top of page
Kirupakaran

ஜெபத்தின் வல்லமை : எசேக்கியா ராஜாவின் யுத்த அனுபவம்


நாம் அனைவரும் வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளோம், சில போராட்டங்கள், கோலியாத்தை எதிர்கொள்வது போல் மிகப்பெரியவை, அங்கு எதிரி மிகவும் வலிமையானவனாகத் தோன்றுகிறான், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் போகிறது. யூதாவின் ராஜாவான எசேக்கியாவின் இக்கட்டான நிலை இதுதான். அசீரியாவின் ராஜாவான சல்மனாசாரின் உடனடி அச்சுறுத்தலுக்கு ஆளானார். சல்மனாசார் ஏற்கெனவே இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைக் கைப்பற்றியிருந்தார். சமாரியாவைக் கைப்பற்றி இஸ்ரவேலர்களை நாடுகடத்தினார். இப்போது, யூதா தனித்து நின்றது, கடுமையான அசீரிய படைகள் நெருங்கி வந்தன. எசேக்கியா ராஜா அசீரியாவின் அளப்பரிய வல்லமையை அறிந்திருந்தும், அந்த பலம்படைத்த எதிரியை எதிர்த்து நிற்கும் சவாலை எதிர்கொண்டார்.

 

இந்தக் கதையின் முழு ஆழத்தையும் புரிந்துகொள்ள, 2 இராஜாக்கள் 18-19, ஏசாயா 37-39 மற்றும் 2 நாளாகமம் 32 ஆம் அதிகாரங்களைப் படிக்க வேண்டுகிறேன். இங்கே ஒரு கதை சுருக்கத்தை வழங்க, என்னால் முடிந்ததை செய்திருந்தாலும், தேவனுடைய வார்த்தையின் மூலம் தான் உண்மையான தாக்கத்தை உணர முடியும். வாசிக்க நேரம் ஒதுக்குங்கள், அவருடைய வார்த்தை உங்கள் இருதயத்தோடு பேசட்டும்.

 

அசீரியா ராஜாவின் சுருக்கமான வரலாறு

அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி, அவனுக்குப் பகுதி கட்டினான். ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான். அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருஷம் முற்றிக்கை போட்டிருந்தான். 2 இராஜாக்கள் 17:3-5

  • அசீரியாவின் ராஜாவான சல்மனாசார், ஓசெயாவின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைத் தாக்கி முற்றுகையிட்டார்.

  • ஆரம்பத்தில் அசீரியாவின் அடிமையாக இருந்த ஓசெயா ராஜா, பகுதி கட்ட மறுத்து எகிப்தின் உதவியை நாடியதன் மூலம் கலகம் செய்தார்.

  • இதற்கு பதிலடியாக சல்மனாசார், ஓசெயா ராஜாவை சிறையில் அடைத்து, இஸ்ரவேலின் மீது படையெடுப்பைத் தொடங்கினார். பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினார். 

  • இஸ்ரவேல் ஜனங்கள் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்டு, ஆலாகு, ஆபோர், மேதியர் பட்டணங்கள் உட்பட அசீரியாவின் பல பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். 2 இராஜாக்கள் 18:11.

  • இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டு விலகி, பிற தெய்வங்களை வணங்கி, உடன்படிக்கையை மீறியதால் இந்த நாடுகடத்தல் நடந்தது.

  • அசீரியர்கள் பின்னர் இஸ்ரவேலில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜனங்களைக் குடியமர்த்தினர். இது பல மத வழிபாடுகளின் கலப்பிற்கும், தேசத்தில் விக்கிரக வழிபாட்டிற்கும் வழிவகுத்தது.

 

எசேக்கியா ராஜாவின் சுருக்கமான வரலாறு

அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 2 இராஜாக்கள் 18:2-3

  • எசேக்கியா 25 வயதில் யூதாவின் ராஜாவாகி, 29 ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவர் ஒரு நீதியுள்ள ராஜாவாக, தாவீதின் வம்சத்தில் கர்த்தரின் பார்வையில் சரியானதை உண்மையுடன் செய்த சிலரில் ஒருவராக  அறியப்பட்டார்.

