top of page

சாராள் : தேவனின் சிறந்த ஜாதிகளின் தாய்

  • Kirupakaran
  • Mar 24
  • 6 min read

"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள்" என்ற பழமொழி தற்செயலானது அல்ல, அது தேவனின் வடிவமைப்பின் ஒரு பகுதியாகும். அவர் பூமியைப் படைத்து, மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கிய பின்பு, மனிதனுக்கு ஏதோவொன்று குறைந்திருப்பதாக உணர்ந்தார். இந்த வெற்றிடத்தை நிரப்பவே அவர் மனுஷனிலிருந்து மனுஷியை உருவாக்கினார். இந்த சத்தியம் வேதத்தில் ஆதாம் ஏவாள் கதையில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

 

2. பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். 24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2: 18, 22, 24

 

பெண்கள் எப்போதும் நம் அனைவருக்கும் பலத்தின் ஆதாரமாக இருக்கிறார்கள் - அது நம் தாய்மார்கள், மனைவிகள் அல்லது மற்ற யாராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கதை உண்டு. இந்த மகளிர் தினத்தில், தங்கள் குடும்பங்களை வலுப்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் இந்த வலைப்பதிவை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர்களது அன்பு, கவனிப்பு மற்றும் தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் யாவும் உண்மையிலேயே விலைமதிப்பற்றவை. அவர்கள் இல்லாமல், நம் வாழ்க்கை முழுமையடையாது.

 

ஒரு பெண் தன் கணவனுக்குப் பலத்தின் ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல், பூமியில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறாள். பெண்கள் இல்லாமல், தேவனது திட்டத்தை நிறைவேற்ற சந்ததிகள் இருக்க மாட்டார்கள். அவருடைய சித்தம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் மூலமும் பூமியில் நிறைவேற்றப்படுகிறது, பெண்கள் அவருடைய திட்டத்தின் அடுத்த தலைமுறைக்கு விதையைக் கொண்டு வருகிறார்கள்.

 

பெண்கள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, தேவன் தங்கள் வாழ்க்கைக்காக திட்டமிட்டுள்ள ஆசீர்வாதங்களை எவ்வாறு பெறுவது என்பதுதான். அன்பான குடும்பம், நல்ல கணவர் அல்லது வசதியான வீடு என எதுவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு பெண்ணும் ஆசீர்வாதங்களை விரும்புகிறாள்.

 

இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான இரகசியத்தை பவுல் எபேசியர் புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார். NIV என்ற ஆங்கில மொழியாக்கத்தில், 5 ஆம் அதிகாரத்தில், 21 வது வசனத்திலிருந்து தொடங்கி, "கிறிஸ்தவ குடும்பங்களுக்கான அறிவுறுத்தல்கள்" என்ற தலைப்பில் உள்ள பகுதி இந்த செய்திக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. 21 வது வசனம் கணவன் மனைவி இருவருக்குமானது.

 

 

தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:21

  • "ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? மனைவி எப்பொழுதும் தன் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும், அவள் மீது அவனுக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும் அர்த்தமா? ஆண்கள் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும், பெண்களை விட உயர்ந்தவர்களாகச் செயல்பட வேண்டும் என்றும் இது பரிந்துரைக்கிறதா?

  • எபேசியர் 5:21 ஐ புரிந்துகொள்ள ஒரு எளிய வழி - கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் மையமாக வைத்திருந்து, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இதன் பொருள், கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துவை தங்கள் வழிகாட்டியாக பார்க்கிறார்கள் என்பதாகும். ஒருவருக்கொருவர் கீழ்ப்படியும் போது, அவர்கள் உண்மையில் தங்கள் வீட்டில் ஆவியில் இருக்கின்ற, வீட்டின் கண்ணுக்குத் தெரியாத தலைவராக இருக்கின்ற கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

  • நீங்கள் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியும்போது, ​​அவருடைய ஆசீர்வாதம், அவருடைய கிரியைகள் வாழ்க்கையில் பிரதிபலிக்கும். அவரது ஆசீர்வாதங்களைப் பெற, கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துவுக்கு ஆழ்ந்த மரியாதையுடனும் பயபக்தியுடனும் கீழ்ப்படிய வேண்டும்.

