top of page
Kirupakaran

தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ளுதல்


புத்தாண்டிற்குள் நுழையும் போது, இந்தப் புதிய வருடத்திற்கு தேவன் என்ன திட்டமிட்டுள்ளார் என்பதை அறியும் ஆவல் எப்போதும் இருக்கும். வாக்குத்தத்தங்களை அறிய பலர் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவு ஆராதனையை நாடுவார்கள். சிலர் தாங்கள் பின்பற்றும் போதகர்களிடமிருந்து வாக்குத்தத்தங்களைத் தேடுகிறார்கள், சிலர் தேவனுடைய வாக்குத்தத்தத்தைத் தேடி அவருடைய பிரசன்னத்தில் செலவிடுகிறார்கள். எல்லாமே சரி தான். இதையெல்லாம் தாண்டி தேவன் தமது பிள்ளைகளுக்கு புதிய வாக்குத்தத்தங்களை தந்து ஆசீர்வதிக்க வாஞ்சையாக இருக்கிறார். நாம் நமது சபை மற்றும் போதகர்களிடமிருந்து வாக்குத்தத்தங்களைக் கேட்கிறோம், இது தேவனின் சித்தத்தில் இருந்து வேறுபட்டதா?

 

தேவ சித்தம் என்றால் என்ன?

 

  • நம் ஒவ்வொருவருக்குமான தேவனின் வாக்குத்தத்தம் தனித்துவமானது. இது சபைக்கு கொடுக்கப்பட்டதற்கு ஏற்ப இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.

  • அந்த வாக்குத்தத்தத்தைப் பெறுவதற்கு அவர் நம்மிடமிருந்து சில செயல்களை எதிர்பார்க்கிறார். நம்மிடமிருந்து வரும் செயல்கள் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற நமது குறிக்கோளால் இயக்கப்படுகின்றன.

  • தேவனின் சித்தம் அவரது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறது.

  • பல சமயங்களில், தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற நம்மைப் போன்ற பலவீனமான மனிதர்களை தமது கருவியாகப் பயன்படுத்துகிறார். (எ.கா., தாவீது மேய்ப்பராக இருந்தார், தேவன் அவரை இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். அனைத்து சீஷர்களும் மீனவர்களாக இருந்தனர், அவர் அவர்களுக்கு குணமளிக்கவும், உலகிற்கு நற்செய்தியைப் பரப்பவும்  பல வல்லமைகளைக் கொடுத்து சீஷர்களாக மாற்றினார்).

  • தேவன் தமது சித்தத்தை நிறைவேற்ற ஒரு கழுதையைக் கூட பயன்படுத்த முடியும். பிலேயாமிடம் தமது சித்தத்தை நிறைவேற்ற கழுதையை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை நாம் படிக்கிறோம். கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான். அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். எண்ணாகமம் 22:30-31

  • தேவனது சித்தம் அவரது நித்திய இலக்குகளை மையமாகக் கொண்டது.

  • நித்திய இலக்குகளை நிறைவேற்றுவதன் மூலம், நாம் உலக ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்கிறோம். வேறு வழியில்லை.

 

ஆபிரகாமின் வாக்குத்தத்தம் மற்றும் தேவனின் சித்தத்திலிருந்து கற்றுக்கொள்வது.

 

  • ஆபிரகாமின் அழைப்பில் தேவனின் வாக்குத்தத்தம் : நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:2-3

  • தேவன் அதை எப்படி நிறைவேற்றினார்? அவர் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியதில் அவரது சித்தம் நிறைவேறியது. (உங்கள் புரிதலுக்காக எந்த வரிசைப்படியும் இல்லாமல் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக 3 மட்டும் பட்டியலிட்டுள்ளேன். நான் குறிப்பிடாத இன்னும் பல உள்ளன).

    • முதலாவது – அவர் எகிப்துக்குச் சென்றார்ஆதியாகமம் 12:10-20 – தேவன் ஆபிரகாமையும் அவருக்கு உண்டான யாவற்றையும் கடுமையான பஞ்சத்திலிருந்து பாதுகாத்து, தாம் கர்த்தர் என்று பார்வோனுக்குத் தெரியப்படுத்தினார். அவர் தமது பிள்ளைகளை பஞ்சத்தில் பாதுகாக்கிறார். எந்த எதிரியும் அவரது பிள்ளைகளைத் தொட முடியாது, அவர் நம்மைக் காப்பவர் என்பதில் அவரது சித்தம் நிறைவேறியது.

