top of page

சர்வவல்லமையுள்ள தேவன் உங்களிடம் எப்படி பேசுகிறார்?

Kirupakaran

நீங்கள் ஒருவரிடம் பேசும்போது என்ன நடக்கிறது? நீங்கள் இதைப் படிப்படியாகப் பிரித்துப் பார்த்தால், முதல் படி “நீங்கள் அந்த நபர் புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான மொழியில் (ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இந்தி அல்லது இருவருக்கும் பொதுவான ஒரு மொழி) மட்டுமே பேசுகிறீர்கள்”, இரண்டாவது “மற்றவர் நீங்கள் சொல்வதைக் கேட்கிறார் என்று எதிர்பார்த்து தான் பேசுவீர்கள், அவர் கேட்கவில்லை என்றால், நீங்கள் உடனடியாக பேசுவதை நிறுத்திவிடுவீர்கள்", மூன்றாவது “ நீங்கள் பேசியதை அவர் கவனித்துக் கொண்டிருப்பதை தலையை அசைப்பது அல்லது திரும்பப் பேசுவது போன்ற ஏதாவது ஒரு செயலின் மூலம் பதில் அளித்த பின் தான் ஒரு பேச்சு முழுமையாக முடிந்தது” என்று கூறலாம். நீங்கள் யாரிடமாவது பேச விரும்பினால் இந்த மூன்று-படி சுழற்சி தொடரும் என்பதே உண்மை.


தேவன் உங்களிடம் எப்படிப் பேசுகிறார், நீங்கள் தேவனிடம் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதை குறித்து இயேசுவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இது. ஆவிக்குரிய முதிர்ச்சியில் இது நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.


இந்த கேள்விக்கான பதில் பைபிளில் உள்ளது. இதே கேள்வியை சீடர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.


'அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். ' மத்தேயு 13:10


உவமை என்றால் என்ன / இயேசு நம்மிடம் பேச ஏன் உவமையைப் பயன்படுத்துகிறார்?


அடிப்படையில், உவமை என்பது அன்றாட பொது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு உதாரணம் அல்லது கதை. ஒரு ஆவிக்குரிய உண்மையை மறக்க முடியாத வகையில் விளக்க இந்த உவமை உதவுகிறது. மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில், ஜனக்கூட்டத்திற்கும், சீடர்களுக்கும் கற்பிக்க இயேசு 7 வெவ்வேறு உவமைகளை பயன்படுத்தியதைக் காணலாம்.


இயேசு கூறிய பல உவமைகளை சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை "நீங்கள் ஏன் மக்களிடம் உவமைகளாகப் பேசுகிறீர்கள்?", என்று அவர்கள் கேட்ட இந்த கேள்வி நமக்கு தெளிவுபடுத்துகிறது. மக்கள் புரிந்து கொள்ளக்கூடியவற்றை எளிய முறையில் கற்பிப்பது எளிது. ஆனால், ஏன் அதை செய்யாமல் உவமைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கற்பிக்கிறார்? இதற்கான பதில்,


'அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ' மத்தேயு 13:13


தம்மைப் பின்பற்றுபவர்கள் மட்டும் தான் தாம் பேசுவதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இயேசுவின் மீது உங்களுக்கு விசுவாசம் இருந்தால் மட்டுமே அவர் பேசும் உவமைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில், வேதத்தை படிக்கும் ஒருவருக்கு இது ஒரு எடுத்துக்காட்டு அல்லது கதையாக இருக்கும். சரி, இயேசு சீடர்களிடமும் மற்றவர்களிடமும் உவமைகளாகப் பேசினார், இப்போது அவர் உங்களிடமும் என்னிடமும் எப்படிப் பேசுகிறார்?


தேவன் உங்களிடம் எப்படி பேசுகிறார்?


தேவன் ஒவ்வொரு மக்களிடமும் பேசுவதில் பல்வேறு நிலைகள் உள்ளன. உங்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியை மேம்படுத்துவதற்கான உங்களுடைய ஆர்வம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து தேவன் உங்களிடம் பேசும் விதம் வேறுபடும். இதை முதிர்ச்சியின் பல்வேறு நிலைகளாக வகைப்படுத்தியுள்ளேன்.