  • கிறிஸ்துவில் பயபக்தி என்றால் என்ன?

    • கிறிஸ்துவில் பயபக்தி என்பது இயேசு கிறிஸ்துவிடம் ஆழ்ந்த மரியாதை, கனம் மற்றும் பிரமிப்பைக் குறிக்கிறது. இது அவருடைய தெய்வீக அதிகாரம், பரிசுத்தம் மற்றும் மனிதகுலத்திற்காக அவர் செய்த தியாகத்தை அங்கீகரிப்பதை உள்ளடக்கியது.

    • இந்த பயபக்தியானது, ஆராதனை, அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் அவரது அன்பையும் குணத்தையும் பிரதிபலிக்கும் வாழ்க்கையை வாழ்வதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

    • கிறிஸ்துவை பயபக்தியுடன் வணங்குவது என்பது அவரை உங்கள் வாழ்க்கையின் மையத்தில் வைப்பதும், அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதும், அவரது பிரசன்னத்திற்கு மனத்தாழ்மை, பக்தி மற்றும் அவரது சித்தத்தைப் பின்பற்றுவதற்கான உண்மையான விருப்பத்துடன் பதிலளிப்பதும் ஆகும்.

 

பவுல் எபேசியர் 5:22 இல் குறிப்பாக மனைவிகளுக்கு வழிகாட்டுதலுடன் தனது அறிவுறுத்தல்களைத் தொடர்கிறார்.

 

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். எபேசியர் 5:22

  • இது முந்தைய வசனத்தின் தொடர்ச்சியாகும் (எபேசியர் 5:21), விரிவாகச் சொல்வதென்றால், நீங்கள் பயபக்தியுடன் கர்த்தருக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.

  • ஏதேன் தோட்டத்தில், ஏவாள் பாவம் செய்தபோது, அவளுடைய கணவன் அவளை ஆண்டு கொள்வான் என்பது சாபத்தின் ஒரு பகுதி. மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கியதன் மூலமே இதுதான்.  அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். ஆதியாகமம் 3:16

  • மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது, இந்த செய்தி எபேசியர், 1 தீமோத்தேயு மற்றும் 1 பேதுரு ஆகிய மூன்று அதிகாரங்களில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு 2:11-12

    • அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள். 1 பேதுரு 3:1-2

  • கிறிஸ்துவைப் பின்பற்றும் கணவனுக்குக் கீழ்ப்படிவது மனைவிக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம். ஏனென்றால், கணவனும் வீட்டின் உண்மையான தலைவராகிய காணப்படாத கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறான்.

  • உங்கள் கணவர் தேவனுடைய வேதத்தை விசுவாசிக்காவிட்டாலும், நீங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படிய அழைக்கப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அவருக்குக் கீழ்ப்படிவது அவருடைய நம்பிக்கையையும் கவனத்தையும் சம்பாதிக்க உதவும். மேலும், உங்கள் செயல்களின் மூலம் அவர் கிறிஸ்துவின் குணங்களைக் காண முடியும். இது அவர் உங்களை மதிக்கவும், இறுதியில் கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கண்டறியவும் வழிவகுக்கும். கீழ்ப்படிவதன் மூலம், நீங்கள் கிறிஸ்துவின் அன்பிற்கு வாழும் உதாரணமாக மாறுகிறீர்கள், உங்கள் நடத்தையின் மூலம் அவருக்கு சத்தியத்தைக் காட்டுகிறீர்கள். ஏனென்றால், வேதம் கூறுகிறது, பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள் (1 பேதுரு 3:1-2).

