“உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.” ரோமர் 2:5-6
“அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்;அது மப்பும் மந்தாரமுமான நாள்.” செப்பனியா 1:15
மேலே உள்ள இந்த வசனங்களில் 'தேவ கோபாக்கினை” மற்றும் உக்கிரத்தின் நாள்' என்று வாசிக்கிறோம்.
இந்த கோபாக்கினை / உக்கிரம் என்றால் என்ன ? இது "தவறு மற்றும் அநீதியைக் கண்டு உணர்ச்சிவசப்படும் விளைவு" என வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலும் "கோபம்," "சீற்றம்", "கவலை" அல்லது "எரிச்சல்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்கள், தேவன் இருவருமே கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் தேவனின் கோபத்திற்கும் மனிதனின் கோபத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தேவனின் கோபம் புனிதமானது மேலும் அது எப்போதும் நியாயமானது. அதேசமயம் மனிதனுடைய கோபம் ஒருபோதும் புனிதமானது அல்ல,அரிதாகவே அது நியாயப்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து ரோமர் 1:18 ஐ படிக்கும்போது, தேவனின் கோபம் மனித இனத்திற்கு எதிராக வானத்திலிருந்து வெளிப்படுகிறது, மேலும் மனித இனம் தேவ கோபத்திற்கு தகுதியானது என்று அறிந்து கொள்ளலாம்.
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். ரோமர் 1:18-19
தேவ கோபம் என்ற கருத்தை நாம் சில சமயங்களில் எதிர்க்கிறோம். ஏனென்றால் , சுயநலமான தனிப்பட்ட காரணங்களால் அல்லது பழிவாங்கும் விருப்பத்தால் தூண்டப்படுகிற மனிதனுடைய கோபத்தோடு இதை ஒப்பிடுகிறோம். தேவனுடைய கோபம் முற்றிலும் நீதியானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ரோமர் 1:18-32 ஐ தியானிக்கும்போது, தேவனின் கோபத்தைத் தூண்டுவது எது, எந்தெந்த நிலைகளில் அவருடைய கோபம் தூண்டப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். இந்த நிலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் செயல்கள் அல்ல.
ஆனால் "தேவ கோபம் துன்மார்க்கம் அல்லது தேவபக்தி இல்லாததன் விளைவு" என்பது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான வேர் ஆகும். "மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.", இந்த தேவபக்தி அற்ற தன்மை மனிதனுக்கு வெவ்வேறு நிலைகளில் வருகிறது.
நிலை 1 : - மகிமைபடுத்துவதும் , நன்றி செலுத்துதலும் இல்லை
தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் மனிதனை தமது சொந்த சாயலில் படைத்தார். அவர் படைத்தவை அனைத்துமே மனிதன் அனுபவிப்பதற்கும் தனக்கு வழங்கிய அனைத்திற்காகவும் அவன் தேவனை மகிமைப்படுத்துவதற்காகவும் மட்டுமே.
“பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” ஆதியாகமம் 1 :26-28
நம் வாழ்வில் நாம் பெறும் ஒவ்வொரு நல்ல விஷயமும் தேவனிடமிருந்து வருகிறது, ஆனால் அதற்காக நாம் ஒருபோதும் அவருக்கு எந்த மேன்மையையும் கொடுப்பதில்லை.
உதாரணமாக, நாம் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் பொழுது , தேவன் அளித்த ஞானத்தாலும் அறிவாலும் பட்டம் பெற்றோம் என்று நாம் கூறுவது இல்லை. புதிய வேலை கிடைக்கும் போது அல்லது வியாபாரத்தில் செழிப்பு வரும் போது, கடின உழைப்பினால் வெற்றி பெற்றோம் என்றும் நம்முடைய அனுபவத்தின் அடிப்படையில் வேலை கிடைத்தது என்றும் கூறுகிறோம். ஆம், நாம் சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், தேவனின் கண்ணுக்கு தெரியாத குணங்கள் மற்றும் அவருடைய கிருபை நாம் இதைப் பெறுவதற்கான செயலில் உள்ளது. பவுல் ரோமர் 1 ல் இதை நன்றாக பதிவு செய்கிறார்.
“எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே,உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” ரோமர் 1:20
இவை அனைத்திலும் தேவனை மேன்மைப்படுத்துவதற்கான உண்மையை நாம் தெரிந்தே அடக்குகிறோம், இது நம் வாழ்வில் பல முறை நடக்கிறது. யோசித்துப் பாருங்கள். இதை பவுல் 21 ஆம் வசனத்தில் விளக்கியுள்ளார்.
“அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.” ரோமர் 1:21
நாம் தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறோமா ? எல்லாவற்றிலும் அவரை மேன்மைப்படுத்துகிறோமா? நாம் தேவனை விட சிறந்தவர்கள் என்று சாத்தானால் உணர வைக்கப்படுகிறோம்.சுருக்கமாகச் சொல்வதென்றால்,நீங்கள் ஒருவரிடமிருந்து ஒரு தயவைப் பெற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். ஆனால் மற்றவர்களிடம் சொல்லும் போது உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களால் உண்டானது என்று சொல்கிறீர்கள். இதன் மூலம் அவரை இழிவுபடுத்துகிறீர்கள். நாம் தேவனுக்குரிய மகிமையையும் நன்றியையும் செலுத்தாதபோது, இந்த மாதிரியான செயல்கள் நம் எண்ணங்களை பயனற்றவையாகக் காட்டுகின்றன, இதன் விளைவாக, நம் இருதயம் தேவனிடத்தில் கடினமாக்கப்படுகிறது. கடின இருதயம் தேவகோபத்திற்கு ஏதுவான அவபக்திக்கும் துன்மார்க்கத்திற்கும் வழிவகுக்கிறது.
தேவ கோபத்தைத் தவிர்க்க நாம் செய்யக்கூடிய செயல்கள்:
நீங்கள் செய்யும் எல்லாக் காரியத்திலும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்களா என்பதைப் பார்க்கவும்.
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா? சம்பளம் வாங்கியவுடன் முதலில் யாரிடம் கொடுக்கிறீர்கள் ? முதலில் தேவனை கனம் செய்கிறீர்களா? அல்லது உலக தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?
உங்கள் ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? அல்லது உங்கள் கஷ்டமான காலங்களிலும் நன்றி கூறுகிறீர்களா?
நிலை 2 : - “இருதயத்தின் பாவ இச்சைகள்”
நாம் தேவனை அடையாளம் காணத் தவறுகிற அல்லது அவருக்கு உரிய மகிமையைக் கொடுக்கத் தவறுகிற தருணத்தில் நம் இருதயம் இருளடைகிறது. இந்த இருண்ட இதயத்திலிருந்து நாம் புதிய ஆசைகளைப் பெறுகிறோம். அவற்றில் பல பாவ இயல்புடையவை. அவை தேவனுக்கு முன்னால் சரியானவை அல்ல. பவுல் ரோமர் 1:24-25 ல் அதைக் குறித்து விளக்குகிறார்.
“இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.” ரோமர் 1:24-25
உதாரணமாக, வியாபாரத்தில், அதை சரியாகச் செய்ய பல சமயங்களில் நேர்மையான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். சில சமயங்களில் அதைச் சரியாகச் செய்தால் வியாபாரம் வளராமல் போகலாம், எனவே இருதயம் பொய் சொல்லவோ அல்லது தவறான விஷயங்களைச் செய்யவோ விரும்புகிறது. இது ஒரு வியாபாரம் தானே, அவ்வாறு செய்வது சரி என்று நியாயப்படுத்துகிறது. இப்படியாக ஒரு பாவம் மற்றொரு தவறுக்கு வழிவகுத்து, அது பல மடங்காக பெருகுகிறது.
அதுபோலவே தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணம், புகழ், பொருள், செல்வம் போன்ற பல விக்கிரகங்களை நமக்குள் வைத்திருக்கிறோம்.இந்த உலகில் வாழ இவை அனைத்தும் முற்றிலும் அவசியம் என்று நியாயப்படுத்தி, பாவத்தில் தொடர்கிறோம். பணம் அல்லது புகழைப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் நம் வாழ்க்கையைப் பணம் / புகழைச் சுற்றியே வைத்து, தேவனை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொள்ளும்போது, அது விக்கிரகங்களை உருவாக்குகிறது. பணம், புகழ், பொருள், செல்வம் ஆகிய விக்கிரகங்களை நாம் அடைந்தவுடன், நமது அண்டை வீட்டார் /நண்பர்கள் /குடும்பத்தினர் ஆகியோரோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை விட நாம் எப்படி முன்னேற முடியும் என்று பார்க்கிறோம். இது பொறாமை,பெருமை இன்னும் பிற தேவபக்தியற்ற தன்மைகளை நமக்குள் கொண்டுவருகிறது.