    • இரண்டாவது - ஆபிரகாமும் லோத்தும் பிரிந்தனர் - ஆதியாகமம் 13 - லோத்தின் மக்களுக்கும் ஆபிரகாமின் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை அவர்களைப் பிரித்தது. அவர் லோத்துக்கு சோதோமையும் கொமோராவையும் கொடுத்தார்.ஆபிரகாமுக்கு மம்ரேயின் பெரிய மரங்களைக் கொடுத்தார். அங்கே அவர் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார். ஆபிரகாம் தேவனுக்காக  பலிபீடம் கட்டியதில் தேவ சித்தம் நிறைவேறியது, இது தான் பதிவு செய்யப்பட்ட முதல் பலிபீடம்.

    • மூன்றாவது - ஆபிரகாமும் அபிமெலேக்கும் - ஆதியாகமம் 20 - ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, கேராரிலே தங்கினார். அங்கே கேராரின் ராஜா (அபிமெலேக்கு) சாராளுக்காக தனது ஆட்களை அனுப்பினார். ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி என்று தேவன் அபிமெலேக்கிற்கு சொப்பனத்தில் வெளிப்படுத்தினார். மேலும், ஆபிரகாமின் ஜெபத்தால் ராஜாவின் உயிரைக் காப்பாற்றினார். ஆபிரகாம் ஜெபித்தபோது, ​​தேவன் அபிமெலேக்கையும், அவர் மனைவியையும், அவர் வேலைக்காரிகளையும் குணமாக்கி பிள்ளை பெறும்படி அனுக்கிரகம் பண்ணினார். ஆபிரகாம் தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தப்பட்டார், மேலும், அவர் ஜெபித்தபோது தேவன் அபிமெலேக்கின் மனைவியை மட்டும் குணப்படுத்தாமல் அவர் வேலைக்காரிகளையும் குணமாக்கி பிள்ளை பெறும்படி ஆசீர்வதித்தார். இதனால், தேவனின் சித்தம் நிறைவேறியது,

  • தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேறியது – இதையே மத்தேயு 1:1,17 இல் வாசிக்கிறோம். ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். மத்தேயு 1:1,17


வெவ்வேறு வகையான சித்தங்கள்

பூரண சித்தம்

ரோமர் 12 ஆம் அதிகாரம் தேவனின் பரிபூரண சித்தத்தைப் புரிந்து கொள்வதைப் பற்றி பேசுகிறது.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2

 

  • உங்கள் வாழ்க்கைக்கென்று தேவனின் சித்தம் உள்ளது, அது பூரணமானது.

  • நீங்கள் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்து, உங்கள் வாழ்க்கையை  கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தது முதல், பூமியில் உங்களுக்கென்று நியமிக்கப்பட்ட நாட்கள் வரை, நீங்கள் எங்கு வாழ வேண்டும், யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும், உங்கள் பூமிக்குரிய தொழில் என்னவாக இருக்க வேண்டும், என்னென்ன பாடுகளை சந்திக்க வேண்டும், நீங்கள் என்ன சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும், அவருடைய சரீரத்தில் நீங்கள் என்ன ஊழியம் செய்ய வேண்டும் என உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்திற்கும் ஒரு சரியான வரைபடத்தை, சரியான திட்டத்தை உருவாக்கி தயாரித்து வைத்துள்ளார்.

  • இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவருடைய சித்தத்திற்காக நீங்கள் ஏங்காதவரை ஒருபோதும் அந்த திட்டத்தை அறியவோ, நிறைவேற்றவோ மாட்டீர்கள்.

  • அவருடைய திட்டத்தில் நடக்கும்படி அவர் யாரையும் வற்புறுத்துவதில்லை. பரலோகத்திற்குச் செல்லும்படியும் ஜனங்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. ஜனங்கள் நரகத்திற்குச் செல்ல விரும்பினால், அதை அவர் தடுப்பதில்லை.

