நான் அப்போஸ்தலர் 9:31 ஐ தியானித்துக் கொண்டிருந்த பொழுது, ‘கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின’’ என்று படித்தேன்.
உண்மையான பகுதி :
‘அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின’. அப்போஸ்தலர் 9:31
இது என்னை நானே கேள்வி கேட்டு தியானிக்கத் தூண்டியது,
ஒருவர் ஆண்டவருக்குப் பயந்து எப்படி வாழ முடியும்?, மேலும் அவர்கள் எவ்வாறு அதிகமாக ஆசீர்வதிக்கப்பட முடியும்?
கர்த்தருடைய வார்த்தை சொல்வது போல், சபைகள் எண்ணிக்கையில் அதிகரித்தது ஆசீர்வாதத்தின் நேரடி விளைவாகும்.
அப் 9:31 ல் இருந்து புரிந்துகொள்ள மூன்று விஷயங்கள் உள்ளன.
1. கர்த்தருக்குப் பயப்படுதல்
2. பரிசுத்த ஆவியின் ஆறுதல்
3. பெருகிய எண்ணிக்கை
கர்த்தருக்குப் பயப்படுதல்
பயம் என்றால் என்ன? வெப்ஸ்டர் அகராதியின்படி பயம் என்பது "ஆபத்தைக் குறித்த விழிப்புணர்வு அல்லது எதிர்பார்ப்பு காரணமாக வருகிற வலுவான விரும்பத்தகாத உணர்ச்சி”.
ஆவிக்குரிய உலகில் இரண்டு வகையான பயங்கள் உள்ளன.
சாத்தானிடம் இருந்து வரும் பயம்
இது நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் இல்லாமல் இருக்கும் போது வருகிறது. தேவனோடு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அல்லது பகுதி தொடர்பு கொண்டு (பாதி உலகத்தோடும், பாதி தேவனோடும்) வாழும் போது இந்த பயம் வருகிறது.
வாழ்க்கையின் அன்றாட சூழ்நிலைகளை நாம் சந்திக்கும் போது
சாத்தானிடமிருந்து வரும் பயம் சூழ்நிலையைப் பற்றி அதிக கவலையை உருவாக்குகிறது
பயம் நம்மை பதட்டமடையச் செய்து, ஆண்டவருடைய துணை இல்லாமல் காரியங்களை நாமாகவே செய்யும்படி செய்கிறது.
நாம் ஒரு பாவத்தைச் செய்யும்போது (தெரிந்தோ ,தெரியாமலோ), பயம் அந்த பாவத்தைக் குறித்து நம்மைக் கண்டிக்கிறது. பாவத்திற்கு தீர்வு இல்லாதது போல் நம்மைக் கண்டித்து, சில வேளைகளில் தற்கொலை வரை இட்டுச் செல்கிறது.
பயம் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கி நம் தன்னம்பிக்கையைப் போக்குகிறது. நமக்கு எதிர்மறை ஆற்றலைக் கொடுத்து, நம் நிலைமையை மிகவும் மோசமாக்கும்படிக்கு நாம் செய்யும் வேலையை செய்யாதபடி தடுக்கிறது.
கர்த்தருக்குப் பயப்படுதல்
நாம் இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரோடு தினமும் நடக்கும் போது தான் கர்த்தருக்குப் பயப்படும் பயம் உண்டாகும்.
நாம் ஆவிக்குரியவர்களாக இருக்கும்போது தேவ பயம் வருகிறது. லூக்கா விளக்குவது போல், நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்ற பயம் இருப்பதால் அது நமக்கு வருகிறது.
‘நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.’ லூக்கா 12:5
தேவ பயம் அவரைக் குறித்து நம்மை பயப்படச் செய்யாது. அது நம்மிடம் இருந்து பயபக்தி மற்றும் மரியாதையோடு அவரிடம் வரும் பயம். அது அவர் நம் பிதா மற்றும் நாம் அவருடைய பிள்ளைகள் என்ற ஆறுதலையும் கொடுக்கிறது.
தேவ பயம் நாம் செய்யும் செயல்களில் கவனமாக இருக்க செய்து உலகத்தின் பாவங்களிலிருந்து பாதுகாக்கிறது.
பல சமயங்களில் பாவம் என்று தெரியாமலேயே நாம் ஒரு பாவத்தைச் செய்து விடுகிறோம். அநேக நேரங்களில் அது வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை. நாம் செய்தது தவறு என்று தெரிந்த கணமே, மனம் வருந்தி பாவ மன்னிப்பு கேட்பது உடனடியாக வரும். இது தேவ பயத்தினால் மட்டுமே வரும். கர்த்தருக்குள் பயம் இருந்தால் தான் மனந்திரும்புதல் வரும்.
கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மை அவரைச் சார்ந்து இருக்கச் செய்கிறது. நாம் அவருடைய பிரசன்னத்தை விட்டு விலகிச் சென்றால், நாம் தனித்து நடக்கிற பயம் ஏற்படுகிறது.
தேவ பயம் நமக்கு இருந்தால் , வாழ்க்கையில் கவலையான நேரங்களுக்கு வழிவகுக்கும் அன்றாட சோதனைகள் / பாடுகளின் போது, சூழ்நிலை தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அந்த பதட்டமான சூழ்நிலையிலும் அமைதி உண்டாகும். நீங்கள் சூழ்நிலைக்கு பயப்பட மாட்டீர்கள். நம்மில் உள்ள ஆவியானவர் இவ்வாறு கூறுகிறார், ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?‘.
‘இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?‘ ரோமர் 8:31
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைத் தந்து அவருடைய பார்வையில் சரியான விஷயங்களை நாம் செயல்படுத்த உதவுகிறது.
‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு’. நீதிமொழிகள் 9:10
தேவ பயம் நம் அன்றாட வாழ்வில் நீதியான செயல்களை உருவாக்குகிறது. பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் நமது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனுக்கு சரியானதைச் செய்கிறோம். பல நேரங்களில் உலகத்தின் பார்வையில் இந்த செயல்கள் சரியானதாக இருக்காது.‘நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம் பண்ணுகிறான்.கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்’. நீதிமொழிகள் 14:2,26-27
பரிசுத்த ஆவியின் ஆறுதல்
ஆரம்பகால தேவாலய உறுப்பினர்கள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டனர் / ஊக்குவிக்கப்பட்டனர். கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின’. அப்போஸ்தலர் 9:31
இயேசுவிடம் காணப்பட்ட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் நம்மை வேறுபடுத்திப் பார்க்காமல் அதே பரிசுத்த ஆவியை நமக்குத் தருகிறார். அவர் பணக்காரர், ஏழை, வெள்ளையர், கறுப்பர், ஆசியர் அல்லது வேறு எந்த இனத்தவர் என்று எந்த பாகுபாடும் காட்டுவதில்லை, அவர் இருதயத்தை மட்டுமே பார்க்கிறார், "கர்த்தர் பாரபட்சம் காட்டுவதில்லை". அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்போஸ்தலர் 10-34-35
நாம் செய்யும் எல்லாவற்றிலும் நம்மை வழிநடத்தும் ஒரு ஜிபிஎஸ் போல பரிசுத்த ஆவி இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நாம் என்ன வேலை செய்ய வேண்டும், திருமணம் / வேலை / படிப்பு / எதிர்காலத்திற்கான திட்டம் போன்றவற்றில் என்ன தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் வழிகாட்டுகிறார். அவருடைய சித்தத்தின்படியே நாம் வழிநடத்தப்படுவோம்.
பெருகிய எண்ணிக்கை
தேவ பயத்தினாலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினாலும் ஆரம்பகால சபைகள் எண்ணிக்கையில் அதிகரித்தன. ‘சபைகள்….பெருகின’. அப்போஸ்தலர் 9:31
இங்கே லூக்கா சபைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பற்றி பேசினார். இது தேவாலயத்திற்கு மட்டும் பொருந்தாது, நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தும். நம்முடைய தேவைகளை அவர் கவனித்துக்கொள்வார் என்று தேவன் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். “இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்”.
‘பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்’. லூக்கா12:22-23,29-30
நம்மிடம் தேவ பயம் இருக்கும் போது, நாம் தேவனுடைய விருப்பப்படி செயல்படத் தொடங்குகிறோம். அவர் நம்மை ஆசீர்வதித்து, நம் கைகளின் அனைத்து செயல்களின் மூலமாகவும் நம்மைச் செழிக்கச் செய்வார். ஏனெனில், தமது பிள்ளைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சங்கீதம் 115:13,15
ஆசீர்வாதம் என்பது நாம் செய்யும் செயல்களைப் பெருகச் செய்வது மட்டுமல்ல, அவர் நமக்கு ஆயுசு நாட்களைக் கூட்டித் தருகிறார். நீதிமொழிகள் இவ்வாறு கூறுகிறது,
‘கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போகும்’. நீதிமொழிகள் 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன? என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் 50/50 (பாதி உலகத்தோடும், பாதி தேவனோடும்) வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பீர்களானால் முழுமையாக தேவனிடம் திரும்பி, அவருக்கு பயந்து வாழ்க்கையை நடத்துங்கள். இதில் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு, நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
Σχόλια