  • எசேக்கியா ராஜா யூதா முழுவதும் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய கோத்திரங்களின் பல்வேறு பட்டணங்களுக்குச் சென்று, புறமத மேடைகளை அகற்றி, பலிபீடங்களைத் தகர்த்து,விக்கிரகத்தோப்புகளை வெட்டிப் போட்டார். விக்கிரகாராதனைக்கு இலக்காகியிருந்த மோசே செய்த வெண்கலப் பாம்பையுங்கூட அழித்தார். அவருக்கு முன்னும் பின்னும் இருந்த எல்லா  ராஜாக்களையும் விட, அவர் கொண்டிருந்த பக்தி அதிகமாக இருந்தது.

  • எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் தங்கள் பரிசுத்த கடமைகளை நிறைவேற்ற நியமித்தார்.

  • அவருடைய செயல்கள் கர்த்தருடைய பார்வையில் நீதியாகவும் உண்மையுள்ளதாகவும் இருந்தன.

  • எசேக்கியா ராஜா தேவனுடைய நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து, தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடினார்.

 

அசீரியா ராஜாவின் படையெடுப்பு முயற்சி

இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தான். சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது, நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனை பண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள். அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள். 2 நாளாகமம் 32:1-4

  • ஓசெயா ராஜா (எசேக்கியாவுக்கு முன் இருந்த ராஜா) ஆட்சி செய்தபோது, சல்மனாசார் அவரை சிறையில் அடைத்து, இஸ்ரவேலை முழுமையாக ஆக்கிரமித்து அதைக் கைப்பற்றினார். அசீரியா ராஜா யூதாவின் மீது படையெடுக்கத் திட்டமிட்டு எசேக்கியா ராஜாவுடன் அதே முயற்சியை மேற்கொண்டார்.

  • இதைக் கேட்ட எசேக்கியா ராஜா, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் யுத்தத்திற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்று ஆலோசனை பண்ணினார். “நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனை பண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்”.

  • எசேக்கியா ராஜா தனது ஜனங்களை விசுவாச வார்த்தைகளால் ஊக்கப்படுத்தினார். ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்;யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள். 2 நாளாகமம் 32:6-8

    • தைரியமாக இருக்குமாறு அறிவுறுத்தினார், ”நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்”.

    • பயப்படாமல் இருக்கும்படி அறிவுறுத்தினார், “அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்”.

    • எசேக்கியா தேவன் மீது வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக, கர்த்தரைச் சார்ந்திருப்பதை தைரியமாக அறிவித்தார்.“அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்”.

    • எசேக்கியாவின் செய்தி யோவான் எழுதியதின் உணர்வை எதிரொலிக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4

  • ஏனென்றால் ஜனங்களும் எசேக்கியா ராஜாவோடு சேர்ந்து விசுவாசத்தில் இருந்தார்கள்.

 

எதிரி ராஜாவாகிய சனகெரிப், ஜனங்களின் விசுவாசத்தை அசைப்பதற்காக செய்த காரியங்கள்

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்? 2 நாளாகமம் 32:10


1.   ஜனங்களின் விசுவாசத்தை நீக்க வஞ்சனை : சனகெரிப், எசேக்கியா ராஜாவை நம்ப வேண்டாம் என்று தனது ஊழியக்காரர்கள் மூலம் யூதா ஜனங்களை வலியுறுத்தினார். எசேக்கியா அவர்களை ஏமாற்றுவதாகக் கூறி, சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தினார். சனகெரிப் பசியையும் தாகத்தையும் பற்றி எச்சரித்தார். எசேக்கியாவின் நம்பகத்தன்மையைக் குலைக்கவும், அவரை நம்பத்தகாதவர் போல் காட்டவும் முயற்சி செய்தார். எசேக்கியாவின் தலைமையின் மீதான நம்பிக்கையை கைவிடும்படி விசுவாசிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா? 2 நாளாகமம் 32:11

2.   தேவனை விசுவாசிப்பதில் ஜனங்களைக் குழப்பினார் : எசேக்கியாவின் செயல்களைக் குறித்து ஜனங்களை தவறாக வழிநடத்தவும் குழப்பவும் சனகெரிப் முயன்றார். மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றியதன் மூலம் எசேக்கியா தீங்கு விளைவித்ததாக மறைமுகமாக உணர்த்தினார். எசேக்கியாவின் சீர்திருத்தங்களைக் குறித்து கேள்வி எழுப்பினார். அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா? 2 நாளாகமம் 32:12