  • தம்மை விடாமுயற்சியுடன் தேடுபவர்களுக்கு தேவன் வெகுமதி அளிக்கிறவர். கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலை முறையாகவும் நிற்கும். சங்கீதம் 33:11

  • பரிசுத்த ஆவியானவர் உலகில் சுற்றிலும் அசைவாடி, ஜனங்களை  தேவனிடம் திருப்புகிறார். விசுவாசிகளை அவருடைய அழைப்புக்கு பதிலளிக்கவும், ஒப்புக் கொடுக்கவும், தேவனின் பரிபூரண சித்தத்தை நாடவும் வழிநடத்துகிறார். ஆனால் உங்கள் வாழ்க்கையில் தேவனின் பரிபூரண சித்தத்தைச் செய்வதில் நீங்கள் உண்மையில் அக்கறை காட்டவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் கண்டறிந்தால், அவர் உங்களைத் தனியாக விட்டுவிடுவார், உங்களைப் பின்தொடர மாட்டார்.

  • அவர் சில முறை அழைத்துப் பார்ப்பார். அவரது சித்தத்தைத் தேடும் போது உங்களால் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது அல்லது உலகில் முன்னேற முடியாது என்று நீங்கள் நினைத்து, அவருடைய சித்தத்தைச் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று அவர் கண்டால் உங்களைத் தனியாக விட்டுவிடுவார். நித்தியத்தில் மிகவும் வருந்துவீர்கள்.

 

அனுமதிக்கப்பட்ட சித்தம்

  • தேவனின் அனுமதிக்கப்பட்ட சித்தத்திற்கு அவருடைய முழு ஆசீர்வாதங்கள் இல்லை.

  • சாராள், தனக்கு ஒரு பிள்ளையைக் கொடுப்பதாக தேவன் அளித்த  வாக்குத்தத்தத்திற்காக காத்திருக்க முடியாமல் பொறுமையிழந்தாள். அவள் ஆகார் மூலம் ஒரு பிள்ளையைப் பெற ஒப்புக்கொண்டாள் (ஆகார் ஒரு அடிமைப்பெண்ணாக இருந்தாள்). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.  ஆதியாகமம் 16:1-4

  • தேவன் ஆகார் மூலம் இஸ்மவேலைக் கொடுத்தார். ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான். ஆதியாகமம் 16:15-16

  • ஈசாக்கு பிறந்த பிறகு, ஆபிரகாமிடம் இருந்து சுதந்தரத்தை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, சாராள் ஆகாரையும் இஸ்மவேலையும் வீட்டை விட்டு வெளியேற்ற விரும்பினாள். ஆனால், தேவன்  இஸ்மவேலுக்கு தமது ஆசீர்வாதத்தைக் கொடுக்கும்படி இரக்கம் காட்டினார். ஆதியாகமம் 21:9-13,17-18,20

  • இஸ்மவேல் 137 வருடங்கள் வாழ்ந்ததாக வாசிக்கிறோம். அவனும் அவனது சந்ததியினரும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஜாதியினரிடமும் விரோதத்துடன் வாழ்ந்தனர். ஆதியாகமம் 25:12-18

  • அவன் ஈசாக்கைப் போல் ஆசீர்வதிக்கப்படவில்லை. தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தார், ஈசாக்கிடமிருந்து யாக்கோபும், யாக்கோபிடமிருந்து இஸ்ரவேல் ஜனமும் உருவாகியது.

  • இஸ்மவேலின் உதாரணத்தைப் பார்க்கும்போது - தேவனின் பரிபூரண சித்தம் முதல் தர வாழ்க்கையை நிறைவேற்றுகிறது, அனுமதிக்கப்பட்ட சித்தமானது இரண்டாவது மூன்றாவது தர வாழ்க்கையை நிறைவேற்றுகிறது.

 

தேவசித்தத்தை எவ்வாறு தேடுவது?


  1. வேதம் - வேதமே தேவனின் சரியான சித்தத்தை தீர்மானிப்பதற்கான முதல் மற்றும் முதன்மையான ஆதாரமாகும். வேதம் என்ன சொல்கிறது என்பதை கற்றுக் கொண்டு, அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் அந்த அறிவை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். வேதத்தின் கட்டளை அல்லது நியமங்களுக்கு முரணாக எதையும் செய்வது தேவனின் சித்தமல்ல. இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், கொலோசெயர் 1:9

  2. ஜெபம் - எந்தவொரு விஷயத்திலும் தேவனின் சித்தத்திற்காக ஒருவர் உண்மையாக ஜெபிக்க வேண்டும். தேவன் அவருக்கு வெளிப்படுத்தும் எதையும் செய்ய அவர் தயாராக இருப்பதை தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒருவர் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இல்லாவிட்டால், அவர் தேவனின் பரிபூரணமான சித்தத்தை ஒருபோதும் அறிய மாட்டார். ஜெபம் என்பது தேவனை மாற்றுவதற்காக அல்ல, மாறாக அவருடைய திட்டத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றுவதாகும். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். கொலோசெயர் 4:12

