கடந்த வாரம், 70,000 பேர் மரிப்பதற்கு வழிவகுத்த இஸ்ரவேலைத் தொகையிடும்படிக்கான கட்டளையை இடும்படி பெருமை தாவீதை எவ்வாறு குருடாக்கியது என்பதை கற்றுக் கொண்டோம். பெருமை என்பது சாத்தானின் மிக சக்திவாய்ந்த கருவியாக உள்ளது. இது நமக்கும் தேவனுக்கும் இடையே பிளவை உண்டாக்குகிறது, நம் வாழ்க்கைக்காக தேவன் கொண்டுள்ள பாதையிலிருந்து நம்மைத் திசைதிருப்புகிறது. மாறாக, மனத்தாழ்மையோ அதற்கு எதிர்மறையாக செயல்படுகிறது. மனத்தாழ்மையே நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகின்ற தேவனின் மிகப்பெரிய சொத்து.
இந்த வாரம், மனத்தாழ்மையை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதையும், தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறும்படி மனத்தாழ்மையைப் பெறுவதற்குத் தேவையான குணங்கள் என்ன என்பதையும் தானியேலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வோம்.
தானியேலின் கதை சுருக்கம் (தெரியாதவர்களுக்காக)
தானியேலும் அவரது தோழர்களும் (அனனியா, மீஷாவேல், அசரியா) யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, ஞானிகளாக ராஜ்யத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் 1:3-4,6-7
சாஸ்திரிகள், சூனியக்காரர், கல்தேயர், ஜோதிடர்கள் இவர்களோடு தானியேலும் அவரது தோழர்களும் நேபுகாத்நேச்சார் ராஜாவால் ஞானிகளாக கருதப்பட்டனர்.
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, ஒரு சொப்பனம் கண்டார். அவரது சொப்பனத்தை விளக்குவதற்கு ராஜா சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைத்தார். அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள். ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறிய வேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான். தானியேல் 2:2-3
ராஜா கோபமடைந்து, அவர்கள் சூழ்நிலை மாறுமென்று, பொய்யும் புரட்டுமான விஷயங்களைச் சொல்லி, தன்னை தவறாக வழிநடத்தவும், சதி செய்வதாகவும் கூறி, சொப்பனத்திற்கு சரியான விளக்கம் கூறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.
காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம் பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்து கொள்ளுவேன் என்றான். இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். தானியேல் 2:9,12
சொப்பனத்தை யாராலும் தெரிவிக்க முடியாததால், பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் (சாஸ்திரிகள், ஜோசியர், சூனியக்காரர், கல்தேயர், மேலும், தானியேலும் அவரது தோழர்களும் கூட பாதிக்கப்பட்டனர்) கொல்ல வேண்டுமென்று ராஜா கட்டளையிட்டார். ஞானிகளைக் கொலை செய்ய வேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலை செய்யத் தேடினார்கள். தானியேல் 2:13
ராஜாவின் தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகு, ராஜாவின் கட்டளையின் அடிப்படையில் தானியேலையும் அவரது தோழர்களையும் கொலை செய்ய தேடி வந்தான்.
தானியேலின் நடத்தை - கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
தேவனை சார்ந்திருத்தல்
ராஜாவினுடைய தளபதியுடன் தானியேல் நடந்து கொண்ட விதம் - ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகு,பாபிலோனின் ஞானிகளைக் கொலை செய்யப் புறப்பட்ட போது, தானியேல் அவனிடம் யோசனையும் புத்தியுமாய்ப் பேசினார். "பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி". தானியேல் 2:14
இந்த யோசனையும் புத்தியும் தேவனின் ஆசீர்வாதத்திலிருந்து வந்தது. இந்த ஞானம் ராஜாவின் ராஜ்யத்தில் உள்ள சகல ஞானிகளையும் விட 10 மடங்கு சிறந்திருந்தது என்று படிக்கிறோம். இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். தானியேல் 1:17,20
தேவன் தமது பிள்ளைகளுக்கென்று பெரிய திட்டங்களை வைத்திருக்கும்போது, எதிரியால் அவர்களைத் தொட முடியாது. எதிரி அவர்களைத் தாக்க வரும்போது சமாளிக்கும் ஞானத்தையும் புத்தியையும் அவர் தருகிறார், அதைத்தான் தானியேலுக்கு செய்தார்.
அழைக்கப்பட்டபோது, தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ராஜாவை அணுகிய விதம், உலகத்தை சார்ந்தோர் அவரை அணுகிய விதத்திலிருந்து வேறுபட்டிருந்தது.
