top of page
Kirupakaran

தாவீதின் நன்றியேறெடுப்பு


கடந்த வியாழன் (24th Nov 2022) அன்று அமெரிக்காவில் வாழும் மக்கள் நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடினர். அதே நாளில் கருப்பு வெள்ளி (Black Friday) விற்பனை பற்றிய செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்தேன். நன்றி செலுத்தும் உண்மையான நோக்கத்தில் இருந்து வியாபார ரீதியான நன்றி செலுத்தும் உணர்வுக்கு நாம் எவ்வளவு விலகிச் சென்றிருக்கிறோம் என்பது என்னை மிகவும் பாதித்தது.


நன்றி செலுத்துதல் என்றால் என்ன? / அது ஏன் கொண்டாடப்படுகிறது?

  • நன்றி செலுத்துதல் என்பது அமெரிக்கா மற்றும் கனடா வாழ் மக்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று கொண்டாடும் ஒரு அமெரிக்க விடுமுறையாகும்.

  • நன்றி செலுத்துதல் என்பது, 1621 இல், வந்து குடியேறிய யாத்ரீகர்கள் தங்கள் அறுவடை உணவை வாம்பனோக் (Wampanoag)இந்தியர்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுகூரும் ஒரு வழியாக அறியப்படுகிறது, (இந்த இந்தியர்கள், காலனித்துவவாதிகள் 1620 இல் வந்து சேர்ந்த முதல் ஆண்டில் அவர்கள் உயிர் வாழ்வதற்கு முக்கிய பங்கு வகித்தவர்கள்).

  • காங்கிரஸ் (US பாராளுமன்ற அவை), ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனிடம் தேசிய நன்றிசெலுத்தும் தினத்தை அனுசரிக்க வேண்டிக் கேட்டது. எனவே, வியாழன், நவம்பர் 26, 1789, "மக்கள் நன்றிசெலுத்தும் நாள்" என்று அறிவிக்கப்பட்டது.

  • ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் 1789 ஆம் வருடம் தனது நன்றி அறிவிப்பில் அதன் நோக்கத்தைக் கூறினார்:

    • "சர்வவல்லமையுள்ள தேவனின் பாதுகாப்பை அங்கீகரிப்பதும், அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதும், அவருடைய நன்மைகளுக்கு நன்றி செலுத்துவதும், தாழ்மையுடன் அவருடைய பாதுகாப்பையும் ஆதரவையும் கோருவதும் அனைத்து நாடுகளின் கடமையாகும்" என்பது தான் அது.

    • காங்கிரஸின் இரு அவைகளும் தங்கள் கூட்டுக் குழுவின் மூலம் "நன்றியுள்ள இருதயங்களுடன் சர்வவல்லமையுள்ள ஆண்டவரின் பல அற்புதமான உதவிகளை ஒப்புக்கொள்வதன் மூலம் குறிப்பாக, அவர்களின் பாதுகாப்பிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஒரு அரசாங்க வடிவத்தை அமைப்பதற்கு அமைதியான முறையில் அவர்களுக்கு வாய்ப்பளித்ததற்காகவும் அமெரிக்க மக்களுக்கு ஒரு பொது நன்றி மற்றும் ஜெபதினத்தை பரிந்துரைக்கும்படி" கேட்டுக் கொண்டன.

  • ஜனாதிபதி ஜார்ஜ் அவர்களின் அறிக்கையின் நோக்கம் உண்மையிலேயே நமது ஆண்டவரின் அநேக ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துவதையும் ஜெபிப்பதையுமே குறிக்கிறது.

  • காலப்போக்கில், இந்த நன்றிசெலுத்துதல் மற்றும் ஜெபம் - நன்றி செலுத்துவதாக மட்டுமே (ஜெபம் இல்லாமல்) மாறி விட்டது. பின்னர் நன்றி தெரிவிப்பது உணவை மையப்படுத்தியதாக மாற்றப்பட்டது - "வான்கோழி" மற்றும் "கருப்பு வெள்ளி" என்று மாறி நன்றி தெரிவித்தலின் முக்கிய நோக்கம் மெதுவாக தொலைந்துவிட்டது.

