தாவீது ஆடுகளை மேய்ப்பவராயிருந்தார். அவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே தேவனைத் தன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நேசித்து வந்தார். அவர் ஒரு இளம் மேய்ப்பனாக இருந்தபோது, பயமின்றி பெலிஸ்தியனாகிய கோலியாத்தை வீழ்த்தினார். பின்னர் சவுலிடமிருந்து ராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டார். தாவீது செய்த அனைத்து யுத்தங்களிலும் தேவன் அவருக்கு வெற்றியைக் கொடுத்தார். எல்லாப் யுத்தங்களிலும் வெற்றி பெறுவதற்கு அவர் இரக்கமற்றவராகவும், கடுமையானவராகவும் இருந்தார். தாவீது தேவனின் இருதயத்துக்கு ஏற்றவராக இருந்தார். அதைத்தான் வேதம் சொல்கிறது.
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார். அப்போஸ்தலர் 13:22
தாவீதின் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன, அவரது தோல்விகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தாவீது செய்த பாவங்கள் என்னென்ன?
பத்சேபாள் நிமித்தம் செய்த பாவம் - தாவீது செய்த பாவங்கள் என்ன என்று யாரிடமாவது கேட்டால், அவர் பத்சேபாளுடன் தகாத முறையில் இருந்தார் மற்றும் அவளது கணவனை யுத்தத்தில் கொன்றார் என்பது தான் பொதுவான பதிலாக இருக்கும். ஆம், அது உண்மைதான். தாவீது செய்த இந்த பாவம் உரியா, பிறந்த குழந்தை, அம்னோன் மற்றும் அப்சலோம் என்ற நான்கு பேர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது (நான்கு பேரும் இறந்தனர்). இதைப் பற்றி 2 சாமுவேல் 11-18 இல் படிக்கிறோம்.
இஸ்ரவேலைத் தொகையிட்ட பாவம் - தாவீது செய்த இன்னொரு பெரிய பாவம் இருந்தது. அவர், இஸ்ரவேல் ஜனத்தை இலக்கம் பாருங்கள் என்று கட்டளையிட்டார். அதன் காரணமாக 70,000 பேர் இறந்தனர்.
இஸ்ரவேல் ஜனத்தைத் தொகையிட்ட பாவம்
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள். ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார். தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். 1 நாளாகமம் 21:1-2,5-8
தாவீதை இந்தப் பாவத்தைச் செய்ய வைத்ததில் சாத்தான் முக்கிய பங்கு வகித்தான். சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். 1 நாளாகமம் 21:1-2
தாவீது தேவனுக்கு மிக நெருக்கமாக இருந்தார், தேவனை மிகவும் நேசித்தார். ஒவ்வொரு முறை யுத்தத்திற்குப் போகும் போதும் தேவனையே சார்ந்திருந்தார். ஆனால் இந்த பாவத்தைச் செய்ய சாத்தான் தாவீதைக் கைப்பற்றியதாகப் படிக்கிறோம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன. தேவனின் மனிதராகிய தாவீதை சாத்தானால் வீழ்த்த முடிந்தால், சாதாரண மனிதர்களான நம்மை வீழ்த்துவதற்கு நாம் ஒன்றுமே இல்லை.
தாவீது செய்த இந்த பாவத்தின் விலை, அவர்கள் மீது தேவனின் கோபத்தை வரவழைத்தது. இது தேவனின் பார்வையில் தீமையாக இருந்ததால், 70,000 பேர் மடிந்து போனார்கள். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார். 1 நாளாகமம் 21:7
ஜனங்களைத் தொகையிட்டதை தேவன் ஏன் தீமையாகக் கருதி, இவ்வளவு கடுமையாக தண்டித்தார்?
தாவீது ஜனங்களைத் தொகையிட்டதில் என்ன தவறு? ஜனங்களைத் தொகையிடுவது குறித்து தேவன் மோசேக்குக் கட்டளை கொடுத்திருந்தார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன். எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார். யாத்திராகமம் 30:11-13,16
ஜனத்தை தொகையிட்டதினால் செய்த பாவத்திற்காக கொடுக்கப்பட்ட இந்த பாவநிவிர்த்தி பணத்தை தேவன் பயன்படுத்த விரும்பினார் - “அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்”.
தாவீது செய்தது - சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். 1 நாளாகமம் 21:1-2
இஸ்ரவேலரிடமிருந்து மீட்கும் பொருளை வாங்கத் தவறிவிட்டார்.