உலகத்தை சார்ந்தோர் - அனைத்து மக்களும் (சாஸ்திரிகள், சூனியக்காரர், கல்தேயர், ஜோதிடர்கள்) வந்து, "அதின் அர்த்தத்தை விடுவிப்போம்" என்று சொன்னார்கள். அவர்கள் ராஜாவைப் புகழ்ந்து, அவரின் வேலைக்காரர்களாகத் தங்களைத் தாழ்த்திக் கொண்டனர். "அதின் அர்த்தத்தை விடுவிப்போம்" என்று கூறியது, அவர்கள் தங்கள் சுயஞானத்தை சார்ந்திருப்பதை பிரதிபலிக்கிறது. மேலும், இது, சாஸ்திரிகள், சூனியக்காரர், கல்தேயர், ஜோதிடர்கள் யாவரின் மொத்த ஞானத்தையும் குறிக்கிறது. அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய பாஷையிலே சொன்னார்கள். தானியேல் 2:4
தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் - தானியேல் - இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான். தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம் பண்ணினான். தானியேல் 2:15-16
தானியேல் ராஜாவைச் சந்தித்த விதத்தைப் பாருங்கள், “தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம் பண்ணினான்". - அவர் தேவனைத் தவிர எவரையும் வணங்கவும் இல்லை துதிக்கவும் இல்லை. அங்கே “அதின் அர்த்தத்தை விடுவிப்போம்” என்று வாசிக்கிறோம், இங்கே "தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம் பண்ணினான்" என்று வாசிக்கிறோம். இதிலிருந்து, தானியேல் வேறு எந்த மனிதர்களையும் சார்ந்திருக்கவில்லை, சொப்பனத்தை விளக்குவதற்கு தேவனின் ஞானத்தையே சார்ந்து இருந்தார் என்று அர்த்தமாகிறது.
தாவீது கோலியாத் காரியத்தைப் பார்த்தால், அங்கும் இதே தான் நடந்தது. தாவீது மற்றவர்களைச் சார்ந்திருக்கவில்லை, தேவனையே சார்ந்து இருந்தார். "அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்”. 1 சாமுவேல் 17:47 என்று தாவீது கூறியதைக் காணலாம்.
தேவன் பெலம் வாய்ந்த சக்திகளுக்கு எதிராக பலவீனமான கருவிகளை (மனிதர்களை) பயன்படுத்துகிறார், அதனால் அவர் தேவனின் மகிமையை வெளிப்படுத்த முடியும்.
தேவனிடத்தில் தாழ்மை
தானியேல், தான் மட்டும் தேவனைச் சார்ந்திருக்கவில்லை, வீட்டிற்குத் திரும்பி வந்த பிறகு, தேவனிடம் மன்றாடுவதற்குத் தனது தோழர்களையும் வழிநடத்தினார். "ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்". மத்தேயு 18: 20. தேவனின் வாக்குத்தத்தம் உண்மையாயிருப்பதால், கூடி ஜெபிப்பது தேவனால் கேட்கப்படும் என்றும் அதின் மூலம் அவருடைய கிருபையைப் பெற முடியும் என்றும் நம்பினார்.
தானியேல் தன்னையும் தன் சுய பலத்தையும் சார்ந்து இருக்கவில்லை, அவர் தனது நீதிமான்களான தோழர்களையும் இந்த ஜெபத்தில் பயன்படுத்தினார்.
அவர்களின் (தானியேல் மற்றும் அவரது தோழர்கள்) ஜெபம் ஒரு மன்றாடும் ஜெபமாக இருந்தது. பரலோக தேவனிடத்தில் இருந்து கிருபை வேண்டி மன்றாடியதாக இருந்தது. அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான். தானியேல் 2:18
அவர்களுடைய காரியத்திற்காக மட்டும் அல்லாமல் (சுயத்திற்காக அல்லாமல்), பாபிலோனின் பிற ஞானிகளும் கொலை செய்யப்படக் கூடாது என்று அவர்களுக்காகவும் ஜெபித்தனர். "...பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு.." தானியேல் 2:17
நம்முடைய ஜெபங்கள் மன்றாட்டாய் இருக்கும் போது தேவன் நம் மனத்தாழ்மையை கனம் பண்ணுகிறார். இரவில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருளை வெளிப்படுத்தியதன் மூலம் தேவன் தமது இரக்கத்தை காண்பித்தார்.
மனத்தாழ்மையோடு இருக்கும்போது, நமக்கு எங்கிருந்து பலம் கிடைக்கிறது என்பதை அடையாளம் காணும்படியான இருதயம் இருக்கும். இந்த விஷயத்தில் தானியேல் தேவனை ஸ்தோத்தரித்து அவரை மகிமைப்படுத்தினார். பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான். பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான். தானியேல் 2:19-23
இங்கு கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் : நம்மைத் தாழ்த்திக் கொள்வதையும், குறைந்த சுயமரியாதையுடன் நடந்து கொள்வதையுமே நம்மில் பெரும்பாலோர் தாழ்மை என்று கருதுகிறோம், நான் சிறியவனாக இருந்தபோது, முன் இருக்கையில் அமராமல், பின் அல்லது கடைசி இருக்கையில் அமர்வது தான் நம்மை தாழ்மையாக ஆக்குகிறது என்று புரிந்து கொண்டிருந்தேன்.