நாம் எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கும் சிறந்த வழியை தாவீதின் வாழ்க்கையிலிருந்தும், சங்கீதம் 118 இல் அவர் எழுதியவற்றிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் - தாவீதின் நன்றி உரையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.


தேவனுக்கு எப்படி அழுத்தமாக நன்றி சொல்வது?


சங்கீதம் 118:1 - "கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது".

  • இந்த வசனத்தில் மூன்று பகுதிகள் உள்ளன - ஆண்டவருக்கு துதி, அவருடைய நன்மைகள் மற்றும் அவரது அன்பு. நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

  • சங்கீதம் 118:1 மற்றும் 29 ஆகியவை ஒரே வசனங்கள் தான். சங்கீதம் 118 இல், தாவீது ஒரு வசனத்தில் தொடங்கி அதே வசனத்தில் முடிக்கிறார். ஆண்டவருக்கு அவர் எப்படி நன்றி தெரிவித்தார் என்பதை இது தெளிவாகக் கூறுகிறது.

  • ஒருவரிடமிருந்து நீங்கள் பெற்றவை அனைத்தும் உண்மையானவை என்பதை உங்கள் உள் இருதயத்திலிருந்து உணர்ந்தால் மட்டுமே நன்றி தெரிவிக்கும் அழுத்தமான வழிகள் வரும். இங்கே தாவீது தனது எதிரிகளின் மீது பெற்ற வெற்றிகள் மற்றும் ஆண்டவருடனான அவரது அனுபவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

  • சங்கீதம் 118:2-4 – “அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக”.

  • தாவீது அதோடு நிற்கவில்லை. அவர் இஸ்ரவேல் ஜனங்களையும், ஆரோனின் குடும்பத்தாரின் ஆசாரியர்களையும், தேவனை கனம் பண்ணும் புறஜாதிகளையும் (கர்த்தருக்குப் பயப்படுபவர்கள்) அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அழுத்தமாகப் பாடும்படி அழைத்தார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • நம்முடைய ஒவ்வொரு துதியும் தாவீதினுடையதைப் போல மிகவும் அழுத்தமாக இருக்கிறதா?

  • ·ஆண்டவருக்கு அழுத்தமாக நன்றி சொல்வதற்கு நீங்கள் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட முதல் 10 ஆசீர்வாதங்களைப் பட்டியலிட சிறிது நேரம் ஒதுக்குங்கள்.


நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது தேவனை எப்படி துதிப்பது?

சங்கீதம் 118:5-13 – “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். தேனீக்களைப்போல என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்”


  • தாவீது கூறுகிறார் - "நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்" வசனம் 5, "எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்"வசனம் 10, "என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;" வசனம் 11, "தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;"வசனம் 12. இது தாவீதின் ஒரு துன்பநிலை அழைப்பு. அவரால் எதுவுமே செய்ய முடியாத, நம்பிக்கையற்ற, எல்லாவற்றையும் படைத்த ஆண்டவரிடம் மட்டுமே உதவியை எதிர்பார்க்கும் நிலை.

  • தாவீது தனது துயரமான சூழ்நிலையிலிருந்து மீட்டதற்காக தேவனுக்கு நன்றி கூறினார்.

    • "நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்" வசனம் 5 – “கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்” என்று துதிக்கிறார்.

    • "எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்" வசனம் 10 - “கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்” என்று துதிக்கிறார்.

    • “என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;” வசனம் 11 - “கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்” என்று துதிக்கிறார்.

    • “தேனீக்களைப்போல என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்” வசனம் 12 - “முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்” என்று துதிக்கிறார்.

  • கர்த்தர் என் பக்கம் இருக்கிறார் என்ற விசுவாசம்: தேவனுடைய வெளிப்படையான தயவின் மூலமும், அவரை அழைத்தவர்களுக்கு உதவுவதன் மூலமும் அவருடைய முடிவில்லாத இரக்கம் வெளிப்படுகிறது. தேவன் அவர் பக்கம் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வது.