மோசேக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை தெளிவாக உள்ளது - நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன். யாத்திராகமம் 30:12
யோவாப் இதைப் பற்றி தாவீதை எச்சரித்த போதிலும், அவர் அதை அலட்சியப்படுத்தினார் - அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான். யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து, 1 நாளாகமம் 21: 3-4
தாவீதைப் பற்றி நாம் வேதத்தில் படிக்கும்போது, மோசேயின் அனைத்து கட்டளைகளையும் அவர் அறிந்திருந்து, அவற்றை தனது இருதயத்திற்கு நெருக்கமாக வைத்திருந்தார் என்று அறிகிறோம். இருந்தும், 70,000 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த இந்த பாவத்தை அவர் எவ்வாறு செய்தார்? அதற்கான பதில் 1 நாளாகமம் 21:1 இல் உள்ளது.
பெருமை தாவீதுக்கு எதிரான ஆயுதமாக இருந்தது
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது என்று 1 நாளாகமம் 21:1 இல் வாசிக்கிறோம்.
இங்கே தாவீதின் விஷயத்தில் அவருடைய மனம் வஞ்சிக்கப்படவில்லை, அவர் விழிப்போடு தான் இருந்தார். ஆனால் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார். தேவனின் ராஜ்யத்தை முன்னேற்றுவதற்காக தேவனின் உதவியுடன் பல யுத்தங்களில் வெற்றி பெற்றிருந்தார்.
சாத்தான் தேவனின் சித்தத்தை உடைக்க விரும்பினான், அதனால் தாவீதை தேவனுக்கு எதிராக கலகம் செய்ய வைத்தான்.
நம்மை பாவத்தில் விழ வைக்க சாத்தான் இரண்டு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறான்
மாம்சத்தின் பாவங்கள் - இவை கலாத்தியர் 5:19-21 இல் பட்டியலிடப்பட்டுள்ளன. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:19-21
தாவீது பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தபோது மாம்சத்தில் பாவம் செய்தார், அது தாவீதின் பிள்ளைகளையும் அவரது குடும்பத்தையும் மட்டுமே பாதித்தது.
லூக்கா 15 இல் சொல்லப்பட்டுள்ள ஊதாரி மகன், மாம்சத்தில் பாவம் செய்ததால் குற்றவாளி ஆக்கப்பட்டான். மூத்த சகோதரன் ஆவியில் பாவம் செய்ததால் குற்றவாளி ஆக்கப்பட்டான் (பெருமை, குற்றம் கண்டுபிடித்தல், வளைந்துகொடுக்காதது).
ஆவியின் பாவங்கள் : நீதிமொழிகள் 6:16-19 - ஆவியின் பாவங்கள் பெருமை, பிடிவாதம், வதந்தி, பொறாமை, போட்டி, வெறித்தனம், பாசாங்குத்தனம், முடிவுகளைப் பற்றி தற்பெருமை போன்றவை.
பெருமை என்பது நம்மை வீழ்த்த சாத்தான் பயன்படுத்தும் ஒரு பெரிய ஆயுதம். பெருமை மனிதனை மகிமைப்படுத்தி, தேவனுக்கு உரிய மகிமையை பறிக்கிறது.
பெருமை எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான செயல்முறை ரோமர் 1:21-23 இல் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். ரோமர் 1:21-23
தேவனிடமிருந்து தான் வருகிறது என்று அவர்கள் அறிந்திருந்தும் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பதில்லை. மகிமையை மனிதர்களுக்கு கொடுக்கும்படி தங்கள் சிந்தனைகளினாலே வீணராகிறார்கள் (அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்).
அது நடக்கும் தருணத்தில், பெருமை நம் இருதயத்தில் வருகிறது. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். ரோமர் 1:24-25
முதல் படி - அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
இரண்டாவது படி - தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.
ஒருவருக்கு பெருமை வரும்போது, மற்றவர்களைக் கண்டிக்கும் மற்றும் அவர்களின் தவறுகளில் பொறுமையிழக்கும் போக்கு அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்கு யார் கற்பிக்க வேண்டும் என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தாவீதுக்கு இந்த பெருமை 10 மாதங்கள் (9 மாதங்கள் / 20 நாட்கள்) நீடித்தது. 1 நாளாகமம் 21 இல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் காரியத்தை 2 சாமுவேல் 24 இல் படிக்கலாம். கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,..இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள். இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். 2 சாமுவேல் 24:1,4,8,10
தாவீது தனது பெருமையை எப்படிப் பெற்றார்? அது சாத்தானிடமிருந்து வந்தது. சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. 1 நாளாகமம் 21:1
நமக்கான பாடங்கள்
சாத்தானின் வலிமையான ஆயுதங்களாகிய ஆவியின் பாவங்களுக்கு நாம் இணை இல்லை. நம்மை வீழ்த்த அவன் பயன்படுத்தும் வலிமையான ஆயுதம் பெருமை. சாத்தானுடன் போராடுவதற்கு நம் மாம்சம் சமமானது இல்லை.
