top of page
Kirupakaran

சீஷத்துவம்



உலகில் பல வகையான சீடர்கள் உள்ளனர். அரசியல்வாதிகளுக்கு ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரைப் பின்பற்றும் சீடர்கள் உள்ளனர், அவர்களுக்கு உதவுவதற்கு அவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். அதே போன்று அலுவலகத்திலும் மக்கள் தலைவர்கள் செய்வதைப் போலவே முயற்சி செய்ய பல தலைவர்களைப் பின்பற்றுகிறார்கள். விரைவில் அதில் மேதைகள் / குருக்கள் ஆகி இன்னும் சிறந்து விளங்குகிறார்கள்.


இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்று வரும்போது, நாம் எப்போதும் கிறிஸ்துவின் சீடர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். ஆனால் நாம் சீஷத்துவத்தை நம்மிடம் இருந்து அகற்றி, போதகர்கள் / முழுநேர ஊழியக்காரர்களிடம் இறக்கி வைத்து, நான் ஒரு கிறிஸ்தவன் மட்டுமே என்று சொல்கிறோம். சீஷத்துவம் என்பது முழுநேர ஊழியத்திற்கு மட்டுமே, நான் முழுநேர ஊழியக்காரனாக இல்லை என்றால் அது எனக்குப் பொருந்தாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. சீஷத்துவத்தைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது? லூக்கா 9/10 அதிகாரங்களில் இருந்து இதைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.


இயேசுவிடமிருந்து இதே கட்டளையின் இரண்டு நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம், ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்யப்பட்டது.

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். லூக்கா 9:1-2

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். லூக்கா 10:1-3


இது எனக்குப் பொருந்துமா?

எனவே முழு நேர ஊழியக்காரர்களுக்கு மட்டுமே சீஷர் என்ற அந்தஸ்து பொருந்தும் என்ற கருத்து சரியல்ல.

  • "அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து" (லூக்கா 9:1) மற்றும் "இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்"(லூக்கா 10:1) என்ற இந்த இரண்டு வசனங்களையும் பாருங்கள்.

  • நீங்கள் கிறிஸ்துவால் இரட்சிக்கப்படும் தருணத்தில், சீடர் என்பது அனைவருக்கும் பொருந்தும்.

  • சீஷத்துவம் என்பது ஒரே முறை செய்யும் வேலை அல்ல, நாம் செய்யும் வேலை/தொழில் எதுவாக இருந்தாலும் அது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலை.

சீஷர்களுக்கான தேவனின் வாக்குத்தத்தம்

1. வல்லமையும் அதிகாரமும்

  • இயேசு எல்லாவற்றிலும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர். அவருடைய இறையாண்மையிலிருந்து மூன்று சிறப்பான குணாதிசயங்கள்அவரைப் பெரியவராக்குகின்றன.

    • சர்வ வல்லமை - எல்லையற்ற வல்லமையைக் கொண்டிருக்கும் குணம்

    • எங்கும் நிறைந்திருப்பது - எங்கும், எல்லாவற்றிலும் இருக்கும் தன்மை

    • எல்லாம் அறிந்திருப்பது - முழுமையான அல்லது அதிகபட்ச அறிவைக் கொண்டிருக்கும் குணம். சர்வ வல்லமை மற்றும் பரிபூரண நன்மையுடன், இது பொதுவாக முதன்மையான தெய்வீக பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

  • ஏசாயா தீர்க்கதரிசி அவரது வல்லமையைப் பற்றி கூறுகிறார்: "உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்" ஏசாயா 44:24, அவர் தமது வல்லமையால், எல்லாவற்றையும் தமது கைகளால் செய்கிறார்.

  • ஏசாயா தீர்க்கதரிசி அவரது அதிகாரத்தைக் குறித்துப் பேசுகிறார். "யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்" ஏசாயா 48:12-13. அவருடைய அதிகாரத்தினால் அழைக்கும்போது வானமும் பூமியும் ஒன்றாக எழுந்து நிற்கும். யாராவது இந்த மாதிரியான காரியங்களைச் செய்யக்கூடும் என்று நினைப்பது மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது, ஆனால் அது தேவனின் வல்லமை.

  • அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து”, இது தான் சீடர்களுக்கான வாக்குறுதி. இயேசுவின் நாமத்தில் அதே அதிகாரம். இந்த வல்லமையையும் அதிகாரத்தையும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், "இயேசுவின் நாமத்தில்" என்று கூறுங்கள். அப்பொழுது, அதே வல்லமையையும் அதிகாரத்தையும் பெறுவீர்கள்.