  3. ஐக்கியம் - ஒரு கிறிஸ்தவனாக எப்போதும் கிறிஸ்துவுடன் ஐக்கியத்தோடு இருப்பது முக்கியம். நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதெல்லாம் தேவனுக்கு, நாம் என்னவாக இருக்கிறோம் என்பது போல முக்கியமல்ல. சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் நாம் எப்போதும் கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். வேத வசனத்தைப் படிக்கும்போது, அது என்ன சொல்கிறது என்பதை மட்டும் அறிந்தால் போதாது; அதன் அர்த்தம் என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது அவருடன் ஐக்கியத்தோடு இருக்கும் போது மட்டுமே நடக்கும். வசனத்தை தியானிப்பது, ஆராதிப்பது, கீர்த்தனைகள், பாடல்கள் பாடுவது, துதிப்பது என பல வகைகளில் தேவனோடு ஐக்கியம் கொள்ளலாம்.

  4. கீழ்ப்படிதல் - வசனத்தின் மூலம் தேவனுடைய சித்தத்தைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியம். ஆபிரகாம் முதல் தாவீது வரையும் மேலும்  பவுல் மற்றும் அனைத்து சீடர்களும் தேவனின் சித்தத்தைப் பெறுவதற்கு உடனடியாக அவருக்குக் கீழ்ப்படிந்தனர். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:23

  5. பொது அறிவு - ஒரு கிறிஸ்தவர் தேவனின் சித்தத்தைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து காரணிகளையும் படிப்பதில் தேவன் கொடுத்த இயற்கையான திறனைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், எல்லா பகுத்தறிவும் வேதாகமக் கொள்கைகளிலும் ஜெபத்திலும் வழிநடத்தப்பட வேண்டும். ஏனென்றால் மனம் இன்னும் பாவத்தால் கறைபட்டுள்ளதாயும், இருதயம் வஞ்சகமானதாயும் மிகவும் பொல்லாததாயும் இருக்கிறது. உங்களில் பொது அறிவு மேலோங்கி, அவருடைய பரிபூரண சித்தத்திற்கு பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதற்கு மனதைப் புதுப்பிக்க ரோமர் அதிகாரத்தில், பவுல் கூறும் அறிவுரையைப் பின்பற்றுங்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2

  6. நம்பிக்கை - பெரும்பாலும், பரிசுத்த ஆவியானவர் அசைக்க முடியாத ஒரு உறுதியான நம்பிக்கையைத் தருகிறார். இது, அவருக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று மனசாட்சியுடன் பேசும் தேவனின் மெல்லிய குரல். ஆவியின் உள்ளான சாட்சி ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தன் தேவனுடன் ஐக்கியம் கொள்ளும் ஒரு நிஜம். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26

  7. சமாதானம் - தேவன் ஏதோவொரு அசைவில் இருந்தால், எல்லா மனிதப் புரிதலையும் மீறிய சமாதானத்தை அவர் கொடுப்பார். (தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கொலோசெயர் 3:15). ஒருவர் தனக்கு தெய்வீக சமாதானம் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும். அவர் சூழ்நிலையைப் பற்றி உணர்ச்சிரீதியாக பயப்படலாம், ஆனாலும் அவர் சரியானதைச் செய்கிறார் என்ற சமாதானம் இருக்கும்.

 

தேவசித்தமும் சாத்தானும்

 

உங்களை தேவனின் சித்தத்தைப் பற்றி அறியாதவர்களாக ஆக்கி, அவரிடமிருந்து உங்கள் ஆசீர்வாதத்தைப் பறித்து, மோசமான முடிவுகளுக்கு உங்களை வழிநடத்தி, பாவச் செயல்களில் ஈடுபட வைத்து தவறான வாழ்க்கையை உருவாக்க வைப்பது தான் சாத்தானின் நோக்கம்.