நிலை 1 - ஆரம்பகால கிறிஸ்தவர் அல்லது கிறிஸ்துவின் விசுவாசத்திற்கு புதியவர்


  • இயேசு அவர்களுடன் முதலில் வேறொருவர் மூலமாகவோ, ஒரு நண்பர் மூலமாகவோ அல்லது போதகர் மூலமாகவோ அல்லது கிறிஸ்துவில் ஏற்கனவே உள்ளவர் மூலமாகவோ பேசுவார். அவர்கள் வேதாகமத்தில் இருந்து வார்த்தையை சொல்லுவார்கள். அவர்கள் கடந்து செல்லும் சூழ்நிலையில் அந்த வார்த்தை அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடும். இயேசுவின் வார்த்தை அவர்களின் காயத்திற்கு மருந்தாக இருக்கும்.

  • இயேசுவின் மீது விசுவாசம் - இயேசுவே நமது ஆண்டவர் மற்றும் இரட்சகர், அவர் நம் பாவங்களுக்காக மரித்தார், அவராலே மட்டுமே நமக்கு இரட்சிப்பு உண்டு என்று நம்பியிருப்பது.

  • வேதாகமத்தில் நம்பிக்கை - தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் பொழுது அவர்களின் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்படிக்கு வார்த்தை செயல்படத் தொடங்கும். அது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அதிசயமாக இருக்கலாம் அல்லது தற்போதைய சவாலில் அது ஒரு முறிவை உண்டு பண்ணும் காரியமாக இருக்கலாம்.

  • தேவனுடனான உறவு இங்கே தனிமனிதனுக்கும் இயேசுவுக்கும் இடையே தொடங்குகிறது. நீங்கள் தேவனுடனான உறவில் நுழையத் தொடங்கும் போது அறிமுகப்படுத்திய நபர் (நணபர் / போதகர் அல்லது ஆயர் போன்றவர்கள்) உங்களுக்கும் இயேசுவுக்கும் இடையே மத்தியஸ்தராக இருக்க மாட்டார்கள்.

  • கிறிஸ்துவின் ஆசீர்வாதம் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி மேலும் அறிய ஏங்க வைக்கும். எனவே அவர்கள் பைபிளைப் படித்து, தங்களுக்குத் தெரிந்த வழியில் தேவனிடம் ஜெபம் செய்வார்கள்.


நிலை 2 - கிறிஸ்துவைப் பின்பற்றி அறிந்த கிறிஸ்தவர்கள்
  • இப்போது நீங்கள் புதிதாகப் பிறந்த கிறிஸ்தவரிலிருந்து "கிறிஸ்தவர்" ஆக முதிர்ச்சியடைந்துள்ளீர்கள். எனவே பைபிளைப் படிக்கவும் / தொடர்ந்து ஜெபிக்கவும் வாஞ்சை வந்து விடும்.

  • தேவனுடைய வார்த்தை - இயேசு இவர்களோடு "வேதாகமம்" வழியாக மட்டுமே பேசுவார். நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது, ​​பவுல் சொல்வது போல் வார்த்தை கிரியை செய்யும். 'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 'எபிரெயர் 4:12

  • கிறிஸ்துவில் மனந்திரும்புதல்

    • தேவனுடைய வார்த்தை அவர்கள் வாழ்க்கையின் தவறான பாவங்களைக் கண்டித்து, காண்பிக்கும் மற்றும் கிறிஸ்துவில் மனந்திரும்புதலைக் கொண்டுவரும். இது நித்திய சமாதானத்தைத் தரும். 'தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. 2 கொரிந்தியர் 7:10

    • நீங்கள் தினமும் வார்த்தையைப் படிக்கும்போது, அந்த ​​வார்த்தை, பழைய நபரை மெதுவாக கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய நபராக மனந்திரும்புதலின் மூலம் மாற்றும். நீங்கள் தினமும் படித்து தேவனிடம் ஜெபிக்கும்போது இவை அனைத்தும் படிப்படியாக நடக்கும்.

  • கிருபை / கருணை / அன்பு

    • இந்தப் பயணத்தில் நீங்கள் நடக்கும்போது, நீங்கள் தேவனின் பிள்ளை என்ற உறுதியையும் பெறுவீர்கள்.

    • இந்த பயணத்தில் நீங்கள் நடக்கும்போது தேவனின் கிருபை , கருணை மற்றும் அன்பை அனுபவிப்பீர்கள். 'இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், 'ரோமர் 3:24-25

    • நீங்கள் கிறிஸ்துவில் நடக்கும்போது, வாழ்க்கை முழுமையடையாது, இயேசுவின் கிருபை மற்றும் இரக்கத்தின் மூலம் அவர் உங்களை மனந்திரும்பவும், அவரிடம் நெருங்கி வரவும் பரிபூரணமான விஷயங்களை உங்களுக்கு உணர்த்துவார்.