2. சகல பிசாசுகளையும் துரத்தவும்

  • சகல பிசாசுகளையும் துரத்துங்கள். இது சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் அதிகாரம் என்பதை கவனியுங்கள். பிசாசுகளைத் துரத்தும் இந்த அதிகாரத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கு முன்பு. பிசாசுகளைப் பற்றி புரிந்து கொள்வோம்.

  • பேய் / சாத்தான் / எதிரி / பிசாசு / உலகத்தின் அதிபதி / அவதூறு செய்பவன் / லூசிபர் / வான் ராஜ்யத்தின் அதிபதி என்று பிசாசுக்கு பல பெயர்கள் உள்ளன. அனைத்தும் ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • சாத்தான் ஆவியுள்ளவன். அவன் தேவனுக்கு விரோதமாக ஒரு பரலோக கிளர்ச்சியை நடத்தினான். பின்னர் அதன் விளைவால் பூமியில் தள்ளப்பட்டான் (லூக்கா 10:18). அவனுடைய தனிப்பட்ட பெயர், "சாத்தான்" என்பது "எதிரி" என்று பொருள்படும். இந்தப் பெயர் சாத்தானின் அடிப்படை இயல்பைக் குறிக்கிறது: அவன் தேவனுக்கும், அவர் செய்யும் அனைத்திற்கும், அவர் நேசிக்கும் அனைத்திற்கும் எதிரி. ("அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்" 2 தெசலோனிக்கேயர் 2:4)

  • சாத்தான் எவ்வாறு உருவானான், அவன் எப்படி பரலோகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டான் என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள லூக்கா 18:10 / வெளிப்படுத்தின விசேஷம் 12:7-9 / எசேக்கியேல் 28:12-19 அதிகாரங்களைப் படியுங்கள்.

  • இயேசு சீடர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்.

  • பிசாசுகளைத் துரத்த

    • "சகல பிசாசுகளையும் துரத்தவும்.....அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,..". பிசாசுகள் நற்செய்தியைத் தடுக்கும் முதன்மையான சக்தியாக இருந்ததால் இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது. நற்செய்தி பரவுவதற்காக, பிசாசுகளை அகற்ற இது வழங்கப்பட்டது. ("தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன" யாக்கோபு 2:19) இயேசுவுக்கு எல்லா வல்லமையும் அதிகாரமும் இருப்பதால் அவரது நாமத்தைக் கேட்டதும் பேய்கள் நடுங்குகின்றன.

    • பிசாசு "உலகத்தின் அதிபதி" என்பதால் அவன் மீது நமக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஆனால் இயேசுவிற்கு அவன் மீது வல்லமையும் அதிகாரமும் உள்ளது. "இயேசுவின் நாமத்தில்" என்று சொல்வதன் மூலம், அதே வல்லமையை பிசாசை விரட்டுவதற்குக் கொடுத்திருக்கிறார்.

  • வியாதியஸ்தர்களைக் குணமாக்க

    • வியாதியஸ்தர்களைக் குணப்படுத்துவது என்பது பிசாசினால் உண்டான வியாதியைக் குறிக்கிறது. குணப்படுத்துதல் என்பது பிசாசினால் உண்டான "வியாதியின் அனைத்து ஆதாரங்களையும் நீக்குதல்".

    • மெலித்தா தீவில் நோயுற்றவர்களை பவுல் எவ்வாறு குணப்படுத்தினார் என்ற உதாரணம் - "தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜூரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து. குணமாக்கப்பட்டார்கள்". அப்போஸ்தலர் 28:7-9

3. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவும்

  • சாத்தானின் செயல்களைத் தடுப்பதற்கு வல்லமையும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது, இயேசு கற்பித்தபடி நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதே ஒரே நோக்கம். லூக்கா 9:2 இல் “தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்” என்று சொல்லப்பட்டுள்ளது.

  • இந்த சுவிசேஷம் அல்லது "தேவனுடைய ராஜ்யம்" என்றால் என்ன? - சுவிசேஷம் என்பது உங்கள் பாவத்தை உணர்ந்து, இயேசுவில் மனந்திரும்பி, அவருக்கு வழியைத் திருப்பி, அவருடன் நடப்பது ஆகும்.