சிலர் சில அசுத்தமான விஷயங்களுக்கு உள்ளத்தில் பேராசைப்படுகிறார்கள். சிலரை இந்த எண்ணங்கள் விபச்சாரத்திற்கு கொண்டு சென்றுவிடும். பவுல் ரோமர் 1:24 ஐ கொரிந்து நகரத்திலிருந்து எழுதினார். அங்கு எல்லாவிதமான பாலியல் ஒழுக்கக்கேடு, சடங்கு விபச்சாரம் போன்றவை சுதந்திரமாக பின்பற்றப்பட்டு வந்தன. இன்றைய உலகத்திற்கும் அன்று கொரிந்து பட்டணத்தில் இருந்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது போன்றவற்றை நியாயப்படுத்த முனையும் பல நாடகங்கள், திரைப்படங்கள் நம்மிடத்தில் உள்ளன. அவர்கள் சாதாரணமாக சித்தரிக்கப்படுகிறார்கள். பலர் இதை சாதாரண மனோபாவத்தோடு பின்பற்றத் தொடங்குவது பல பாலியல் பாவங்களுக்கு வழிவகுக்கிறது. இது தேவனின் கோபத்தை வரவழைக்கும் தேவபக்தியற்ற செயலை விளைவிக்கிறது.
தேவ கோபத்தைத் தவிர்க்க நாம் செய்யக்கூடிய செயல்கள்:
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். நீங்கள் பொதுவில் வாழ்வதை இது பிரதிபலிக்கிறதா? நீங்கள் இரண்டு வாழ்க்கை வாழ்கிறீர்களா?
நீங்கள் மற்றவர்களுக்காக வாழ்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையை நடத்த பிறர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களா ?
பிறருடையவைகளுக்காக இச்சிக்கிறீர்களா?
நிலை 3 :- “இழிவான இச்சைகள்”
“இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.“ ரோமர் 1:26-27
பவுல் கொரிந்துவில் இருந்தபோது இந்த வசனங்களை எழுதினார். அந்த நேரத்தில் ரோமானியப் பேரரசு, குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை விபச்சாரத்திற்கு வரி விதித்தது. ஆண் விபச்சாரிகளுக்கு சட்டப்பூர்வ விடுமுறை அளித்தது. ஒரே பாலின ஜோடிகளுக்கு இடையே சட்டப்பூர்வ திருமணம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் சில பேரரசர்கள் கூட மற்ற ஆண்களை திருமணம் செய்து கொண்டனர். பவுல் எழுதிய அந்த காலத்தில் நீரோ பேரரசராக இருந்தார். அவர் ஸ்போரஸ் என்ற பையனை அழைத்துச் சென்று, அவனுக்கு ஆண்மை நீக்கி பின்னர் அவனை முழு சடங்குடன் திருமணம் செய்தார். அந்த சிறுவனை ஒரு பெரிய ஊர்வலத்துடன் அரண்மனைக்கு அழைத்து வந்து, தனது "மனைவி" ஆக்கினார். பின்னர், நீரோ மற்றொரு மனிதனுடன் வாழ்ந்தார், இங்கே நீரோ தான் "மனைவி".
ரோமானியப் பேரரசின் போது நடந்த அதே விஷயங்கள் இப்போது உலகின் பல பகுதிகளில் நடக்கின்றன. சட்டப்பூர்வமான திருமணங்கள் (ஆண் / பெண்) மற்றும் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு எதிராக வாதாடும்படிக்கு இதை சுதந்திரமான வழக்காக நினைக்கிறோம். "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி,.." என்பதன் விளைவு தான் இது. இந்த அசுத்தமான இழிவான இச்சைகள் தேவ கோபத்திற்கு வழிவகுத்துச் செல்லும் துன்மார்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.