ஒரு போதகர், கிறிஸ்தவ ஊழியர், ஞாயிறு பள்ளி ஆசிரியர், ஆழ்ந்த விசுவாசி யார் வேண்டுமானாலும் இந்தப் பெருமையைப் பெறலாம். இரட்சிக்கப்பட்டவர்கள் தான் அவனுடைய முக்கியமான இலக்குகள்.
இந்தப் பாவத்திற்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டும். தேவனின் பார்வையில் நாம் நீதியுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால்,நாம் பெருமை மற்றும் ஆவியின் பாவங்களில் நுழைந்து விட்டால் தோற்றுப் போய் மரித்துவிடுவோம். நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான். துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான். எசேக்கியேல் 18:26-27
மத்தேயு 7 இல் இயேசு விவரித்ததைப் போன்ற ஒரு பாதைக்கு இந்தப் பாவங்கள் நம்மை அழைத்துச் சென்று, கடைசி நாட்களில் நாம் கர்த்தருக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்காக நிற்கும் போது, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று தேவன் கூறும்படி வந்து முடியும். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:22-23
சாத்தானின் பெருமையை எதிர்த்துப் போராடும் ஒரே வல்லமையானவர் தேவனின் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே.
பெருமை என்பது தேவனின் சித்தத்தை உடைத்து, நீங்கள் தனிமையாக இருப்பதை சுதந்தரமாக உணரச் செய்து, அவரை சார்ந்திருப்பதில் இருந்து விலகச் செய்து, தேவ சித்தத்தை நிறைவேற விடாமல் செய்கிறது.
நாம் தேவ பிரசன்னத்தில் இருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும், நாம் பாதுகாக்கப்படுவதையும் உணர்கிறோம். ஆனால் நமது சாதாரண அன்றாட வாழ்க்கையில் இருக்கும்போது (ஜெபம் செய்யாமல் இருப்பது போன்றவை..) சாத்தானுக்கு எதிராக பரிசுத்த ஆவியானவரின் அத்தகைய பாதுகாப்பு நமக்குத் தேவை. அது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் மூலம் மட்டுமே சாத்தியம். நாம் தேவனுக்கு ஒப்புக் கொடுக்கும் போது, அவர் நம்மைப் பாதுகாக்க நம்மில் செயல்படுகிறார். ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். பிலிப்பியர் 2:12-13
"உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்" என்பதற்கு உங்கள் சொந்த இரட்சிப்புக்காக வேலை செய்யுங்கள் என்று அர்த்தமல்ல.
"உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்" என்பது, தேவன் உங்களுக்காகத் திட்டமிட்டுள்ளதை, குணாதிசயத்திலும் நடத்தையிலும் நிறைவேற்ற உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை நிறைவுக்குக் கொண்டுவருவதாகும்.
ஒவ்வொரு நபருக்கும் தேவன் ஒரு திட்டத்தையும் நோக்கத்தையும் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். எபேசியர் 2:8-10
உங்களிடம் இருக்கும் எந்தப் பெருமையையும் அறிந்து கொள்ளுவதற்கு தேவனையும் அவருடைய பரிசுத்த ஆவியையும் நாடுங்கள். மதப்பற்றுள்ள பலருக்கு ஆவிக்குரிய பெருமை இருக்கலாம், அதை அவர்கள் அறியாமல் இருப்பார்கள். அதைக் கண்டறிந்து,அகற்றும்படி அவரிடம் கேளுங்கள். பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே இந்த பெருமையை நீக்கி நம்மில் மனத்தாழ்மையை ஏற்படுத்த முடியும்.
நீங்கள் தேவனோடு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நீதிமானாக நடந்தாலும் சரி, தேவனிடம் மன்றாடும் இருதயத்துடன் கேளுங்கள். தாவீது தனது சங்கீதத்தில் விவரித்ததைப் போலவே ஜெபியுங்கள், அப்பொழுது உங்களை வெள்ளி மற்றும் தங்கம் போல் சுத்திகரித்து, தேவ சித்தத்திற்கு எதிராக செயல்படும் பெருமை மற்றும் ஆவியின் பாவங்களை எரிக்க முடியும். அப்பொழுது நீங்கள் வெள்ளி மற்றும் தங்கம் போல் சுத்திகரிக்கப்பட்டு, தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருப்பீர்கள். தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். சங்கீதம் 66:3,10
Comments