  • பலர் ஊழியத்தை பணம் சம்பாதிப்பதற்கான சூழலாகப் பயன்படுத்துகின்றனர். நற்செய்தி என்பது அதுவல்ல. ஒவ்வொரு நபரும் பிணைக்கப்பட்டிருக்கும் பாவங்களை அவர்களுக்கு அறிய வைத்து, பாவத்திலிருந்து விடுதலையாக கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களை அழைத்துக் கொண்டு வருவது தான் சுவிசேஷம் ஆகும். இந்தப் பணி சீடர் அல்லது ஊழியரின் பணி அல்ல, அது அவர்களை பாவத்திலிருந்து விடுவிக்கும் இயேசுவின் பணி ஆகும்.

  • “பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும்” என்ற வார்த்தையைப் படிக்கிறோம். சொஸ்தமாக்குதல் என்றால் "முழுமையடைதல்" என்று பொருள்படும். நற்செய்தி நமக்கு வந்தவுடன், சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே பரிசுத்த ஆவியை நற்செய்தியைப் பெற்றவருக்குக் கொடுப்பதன் மூலம் இயேசுவைப் போல மாறுதல். நீங்கள் அவருடன் நடக்கும்போது, ஆவியின் பலனை அடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபையைப் பெறுவதே இது. கலாத்தியர் 5:22-23


சீஷத்துவத்திற்கு இருக்க வேண்டிய தகுதிகள்


நான் முன்பே குறிப்பிட்டது போல், இயேசுவால் தொடப்படும் தருணத்தில், நாம் இரட்சிப்பைப் பெறுகிறோம். நாம் புதிதாக்கப்பட்டு, ஒரு சீடராக ஊழியம் செய்ய உற்சாகமாக இருக்கிறோம், ஆனால் எதிரி, பிசாசு ஒரு "திருடன்". ("திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்". யோவான் 10:10) அவன் நம்முடைய பரிசுத்தத்தை "திருடவும்", நமது தெய்வீகத்தை "கொல்லவும்" மற்றும் நமது நீதியை "அழிக்கவும்" வருகிறான். அவன், தேவனால் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாவை தேவனுடைய ராஜ்யத்திலிருந்து உலகத்தின் ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கிறான். தேவனுடைய ராஜ்யம் "பரிசுத்தம்", "தெய்வீகம்" மற்றும் "நீதி" ஆகியவைகளால் நிரம்பியது. உலகத்தின் ராஜ்யம் பாவங்களால் நிறைந்துள்ளது.

நீங்கள் என் சீடராக விரும்பினால் பின்வருபவற்றை செய்யுங்கள் என்று இயேசு கூறுகிறார். "பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்”. லூக்கா 9:23-26


1. தன்னைத்தான் வெறுத்து

  • "ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" என்று இயேசு சொன்னார். தன்னைத் தான் வெறுத்து என்றால் என்ன? உங்கள் சுய பலத்தை சார்ந்து இருக்காதீர்கள், மாறாக உலகில் உள்ள ஒவ்வொரு காரியத்தை செய்யும்போதும் இயேசுவை சார்ந்திருங்கள்.

  • நம்மில் உள்ள சுயம் எப்போதும் பாவம் செய்ய விரும்புகிறது. நீங்கள் உங்கள் சுயத்தை சார்ந்திருந்தால் உங்களிடமிருந்து பாவ சுபாவம் மட்டுமே வெளிப்படும். அது பாவமாக இருந்தால் நீங்கள் நற்செய்தியை அறிவிக்க மாட்டீர்கள்.

  • “தன்னைத்தான் வெறுத்து” என்கிற இந்த கட்டளை தேவனின் பரிசுத்தத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும் பாதையாகும். "நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக". லேவியராகமம் 11:45 NIV. அவர் பரிசுத்தமானவர் என்பதால் நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவருடைய பரிசுத்தத்திற்கு பாவத்தின் மீது எந்த ஈர்ப்பும் இல்லை. நாம் நம் சுயத்தை மறுத்து, நான் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன், என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் ஆண்டவரே என்று சொல்லும்போது, அவர் நம் பாவங்களைக் கழுவி, நாம் முன்பு பார்த்த அதே வல்லமை / அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடைய பரிசுத்தத்தை நமக்கு அணிவிப்பார்.

2. தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு

  • "தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு" என இயேசு சொன்னார். யோவான் 10:10 ல் நாம் முன்பு படித்தது போல், "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்". பாவத்தின் வலையில் வீழ்வதற்கு நமது மாம்ச இச்சைகளுக்கு இடையே ஒரு நிலையான போராட்டம் உள்ளது.