  • கர்த்தர் என் பட்சம் இருக்கிறார்: ரோமர் புத்தகம் எழுதப்படுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சங்கீதக்காரன் ரோமர் 8:31 இன் கொள்கையை புரிந்துகொண்டார்: "தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?".சங்கீதக்காரன் தன்னை வெறுத்தவர்களுக்கும் பயப்பட வேண்டியிருக்கவில்லை.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • உங்கள் நம்பிக்கையற்ற, வாழ்க்கையில் தேவனைத் தாண்டி வெளியே நம்பிக்கை இல்லாத சூழ்நிலைகளை நினைவுகூருங்கள். துன்பத்தின் போது உங்களுக்கும் எனக்கும் அவர் செய்த உதவிக்கு நன்றி கூறுவோம்.

  • தேவன் உங்களை தாவீதைப் போல் பலப்படுத்தியதற்காகவும், அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்திற்காகவும் அவரைத் துதியுங்கள். உங்கள் எதிரிகள் கொட்டும் தேனீக்கள் போல உங்களைச் சூழ்ந்திருந்தபோது, அவர் உங்களை வெட்கப்படுத்தாமல் எப்படிக் காப்பாற்றினார் என்பதற்காக அவரைத் துதியுங்கள்.

  • மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பதே மேல்.

கர்த்தருடைய ஈவுகளுக்காக எப்படி நன்றி சொல்வது?

சங்கீதம் 118:18-21 - "கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்".

  • யாக்கோபு 1:17 கூறுகிறது - "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை".

  • "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி” , தாவீது இதை முன்னமே புரிந்து கொண்டார்.

தாவீது குறிப்பிடும் ஈவுகள்


1. கர்த்தருடைய தண்டனை – வசனம் 18 - "கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும்”

  • நமது சுயநல இயல்பு நம்மை அவருடைய திட்டங்களிலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது. ஆண்டவருடைய அன்பின் காரணமாக நாம் அவருடைய திட்டத்திற்குத் திரும்புவதற்காகத் தண்டிக்கப்படுகிறோம்.

  • தாவீது தனது வாழ்க்கையில் ஒழுக்கக்கேடானப் பாவங்களைச் செய்ததையும், கர்த்தர் அவரை எப்படித் திரும்பக் கொண்டுவந்தார் என்பதையும் அனுபவித்திருந்தார். பாவத்தின் மரணத்திற்கு அவர் தன்னை கொடுக்கவில்லை என்று ஆண்டவருக்கு நன்றி தெரிவித்தார் – “என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை”.

2. கர்த்தரின் நீதி - வசனம் 19 – “நீதியின் வாசல்களைத் திறவுங்கள்”.

  • தாவீது "நீதியின் வாசல்களை எனக்குத் திறந்தார்" என்று விவரிக்கும் போது - தாவீதின் அனைத்து நீதியான குணங்களும் தேவனிடம் இருந்து வந்தவை என்பது புரிகிறது.

  • நாம் பாவத்தின் சாபத்துடன் பிறந்திருக்கிறோம், நம்மில் எந்த நீதியும் இல்லை - தேவன் நீதியின் வாயிலைத் திறக்காவிட்டால், அந்த நீதியான குணங்களை நாம் கொண்டிருக்க முடியாது.

  • தேவனோடு நம்மை பரிசுத்தத்தின் பாதையில் நடக்க வைப்பதற்காகவே நீதி நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • தாவீது நீதியான செயல்களின் பாதையில் நடக்கும்போது எல்லா நீதிக்காகவும் தேவனைத் துதித்தார் – “நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்”.

3. கர்த்தருடைய இரட்சிப்பு - வசனம் 21 – “நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்".

  • தேவனின் நீதியான செயல்களால், அவர் தனக்கு இரட்சிப்பாக இருந்ததற்காக தேவனைத் துதித்தார். இயேசுவுக்கு வெளியே நமக்கு இரட்சிப்பு இல்லை.

  • ஏசாயா 51:6-ல் உள்ள, நம் இரட்சிப்பிற்கான தேவ வாக்குத்தத்தம் - "உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை".