 

சாத்தானின் வலையில் சிக்கிக் கொள்ளாதபடி பின்வருவனவற்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 

  1. சாத்தானின் வஞ்சகங்கள் (பொய்) - சாத்தான் தேவனின் வார்த்தையைப் போன்று போலியாகப் பயன்படுத்துகிறான். அவன் தனது மொழியான பொய்யின் மூலம் ஏமாற்றுகிறான். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:44

  2. பாடுகள் - சாத்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அதிபதி. உலகில் உள்ள அனைத்தும் அவனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவன் சுற்றியுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்துகிறான், அதனால் விசுவாசி பாதிக்கப்படுகிறான்.  சூழ்நிலை வலி மிகுந்தது என்று நம்மை நம்ப வைத்து, தேவ சித்தத்தைக் கைவிடும்படி யாவரும் தேவனை விட்டு விலகுவதற்காக இந்த சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன.

  3. பொறுமை - பொறுமை முக்கியமான கிறிஸ்தவ நற்பண்பு. நாம் பொறுமையாக இல்லாவிட்டால், ஆழமான மற்றும் பலனளிக்கும் ஊழியத்திற்கு வழிவகுக்கும் பல சத்தியங்களை நாம் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டோம். என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. யாக்கோபு 1:2-4

    1. பொறுமையின்மை முதிர்ச்சியின்மையின் அடையாளம்.

      1. பொறுமையின்மை நம்பிக்கையின்மையின் அடையாளமுமாகும். ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16

    2. விசுவாசமும் பொறுமையும் ஒன்றிணைந்து செல்கின்றன. நாம் தேவனை விசுவாசித்தால், அவர் வாக்குப்பண்ணியதை நிறைவேற்றுவதற்காக காத்திருப்போம். உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். எபிரேயர் 6:12

  4. பெருமை - பெருமை மனிதனை மகிமைப்படுத்தி தேவனுக்குரிய   மகிமையைப் பறிக்கிறது. பெருமை வந்தவுடன், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதில் நாம் ஒருபோதும் வெற்றிபெற முடியாதபடிக்கு, நமது மனித பலங்களைச் சார்ந்து, தேவனின் கிருபையிலிருந்து விழுகிறோம். அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. நீதிமொழிகள் 16:18

  5. கீழ்ப்படியாமை - நாம் தேவனோடு நடக்கும்போது சாத்தான் கீழ்ப்படியாமையின் ஆவியைக் கொண்டுவருகிறான். பல நேரங்களில் இவை மிகவும் தந்திரமானவை, நாம் உடனடியாகக் கீழ்ப்படிய மாட்டோம், தேவனிடம் கேட்பதைத் தள்ளிப்போடுவோம், இந்த கீழ்ப்படியாமையால் தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள் நின்று போகும். சாத்தான் ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்தி நம்மை திசை திருப்பவும் தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருக்கவும் செய்வான். விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். நீதிமொழிகள் 16:20

  6. சுதந்திரம் - மனிதர்களாகிய நாம் சார்ந்து வாழும் உயிரினம், நாம்  தேவனை சார்ந்திருக்க வேண்டும். நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம், அதுதான் அவரைச் சார்ந்திருக்கும் நிலை. ஆனால் தேவனின்  சித்தத்திற்கு மாறாகச் செயல்படவும் சிந்திக்கவும் முடியும் மற்றும் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தவும் முடியும் என்று நம்ப வைக்கப்படுகிறோம்.  ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 17:28

  7. நேர்மை இல்லாமை - சாத்தான் தேவனிடமிருந்து நமது விசுவாசத்தை உடைத்து, நம் விசுவாசம் உலகைச் சார்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறான். நாம் இரவும் பகலும் ஜெபத்தின் மூலம் எதிர்த்துப் போராட வேண்டும், அப்பொழுது நம்முடைய விசுவாசம் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு அவரோடு இருக்கும். உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. 1 தெசலோனிக்கேயர் 3:10

  8. தேவனுக்கு முன்பாக பரிசுத்தமற்றவர்களாக ஆக்கும் நம் பாவங்கள் - நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்தைத் தடம்புரளச் செய்வதற்கு நமக்கு காலடி கொடுக்கும் பாவங்கள்: ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். கொலோசெயர் 3:5-8

 

எனவே, நீங்கள் புதிய ஆண்டைத் தொடங்கும்போது, தேவனின் திட்டத்தையும், உங்களுக்கென தனித்துவமான அவருடைய சித்தத்தையும் தேடுங்கள். இதைப் புரிந்துகொள்ளவும், இந்தப் புதிய ஆண்டில் அவருடைய மகத்துவத்தை அனுபவிக்கவும் அவரோடு நேரத்தைச் செலவிடுங்கள். உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...

 

 

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jan 07
Rated 5 out of 5 stars.

👍

Like
bottom of page