top of page

ஞானம் பெருந்துணை குறிப்புகள்

  • Kirupakaran
  • Jun 2, 2024
  • 6 min read

நம் வாழ்வின் ஆரம்பத்திலேயே ஞானத்தைப் பெற நாம் ஒவ்வொருவரும் ஏங்குகிறோம். ஞானம் மற்றும் அறிவுக்காக தேவனிடம் ஜெபிக்கிறோம். தேவனிடமிருந்து நாம் பெறும் பல ஆசீர்வாதங்களில் ஒன்றாக இது இருக்கிறது. "என்ன", "எப்போது", "எப்படி" என்பதை அறிவதற்கான அறிவை நமது கல்வியால் பெறலாம். அதேசமயம், ஞானம் என்பது அறிவு மற்றும் அனுபவங்களை விவேகமான, நுண்ணறிவுள்ள முறையில் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க, முடிவெடுக்க அல்லது ஆலோசனைகளை வழங்குவதில் அடங்கும். ஞானத்திற்கு பெரும்பாலும் மனவெழுச்சியில் பக்குவமும், "ஏன்" என்பதன் தாக்கங்களையும் அதன் பின்விளைவுகளையும் புரிந்து கொள்ள பிரதிபலிப்பு சிந்தனையும்  தேவைப்படுகிறது. பல சமயங்களில் சரியான ஞானத்தை வழங்குவதற்கு நமது மனித மூளையால் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது.


எனவே, நாம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள, ஞானத்தில் சிறந்தவரிடம் திரும்புவோம். அது தாவீதின் குமாரனாகிய சாலொமோனைத் தவிர வேறு யாரும் இல்லை. தேவன் அவருக்கு ஞானத்தை வழங்கினார்.

 

சாலொமோன் ஞானத்தை வேண்டினார்

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை,உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 1 இராஜாக்கள் 3:10-12

 

சாலொமோனின் ஞானத்தைக் குறித்த தேவனின் சாட்சி

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. 1 இராஜாக்கள் 4:29-32

 

தேவனின் முக்கிய ஆசீர்வாதங்களில் ஒன்றான ஞானத்தைப் பற்றிய குறிப்புகளைப் பெற சாலொமோனின் நீதிமொழிகளுக்கு திரும்பப் போகிறோம். (1 இராஜாக்கள் 4:32 “… அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து). - நீதிமொழிகள் 2 ஆம் அதிகாரத்திலிருந்து இந்த ஞானத்தைப் பெறுவதற்கான குறிப்புகளைக் காணலாம்.

 

1. தேவனின் நிபந்தனை

நீதிமொழிகள் 2:2 - நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி

  • நீதிமொழிகள் 2:2-4 வரையிலான வசனங்கள், ஞானத்தைப் பெற வேண்டுமானால் நாம் ஒரு தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனையைக் கூறுகின்றன. தேவன் அவருடைய ஞானத்தைப் பெறுவதற்கு நம்மை வற்புறுத்த மாட்டார்.

  • இந்த அத்தியாயத்தில் சாலொமோன் அளிக்கும் ஆலோசனை, நீதிமொழிகள் 2:1 இல் ஒரு நிபந்தனையோடு தொடங்கி, நீதிமொழிகள்2:9 இல் “அப்பொழுது” என்ற வார்த்தையோடு தொடர்ந்து நீதிமொழிகள் 2:20 இல் “ஆதலால்” என்ற வார்த்தையோடு முடிகிறது.

  • நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, நீதிமொழிகள் 2:2

  • அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். நீதிமொழிகள் 2:9

  • ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக. நீதிமொழிகள் 2:20

  • நீதிமொழிகள் 2:1 இல் சொல்லப்பட்டுள்ள நிபந்தனையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிறிஸ்துவிடமிருந்து வருகிறது, ஆனால் அந்த சுதந்திரம் என்ன செய்கிறது? எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 1 கொரிந்தியர் 6:12

  • அவருடைய ஞானத்தைப் பெற நாம் ஏற்றுக்கொள்ளும் மனதோடு இருக்க வேண்டும். அப்போது தான் அவர் நமக்குத் தருகிறார்.

  • நீங்கள் என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உங்கள் இருதயத்திலும் மனதிலும் பத்திரப்படுத்தினால்,அப்பொழுது தேவனிடமிருந்து வரும் வார்த்தை ஞானத்தைப் பெற ஒரு அடிப்படையாக செயல்படுகிறது.