நிலை 3 - பரிசுத்த ஆவியின் மூலம் பேசுகிறார்
  • தேவனின் பிள்ளை என்ற உறுதி

    • நீங்கள் வேதத்தை படித்து, ஜெபித்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் தேவனுடைய பிள்ளை என்ற உறுதியைப் பெறுவீர்கள்.

  • தேவனின் பரிசுத்த ஆவி

    • தேவனின் பிள்ளகளாகிய நீங்கள் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவீர்கள். இது பவுலால் நன்கு விளக்கப்பட்டுள்ளது, நீங்கள் இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். 'மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். 'ரோமர் 8:10,14-16

    • நீங்கள் கிறிஸ்துவுக்குள் நடக்கும்போது, தேவனின் ஆவி உங்கள் தவறான செயல்களை உங்களுக்கு உணர்த்தி, அவரிடம் "அப்பா, அப்பா" என்று அழுது மனந்திரும்ப வைத்து, உங்கள் பாவங்களை மன்னித்து ஒவ்வொரு நாளும் உங்களைத் தூய்மையாக்கும். உங்கள் பாதையில் வரும் பாவங்களின் பொறிகளிலிருந்து தேவனின் ஆவி ஒவ்வொரு நாளும் உங்களைக் காக்கும். பவுல் அதை நன்றாக விளக்குகிறார், 'மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. ' ரோமர் 8:6-7

  • சவால்கள் / துன்பங்கள்

    • நீங்கள் ஆண்டவருடன் நடக்கும்போது, உங்களுக்கு சவால்கள் / போராட்டங்கள் இருக்கும். "கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும் " மற்றும் இந்த சவால்களில் இருந்து ஆவிக்குரிய பாடங்களைக் கற்பிக்க தேவனின் ஆவி உங்களுக்கு சமாதானத்தைத் தரும். தொல்லைகள் பற்றிய உலகப் பார்வையும் ஆவிக்குரிய பார்வையும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் பிரச்சனைகள் கிறிஸ்துவில் உங்களை பலப்படுத்தவும், நீங்கள் இயேசுவை அதிகமாக சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவுமே உங்களுக்கு ஏற்படுகின்றன. 'நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 'ரோமர் 8:17

    • சவால்களின் போது இயேசு தம் பிள்ளைகளை விட்டுச் செல்வதில்லை, நமக்குப் பாடம் கற்பிப்பதற்காக மட்டுமே இந்தப் பாடுகளைத் தருகிறார். நீங்கள் எப்படி ஒரு குழந்தையை சைக்கிள் கற்க வைக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள், அதை போல் அவர் ஒரு சில நேரம் மட்டும் தம்முடைய கைகளை நம் மீதிலிருந்து எடுப்பார்.

  • தேவனுக்குத் துதி மற்றும் நன்றி

    • நீங்கள் ஆண்டவருடன் நடக்கும்போது, இயேசுவின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள், அது அன்பின் / கருணையின் கனிகளாக வெளிப்படும். அதை உங்களிடம் வைத்திருக்க முடியாது. மற்றவர்களிடம் வெளிப்படுத்தி, பகிர்ந்து கொள்வீர்கள். அது தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களின் சாட்சியம் அல்லது அவருக்காக நீங்கள் செய்யும் தன்னார்வப் பணி அல்லது தேவையில் உள்ளவர்களுக்கு கொடுப்பது போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். 'சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, 'எபேசியர் 5:19-20

    • இயேசுவின் விருப்பத்திற்கு சரணடையுங்கள், தேவனின் ஆவி உங்களை வழிநடத்தினால், உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவருடைய விருப்பப்படி மட்டுமே செய்வீர்கள். நீங்கள் தேவனின் வார்த்தையைக் கேட்கத் தொடங்குவீர்கள். உவமைகள் மற்றும் தேவனுடைய வார்த்தைகள் உங்களுடன் நேரடியாகப் பேசி, உங்கள் வாழ்க்கையின் அன்றாட சவால்களை சந்திக்கும்படி வழிநடத்தும். தேவன் விரும்புகிறபடி நீங்கள் வார்த்தையைக் காணவும், கேட்கவும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 'உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். 'மத்தேயு 13:12,16


நிலை 4 - பரிசுத்த ஆவியானவர் மற்றும் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு
  • பரிசுத்த ஆவியின் செயல்கள்

    • யேசுவோடு நடக்கும் போது நீங்கள் தேவனின் பிள்ளை என்ற உறுதியோடு நடக்கிறீர்கள்.

    • நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் உங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வழிநடத்துவதை உணரலாம். வாழ்க்கையில் சவால்கள் இருக்கும்போது உங்களை வழிநடத்த தேவனைச் சார்ந்திருங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் உங்கள் திருமண காரியத்தை இயேசுவிடம் ஒப்படைத்து விடுங்கள், அவர் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணையைக் காண்பிப்பார். உங்களுக்கு ஒரு வேலை வேண்டும் என்று ஜெபித்தால் அவர் உங்களுக்கு சரியான வேலையைத் தந்து உங்களை வெற்றி பெறச் செய்வார்.

    • விசுவாசத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேவனுடனான உறவு அவரை உங்கள் தந்தை / நண்பரைப் போல மாற்றும். அவர் அந்த உறவை வாஞ்சித்து, கனம் பண்ணுகிறார்.

    • நீங்கள் தேவனை சார்ந்து இருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் உலகில் நீங்கள் பார்க்கும் பல விஷயங்களைப் பகுத்தறிவதற்கான ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பார். மேலும், நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, நன்றாகப் புரிந்து கொள்ளும்படியான ஞானத்தை உங்களுக்குத் தருவார். பல சமயங்களில், தேவனுடைய வார்த்தையை நீங்கள் கடந்த காலத்தில் படித்ததை விடவும், புதிய அர்த்தங்கள் மற்றும் பரிமாணங்களோடு இன்னும் நன்றாக கற்றுக் கொள்வீர்கள்.

  • பரிசுத்த ஆவியின் கனிகள்

    • தேவன் நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பல வரங்களை வழங்குகிறார். 'வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12:4-5,8-11

    • தேவனின் வரங்கள் அவருடைய நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவருடைய ராஜ்யத்தை சிறப்பாகச் செய்ய, பகுத்தறியும் ஆவி உங்களுக்கு இருப்பதால், தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்க நீங்கள் அதை தெளிவாகப் பயன்படுத்தலாம். குணப்படுத்தும் ஆவி உங்களிடம் இருந்தால் அதன் மூலம் ஒருவருக்கு சுகம் கொடுத்து தேவனின் வழியில் அழைத்து செல்ல உதவும். தேவன் அவருடைய விருப்பத்திற்கேற்ப கனிகளைக் கொடுப்பதால் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

    • தேவன் உங்களிடம் பேசும் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், அது ஒரு இயல்பான காரியம்தான். 'அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 13:17. ஆனால், ஆண்டவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள், சரியான நேரத்தில்/சரியான இடத்தில் அதன் அர்த்தம் என்ன என்பதை அவர் உங்களுக்குப் புரிய வைப்பார், அது உவமை அல்லது தேவனின் நேரடி வார்த்தையின் மூலமாக இருக்கலாம்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும் போது தேவன் உங்களைப் பல நிலைகளுக்கு அழைத்துச் செல்வார். இயேசுவைச் சந்திக்கும் நாள் வரை, பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பரிசுத்தராகவும், இயேசுவைப் போல அதிக நீதியுள்ளவராகவும் ஆக்க முயற்சிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். பவுல் இதை நன்றாக விளக்குகிறார்,

'நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். '2 தீமோத்தேயு 4:7-8


ஒன்றை நினைவில் வையுங்கள், நாம் தேவனிடம் பேசுவது சாத்தானுக்குப் பிடிக்காது, நீங்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் பரவாயில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் தேவனிடம் இருந்து நாம் விலகும்படிக்கு நம்மை வஞ்சிக்கவும் வாழ்க்கையில் சவால்களைக் கொண்டு வரவும் செய்வான். அவன் தேவனைப் போல் உங்களிடம் பேசுவான், கிறிஸ்துவர்களை விட சாத்தானுக்கு வேதம் நன்றாக தெரியும்.


ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள், நீங்கள் கடவுளின் பிள்ளைகள். உங்களைச் சுற்றி ஒரு மதில் உள்ளது, அது சாத்தானின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது, அவருடைய விருப்பத்தை நீங்கள் பின்பற்றும்போது அவர் உங்கள் கைகளின் வேலையை ஆசீர்வதிப்பார். யோபு தேவனை சந்தித்த காரியம் மற்றும் சாத்தானுடைய விளக்கத்தின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். இது நமக்கும் பொருந்தும்.''அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று”. 'யோபு 1:9-10


இதில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் விட்டுச் சென்ற மேடைக்கு உங்களை மீண்டும் அழைத்துச் சென்று தொடர இயேசு கைகளை விரித்துக் காத்திருக்கிறார். இயேசுவிடம் பேசுங்கள், அவர் உங்களிடம் பேசி உங்களை வழிநடத்துவார்.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page