  • இந்த பாவத்தில் நாம் எப்படி மாட்டிக்கொள்கிறோம்? "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்". 1 யோவான் 2:15-17 NIV

    • எச்சரிக்கை - உலகத்தையோ உலகில் உள்ள எதையுமோ நேசிக்காதீர்கள். தேவனே நமக்கு ஆதாரமாகவும் போஷிக்கிறவராகவும் இருக்கிறார், அவரே உலகைப் படைத்தார், உலகில் உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார், அதன் பின்னே ஓடாதீர்கள், உலகத்தின் தேவைகளை அவர் வழங்குவார். மத்தேயு 6:33 NIV இவ்வாறு கூறுகிறது, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்".

    • பிரச்சனைகள்

      • ... சரீரத்தின் இச்சை (சுய ஆசைகள், சாத்தான் - பொய்களின் ஆவி)

      • ... கண்களின் இச்சை (உலக அழகின் மீதான ஈர்ப்பு, சாத்தான் - வஞ்சிக்கும் ஆவி)

      • ... ஜீவனத்தின் பெருமை (ஒன்றை சாதித்தவுடன், அதைப் பற்றி பெருமை கொள்வது, சாத்தான் - உங்கள் வேலைக்கு புகழை எடுத்துக் கொள்ளும் பெருமையின் ஆவி).

  • சிலுவை மரணத்தையும், இயேசு நமக்காக பாவங்களிலிருந்து மரணத்தை எவ்வாறு வென்றார் என்பதையும் குறிக்கிறது. சிலுவையின் மூலம் நாம் கிறிஸ்துவின் நித்திய சுதந்தரத்தை தினமும் பெறுகிறோம் எபிரேயர் 9:15

  • உலகில் நடக்கும்போது நாம் தவறி பாவத்தில் விழுகிறோம் (சரீரத்தின் இச்சை / கண்களின் இச்சை / ஜீவனத்தின் பெருமை), ஆனால் அவருடைய கிருபையால் நாம் அவருடைய கோபத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.

  • அநுதினமும் சிலுவையை எடுத்துக் கொள்ளுங்கள் - கிறிஸ்துவிடம் வந்து உங்கள் பாவங்களை வைத்து, அப்பா நான் இந்த பாவத்தை / தவறை செய்துவிட்டேன், மன்னியுங்கள் என்று கூறி பாவமன்னிப்பைக் கேளுங்கள். பாவத்திலிருந்து கழுவி சுத்தப்படுத்த உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தேவனின் பார்வையில் நீதிமான்களாக்கப்படுவீர்கள். இது நாம் தினமும் குளிக்கும் போது, அழுக்கு போய், பின் மீண்டும் வருவதைப் போன்றது. இந்த உலகத்தின் இறுதி வரை வாழ்நாள் முழுவதும் நாம் பரிசுத்தம் அடையும் வரை செய்ய வேண்டியது.

  • நீங்கள் பாவத்தால் நிரம்பியிருந்தால், பிசாசுகளை விரட்டவும், வியாதியஸ்தர்களைக் குணப்படுத்தவும் கூடிய வல்லமையும் அதிகாரமும் உங்களிடம் இருக்காது. பொல்லாத ஆவி, விபச்சாரத்தின் ஆவி நிரம்பிய ஒரு சகோதரருக்காக நீங்கள் ஜெபிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்களும் அதே வழிகளில் பாவம் செய்துவிட்டு இயேசுவின் நாமத்தினாலே என்று சொன்னால், சாத்தான் உங்களிடம் திரும்பிப் பேசி, அப்போஸ்தலர் 19-ல் நடந்தது போல உங்கள் பாவங்களை வெளிப்படுத்துவான். "பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்" அப்போஸ்தலர் 19:15-16

3. என்னைப் பின்பற்றக்கடவன்

  • இயேசு சொன்னார், “தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" - நீங்கள் ஒருவரைப் பார்த்து வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் அவரைப் பின்தொடர்கிறீர்கள். அதே மாதிரி, “என்னைப் பின்பற்றக்கடவன்" என்கிற வார்த்தை, நம் கண்களை இயேசுவின் மீதும், நம்மிடம் தினமும் பேசும் அவருடைய வார்த்தைகள் மீதும் வைத்திருக்கச் சொல்கிறது. உலக விஷயங்களிலும், இயேசுவின் மீதும் நம் கண்களை வைத்தால், நம் வாழ்வில் அல்லது ஊழியத்தில் அவர் திட்டமிட்டதைச் செய்ய முடியாது.