 

2. உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு - நீதிமொழிகள் 2:1

  • மனமும் அறிவும் மட்டுமே ஞானத்திற்குத் திரும்ப முடியும் என்று பொதுவான உலக ஞானம் கூறுகிறது, ஆனால் இங்கே சாலொமோன்  உங்கள் செவியை ஞானத்திற்குத் திருப்புங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

  • நீங்கள் தேவன் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். மத்தேயு 13:9

  • இயேசு சொல்வதைக் கேட்பது ஞானமாக மாறும். மனிதர்கள் பெரும்பாலும் ஞானத்தைப் பெறுவதற்கு முதியவர்களையே நாடுகிறார்கள். இங்கே ஞானத்தைப் பெற இயேசுவிடம் நம் காதுகளைத் திருப்ப வேண்டும்.

  • கேட்பது மட்டுமே ஞானத்தை உருவாக்க முடியாது - "உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு" என்று கீழ்ப்படிவதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

  • மனத்தாழ்மையுடன் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள் - அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். யோவான் 7:17

  • நாம் கேட்கின்ற வார்த்தைகளுக்கு பதிலளித்து, அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது தான் நம் இரட்சகராகிய இயேசுவிடமிருந்து ஞானத்தைப் பெற முடியும்.

  • யாராவது மதிப்புமிக்க ஒன்றைச் சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் மட்டுமே அதை கேட்கத் தொடங்குகிறீர்கள். இதையே தான், தாழ்மையுடன் அவருடைய குரலைக் கேட்க கவனமாயிருங்கள் என்று சாலொமோன் கூறுகிறார்.

  • ஞானம் என்பது புத்தியையும் பகுத்தறிதலையும் உள்ளடக்கியது. இது தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்த நமக்கு உதவுகிறது — சரியான தருணம், முறை மற்றும் உந்துதலைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

  • ஞானம் தேவனுடைய வார்த்தையான “வேதத்திலிருந்தும், அவரையும் நம்மையும் நன்கு அறிந்துகொள்வதிலிருந்தும் வருகிறது.

 

3. புத்தியைச் சத்தமிட்டு அழைத்து

ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து - நீதிமொழிகள் 2:3

  • சாலொமோன் ஜெபிக்கும் திறனைப் பற்றி பேசுகிறார் - நம் வாழ்க்கையில் நம்முடைய புத்திக்காக தேவனிடம் கூக்குரலிடுவதற்கு நாம் வாஞ்சிக்க வேண்டும். இந்த ஜெபிக்கும் திறன் நமக்கு ஆவிக்குரிய ஞானத்தைப் பெற்றுத் தருகிறது.

  • உங்களுக்கு ஞானம் வேண்டுமானால் உங்கள் ஜெபங்களில் தேவனிடம்  உண்மையாக கேளுங்கள், அது நமக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் - உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5

  • ஆவிக்குரிய ஞானத்தைப் பெறுவது வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தேவாலயத்திற்கு செல்லும் காரியம் அல்ல, அது வாழ்நாள் முழுமைக்குமான தினசரி ஒழுக்கம். "புத்தியைச் சத்தமிட்டு அழைத்து" என்று வேதம் கூறுகிறது. ஜெபிப்பதன் மூலம், தேவனின் நுண்ணறிவுகளைப் பெறுகிறோம்.

  • ஆனால் துரித உணவுகள், இன்ஸ்டா ரீல்கள், யூடியூப் ஷாட்கள் போன்ற இந்த யுகத்தில், இந்த புத்தியைப் பெறுவதற்கான விரைவான வழிகளைத் தேடுகிறோம். மேலும் பலர் வேதத்தை ஆழமாகத் தேடி தேவனிடமிருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்வதில் தினசரி நேரத்தையும் சக்தியையும் செலவிடும் பழக்கத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, யாராவது நமக்குக் கற்றுத் தரவேண்டும் என்று விரும்புகிறோம். இதில் தவறேதும் இல்லை, ஆனால் அதுவே ஒரே வழியாக இருக்கக் கூடாது.

  • இயேசு நல்ல போதகர் என்று அழைக்கப்பட்டார், அவர் நமது அறிவுத்திறனைப் (IQ) பொறுத்து கற்பிக்கக் கூடிய உலகின் சிறந்த போதகர். அவருடைய கற்பித்தல் திறனும், முறைகளும் வயது / அனுபவத்திற்கு ஏற்ப மாறுபடும் மற்றும் நம் வேகத்திற்கு ஏற்றபடி நமக்கு கற்பித்துத் தருகிறார். பைபிளை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் அவரிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள அவரைத் தேடுங்கள். மீண்டும் மீண்டும் வாசிப்பது கற்றுக் கொள்ள உதவும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் எழுதப்பட்டதற்கு ஒரு புதிய ஜீவனையும்,பரிமாணத்தையும் அளிக்கிறது. அந்த ஞானம் நமது இரட்சகரிடமிருந்து வருகிறது.

