தேவன் உங்களையும் என்னையும் ஏன் இந்த உலகத்தில் படைத்தார் என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் நம்மை ஒரு நோக்கத்திற்காகப் படைத்திருக்கிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதும், உலகில் அவர் நமக்குத் திட்டமிட்டதைச் செய்வதும், அவருடைய மகிமையை நிறைவேற்றுவதும் தான் அந்த நோக்கம். உலக இன்பங்கள் போன்றவை அவரது திட்டத்தின் ஒரு பகுதி. அவருடைய ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதற்காக நாம் உழைத்து நித்திய உலகத்திற்குச் செல்வதற்கு முன்பாக இந்த உலகில் அதை நிறைவேற்ற வேண்டும்.
“வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்”. யோவான் 7:38
கிறிஸ்துவில் விசுவாசம்
“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ” - இது தான் தேவனுடைய சிறந்த வல்லமையை நம்மில் கட்டவிழ்த்து விடுவதற்கான முதல் படி. நாம் ஏன் இயேசுவை விசுவாசிக்க வேண்டும்? அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக, தமது ஒரே குமாரன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக இறுதி பலியாக அனுப்பினார். கிறிஸ்துவின் மரணத்திற்கு முன்னர் பாவங்களுக்காக நாம் கண்டிக்கப்பட்டோம். மேலும் பாவத்திற்கான சம்பளம் மரணம். ஆனால் இயேசுவால் நாம் மரணத்தை ஜெயம் கொள்ளுகிறோம்.
“நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”. 1 யோவான் 2:2
“தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்”. 1 யோவான் 4:9,19
நாம் விசுவாசிக்க ஆரம்பித்தவுடன், கிறிஸ்துவிற்குள் மீண்டும் பிறந்து அவருடைய நன்மைகளால் (கிருபை / இரக்கம் / ஆவி / ஆவியின் கனிகள்) உடுத்துவிக்கப்படுகிறோம். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் நாளுக்கு நாள் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைகிறோம். அழிவில்லாத வித்தானது, கிறிஸ்துவின் நற்குணத்தை உலகம் முழுவதற்கும் காட்டும்படிக்கு நம்மை உள்ளிருந்து மாற்றத் தொடங்குகிறது (யோவான் 7:38 “… அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்”).
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே". 1 பேதுரு 1:23
முதல் படியான நம்பிக்கை (விசுவாசம்) இல்லாமல் நம்மில் எந்த மாற்றமும் நிகழாது. "அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது". யாக்கோபு 2:26
நம்மிடம் இருப்பதை அறியாமை
கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்த பின்பு, நம்மில் பலர் "கிறிஸ்துவில் குழந்தைகளாக" வாழ்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக "குழந்தை" வாழ்க்கையையே வாழ்கிறார்கள். அவர்கள் தேவாலயத்திற்குச் சென்றாலும், ஜெபித்தாலும், பல கூடுகைகளில் கலந்துகொண்டாலும் உலக மரபுகளைக் கடைப்பிடிக்க பரிசேயர்களைப் போல பல விஷயங்களைச் செய்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவிற்குள் மீண்டும் பிறந்தபோது அவர்கள் பெற்றுக் கொண்டதை அவர்கள் உணராததால் உண்மையான உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றம் இல்லை.
நீங்கள் மீண்டும் பிறந்தவுடன், உங்கள் சுய இயல்பு போய்விடுகிறது. நாம் தேவ ஆவி, ஆவியின் வரங்களினால் உடுத்துவிக்கப்படுகிறோம். இதன் விளைவாக, நாம் பாவம் செய்யும்போது நம் இருதயம் நம்மைக் கண்டிக்கிறது. கடந்த கால பாவ வாழ்க்கையைத் தொடர மாட்டோம், இயேசுவைப் போல வாழ முயற்சிப்போம் (1 யோவான் 2:6). அவருடைய எல்லா நல்ல விஷயங்களையும் நாம் பின்பற்றுவோம்.
“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்”. 1 யோவான் 3:9,24
"அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்". 1 யோவான் 2:6
தேவனுடைய ஆவியானவர் நம்மில் வாசம் செய்து நம்மை வழிநடத்துவதால்தான் இது நடக்கிறது. "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்". 1 யோவான் 3:24
ஆவியின் வல்லமையை அறியாமை
ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம். பரிசுத்த ஆவியை நமது பாதையை தூய்மையாக்குவதற்காக மட்டுமல்லாமல், இன்னும் பல நோக்கங்களுக்காக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
பழைய ஏற்பாட்டு நாட்களில் தீர்க்கதரிசிகள் (ஆபிரகாம் / யாக்கோபு / மோசே போன்றவர்கள்) / ராஜாக்கள் (அரசியல் தலைவர்கள்) யாவரும் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டனர். அவருடைய அபிஷேகத்தினால், தேவனுடைய வல்லமையை வெளிக்கொண்டு வர அவர்கள் அற்புதங்கள் செய்தார்கள், தீர்க்கதரிசனங்கள் கூறினார்கள்.