  • அவரைப் பின்பற்றுவது நம் பாவங்களை நமக்கு வெளிச்சம் போட்டு, மனந்திரும்புவதற்கு நம்மைச் சுத்தப்படுத்துகிறது.

  • இது ஒரு தலைகீழ் செயல்முறை. என்னைப் பின்பற்றுங்கள் (பாவத்தைக் காட்டுதல்) -> சிலுவையை எடுத்துக்கொண்டு (மனந்திரும்புதல்) —> சுயத்தை மறுத்தல் (பாவத்திலிருந்து விலகி இருப்பது).

4. ஜீவனை இழப்பவர்கள்

  • லூக்கா 9:24-ல் இயேசு, "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்" என்று கூறுகிறார். அப்படி வாழ்ந்தால் உலக இன்பங்களை இழக்க நேரிடும் என்று நாம் கூறலாம், ஆனால் நம்மை பாவம் செய்ய வைக்க சாத்தான் தரும் பொய் அது.

  • உலகில் மது, பாலுறவு மற்றும் போதைப்பொருள் இல்லாத பல விஷயங்களை தேவன் நமக்கு அனுபவிக்கப் படைத்துள்ளார்.சந்தோஷமான வாழ்க்கை என்பது விருந்தில் கலந்து கொள்வது, பணக்கார மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை என்று நாம் எப்படியோ நம்ப வைக்கப்பட்டுள்ளோம்.

  • "என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்" என்று இயேசு சொல்வது - பாவம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதன் மூலம் அவருடைய நித்திய வாழ்க்கைக்கு நாம் ஆயத்தம் ஆகிறோம். அதுதான் “இரட்சித்துக்கொள்ளுவான்”என்பதன் அர்த்தம்.

  • "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்” - உலக வாழ்க்கை வாழ்ந்து ஜீவனைக் காத்துக் கொள்வது பாவத்தின் வலையில் விழுந்து, நியாயத்தீர்ப்பு நாளில் இழக்க வைத்து, படுகுழியில் / நரகத்தில் விழவைக்கும்.

  • இயேசுவைப் பின்பற்றுவது வாழ்க்கைப் போராட்டங்களைக் கொண்டது -

    • போராட்டம் என்பது நீங்கள் தேவனை சார்ந்திருக்கக் கற்றுக் கொடுப்பதற்காகவும், அதைத் தீர்க்க அவர் எவ்வாறு அற்புதங்களைச் செய்கிறார் என்பதை கற்பிப்பதற்காகவும், அது அவருடைய குணாதிசயத்திற்கு உங்களை வடிவமைக்கவும் உள்ளது.

    • கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும், அது யாருக்கும் விதிவிலக்கல்ல.

5. வெட்கப்பட வேண்டாம்

  • இயேசு லூக்கா 9:26 இல் இவ்வாறு கூறுகிறார், "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ,அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்".

  • இயேசுவை ஆண்டவர் என்று சொல்ல வெட்கப்பட வேண்டாம். அவருடைய கிரியைகள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது மேலும் அது மற்றவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றக் கூடும் என்பதற்கு சாட்சியாக இருங்கள்.

  • இயேசு உங்களில் நற்கிரியைகளைச் செய்வதால், அவருக்குச் சாட்சியாக இருக்க நம்மை அழைத்தார்.

  • சீஷத்துவம் இயேசுவின் சாட்சியாக இருந்து வருகிறது - அவருடைய பெயரை வெட்கப்படாமல் தைரியத்துடன் அறிவியுங்கள்.

  • அவர் நமக்காக சிலுவையில் அவமானத்தை வென்றார், பிசாசின் செயல்களே வெட்கப்பட வேண்டும்.

நீங்கள் இரட்சிப்புக்குள் கொண்டு வரப்பட்டால், நீங்களும் ஒரு சீடர் தான். உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகள் உங்களை இயேசுவின் வல்லமையையும் அதிகாரத்தையும் இழக்கச் செய்தன என்பதை நின்று சிந்தித்துப் பாருங்கள், அவரிடம் திரும்புங்கள், அவர் உங்களை மீண்டும் உயிர்ப்பிக்கத் தயாராக இருக்கிறார்.


22 views0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page