 

இந்த அடிபணிதலும் கீழ்ப்படிதலும் ஏன் முக்கியம் என்பது குறித்து பவுல் எபேசியர் 5:22-24 இல் தனது அறிவுறுத்தல்களைத் தொடர்கிறார்.

 

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். எபேசியர் 5:23-24

  • மனைவி ஏன் தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்? - ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.

  • கிறிஸ்து சபைக்குத் தலை : கிறிஸ்து சபைக்குத் தலை, அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

  • கிறிஸ்துவுக்குள் பயபக்தியாக இருப்பதன் முக்கியத்துவம்: சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

 

 

சாராள் - ஆவிக்குரிய தாய் / ஜாதிகளின் தாய் / சிறந்த மனுஷி

 

கீழ்ப்படிதல் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

இதைப் புரிந்து கொள்ள, பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் – சாராள் - சாராள் ஆபிரகாமின் மனைவியாகவும், ஈசாக்கின் தாயாகவும் வேதாகமத்தில் கௌரவிக்கப்படுகிறாள். ஆபிரகாமின் சந்ததியினர் மூலம் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதாக தேவன் அளித்த வாக்குறுதியில் சாராள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறாள். அவள் விசுவாசிகளுக்கு ஒரு ஆவிக்குரியத் தாயாகவும் பார்க்கப்படுகிறாள். தேவன் சாராளை இவ்வாறு ஆசீர்வதித்தார் - பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். ஆதியாகமம் 17:15-16

 

கீழ்ப்படிதலின் விளைவு ~ பரிசுத்த ஸ்திரீகள்

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். 1 பேதுரு 3: 5-6

  • உங்கள் கணவருக்கு கீழ்ப்படிந்து நடப்பது உங்களை பரிசுத்த ஸ்திரீயாக மாற்றுகிறது. இதைச் செய்வதன் மூலம், பரிசுத்த ஸ்திரீகளுக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை சாராள் போன்று நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்.

  • சாராள் ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்ததால் பரிசுத்த ஸ்திரீ என்று அழைக்கப்படுகிறாள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; 1 பேதுரு 3:6

 

சாராளின் கீழ்ப்படிதல் வரலாற்றைப் பார்ப்போம்.

 

முதலாவது - கானான் பயணம் - அவள் கீழ்ப்படிந்து ஆபிரகாமுடன் கானானுக்குச் சென்றாள், அங்கிருந்து தெற்கே பிரயாணம் பண்ணும்படி கேட்கப்பட்டாள் (ஆதியாகமம் 12:9).

 

ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். ஆதியாகமம் 11:29-31

 

 

இரண்டாவது - எகிப்து பயணம் (அவள் இளமையாக இருந்த காலம்)

 

அந்த தேசத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்குப் பிறகு, அவர்கள் எகிப்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், ஒரு சவால் இருந்தது - ஆபிரகாம் தனது உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி சாராளிடம் தனது சகோதரியாக நடிக்கும்படி கேட்டார். இது எவ்வளவு கடினமாகவும் நியாயமற்றதாகவும் இருந்தபோதிலும், சாராள் கீழ்ப்படிந்தாள். யோசித்துப் பாருங்கள், இன்றைய உலகில் எந்த அழகான பெண்ணாவது இதற்கு சம்மதிப்பாளா? ஆனால், சாராள் தன் கணவர் சொன்னபடி கீழ்ப்படிந்தாள்.

 

அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். ஆதியாகமம் 12:11-13

 

சாராளின் கீழ்ப்படிதல் எதற்கு வழிவகுத்தது?

  • அவளுடைய கீழ்ப்படிதல் பார்வோனின் அதிகாரிகளிடமிருந்து தயவைப் பெற்றுத் தந்தது. மேலும் அவர்கள் அவள் நிமித்தமாக ஆபிரகாமை நன்றாக நடத்தினர்.