ஆனால் கிறிஸ்து சிலுவையில் மரணத்தை வென்ற பிறகு கிறிஸ்துவில் உள்ள அனைத்து விசுவாசிகளும் (நீங்களும் நானும்) நம்மை வழிநடத்துவதற்கு தேவனின் பரிசுத்த ஆவியின் மூலம் தீர்க்கதரிசிகள் / ராஜாக்கள் பெற்ற அதே வல்லமையை பெற்றிருக்கிறோம்.
“கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்”. அப்போஸ்தலர் 2:17,18
அப்போஸ்தலர்களால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகால திருச்சபை இதை அறிந்திருந்தது. காலப்போக்கில் அப்படி ஒன்று இல்லை என்று நம்புவதற்கு நாம் ஏமாற்றப்பட்டோம். நம் சுயமானது, நம்மை வழிநடத்தும் ஆவியை விட நாம் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்று நம்ப வைக்கிறது. நம்மில் பலர் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், நம் சொந்த விருப்பங்களின்படி செயல்படுவதற்கு இதுவே காரணம்.
நாம் தேவனின் ஆவியால் வழிநடத்தப்படும் போது, கிறிஸ்துவிடம் இருந்து நீதியின் கனிகளைப் பெறுகிறோம். "தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,". பிலிப்பியர் 1:10
அவருடைய ஆவியின் வரங்களும், நீதியின் கனிகளும் நாம் அனுபவிப்பதற்காக மட்டும் அல்லாமல், தேவனுக்கு மகிமையும் துதியும் கொண்டு வருவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன. “தேவனுக்கு மகிமையும் துதியும்…”. பிலிப்பியர் 1:10
நாம் தேவனின் உடன்வேலையாட்கள் என்பதை அறியாமை
கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு அவரின் நற்செய்தியைப் பரப்பும்படி நாம் அவருடைய சித்தத்தைச் செய்தால் மட்டுமே "தேவனுக்கு மகிமையும் துதியும்" உண்டாகும். கிறிஸ்து நமக்காக மட்டும் மரிக்கவில்லை. இந்த முழு உலகத்திற்காகவும் (கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) மரித்தார்.
தேவனின் வார்த்தையை பரப்புவது கிறிஸ்துவுக்குள் ஊழியம் செய்பவர்களால் செய்யப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் "மீண்டும் பிறந்தவர்கள்" என்பதையும் நாம் அனைவரும் அவருடைய ஊழியத்தில் உடன் வேலையாட்களாயிருக்கிறோம் என்பதையும் அறியாமல் இருக்கிறோம்.
"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்". 1 கொரிந்தியர் 3:9
தேவனின் உடன்பணியாளராக நாம் சக மக்களை அவருடைய இராஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டும், அது தான் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும். "அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”. லூக்கா 15:10
உடன் வேலையாட்கள் என்பது போதகர்கள் / மிஷனரிகளுக்கு மட்டுமேப் பொருந்தும் என்பது மீண்டும் பிறந்த கிறிஸ்தவர்களுடைய பொதுவான தவறான புரிதலாக இருக்கிறது.
தேவாலயத்திற்குச் செல்வதினால், நியாயத்தீர்ப்பு நாளில் உடன்வேலையாட்கள் என்பதன் அனைத்து நன்மைகளையும் பெற நமக்கு உரிமை உண்டு என சிலர் நினைக்கின்றனர்.
ஊழியத்திற்கு பங்களிப்பை வழங்குவதால், மிஷனரி பணியின் முழு பலனையும் பெற்றுக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறான கோட்பாடு மற்றும் தவறான புரிதல். நாம் நியாயத்தீர்ப்புக்காக நிற்கும் போது, தேவனின் மகிமைக்காக நாம் என்ன செய்தோம் என்று அவர் கணக்கு கேட்பார் என்பதை நினைவில் வையுங்கள். ஊழியத்திற்கு பங்களிப்புக் கொடுத்ததைச் சொல்லி நாம் அவருடைய கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது.
"வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்". லூக்கா 13:25-28
நம்மில் பலர் மோசேயைப் போன்று தான் இருக்கிறோம். மோசே தேவனால் அழைக்கப்பட்டபோது, அவர் “நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் … யாரையாகிலும் அனுப்பும்…”, என்று ஒரு காரணத்தைக் கூறினார். நாமும், அவருடைய வேலையை நான் எப்படி செய்வது? நான் முழு நேர வேலையில் இருக்கிறேன், எனது வேலை / குடும்பம் / குழந்தைகளுக்கான வகுப்புகள் / உடற்பயிற்சி நடைமுறைகள் / அன்றாட வாழ்வில் நம் நேரத்தை எடுத்துக் கொள்ளும் பல காரணங்கள் என்று பல நொண்டிச் சாக்குகளைக் கூறுகிறோம்.
“அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்”. யாத்திராகமம் 4 :10-13. தேவன் மோசேக்கு “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” (பேச்சுத்திறன்) என்று பதில் அளித்தார். யாத்திராகமம் 4:10,11,12
அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு உங்கள் பலத்தைப் பார்க்கத் தொடங்காதீர்கள். தேவனுடைய ஊழியத்தைச் செய்ய அவருடைய சித்தத்தைச் சார்ந்து இருங்கள். தேவன் திக்குவாயும், மந்தநாவும் உடைய மோசேயைப் பயன்படுத்தி செங்கடலைப் பிளந்து ஒரு பெரிய அதிசயத்தை செய்ய வைக்கும் போது அவர் உங்களையும் என்னையும் அதே போன்று செய்ய வைக்க முடியும்.
தனிப்பட்ட தூய்மையைப் பின்பற்ற அறியாமை
நாம் பரிசுத்தமாக ஆக முடியாது என்று நம்ப வைக்கப்படுகிறோம். இதில் சில உண்மையும், உண்மை இல்லாதவையும் உள்ளன.
நம் சுயத்தில் உள்ள யாவும் கெட்டது. ஏனெனில், நாம் வஞ்சகத்தாலும், நம் இதயத்திலிருந்து வரும் தீய காரியங்களாலும் நிறைந்திருக்கிறோம்.
"எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?". எரேமியா 17:9
"எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும்,தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்". மாற்கு 7:21-23
ஆனால் இது, அவருடைய பரிசுத்தத்தைப் பின்தொடர்வதற்கு அவரால் சுத்திகரிக்கப்படுவதைத் தடுக்காது. அவரின் பிள்ளைகளாகிய நாம் தேவனின் பரிசுத்தத்தைத் தொடர நம் சுயத்தை (தீமைகளைச் செய்யச் சொல்லும் நம் சொந்த இருதயத்தை) தள்ளி வைக்க வேண்டும்.
"நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே". 1 பேதுரு 1:14-16
உங்கள் பலத்தைச் சார்ந்திருக்காதீர்கள். அவரைப் போல உங்களைத் தூய்மையாக்குவதற்கு கிறிஸ்துவின் பலத்தை சார்ந்திருங்கள். இது ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தயம். நாம் அவருடைய பரிசுத்தத்தை வேண்டிக் கேட்கும் போது ஒவ்வொரு நாளும் சுத்திகரிக்கப்படுகிறோம். ஆனால் அதற்கு நாம் 1 பேதுரு 2:16-17 இல் எழுதப்பட்டுள்ளதை பின்பற்ற வேண்டும்.
"சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்". 1 பேதுரு 2:16-17
"அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,". 1 கொரிந்தியர் 1:30
நீங்கள் பரிசுத்தத்தைத் தேடும் போது, தேவன் தம்முடைய ஞானம் / புரிதல் / அறிவு / ஆலோசனை / இரக்கம் / வல்லமை (குணப்படுத்துதல் / தீர்க்கதரிசனம் மற்றும் ஆவிகளைப் பகுத்தறிதல்) / அந்நிய பாஷை / பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் / தேவபயம் ஆகியவற்றை நமக்குக் கொடுக்கிறார்.
“வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்”. 1 கொரிந்தியர் 12:4,7-12
பரிசுத்தம் இல்லாமல், நீங்கள் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ளவோ, அவர் உங்களை செய்ய அழைப்பதைச் செய்யவோ முடியாது. " ... பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே". எபிரேயர் 12:14
உங்கள் மூலம் வல்லமையை எப்படி கட்டவிழ்க்க முடியும்?
1. கிறிஸ்துவின் உடன் வேலையாட்களாக - நாம் ஒவ்வொருவரும் அவருக்காக ஊழியம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அதுவே அவர் நம்மைப் படைத்ததன் நோக்கம். உங்கள் குடும்பத்தை வைத்து ஒரு ஊழியக் குழுவைத் தொடங்குங்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால் கணவன்-மனைவி குழுவாகத் தொடங்குங்கள்.
2. சிறிய ஆரம்பத்துடன் தொடங்குங்கள் - தேவனின் விருப்பத்தின்படி அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதற்கு உங்களை வழிநடத்தும்படி கேளுங்கள். சிறியவற்றிலிருந்து உங்களை எவ்வாறு அவருடைய பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது அவருக்குத் தெரியும், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. பில்லி கிரஹாம் அல்லது எந்தவொரு பெரிய சபைப் போதகர்களையும் பாருங்கள். அனைவரும் ஒரு சிலரை மட்டுமே வைத்து ஜெபக் குழுவாக சிறியதாக தொடங்கினர். இன்று தேவன் அவர்களை விரிவுபடுத்தியுள்ளார். மேலும் அவர்களின் அழைப்பிலிருந்து பலரை ஆசீர்வதித்துள்ளார்.