 

4. புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்

அதை வெள்ளியைப் போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், நீதிமொழிகள் 2:4

  • தேவனுடைய வார்த்தையை தியானிப்பது பற்றிய அறிவுரைகளை சாலொமோன் இங்கே கொடுக்கிறார். சொல்வதோடு மட்டுமல்லாமல், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

  • அவரை விடாமுயற்சியுடன் தேடுங்கள். கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். ஏசாயா 55:6-7

  • ஒரு சுரங்கத் தொழிலாளி எப்படி வெள்ளி அல்லது தங்கத்தை தேடுவாரோ அதற்கு ஒப்பிடுகிறார். மணலில் இருந்து தனக்குக் கிடைக்கும் எந்தத் துகளையும் அவர் வீச மாட்டார். லென்ஸில் ஆழமாகப் பார்த்து, மீண்டும் மீண்டும் கழுவுகிறார். மறைந்திருக்கும் பொக்கிஷத்தைத் தேடும் மனப்பான்மையுடன் அவர் அதைத் தேடுகிறார்.

  • தேவனைத் தேடும் நமது விடாமுயற்சி, ஒரு சுரங்கத் தொழிலாளி தனக்குக் கிடைத்த மணல் மற்றும் கற்களில் இருந்து வெள்ளியையும் பொன்னையும் தேடுவதைப் போல இருக்க வேண்டும். அது வெள்ளியா அல்லது தங்கமா அல்லது வேறு ஏதேனும் விலைமதிப்பற்ற உலோகமா என்பதை சல்லடை போட்டுத் தேடுகிறார்.

  • வேதத்தைப் படிப்பதில் உங்களுடைய அணுகுமுறை, தேவன் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்பதாக இருக்க வேண்டும் (அது உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்தும் என்று உங்களுக்கு உள்ளே பாருங்கள். அதை வேறு ஒருவருக்கானது என்று ஒதுக்கிவிடாதீர்கள்). மீண்டும் வாசியுங்கள், அவர் வேறு அர்த்தத்தைக் கற்பிப்பார், மீண்டும் வாசியுங்கள், வார்த்தை உங்களோடு பேசி, உங்களைச் செம்மைப்படுத்தும். வார்த்தை மட்டுமே நம் புத்தியை சரிசெய்து, தேவனின் சரியான ஞானத்தைக்  கொண்டு வர முடியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16-17

  • நாம் நேரம் செலவிட்டு வேதத்தைப் படித்து, அவருடைய வார்த்தை நம் மனதிற்குச் சென்று நாம் வார்த்தையைக் கேட்கத் தொடங்கும் வரை, தேவனால் நம்மை ஆசீர்வதிக்க முடியாது.

  • ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல, அவரது ஒவ்வொரு வார்த்தையையும் (அவருடைய வார்த்தையில் ஒரு முற்றுப்புள்ளியும், காற்புள்ளியும் கூட முக்கியம்) தேடுவதற்கு தியானத்தில் நேரத்தை செலவிடுவதில் நாம் உறுதியாகவும் திடமாகவும் இருக்க வேண்டும்.

 

5. அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் வருகிறது

அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். நீதிமொழிகள் 2:5

  • நீங்கள் கேட்டதற்குக் கீழ்ப்படிந்து (வசனம் 1), புத்தியைச் சத்தமிட்டு அழைத்து (வசனம் 3), புதையல்களைத் தேடுகிறது போல் தேடும்பொழுது (வசனம் 4) உண்டாகும் விளைவு கர்த்தருக்குப் பயப்படும் பயம்.

  • பயம் என்பது சிறைச்சாலையில் ஒரு கைதி எப்படி நடத்தப்படுகிறாரோ, அதைப் போல அடக்கி வைக்கும் பயம் அல்ல. இந்த பயம் ஒரு அடிபணிகிற பயம், தேவன் நம்மில் விரும்பாததை அறிகிற பயம், தேவன்  விரும்பாத நம் வாழ்க்கையின் பாவங்களை அறிகிற பயம். இந்த வகையான பயம் ஒரு மரியாதைக்குரிய பயம்.

  • மரியாதைக்குரிய பயத்தில் இருந்து அவரை மதிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் மரியாதை வருகிறது. தேவனே, நீங்களே எனக்கு எல்லாமுமாயிருக்கிறீர்கள், நீங்களே என் ஆதாரம் என்று சொல்வீர்கள்.

  • இந்த மரியாதைக்குரிய பயத்தினால், வாழ்வின் அனைத்து வெற்றிகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நீங்கள் உங்களையே கனம் பண்ணிக் கொள்வதற்குப் பதிலாக, தேவனுக்கு மகிமையை கொடுப்பீர்கள்.

