் ஆனால் தேவ ஆவியின் ஒருமையில் ஒன்றுபட்டிருக்கிறீர்கள்.

  • தேவ ஆலோசனையைத் தேடுதல் - மனோவாவைப் போல, உங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்து தேவனின் ஆலோசனையை நாடுகிறீர்களா?

  • உங்கள் ஜெபம் எப்படி இருக்கிறது? - உங்கள் ஜெபம் மனோவா ஜெபித்ததைப் போல தாழ்மையோடும் கெஞ்சுதலோடும் இருக்கிறதா? அல்லது உங்கள் ஜெபம் எப்போதும் சலவை பட்டியல் போன்று உங்களுக்கு என்ன வேண்டும் என்று மட்டுமே இருக்கிறதா?

  • அவரைக் கேட்க உங்கள் காதுகள் கவனமாக இருக்கின்றனவா ? - தேவன் உங்களிடம் வெளிப்படுத்தும் போது, அவருடைய வார்த்தைகளை நீங்கள் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருக்கிறீர்களா? அவர் "நான் தான்" என்று கூறுகிறார். உங்கள் காதுகள் அவரைக் கேட்பதற்கு தயாராக இல்லை என்றால், அவருடைய பதில்களைக் கேட்பது கடினம், ஏனெனில் நாம் நமது உலக முன்னுரிமைகளில் பரபரப்பாக இருக்கிறோம்.

  • உங்கள் பிள்ளைகளை வழிநடத்த தேவ ஆவிக்காக ஜெபியுங்கள் - நாம் வாழும் உலகம் மிகவும் பாவமானது. நிறைய அர்த்தமற்ற காரியங்கள் இங்கே நடக்கின்றன. நாம் குழந்தையைப் பார்த்துக் கொள்வதன் மூலமோ அதிகக் கண்காணிப்பின் மூலமோ அவர்களைப் பாதுகாக்க முடியாது. தேவ ஆவியால் மட்டுமே அவர்களைப் பாதுகாக்க முடியும். மேலும், தேவன் சிம்சோனை வழிநடத்தியதைப் போல தேவ ஆவி அவர்களை வழிநடத்திப் பாதுகாக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்.

  • தேவனுக்குக் கீழ்ப்படிதல் - பெற்றோர்களாகிய நாம் நசரேய விரதத்தைப் பின்பற்றி வாழ்ந்த மனோவாவின் குடும்பத்தைப் போன்று வாழ்க்கையை நடத்துகிறோமா? நாம் தேவனிடம் பொருத்தனைகள் பண்ணி உள்ளோம். அவற்றை எவ்வாறு கடைப்பிடிக்கிறோம் என்பதை உங்கள் இருதயத்திலிருந்து பார்க்கவும். பெற்றோர்களாக நாம் செய்வது, நம் குழந்தைகளுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்.






Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page