3. ஒரு குழுவாக நீங்கள் எந்த ஊழியம் செய்யலாம்?
ஒன்றாக ஜெபித்தல் (அப்போஸ்தலர் 13:1,2)
ஒன்றாக திட்டமிடுதல்
ஒன்றாக வேலை செய்தல் (வரங்கள் மற்றும் பலத்தின் படி)
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளுதல்
ஒருவருக்கொருவர் கணக்கொப்புவித்தல்
ஒருவருக்கு ஒருவர் வாய்ப்பளித்தல்
4. நாம் ஒவ்வொருவரும் அவருடைய அழைப்புக்கு உண்மையாக இருக்க வேண்டும். எழுதுவதற்காக அழைக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து எழுதுங்கள், ஜெபிக்க அழைக்கப்பட்டிருந்தால், ஜெபியுங்கள். தேவன் உங்களை அடுத்த படிகளுக்கு அழைத்துச் செல்வார். நீங்களாகத் திட்டமிட்டு விரிவாக்கப் பார்க்காதீர்கள். தேவன் தம்முடைய சித்தத்தைச் செய்ய சரியான நேரத்தை அறிந்திருக்கிறார். "அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்". 1 கொரிந்தியர் 7:20
5. தேவனுடைய ராஜ்யத்தில் போட்டி இல்லை, அனைவரும் உடன் வேலையாட்கள் தான். அநேகர் சொல்வது போல் இலக்கு எதுவும் கிடையாது. (1மாதத்தில் 100 பேரை கொண்டு வர வேண்டும் அல்லது 1 வருடத்தில் x பேர் என்பது போன்று). நீங்கள் தேவனிடம் கொண்டு வரும் ஆத்துமாக்களின் எண்ணிக்கையை விட அவற்றின் தரம் அவருக்கு முக்கியமானது. 100 ஆத்துமாக்களை வென்று, கடைசியில் நியாயத்தீர்ப்பு நாளில் எந்த ஆத்துமாவும் நிலைத்திராததைக் காட்டிலும், கடைசி நாள் வரை தேவனைப் பின்பற்றும் சரியான ஒரு ஆத்துமாவைப் பெற்றால் அதுவே போதுமானது. தேவனுடைய ஊழியம் வியாபாரம் அல்ல, அது உங்கள் லாபத்திற்காகவும் அல்ல. தேவனுடைய ஊழியம் அவரை மகிமைப்படுத்துவதும், உங்கள் செயல்களால் அவரை துதிப்பதும் ஆகும்.
6. இந்த உலகில் இயேசுவின் ஊழியம் ஏழைகளுக்கு அதாவது ஆதரவற்றவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் போன்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதாக இருந்தது (மத்தேயு 11:5). நாம் கிறிஸ்துவில் ஒரு சக ஊழியராக இருக்கும்போது இயேசுவைப் பின்பற்றக் கற்றுக்கொள்வோம்.
7. நீங்கள் தேவனின் வழிநடத்துதலுக்காக ஜெபிக்கும்போது, இந்த 5 பகுதிகளில் உங்களை வழி நடத்தும்படி அவரிடம் கேளுங்கள்.
"ஊழியம்" = மக்களுக்கு உதவுதல்
"உபதேசம்" = தனிப்பட்ட ஆலோசனை
"கொடுப்பது" = பிறருக்காக செலவு செய்தல்
"வழிநடத்துதல்" = அக்கறை மற்றும் முன்னுதாரணம்
"இரக்கம்" = பரிவு (எ.கா. அன்னை தெரசா)
8. உடன்வேலையாளின் வெகுமதியை நினைவில் வையுங்கள். "தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்". யாக்கோபு 5:20
உலகில் நாம் செய்யும் செயல்களை வைத்து நாம் நீதிமானாக உணர்ந்தாலும், தேவனின் பார்வை வேறுபட்டது. "... எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது... ". ஏசாயா 64:6
எனவே நாம் செய்யும் எந்த நீதியான செயலும் நம்மை அவருக்கு முன்பாக நியாயப்படுத்த முடியாது. ஒருவரை பாவத்திலிருந்து திருப்பியதால் "திரளான பாவங்களை மூடுவதற்கு" நான் கிருபை தருகிறேன் என்று தேவன் உங்களிடம் சொல்லும்படி, நீங்கள் செய்யும் வேலை (உடன்வேலையாள்), அவரின் கிருபையைப் பெற்றுத் தரலாம். நீங்கள் ஜெபித்து, தேவன் உங்களிடம் கேட்கும் காரியங்களைத் தொடங்குங்கள்.
Comments