  • பார்வோனுக்கும் அவனது வீட்டாருக்கும் கடுமையான நோய்களை வரவழைத்து, சாராளுக்கு யாரும் தீங்கு செய்யாதபடி தேவன் பாதுகாத்தார்.  ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். ஆதியாகமம் 12:17

 

 

மூன்றாவது – தென்தேசத்திற்குத் திரும்புதல் (முதுமையில்)

 

மீண்டும், தென்தேசத்திற்குத் திரும்பும்படி கர்த்தர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். அங்கு, கேராரின் ராஜாவான அபிமெலேக்கை அவர்கள் எதிர்கொண்டார்கள். - தான் ஆபிரகாமின் சகோதரி என்று எகிப்தில் சொன்னதையே இங்கும் சொல்லும்படி ஆபிரகாம் சாராளிடம் கேட்டார். ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவளுக்கு இப்போது வயதாகி இருந்தது.

 

ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான், அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். ஆதியாகமம் 20:1-2

 

சாராளின் கீழ்ப்படிதல் எதற்கு வழிவகுத்தது?

  • தேவன் தலையிட்டு அவளைப் பாதுகாக்க யுத்தம் செய்தார் - தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? ஆதியாகமம் 20:3-4

  • அபிமெலேக்கு அவளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அணுகியபோது,  அவள் நிமித்தம் தேசத்தை அழிப்பேன் என்று தேவன் அவனை எச்சரித்தார். அவளுடைய கீழ்ப்படிதலையும், சாராளும் ஆபிரகாமும் தேவனுக்குக் காட்டிய பயபக்தியையும் தேவன் எவ்வளவு கனம் பண்ணினார் என்பதை இது காட்டுகிறது, பவுல் பின்நாட்களில் எழுதியதை அவர்கள் நடைமுறைப்படுத்தினர். (எபேசியர் 5:21).

  • அபிமெலேக்கிடமிருந்து தேவனுக்கு வந்த சுவாரஸ்யமான வார்த்தைகள் - அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?

 

 

சுருக்கம்

  • ஆபிரகாம் சாராள் என்பவர்களின் அதே தேவன் தான் நம்முடைய தேவன். சாராளின் போராட்டங்களில் அவர் அவளைப் பாதுகாத்தால், நாம் எந்த சூழ்நிலையை எதிர்கொண்டாலும் அவர் நம்மையும் பாதுகாக்க முடியும். தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான திறவுகோல் கர்த்தருக்கான பயபக்தியுடன் வேதத்திற்குக் கீழ்ப்படிவதாகும்.

  • கீழ்ப்படிதல் என்பது ஒரு முறை மட்டும் செய்கின்ற காரியம் அல்ல. சாராளின் உதாரணத்திலிருந்து, ஆபிரகாமும் தானும் ஒரே சரீரமாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருப்பதை அவள் புரிந்துகொண்டதால், அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கீழ்ப்படிந்தாள் என்று பார்க்கிறோம். மூளை கட்டளையிடுவதை கை எதிர்க்காததைப் போலவே, சாராள் கடினமான சூழ்நிலைகளிலும் ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அதுவும், அவளை மிகவும் சங்கடப்படுத்திய சூழ்நிலைகள் (அது வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவளுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால், அதை நாம் புரிந்து கொள்ளலாம்).

  • கீழ்ப்படிவது உங்களுக்கு கடினமாக இருந்தால், உங்கள் பலவீனத்தை ஒப்புக்கொண்டு ஒரு எளிய ஜெபத்தை செய்யுங்கள் : "தேவனே, என் சூழ்நிலையில் கீழ்ப்படிந்து நடக்க எனக்கு உதவி செய்யும். என் நிலைமையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன். தயவு செய்து எனக்காக யுத்தம் செய்து என் நிலைமையை மாற்றித் தாரும்". தேவன் சூழ்நிலையை மாற்றி, உங்களுக்கு நன்மை செய்வார், உங்கள் குடும்பத்தில் ஒரு ஆசீர்வாதத்தைக் காணத் தொடங்குவீர்கள்.

 

  

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page