  • இந்த பயம் தேவனைப் பற்றிய அறிவை அளிக்கிறது, இது ஆவிக்குரிய அறிவைத் தவிர வேறில்லை, அது அவரிடமிருந்து வருகிறது.

  • தேவன் நம் மனித ஞானத்தை நம் வாழ்வில் தெய்வீக ஞானமாக மாற்றுகிறார், அதை பவுல் தனது அனுபவத்திலிருந்து மிகவும் பொருத்தமாக விளக்கியுள்ளார். நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 1 கொரிந்தியர் 2:10-13

  • வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் இதை நீங்கள் எடுத்துப் பயன்படுத்துங்கள், இது மகத்தான ஆசீர்வாதத்தைத் தருகிறது. நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், படிப்பில் சிறப்பாகச் செயல்பட தேவன் தமது ஞானத்தைக் கொடுப்பார், நீங்கள் வேலையில் இருந்தால், வேலையில் சரியானதை செய்து வெற்றி பெற அவர் தமது ஞானத்தை அளிக்கிறார். வியாபாரம் செய்தால், வியாபார வெற்றிக்கு சரியான உத்திகளைக் கொடுப்பார். நீங்கள் ஆசிரியர், வழக்கறிஞர், தொழிலாளி என எந்தத் துறையினராக இருந்தாலும் அவர் உங்களை பிரகாசிக்கச் செய்வார். ஏனெனில் வேதம் இவ்வாறு கூறுகிறது, நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.

  • இது, இந்த உலகில் நமது வேலையில் நம்மை ஆசீர்வதிப்பதற்காக தேவனிடமிருந்து வரும் ஞானமாகும். ஏனெனில், அவரது திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், அவர் நம்மை ஏன் அழைத்தார் அல்லது தேர்ந்தெடுத்தார் என்பதை அறியவும் நாம் இங்கே இருக்கிறோம்.

 

சுருக்கம்

சாலொமோன் நீதிமொழிகள் 6 முதல் 11 வரையிலான வசனங்களில் இதைப் பற்றிய சுருக்கத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். நீதிமொழிகள் 2:6-11

  1. வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நீங்கள் இருக்கும் வேலைக்குத் தேவையான அறிவையும் புத்தியையும் இது வழங்குகிறது. மாணவர் / வாலிபர் / பெரியவர்கள் / வயதானவர்கள் என யாராக இருந்தாலும், இது உங்களை சரியானதைச் செய்ய வைக்கும் அறிவை அளிக்கிறது (வசனம் 6).

  2. வாழ்க்கையின் வெற்றி என்பது அவருடைய ஞானத்திலிருந்து வருகிறது.  இது ஒருமுறை நாம் அவருடைய குரலுக்குக் கீழ்ப்படிந்து அதன்படி செயல்படும் போது அவருடைய ஞானத்தால் வரும் ஆசீர்வாதத்தைத் தவிர வேறில்லை (வசனம் 7).

  3. அது சாத்தானின் தந்திரங்களைப் பின்பற்ற விடாமல் ஒரு கேடகமாக செயல்படுகிறது. அது தேவனின் கவசமாக செயல்படுகிறது (வசனம் 8).

  4. அவர் நம்முடைய ஆதாரமாக இருப்பதால், நாம் இடது புறம் வலது புறம் சாயாமல் அவரையே நோக்கிப் பார்க்கும்படி பாதுகாக்கிறது (வசனம் 9).

  5. ஆத்துமாவுக்கு ஆறுதலாக ஞானம் செயல்படுகிறது. இதை விட சிறந்த வார்த்தை இல்லை. சில பசுமையான இயற்கை காட்சிகளைக் காணும்போது, ​​​​நம் உள்ளம் புத்துணர்ச்சி அடைகிறது. நீங்கள் அவரோடு நடந்து, அவர் சத்தத்தைக் கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து,சரியானதை செய்யும் போது அது ஆத்துமாவிற்கு ஆறுதலைத் தருகிறது (வசனம் 10).

 

தேவனுக்குப் பயப்படுவது உங்களைப் பற்றியது மட்டுமல்ல, அது தலைமுறை தலைமுறைக்குமுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் தேவனுக்குப் பயந்து நடந்தார், நாம் அவருடைய சந்ததிகள். தேவனது இரக்கம் உங்களுக்கும் எனக்கும் தொடர்ந்தது, அது மீண்டும் தொடரும். எனவே, தேவனுக்குப் பயப்படும் இந்த பயத்தை (மரியாதையான பயம்) இலேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதை மிகவும் மரியாதையோடும் மேன்மையோடும்   கையாளுங்கள். அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. லூக்கா 1:50.

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page