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • நீங்கள் கடந்து வந்த அனைத்து தண்டனைகளுக்காகவும் ஆண்டவரைத் துதியுங்கள். இதுவே உங்களை மோசமான வழியில் செல்ல விடாமல் தடுத்தது. தேவனின் ஈவைப் பெறுவதற்காக உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது அன்பானவர்கள் தந்த அனைத்து தண்டனைகளுக்காகவும் ஆண்டவரைத் துதியுங்கள்.

  • அவருடைய பிள்ளை என்ற அந்தஸ்திலிருந்து நம்மை நீக்க வைக்கும் அனைத்து பாவங்களிலிருந்தும் உங்களை விலக்கிக் காத்துக் கொண்டதற்காக ஆண்டவரைத் துதியுங்கள்.

  • உங்களிடம் உள்ள அனைத்து நீதியான குணங்களுக்காகவும், மேலும் ஒவ்வொரு நாளும் அவர் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்காகவும் அவரைத் துதியுங்கள். ஏனெனில், அனைத்து நன்மையான, பரிபூரணமான ஈவுகளும் மேலே இருந்து மட்டுமே வருகின்றன (தேவன்).

  • அவர் உங்களுக்கு அளித்த இரட்சிப்பின் வாக்குறுதிக்காகவும், நாம் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி என்ற நிச்சயத்திற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

தேவனின் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது?

சங்கீதம் 118:22-26 - “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்”.


  • தாவீது கவிதை வார்த்தைகளை எழுதும் போது அவர் மீதான தன் அன்பை வெளிப்படுத்தினார் - “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்”.

  • “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” - சங்கீதக்காரனுக்கு, இந்த வார்த்தைகளுக்கு வழிவகுக்கும்படியான என்ன தனிப்பட்ட அனுபவம் இருந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அது முற்றிலும் ஒரு தீர்க்கதரிசன அறிக்கையாக இருக்கலாம், ஏனென்றால் அது நிச்சயமாக இயேசுவின் கிரியையால் நிறைவேறியது.

  • இது மத்தேயு 21:42, மாற்கு 12:10-11 மற்றும் லூக்கா 20:17 ஆகியவற்றில் இயேசுவால் மேற்கோள் காட்டப்பட்ட வலுவான மற்றும் முக்கியமான கூற்று. அப்போஸ்தலர் 4:11 இல் இயேசுவைப் பற்றி பேதுரு மேற்கோள் காட்டினார். பவுல் இந்த வசனத்தை எபேசியர் 2:20இல் குறிப்பிட்டார், மேலும் பேதுரு, 1 பேதுரு 2:7 இல் இதைக் குறிப்பிட்டார். பழைய ஏற்பாட்டில் உள்ள எந்த வசனமும் புதிய ஏற்பாட்டில் அதிகமாக மேற்கோள் காட்டப்படவில்லை.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் சிலுவை சுமந்து, பாவங்களின் மரணத்திலிருந்து நம்மை மீட்டுத் தந்த இயேசுவை நம் வாழ்வின் தலைக்கல்லாய் நமக்குத் தந்ததற்காக பிதாவிற்கு நன்றி செலுத்துவோம்.

  • நமக்கு ஆழமான பாவ நடத்தை இருக்கின்ற போதிலும், தேவன் ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபையையும் இரக்கத்தையும் நமக்குத் தொடர்ந்து தருகிறார். ஒவ்வொரு நாளும் நமக்குக் கொடுக்கப்படுகின்ற எல்லாக் கிருபைகளுக்காகவும் இரக்கங்களுக்காகவும் அவரைத் துதிப்போம். அவர் நம்மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி செலுத்துவோம்.

நாம் ஏறெடுக்கும் ஒவ்வொரு துதியும் தாவீதைப் போல இருக்கட்டும். நன்றி செலுத்துவது வருடத்தில் ஒரு நாள் மட்டுமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் வாழ்வில் அவர் செய்த நன்மைக்காக ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றி செலுத்துவோம்.

Комментарии

Оценка: 0 из 5 звезд.
Еще нет оценок

Добавить рейтинг
bottom of page