3.   சத்துருவின் வல்லமையைப் பெருமைப்படுத்தினார் : சனகெரிப் தனது வல்லமையைப் பற்றியும், மற்ற தேசங்களையும் அவற்றின் புறமத தெய்வங்களையும் எவ்வாறு தோற்கடித்தார் என்பதைப் பற்றியும் பெருமை பேசினார். அவர் இஸ்ரவேலின் தேவனை கேலி செய்து, ஜனங்களிடையே சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்குவதன் மூலம் அவர்கள் தங்கள் விசுவாசத்தை கைவிடுவார்கள் என்று நம்பினார். நானும் என் பிதாக்களும் தேசத்துச் சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்த தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ? உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? 2 நாளாகமம் 32:13-14

4.   தேவபக்தியுள்ளவர்களை குற்றஞ்சாட்டினார் : சனகெரிப், தான் யூதா ஜனங்களை வஞ்சித்த போதிலும், எசேக்கியா தான் அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, எசேக்கியா ராஜாவுக்கு எதிராக குற்றச்சாட்டை திருப்பினார். இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, 2 நாளாகமம் 32:15

5.   இஸ்ரவேலின் தேவனை கேலி செய்தார் : சனகெரிப் அத்துடன் நிற்கவில்லை, அவர் ஜனங்களை பயமுறுத்தவும் இஸ்ரவேலின் தேவனை நிந்திக்கவும் செய்தார். தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான். 2 நாளாகமம் 32:17

6.   திகிலைக் கொண்டு வந்தார் : அதிகாரத்தைக் கைப்பற்ற சனகெரிப் அவர்களுக்குள் பயத்தை உண்டாக்கினார். அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி, கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு, மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள். 2 நாளாகமம் 32:18-19

 

ஜனங்களும் எசேக்கியா ராஜாவும் எவ்வாறு பதிலளித்தார்கள்?


1.   மவுனமாயிருந்தார்கள் : எதிரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று எசேக்கியா அறிவுறுத்தினார். எதிரிகளுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று ராஜா கட்டளையிட்டபடியால் அவர்கள் மவுனமாயிருந்தார்கள். ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். 2 இராஜாக்கள் 18:36


2.   ஜெபம் : எசேக்கியா, ஏசாயா தீர்க்கதரிசியிடம் ஜெபிக்கும்படி வற்புறுத்தினார். அவரும் ஜனங்களும் தேவனின் உதவிக்காக நம்பிக்கையிழந்து கதறினர். இது இதில் பிரதிபலிக்கிறது:

  • இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள். 2 நாளாகமம் 32:20

  • கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர், கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். 2 இராஜாக்கள் 19:15-16

  • அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான். 2 இராஜாக்கள் 19:18-19

3.   2 இராஜாக்கள் 19 இல் தேவன் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தெரிவித்தது போல, அவர்களுடைய ஜெபம் துதியும் மன்றாடலும் கலந்ததாக இருந்தது. எதிரியைக் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, ஜெபத்தைத் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தி, உதவிக்காக தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

 

தேவன் அவர்களுக்காக யுத்தம் செய்கிறார்

  • தேவன் சனகெரிப்பின் படையை அழித்ததன் மூலம் யுத்தம் செய்தார். அவருடைய குமாரரையும் அவருக்கு எதிராகத் திரும்பச் செய்தார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள். 2 நாளாகமம் 32:21

    • தேவ சேனை யுத்தம் செய்த போது எதிரிகள் அவமானத்தால் பின்வாங்கினர், “அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்”.

    • அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் குமாரரின் பட்டயத்தினால் கொல்லப்பட்டார். அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரனாகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான். 2 இராஜாக்கள் 19:37

  • ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் யூதா ஜனங்களுக்கு ஆறுதலின் செய்தியைக் கொண்டு வருகிறார். மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 2 இராஜாக்கள் 19:31-34

  • தேவ சேனை 1,85,000 வீரர்களை வீழ்த்தியது. அந்த இரவில், கர்த்தருடைய தூதன் வெளியே சென்று அசீரியரின் பாளயத்தில் 1.85,000பேரை சங்கரித்தார். மறுநாள் காலையில் ஜனங்கள் கண்விழித்துப் பார்த்தபோது, எல்லாருடைய சடலங்களும் கிடந்தன. இதன் விளைவாக, அசீரிய ராஜாவான சனகெரிப் பின்வாங்கி, பாளையத்தை விட்டுப் புறப்பட்டு, நினிவேக்குத் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார். அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரதேங்களாய்க் கிடந்தார்கள். அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். 2 இராஜாக்கள் 19:35-36