மனத்தாழ்மை என்பது தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருப்பது, அவரை முழுமையாகச் சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்வது மற்றும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக அவரை நம்பி இருப்பது. இது ஒரு பிச்சைக்காரன் வழிப்போக்கரிடம் உதவிக்காக கெஞ்சுவதைப் போன்று தேவனிடம் கேட்பதை உள்ளடக்கியது.
தேவனை நம் ஆதாரமாக உணர்ந்து, ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் அவரைச் சார்ந்து இருக்கும் போது மட்டுமே இந்த தாழ்மை வருகிறது. நம் சுயம், அதற்கு வலிமை இல்லாததால் கொடுக்க எதுவும் இல்லை என்று அதன் இயலாமையை உணர்கிறது.
இந்த தாழ்மை, நம் இருதயம் தேவன் மீதுள்ள பயபக்தியால் நிரம்பியிருக்கும் போதும், அவர் மீது அந்த வகையான அன்பினால் நிரம்பி வழிகிற போதும் வருகிறது.
இந்த மாதிரியான செயல் (சார்ந்திருத்தல் மற்றும் மன்றாடுதல்) வந்துவிட்டால், நம்மில் உள்ள தாழ்மையைப் பிரதிபலிக்கும் வகையில் நமது செயல்களும் அதையே பின்பற்றும். உலகில் நாம் ஒரு ஆசீர்வாதத்தைப் பெறும்போது, நாம் எந்த ஆணவத்தையும் / பெருமையையும் காட்ட மாட்டோம், இந்த செயலுக்கான பெருமை நமக்குச் சொந்தமில்லை என்பது நம் இருதயத்திற்குத் தெரியும். இந்த மாதிரியான செயலை தானியேல் வாழ்க்கையிலும் காண்கிறோம், அவர் மற்றவர்களுடன் ஒப்பிட்டு இதைப் பற்றி பெருமை கொள்ளவில்லை. உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது. தானியேல் 2:30
தேவ ஆசீர்வாதம்
நம்மைத் தாழ்த்தி, அவரிடம் நம் மனத்தாழ்மையைக் காட்டும்போது, அவருடைய நாமம் மகிமைப்படும்படி அவருடைய மகிமையை வெளிப்படுத்த அவர் நம்மை ஆசீர்வதிப்பார். இங்கே தானியேலின் விஷயத்தில், அவர் தானியேலுக்கு ராஜாவின் சொப்பனத்தைக் காட்டி அதன் விளக்கத்தையும் வெளிப்படுத்தினார்.
என்ன நடந்தது என்று பாருங்கள், தானியேல் ராஜாவிடம் தேவனை மகிமைப்படுத்தினார் – “… ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்”. தானியேல் 2:44,45
தானியேலை கனம் பண்ணுவதற்காக ராஜா முகங்குப்புற விழுந்து வணங்கினார் - அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான். தானியேல் 2:46
ராஜா தேவனை மகிமைப்படுத்தினார் - ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். தானியேல் 2:47
நம்மைத் தாழ்த்தி, தேவனிடம் நம் மனத்தாழ்மையைக் காட்டும்போது, நாம் கேட்பதை விட அதிகமாக அவர் ஆசீர்வதிக்கிறார். தானியேலின் விஷயத்தில் அவர் பெரியவனாக்கப்பட்டு, பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதி ஆக்கப்பட்டார். பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் 2:48
நம் வாழ்விலும் இதுவே உண்மை, முழு இருதயத்தோடும் அவரைத் தேடுங்கள், அப்பொழுது யாவும் கொடுக்கப்படும். நாம் தேவனிடம் நம் மனத்தாழ்மையைக் காட்டும்போது இந்த வசனம் உண்மையாக இருக்கிறது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33
சுருக்கம்
மனத்தாழ்மையும் தேவனை சார்ந்திருப்பதும் ஒன்றாக இணைந்து செல்கின்றன. நாம் தாழ்மையுடன் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே தன்னிச்சையாக செயல்படக் கூடாது.
மனத்தாழ்மை எப்போதும் தேவனை கனம்பண்ணி மகிமைப்படுத்தும், அது ஒருபோதும் செயலுக்கு எந்தப் பெருமையையும் எடுத்துக் கொள்ளாது.
நாம் தாழ்மையுடன் இருக்கும்போது, வலிமைமிக்க வேலையைக் கொண்டுவர தேவன் ஒரு பலவீனமான கருவியைப் (பலவீனமான மனிதர்கள்) பயன்படுத்துவார். ஞானவான்களை அவர் சீடர்களாகப் பயன்படுத்தாமல் மீனவரையே சீடர்களாகப் பயன்படுத்தினார் என்பதை நினைவில் கொள்வோம்.
நாம் அவரிடம் நம்முடைய மனத்தாழ்மையைக் காட்டும்போது, நாம் கற்பனை செய்வதை விட அதிகமாக அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
நாம் அவரிடம் நம்முடைய மனத்தாழ்மையைக் காட்டும்போது, நம் செயல்களின் மூலம் “அவருடைய சித்தத்தை” நிறைவேற்றுவதற்கு அவர் அதைப் பயன்படுத்துகிறார்.
コメント