தேவ கோபத்தைத் தவிர்க்க நாம் செய்யக்கூடிய செயல்கள்:
உங்கள் இருதயத்தில் எந்த வகையான இச்சைகள் மேலோங்கி இருக்கின்றன என்று பாருங்கள்.
அழகான ஆண் அல்லது பெண்ணைக் கண்டால் உங்கள் உள்ளத்தில் இருந்து என்ன வகையான ஆசைகள் வெளிப்படும்?
நிலை 4 :- “கேடான சிந்தை”
“தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய்,வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.” ரோமர் 1:28-32
நம் வாழ்வில் தேவனை மகிமைப்படுத்தாமலோ அல்லது நன்றி செலுத்தாமலோ இருந்தால், நம் உள்ளம் கடினப்பட்டு, மெல்ல மெல்ல பின்வாங்கி, பாழ்பட்ட மனமாக மாறிவிடும். இதை நீங்கள் கெட்ட மனம் அல்லது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பான, அசுத்தமான விஷயங்களால் நிறைந்த வக்கிர மனம் என்று அழைக்கலாம்.
“அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய்,வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்”
நம்மிடம் கேடான சிந்தை இருந்தால், உண்டாகும் மாற்றங்களை பவுல் மேற்கூறிய வசனத்தில் விளக்குகிறார்.
உதாரணமாக, பணத்தின் மீது பேராசை வரும்போது ,சிலர் தீய வேலைகளில் ஈடுபட அதிக முயற்சி செய்கிறார்கள். மேலும் பேராசையிலிருந்து விடுபட மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவோம். இந்த செயல்கள் அவபக்தியை உண்டாக்கி தேவ கோபத்தை வரவழைக்கிறது.
ஆவியானவரால் மட்டுமே இந்த கேடான சிந்தையிலிருந்து நம்மைக் காத்து, நம் உள்ளத்தில் உருவாகி இருக்கும் தவறான காரியங்களை நமக்கு காண்பிக்க முடியும்.
“கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.” ரோமர் 8:2,5
தேவ கோபத்தைத் தவிர்க்க நாம் செய்யக்கூடிய செயல்கள்:
உங்கள் இருதயத்திலிருந்து எந்த வகையான ஆசைகள் வருகின்றன என்பதைப் பார்க்கவும்.
தேவன் உங்களை வழிநடத்துகிறபடி நீங்கள் வாழ்கிறீர்களா? அல்லது உள்ளத்தின் ஏவுதலின் படி வாழ்கிறீர்களா?
சுருக்கம்
தேவ கோபத்தை வரவழைப்பதற்கான ஆரம்பம் - தேவனை கனம் பண்ணாமல் இருப்பது, மகிமையை செலுத்தாமல் இருப்பது மற்றும் நன்றி சொல்லாமல் இருப்பது. இவை நம் உள்ளத்தைக் கடினப்படுத்துகிறது. பாவ ஆசைகளினால் நம் உள்ளம் பாழாகும்படிக்கு, தேவனிடம் இருந்து நாம் பின்வாங்கத் தொடங்கும் முதல் நிலை அதுதான்.
நாம் தேவனின் கோபத்திற்கு ஆளாகும்போது, யாராலும் காப்பாற்ற முடியாத முடிவில்லாத வளையத்தின் நிலைக்கு வந்து விடுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.” வெளிப்படுத்துதல் 20:12-15
தேவனின் கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி (நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது தேவனுக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரியும்) பாவ வழிகளில் இருந்து விலகி தேவனிடம் மனம் திரும்புவதுதான். இயேசு கிறிஸ்துவால் மட்டுமே இந்தக் கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அவர் இன்னும் நம் மேல் இரக்கமாய் இருக்கிறார். நம்மை பாவத்திலிருந்து காப்பாற்ற நமக்கு கிருபை அளிக்கிறார்.
சுவிசேஷம் என்பது தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக, தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை மீட்கும் இரட்சிப்பின் நற்செய்தியாகும்.
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டுநீதிமான்களாக்கப்படுகிறார்கள்;” ரோமர் 3:23-24
Comments