  • தேவன் எப்படி யுத்தம் செய்தார்? - "அதம்பண்ணினான்", இதற்கு எதிரியின் எந்த தடயத்தையும் விட்டுவைக்கவில்லை என்று அர்த்தம். “அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; ….“. 2 நாளாகமம் 32:21

 

இந்தப் போரில் இருந்து நமக்கு பல பாடங்கள்

  • நாம் தேவனோடு விசுவாசத்தில் நடக்கும்போது, போராட்டங்களின் வடிவத்தில் வலிமைமிக்க கோலியாத்துகளை எதிர்கொள்கிறோம், அங்கு எதிரி மிகவும் சக்திவாய்ந்தவனாகத் தோன்றலாம், ஜெயம் சாத்தியமற்றது என்று உணரலாம். ஒரு இராணுவம் வீரர்களுக்கு கடினமான நிலப்பரப்பில் எவ்வாறு பயிற்சி அளிக்கிறதோ, அது போல நம்மை பலப்படுத்தவே இந்த சந்திப்புகள், தேவன் இந்த கோலியாத்துகளை நமக்கு எதிராக போரிட பயன்படுத்துகிறார்.

    • நம்முடைய பதில், தேவனைத் தேடுவதும், விசுவாசத்தில் பலப்படுத்தும்படி அவரிடம் கேட்பதும் / நமது பலவீனத்தை மேற்கொள்ள அவருடைய பலத்தைத் தேடுவதும் ஆகும்.

    • எசேக்கியா ராஜாவைப் போல அமைதியாக இருங்கள், எதிரிகளின் கோபத்திற்கு எதிர்வினையாற்றாதீர்கள்.

  • போராட்ட காலங்களில், எதிரியின் வஞ்சனைகள் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்; பாவம் செய்ய நம்மைத் தூண்டும் அதே வேளையில், நம்மைத் துஷ்பிரயோகம் செய்து, அச்சுறுத்தி, தேவனின் திட்டத்திலிருந்து விலகிச் செல்லும்படி, நம்மைத் தவறாக வழிநடத்துகிறான்.

    • எதிரி நம்மை தவறாக வழிநடத்தும்போது / நம்மை அச்சுறுத்தும் போது / துஷ்பிரயோகம் செய்யும் போது / ஏமாற்றும் போது தேவனிடம் ஜெபம் செய்வதே நமது பதிலாக இருக்க வேண்டும். அப்படி நடக்கும் போது, ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம்.

  • நமது பிரச்சனைகளை விட வலிமையான, பெரிய தேவன் நமக்கு இருக்கிறார் / வலிமைமிக்க கோலியாத்துகளை விட பெரியவர். பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4

    • தேவனிடம் ஊக்கமாக ஜெபிப்பதும் அவரை நோக்கிக் கூப்பிடுவதுமே நம்முடைய பதிலாக இருக்க வேண்டும். அவர் நம் எதிரியை விட மிகவும் வல்லமையானவர் என்பதால், அவர் நமக்காக யுத்தம் செய்வார் என்று நம்புவோமாக. “அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்”.

  • தேவன் நமக்காக யுத்தம் செய்யும்போது, அவர் "சத்துருவின் தடயத்தை விட்டுவைக்காமல்" அழித்துவிடுவார். நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது  யாரையும் காண மாட்டீர்கள். தேவனை நம்புகிறவனுக்கு சங்கீதம் 91 இல் சொல்லப்பட்டுள்ள வாக்குத்தத்தம் உண்மையாயிருக்கிறது. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். சங்கீதம் 91:7-8

  • யுத்தத்தில் தேவனின் வழி பல விதங்களில் இருக்கும். எதிரியை எதிர்த்துப் போராட எதிரியைப் பயன்படுத்துவார், எதிரிகள் வந்து உங்களோடே சமாதானமாகும்படி செய்வார்.

    • ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7

    • உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். ஏசாயா 41:12

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Philip
Oct 06

Amen

Like
bottom of page